Published:Updated:

`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part 2 #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part 2 #BiggBossTamil2
`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part 2 #BiggBossTamil2

இரண்டாம் பகுதி (Part - 2)

44-ம் நாள் காலை. ‘என் கிட்ட மோதாதே.. நான் ராஜாதி ராஜனடா.. வம்புக்கு இழுக்காதே.. நான் சூராதி சூரனடா’ என்று சூழலுக்குப் பொருத்தமான பாட்டை எடுத்து விட்டார் பிக்பாஸ். ஒவ்வொருவருமே அதை தன்னுடைய பாடலாக எடுத்துக்கொண்டு நடனம் ஆடினர். சென்றாயனின் பிறந்த நாள் என்பதால் பிக்பாஸ் கேக் அனுப்பியிருந்தார். (செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு இந்தப் பாசம் வேற!).

அப்போது பாத்ரூமில் இருந்த சென்றாயனிடம் விஷயத்தைச் சொல்லாமல் அவரைப் பயமுறுத்தி சற்று நேரம் கலாய்த்து விட்டு பிறகு விஷயத்தைச் சொன்னார்கள். மகிழ்ந்து போனார் செண்டு. கேக் வெட்டுவதற்காகப் பாலாஜியை வருந்தி அழைத்தார் சென்றாயன். ஆனால், அவர் வருவது போல் தெரியவில்லை. “அவர் வரட்டும். கேக்கை வெட்டுங்க” என்று மற்றவர்கள் அவசரப்படுத்தினார்கள். (பாவம்.. பசி போல!). ‘ரொம்ப நன்றி பிக்பாஸ். கேக் வெட்டில்லாம் நான் பிறந்த நாள் கொண்டாடுனதே இல்லை. இன்னிக்கு நல்லவங்க (?!) கூட சேர்ந்து பிறந்த நாள் கொண்டாட வெச்சதுக்கு ரொம்ப நன்றி” என்று நெகிழ்ந்தார் சென்றாயன். 

“நீயெல்லாம் பெரிய மனுஷனாய்யா.. உங்கிட்ட ஆசிர்வாதம் வாங்கறதுக்குத்தானே கூப்பிட்டேன்..:”  என்று பிறகு உரிமையோடு சென்று பாலாஜியைக் கண்டித்தார் சென்றாயன். முதலில் சிணுங்கிய பாலாஜி, பிறகு நெகிழ்ச்சியோடு காலில் விழுந்த சென்றாயனைக் கட்டிக் கொண்டார். (இதை முதலிலேயே செய்திருக்கலாம்!).

`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part 2 #BiggBossTamil2

“நேத்திக்கும் சாப்பிடலை.. இன்னிக்கும் சாப்பிடலையே” என்று பாலாஜி குறித்து ஐஸ்வர்யா கவலைப்பட்டு “போய்ப் பேசலாமா?” என்று மும்தாஜிடம் ஆலோசனை கேட்க.. ‘அவர் என்ன மைண்ட்ல இருக்காருன்னு தெரியல. காபி.. டீ சாப்பிடறாரு இல்ல.. பார்த்துக்கலாம்” என்று சமாதானப்படுத்தினார். 

பிறகு ஆரம்பித்தது அந்த விவகாரமான லக்ஸரி டாஸ்க். ‘ராணி மகாராணி’ என்பது அதன் தலைப்பு. அதன்படி வீட்டின் சர்வாதிகாரியாக ஐஸ்வர்யா இருப்பார். ..(அய்யோ.. மேடம் சொல்ல மறந்துட்டேன்!). அவருக்கு ஆலோசகராக ஜனனியும், பாதுகாவலராக டேனியும் இருப்பார்கள். 

இந்த வீட்டை சர்வாதிகாரி ஆள வேண்டும். இது தொடர்பான முழு அதிகாரம் உண்டு’ என்பதையெல்லாம் கேட்டு குழந்தைத்தனமாகச் சிரித்துக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. அப்போதே தன் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி விட்டார் பாலாஜி. யாஷிகா ‘ஸ்பை’யாக இருப்பாராம். அவர் கண்ணைச் சிமிட்டினால் ஐஸ்வர்யா எதையோ புரிந்துகொள்ள வேண்டுமாம். ‘பாலாஜியை எப்படியாவது விளையாட வைக்கணும்” என்று இவர்கள் பேசிக்கொண்டார்கள். 

`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part 2 #BiggBossTamil2

‘பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருக்கே நைவேத்தியம் செய்வது போல்’, பிக்பாஸ் வீட்டு மக்கள் பேசிக் கொள்வது, செய்வது ஆகியவற்றிலிருந்தே தனக்கான டாஸ்க்குகளை பிக்பாஸ் காப்பியடிக்கிறார் என்பது மறுபடியும் நிரூபணமாயிற்று. ‘அவங்க என்ன கேப்டனா.. ஹிட்லரா’ என்று ஐஸ்வர்யா குறித்து பாலாஜி நேற்று கோபமாகப் பேச, பிக்பாஸின் தலையில் பல்பு எரிந்திருக்க வேண்டும். ‘அதைப் பேசின நீதான் இதுக்குக் காரணம்’ என்பது போல் மஹத் சொல்லிக்கொண்டிருந்தார். ‘மும்தாஜை சர்வாதிகாரியாகப் போட்டிருந்தால் கிழிகிழின்னு கிழிச்சிருப்பாங்க’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் பாலாஜி. (ஐஸ் மேடம் அதைவிடவும் ரணகள பர்பாமன்ஸ் செய்யப் போகிறார் என்பது அந்தச் சமயத்தில் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை).

பாதுகாவலர் டேனி, ஆலோசகர் ஜனனி, சர்வாதிகாரி ஐஸ்வர்யா ஆகியோரை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தார் பிக்பாஸ். ‘நீங்கள் ஐந்து சட்ட திட்டங்களை இயற்ற வேண்டும். உதாரணத்துக்கு உங்கள் அணிக்கான உணவைப் பொதுமக்கள் தயார் செய்ய வேண்டும். பொதுமக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். மீதமுள்ள நான்கு சட்ட திட்டங்களை நீங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம். இதில் யார் ஒருவர் பங்கேற்கவில்லையோ.. அது மொத்த வீட்டுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை உணர்த்துங்கள்” என்பது போல் கட்டற்ற அதிகாரத்தை வழங்கினார் பிக்பாஸ். பிறகு ஐஸ்வர்யாவை மட்டும் தனியாக இருக்கச் சொன்ன பிக்பாஸ் (ராஜாங்க ரகசியமாமாம்!) ‘இந்த டாஸ்க்கை சிறப்பாகச் செய்தால் இம்னியூட்டி பவர் வழங்கப்படும். உங்களை அடுத்த வாரமும் எவரும் நாமினேட் செய்ய முடியாது’ என்று கூற.. அதுவரை சற்று சாந்தமாக இருந்த ஐஸ்வர்யா.. ‘சிவகாமி தேவியாகிய நான்….. ‘என்று நீலாம்பரி ரேஞ்சுக்குக் கெத்தாக எழுந்து நடந்தார். 

ஐஸ்வர்யாவின் தோற்றத்தில் முழு உருவச்சிலையும், அவரின் புகைப்படங்கள் தாங்கிய சுவரொட்டிகள் பல இடங்களிலும் இருந்தன. ‘ஐஸ்வர்யா சாம்ராஜ்யம்” என்று அவற்றில் எழுதப்பட்டிருந்தது. (அட டைட்டில் நல்லாயிருக்கே!).

`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part 2 #BiggBossTamil2

ஆலோசனை சபையில் ராஜாங்க பிரதிநிதிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார் சர்வாதிகாரி. விதி எண்1. ‘நமக்கான உணவை மும்தாஜ் சமைக்க வேண்டும். பொதுமக்களுக்கான உணவை சென்றாயன் ‘கை கழுவாமல்’ செய்ய வேண்டும்’ என்று முதல் கட்டளையே அதிரடியாக இருந்தது. 

இந்த சதியாலோசனை தெரியாமல் இவர்களைக் கிண்டல் செய்து பேசிக்கொண்டிருந்தார் பொதுமக்களில் சிலர். ‘இந்த ஆட்சில நான் இருக்க மாட்டேன்’ என்பது போல் பாலாஜி சொல்லிக் கொண்டிருக்க, ‘டாஸ்க் கடைசில என்ன பண்ணப் போறேன்னு பாருங்க.. சிலையைத் தூக்கி உடைக்கப் போறேன்” என்று ஷாரிக் சொல்லிக்கொண்டிருக்க (பயபுள்ள, பாகுபலி 2 கிளைமாக்ஸை நெறைய முறை பார்த்திருக்கும் போல!) ஐஸ்வர்யா மேடத்தின் கண்கள் சிவக்கத் துவங்கின. கை நரம்புகள் விறைக்கத் தொடங்கின. ‘தமிழ்நாட்ல சர்வாதிகாரம் செஞ்சவங்க கதி என்னாச்சுன்னு தமிழ் மக்களுக்குத் தெரியும்” என்று ஓர் அரசியல் நையாண்டியை ரித்விகா சரியான டைமிங்கில் சொல்ல (பிள்ளைப் பூச்சி மாதிரி இருந்தது. என்ன போடு.. போடுது”) ‘அது அந்தப் பொண்ணுக்குத் தெரியாது” என்று பிராந்திய அரசியலை வில்லங்கமாகத் தொட்டார் ஷாரிக். 

‘அந்தப் பொண்ணு யாருன்னு அதுக்கே தெரியாது” என்று விவகாரமான கிண்டலை பாலாஜி முன்வைக்க மற்றவர்கள் சிரித்துத் தீர்த்தனர். இதையெல்லாம் வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் கண்கள் கலங்கி கூடவே கடும் சினமும் வந்தது. பக்கத்திலிருந்த டேனி சிரிப்பை அடக்க முடியாமல் தடுமாறினார். ‘ராணியம்மா.. உங்களுக்கு எதிராக மூணு பேர் பேசியிருக்காங்க” என்று போட்டுக் கொடுத்தார் ஆலோசகரான ஜனனி. ‘நான் இந்த விளையாட்டுக்கு வரலை..” என்ற பாலாஜி, ஷாரிக் –ஐஸ்வர்யாவுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்னைகளையும் பற்றி வில்லங்கமாகப் பேசி.. ‘இந்தப் பொண்ணு டிரீட்மென்ட்டுக்குத்தான் போகப் போகுது” என்று புறம் பேச ஐஸ்வர்யாவின் குருதி அழுத்தம் கூடிக் கொண்டே போனது. ‘ஷாரிக் பையன் பாவம்’ என்று இடையில் பாலாஜி சொன்னது ஐஸ்வர்யாவை அதிகம் பாதித்தது என்பதை பின்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 

‘அமைதி.. அமைதி’ என்று மேடத்தை சமாதானப்படுத்தினார் ஜனனி. டேனியைப் பற்றியும் பாலாஜி புறம் பேச, டேனியின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து தீவிரம் கூடியது. 

`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part 2 #BiggBossTamil2

‘டேனி.. இந்த நாளை டைரில குறிச்சுக்கோ.. இவங்க ரெண்டு பேரையும் வெச்சு செய்யலைன்னா.. என் பேரு ஐஸ்வர்யா இல்ல.. இவங்களுக்கு ரெண்டு நாள் சாப்பாடு கொடுக்கக் கூடாது’ என்று அழுகையும் கோபமும் கலந்த குரலில் ஐஸ்வர்யா உத்தரவிட, ‘ராணி நீங்க அழக் கூடாது’ என்றார் ஆலோசகர். (இவர் கூடவே இருந்து கலாய்க்கறாரோ என்று கூட தோன்றியது). ‘உங்க கிட்ட அதிகாரம் இருக்கு. அதைப் பயன்படுத்துங்க’ என்று ஜனனி ஆலோசனை சொன்னதும்.. ‘வீரம்’ திரைப்படத்தின் தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்காத குறையாக ஆவேசமாகக் கிளம்பினார் சர்வாதிகாரி மேடம். 

‘பொதுமக்களை ராணியம்மா கூப்பிடறாங்க’ என்றதும் மற்றவர்கள் அசைய, ‘நான் வரமாட்டேன்’ என்று அமர்ந்திருந்தார் பாலாஜி. இந்தச் செய்தி ராணியம்மாவின் காதுகளுக்குச் சென்றதும் அவர் கடும் சினமடைந்தார். ‘இருக்கற குப்பைங்களையெல்லாம் தூக்கி அவர் மேல கொட்டுங்க” என்று ஆத்திரத்துடன் கூற ‘இந்தப் பொண்ணு கிட்ட இனிமே எப்படித்தான் குப்பை கொட்டப் போறோமோ” என்கிற கவலையுடன் மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். டேனியும் ஜனனியும் கூட என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்கள். பாலாஜியையும் இவர்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. ‘தனிப்பட்ட பிரச்னையெல்லாம் வெச்சு டாஸ்க்ல பழிவாங்கக் கூடாதுன்னு சொன்னீங்க இல்ல..முடிஞ்சா என் மேல குப்பைய கொட்டிப் பாருங்க’ என்று சவால் விட்டார் பாலாஜி. 

“முதல்ல விதிகளை சொல்லிடுவோம். அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று ராணியம்மாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்கள். “பிக்பாஸ்.. இது சீரியஸா போயிட்டிருக்கு சரியல்ல.. ‘ என்று  மைக்கில் எச்சரித்தார் பாலாஜி.

‘ராணி வாழ்க’ என்ற கோஷத்துடன் பொதுமக்கள் கூடியிருந்தார்கள். ‘ராணியம்மாவிடம் எவரும் நேரடியாகப் பேச முடியாது. என்னிடம் அல்லது டேனி மூலமாகத்தான் பேச முடியும்’ என்று ஜனனி அறிவிக்க, 5 விதிகளை வாசிக்கத் துவங்கினார் டேனி. 1) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் எங்கும் அமரக் கூடாது. தனித்தனியாகத்தான் இருக்க வேண்டும். தலைவியைக் கிண்டல், நையாண்டி செய்யும் சைகைகளை செய்யக் கூடாது. செய்தால் தண்டனை. 2) இரவு விளக்குகள் அணைக்கப்பட்டதும் தூங்கி விட வேண்டும். எவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது 3) காலை மணியடித்ததும் எழுந்து விட வேண்டும். சர்வாதிகாரி அணிக்கான உணவை மும்தாஜ் செய்வார். பொதுமக்களுக்கான உணவை சென்றாயன் தனியாக நின்று செய்ய வேண்டும். உதவி தேவைப்பட்டால் யாஷிகாவை அழைத்துக்கொள்ளலாம். 4) தலைவியைப் பார்க்கும் போது தலைதாழ்த்திதான் பேச வேண்டும். சுவரொட்டிகளை கேலியாகக் கையாளக் கூடாது 5) மிக முக்கியமானது.. இதை அப்புறம் சொல்வோம்..’ என்று கட்டளைகள் மிகக் கடுமையாக இருந்தன. (ஆனால் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு இதெல்லாம் புதிதில்லை என்பதால் கடுமையாகத் தோன்றியிருக்க வாய்ப்பில்லை).

இரண்டு வேளையும் டிரில் செய்ய வேண்டுமாம். ‘ராணி மகாராணி ராஜ்ஜியத்தில் ராணி’ என்று பாட வேண்டுமாம். (ஏம்யா.. இதைக் கூடவா படத்திலிருந்து காப்பியடிப்பீங்க.. சொந்தமா எழுத பிக்பாஸ் டீம்ல ஒருத்தருமா கிடையாது?!)

`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part 2 #BiggBossTamil2

**

சர்வாதிகாரி தன் வானாளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்த துவங்கினார். ‘ஷாரிக் பையா.. குப்பையெல்லாம் தூக்கி பாலாஜி தலைமேல கொட்டு’ என்ற உத்தரவிட ஷாரிக் பையன் தயங்கி நின்றான். பொதுமக்கள் அதிர்ச்சியும் அழுகையுமாக நின்று கொண்டிருந்தார்கள். “டேனி .. நீ செய்’ என்று மேடம் உத்தரவிட..  ‘தண்டனையை பொதுமக்களில் ஒருவர்தான் நிறைவேற்ற வேண்டும் என்றுதானே பேசினோம்” என்று அந்தச் சமயத்திலும் உஷாராக இருந்தார் டேனி. இப்படி எல்லோரும் தயங்க ராணியே களத்தில் இறங்கி, ஷாரிக்கின் கையில் இருந்த குப்பைத் தொட்டியைப் பிடுங்கி பாலாஜியின் மீது வீசினார். மற்றவர்கள் பதறி ஓடி வந்து தடுத்தார்கள். மும்தாஜ் அழுகையை அடக்க முடியாமல் கதறித் தீர்த்தார். 

இத்தனை களேபரத்துக்கு நடுவில் ஜென் நிலையில் அமர்ந்திருந்தார் பாலாஜி. தன்னை சமாதானப்படுத்த வந்தவர்களையும் குப்பையைச் சுத்தம் செய்ய வந்தவர்களையும் ‘ஆக்ஷன ஹீரோ’ பாணியில் சைகை செய்து தடுத்து விட்டார். சென்றாயனின் கையில் இருந்த முறத்தைப் பிடுங்கி வீசினார். மும்தாஜை மிகையாகக் கோபித்துக் கொண்டார். 

“மோமோ.. உங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது.. அழுவாதீங்க.. “ என்று தன் குற்றவுணர்வை மறைக்க முயன்றார் மேடம். என்றாலும் ‘இது தப்பு.. இப்படிச் செய்யக் கூடாது” என்று தாங்க முடியாத அழுகையுடன் வெடித்தார் மும்தாஜ். “இவங்க கிண்டலடிச்சுப் பேசின வீடியோவையெல்லாம் ஐஸ்வர்யாவுக்குப் போட்டுக் காண்பிச்சிருக்காங்க போல’ என்று சரியாக யூகித்து டேனியிடம் சொல்ல முயன்றார் மஹத். ரித்விகா மற்றும் ஷாரிக்கின் ஆடைகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் நீச்சல் குளத்தில் போட உத்தரவிட்டார் ராணியம்மா. ராணிக்குத் தெரியாமல் அவர்களின் பொருள்களில் சிலவற்றைக் காப்பாற்ற முயன்றார் டேனி. சரியாக நீரில் மூழ்காத பொருள்களை ரித்விகா நீரில் இறங்கி அழுத்த வேண்டும் என்று அடுத்த உத்தரவு பறந்தது. சில ஆண்டுகளுக்கு முன், பிக் பிரதர் நிகழ்ச்சியில், நடிகை ஷில்பா ஷெட்டியின் நிறவெறியைத் தூண்டு விதமாக ஒருவர் பேசியது, கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. நேற்று, ஐஷ்வர்யா ரித்விகாவைத் திட்டிய கடுஞ்சொற்கள் அதை நினைவுபடுத்தாமல் இல்லை. 

`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part 2 #BiggBossTamil2

தம்மைக் கிண்டலடித்தவர்களின் வசனங்களைச் சொல்லிச் சொல்லி உத்தரவுகளை கடுமையாக நிறைவேற்றிக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ஏதோ ஒரு கட்டத்தில் திரும்பி ஆவேசத்துடன் இவர் கூச்சலிட்டதைப் பார்க்க.. திகைப்பாக இருந்தது.

‘ஐந்து கெட்ட வார்த்தைகளை பாலாஜியின் மூஞ்சி மேல போட வேண்டும்’ என்பது ராணியின் அடுத்த உத்தரவு. இது சென்றாயனுக்கு.. ‘கடுகு… உளுத்தம்பருப்பு.. காய்ஞ்ச மிளகாய்’’ என்று மளிகைப்பட்டியலை வாசிப்பது போல்.. ‘லூஸூ.. மென்ட்டல்’ என்று சம்பிரதாயத்துக்குச் சொல்லி விட்டுச் சென்றார் சென்றாயன். 

“இந்த வீடியோவைப் பார்த்து ரியாக்ட் பண்ணாதிங்க. அவங்க பேசட்டும்’ என்று டேனி எச்சரித்தும் கூட ஐஸ்வர்யாவால் தன் கோபத்தை அடக்க முடியவில்லை. அவருடைய மனஅந்தரங்கத்தின் சில ஆழமான பகுதிகளை பாலாஜி உள்ளிட்ட சிலரின் கிண்டல்கள் சென்று அடைந்திருப்பதை உணர முடிகிறது. ஆனால் – இவையெல்லாம் பிக்பாஸ் விளையாட்டின் ஒரு பகுதியாக நம்மைத் தூண்டி விடுகிறார்கள். அதற்கு தாம் பலியாகக் கூடாது என்கிற பிரக்ஞையை மட்டும் அவர் கொண்டிருந்தால் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார். அந்தக் கட்டுப்பாடு இல்லையென்பதால் நிலைமை கையை மீறி போய்க்கொண்டிருந்தது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

ஆலோசகர்களின் சமாதானத்தையும் மீறி ‘லூசு நாய். குரங்கு’ என்று கத்திக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. “எங்களால எதுவும் பண்ண முடியலை” என்று டேனியும் ஜனனியும் தற்காப்பு நிலையை எடுத்துவிட்டார்கள். 

நாளையும் சர்வாதிகாரியின் ஆட்டம் தொடரும் போல் தெரிகிறது. எத்தனை தலை உருளப் போகிறதோ…