Published:Updated:

அடங்காத ஐஸ்வர்யா... அத்துமீறத் தவிக்கும் சென்றாயன்! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
அடங்காத ஐஸ்வர்யா... அத்துமீறத் தவிக்கும் சென்றாயன்! #BiggBossTamil2
அடங்காத ஐஸ்வர்யா... அத்துமீறத் தவிக்கும் சென்றாயன்! #BiggBossTamil2

பிக் பாஸ், ராணியம்மாவின் அலப்பறைகளும் அட்டகாசங்களும் இன்றும் தொடர்ந்துதான் கொண்டிருந்தன. என்றாலும் வெள்ளிக்கிழமை வரை இதை இழுத்தால் சலித்துவிடும் அபாயமும் இருக்கிறது. இன்னொருபுறம் இதற்காக அதிகம் உணர்ச்சிவசப்பட்டு சக்தியை இழக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது. இவையெல்லாம் டிராமா என்று பிறகு அறிய நேர்ந்தால் (ஒருவகையில் அப்படித்தான்!) நாம் உணர்ச்சிவசப்பட்டது எல்லாம் கேலியாகிவிடும். 

யதார்த்தத்துக்கும் புனைவுக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டின் மீதான பயணத்தில்தான் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வெற்றியடைகின்றன. `பாலாஜியின் மீது குப்பையைப் போட்டது’ எனும் ஆவேச அடாவடியைத் தவிர ‘சர்வாதிகாரி காரெக்ட்டராக’ ஐஸ்வர்யா செயல்படுகிறார் என்பதை உணர்ச்சிவசப்படாமல் புரிந்துகொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது. எனில் இந்த டிராமாவின் உள்ளாகவே ராணியம்மாவின் அட்டகாசத்தை எப்படி எதிர்கொள்ளலாம்? சர்வாதிகாரத்திற்கான தீர்வு என்பது மக்கள் புரட்சிதான். உலகின் வரலாறுகள் அந்தப் பாடத்தைத்தான் கற்றுத் தந்திருக்கின்றன. பொதுமக்கள் திரைமறைவில் இதற்கான விஷயங்களைச் செய்தால் இந்த டிராமா இன்னமும் சுவாரஸ்யமாகும். ஆனால், ரகசியமாகச் சென்று ஐஸ்வர்யாவின் போஸ்ட்டரை ஷாரிக் கிழித்ததெல்லாம் இந்தப் புரட்சியில் சேராது. இந்தியச் சுதந்திரப் போராட்டக்காலத்தில் உண்மையான தியாகிகளின் இடையே போலியாளர்களும் கலந்திருந்தார்கள். ‘நானும் தியாகிதான். போஸ்ட்பாக்ஸ்-க்குள்ள யாருக்கும் தெரியாம ஒரு முறை நெருப்பு போட்டேன்’ என்று சுயபகடியுடன் நகைச்சுவையாகச் சொல்வாராம் எழுத்தாளர் சாவி. 

இன்னொரு விதமாகவும் ராணியை எதிர்கொள்ளலாம். அவருக்குப் பணிந்து போவது போல் பாவனை செய்து அவரை தொடர்ந்து மொக்கையாக்குவது. டேனி இதைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். (சமயங்களில் ஜனனியும்). உண்மையில் ஐஸ்வர்யா செய்யும் சில விஷயங்கள் நகைப்புக்கு இடமாக இருக்கிறது. அவர் சொல்வதை ஓவர்ஆக்ட் செய்தாலே அது காமெடியாகி அதுவே ஓர் ஆயுதமாக மாறும்.

இன்றைய நாளின் ஹைலைட் சென்றாயனிடமிருந்து ‘டீ’ பிடுங்கப்பட்ட விவகாரம்தான். உணவு விஷயத்தில் சென்றாயன் டெரர் என்பதை முன்னர் நிரூபித்திருக்கிறார். தன்னிடமிருந்து உணவுப் பாத்திரத்தை ஷாரிக் பிடுங்கிய போது அவர் காட்டிய வருத்தமும் கமலின் முன்னால் அடைந்த கோபமும் புரிந்துகொள்ளக்கூடியது. “காலைல இருந்து நீங்க சொல்றதெல்லாம் செஞ்சேன்.. டீய போய் பிடுங்கி கீழ ஊத்தறீங்க” என்று அவர் கோபமடைவது நியாயமே. ஆனால் ‘சர்வாதிகார’ ஆட்சி எனும் விளையாட்டில் இது எதிர்பார்க்கக்கூடியதுதான் என்கிற எளிமையான புரிதலை அவர் அடைய வேண்டும். ‘இன்னமும் கூட சர்வாதிகாரிகளின் ஆட்சியும் அது சார்ந்த அடக்குமுறைகளின் உலகின் பல இடங்களில் நடந்துகொண்டிருக்கின்றன’ என்று சென்றாயனிடம் ஜனனி எடுத்துச் சொன்னது சிறப்பு. 

**

44-ம் நாளின் சம்பவங்கள் தொடர்கின்றன. ‘ரெண்டு நாள் அவங்களே. செஞ்சு.. வெச்சு.. வெச்சு செய்யப் போறேன்’ என்று மழலைத் தமிழில் ஐஸ்வர்யா ஆவேசமாக சபதம் எடுத்து விட்டு ஆலோசகர்களின் பேச்சைக் கேட்காமல் பொன்னம்பலத்தின் கணக்கை முடிக்க புறப்படுகிறார். இதிலிருந்து தொடர்கிறது. 

“வாங்கோ.. ஐயா.. உட்காருங்கோ.. என்று பொன்னம்பலத்தை அழைத்த ஐஸ்வர்யா.. “இந்த டாஸ்க் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி என்ன பேசிட்டு இருந்தீங்க? தைரியமா சொல்லுங்க.. என்னைப் பத்தி, மும்தாஜ் பத்தி, யாஷிகா பத்தி..’ என்ன பேசிட்டு இருந்தீங்க.. யாஷிகா.. நல்லா கண்ணைத் திறந்து வெச்சு கேளு” என்றார் ராணியம்மா. அடப்பாவிகளா! இது தெரியாம அழுது கிழுதுல்லாம்.. உங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்தேனே’ என்பது மாதிரி பார்த்துக்கொண்டிருந்தார் மும்தாஜ். 

‘சிலையை உடைக்கலாம்’னு ஷாரிக் சொல்லிட்டு இருந்தான்’ என்று தயங்கியபடி சொன்னார் மஹத். “சுயமா அறிவு இல்லையேன்னு சொன்னேன்’ என்றார் பாலாஜி எரிச்சலுடன். “அப்ப கச்சடா எல்லாம் உங்க மேல இன்னொரு முறை த்ரோ பண்ணட்டுமா.. ஒழுங்கா பேசினத சொல்லுங்க” என்று ராணியம்மா மிரட்ட ‘என்ன தண்டனை வேணா கொடுங்க’ தற்காப்பு மோடிற்கு மாறினார் பாலாஜி.  

‘ஷாரிக் பையா.. பாவம்.’னு சொன்னீங்களே.. என்னது அது..’ என்று தன் மீது வீசப்பட்ட அவமதிப்பைப் பற்றிய விவகாரத்தை எடுத்தார் ஐஸ்வர்யா. ஆனால் அதை தானே சொல்ல விரும்பாமல் டேனியின் மூலம் கேட்கச் சொன்னார். ‘ஷாரிக் பையன் பாவம்’ என்கிற வார்த்தை அவரை ஆழமாகப் பாதித்திருக்கிறது என்பது, அவர் தொடர்ந்து அனத்துவதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. 

‘ஹிட்லரா மும்தாஜ் மேடத்தைப் போட்டிருக்கலாம்’னு பேசிட்டு இருந்தோம்’ என்று பொன்னம்பலம் பதில் சொல்ல, அவர் முடிப்பதற்கு முன்பாகவே ‘வேற… வேற.. என்னைப் பத்தி என்ன பேசினாங்க.. இல்லைன்னா வேற லெவல் தண்டனை இருக்கு’ என்று ராணியம்மா விசாரணை செய்துகொண்டிருக்கும் போது, பாலாஜியின் மீது மறுபடியும் குப்பை கொட்டப்படுமோ என்கிற பதற்றமடைந்தார் மஹத். 

மைக்கை கழற்றி விட்டு எதற்கும் தயார் என்பது மாதிரி இவர் நிற்க, ‘நான் இங்கதான் இருக்கேன். என்ன பண்ணப்போற.. நான் உன் கிட்ட எதனா கேட்டனா.. இவங்க கிட்டதானே பேசிட்டிருக்கேன். உனக்குப் புரியுதா’ என்று மஹத்தை அப்படியே ஆஃப் செய்தார் ஐஸ்வர்யா. (வெட்ரா.. வெட்ரா.. என்று பல கிலோ மீட்டர் ஓடிய வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது). இதற்கு என்ன செய்வது என்பது புரியாமல் சுவற்றில் போய் குத்திக் கொண்டிருந்தார் மஹத். (விஷயம் புரியாம கோபப்படுவது.. பிறகு மன்னிச்சுடுங்க.. என்று கோராமையாக அழுவது.. என்கிற கெட்ட வழக்கத்தை வைத்திருக்கிறார் மஹத்).

‘அப்படித் துப்பிட்டுக் கிளம்பு’ என்கிற காமெடியாக “என்ன தண்டனை வேணா கொடுத்திட்டு போங்க.. ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க?” என்றார் பாலாஜி. “ஷாம்புவும் தண்ணியும் எடுத்திட்டு வாங்க” என்று தலைவி உத்தரவிட, “எம்மா.. தாயி.. தண்டனைங்களை ஒரேயடியா முடிச்சா.. எனக்கு க்ளீன் பண்ண உபயோகமா இருக்கும்’ என்று சென்றாயன் இதற்கு நடுவில் கோரிக்கையிட ‘என்ன தண்டனை .. எப்போ  கொடுக்கணும்னு எனக்குத் தெரியும்” என்று ராணியம்மா ஆவேசப்பட பின்வாங்கினார் சென்றாயன். 

“கமல் சார்தான் இன்னிக்கு வரலைல்ல.. என்ன நடந்தது –ன்னு சொல்ல வேண்டியதுதானே?” என்று பொன்னம்பலத்திடம் நகைச்சுவை கலந்த கோபத்தைக் காட்டினார் பாலாஜி. ‘வாயை மூடுங்க..’ என்று இதற்கு ராணியம்மா கத்தியதும்.. ‘நாங்க பொதுமக்கள்தானே பேசிட்டு இருக்கோம்’ என்று பாலாஜி முனகியதை ‘வெவ்வ்வே..’ என்று எரிச்சலுடன் ஒழுங்கு காட்டினார் ஐஸ்வர்யா. அவர் சென்றதும்.. ‘செவுள் திருப்பிடுவேன்’ என்று வீறாப்பு காட்டினார் பாலாஜி. 

எல்லோரையும் அதட்டி தலைவிக்கே போர் அடித்தது போல. ஜாலியாக தாளம் தட்ட ஆரம்பித்து விட்டார். ‘நல்லா சத்தம் வருதுல்ல’ என்கிற சுயபெருமை வேறு. விசு படங்களில் வருவது போல் எல்லோரும் எதிரே நின்றிருந்தார்கள். அவர்களின் நடுவே அப்பிராணியாக ரித்விகா நின்றிருக்க.. ‘நீ வந்து டான்ஸ் ஆடு” என்று தலைவி தன் அலப்பறையைத் திரும்புவும் ஆரம்பிக்க.. ‘யோகாவும் கராத்தேவும் கலந்த முறையில் ஏதோவொன்றைச் செய்தார் ரித்விகா. (பாவம்!). இந்தச் சமயத்தில் புரட்சி வீரர் ஷாரிக் ஒரு போஸ்ட்டரைக் கிழித்து விட்டு ‘வேற எதுனா செய்யணுமா?” என்றார் ஆவேசமாக. 

மறுபடியும் ஆலோசனை அறைக்குச் சென்ற ராணியிடம் ‘பொன்னம்பலம் ஐயா எதுவும் பேசலை’ என்று ஆதரவு தந்தார் டேனி. இதற்கிடையில் ஆலோசகர் ஜனனி பதற்றத்துடன் அறையில் நுழைந்து ‘ராணி.. எதிரிகள் பயங்கர ஆயுதங்களுடன் இருக்கிறார்கள். நாம் பாதுகாப்பு நடவடிக்கையை எடுப்பது நல்லது’ என்றார். என்னவென்று பார்த்தால், சமையல் அறையில் மும்தாஜ் கத்திகளை வைத்திருக்கிறாராம். பிறகு ஆயுதங்களை பறிமுதல் செய்தார்கள். ‘இந்த ரெண்டு நாள் நான் சொல்றதை ஒழுங்கா கேளுங்க.. உங்க ஆலோசனையெல்லாம் எனக்குத் தேவையில்லை. புரியதா?’ என்ற ராணி.. “சாப்பாடு செஞ்சு முடிச்சதும் மும்தாஜை ஜெயில்ல போடுங்க” என்றார் அதிரடியாக. 

“என்னைப் பத்தி ஷாரிக் என்ன பேசினார்” என்று தெரிந்துகொள்ள ஆவல் காட்டினார் மும்தாஜ். ஆனால் யாஷிகாவுக்கு எதுவும் தெரியவில்லை. ‘இப்பக் கூட பாருங்க.. பாலாஜி.. அவ மூஞ்சுல அடிச்சுடுவேன்னு சொல்றாரு.. அது அவங்களுக்குள்ள நடக்கற பிரச்னை’ என்று தன் வழக்கம் போல் ஒதுங்க முயன்றார். தன்னை சிறையில் அடைக்கவிருக்கும் தண்டனையை அறிந்த மும்தாஜ்.. “நீங்க அவங்களுக்கு ஆலோசனை சொல்லுங்க’ என்று ஜனனியிடம் வேண்டுகோள் தர, ‘நாங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. புரிஞ்சுக்கங்க” என்று கெஞ்சினார் ஜனனி. “ஏன் அவங்க ரொம்ப டிராமா பண்றாங்க. எப்படியாவது வெட்டிக்கட்டும்’ என்று மும்தாஜ் மீது எரிச்சலானார் டேனி.

தனியறைக்குள் வந்த டேனியும் ஜனனியும் ‘ஐஸ்வர்யாயை’ எப்படிக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பதைப் பற்றி பேசினார்கள். ‘அந்த வீடியோ பார்த்த பிறகு அவ டெரர் ஆயிட்டா.. அதுவரைக்கும் நல்லாத்தான் இருந்தா’ என்றார் ஜனனி. ‘அவளை ரூமிற்குள்ளே வெச்சிருந்தா நல்லது. வெளியே விட்டாதான் பிரச்னை பண்றா’ என்றார் டேனி. 

‘இங்க அப்பப்ப வீடியோ போட்டுக் காண்பிக்கறாங்க.. அதனால் சிலது நடக்குது. நாங்க இஷ்டப்பட்டு பண்ணலை..” என்று மும்தாஜை கன்வின்ஸ் செய்ய முயன்றார் டேனி. ‘நான் ஒருவிதத்தில் அவளைப் பற்றிக் கவலைப்படுகிறேன்’ என்றார் மும்தாஜ். ‘நீங்க இந்த task-ல தலையிடாதீங்க” என்று மும்தாஜிடம் சொன்னார், அப்போது அங்கு வந்த ராணி.

வீடெங்கும் சுத்தம் செய்வதற்காக ஆட்கள் நியமிக்கப்பட்டனர். நீச்சல் குளத்தில் இறைக்கப்பட்ட பொருள்களை மஹத் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். “உங்களுக்கு யார் மேலயாவது கோபம்னா.. இங்லீஷ்ல அஞ்சு கெட்ட வார்த்தைல திட்டுங்க” என்று சென்றாயனிடம் சொல்லச் சொன்னார் ராணியம்மா. (இதுவரை சென்றாயனை பல விதங்களில் திட்டிக்கொண்டிருந்த பாலாஜி உள்ளிட்ட மற்றவர்களை பழிவாங்க சென்றாயனுக்கு ஒரு வாய்ப்பு தருகிறார் என்பதாகவே புரிந்துகொள்ள முடிந்தது). ஆனால், வரம் தந்தவரின் தலையிலேயே கை வைக்கும் விதமாக ‘இடியட்.. நான்சென்ஸ்’ என்று மொக்கையான வசவுகளை ராணியிடமே சொன்னார் சென்றாயன். ‘மஹத்தைத் தூக்கி வெளில போடு..இவனைத் தூக்கி நீச்சல் குளத்துல போடு’ என்று ஜாலியாக உத்தரவிட்டார் ராணி. (தேவையா செண்டு!).

‘நாம பேசறத கூட ராணிக்குப் போட்டுக் காட்டறாங்களோ’ என்று ஜனனியிடம் அலறினார் டேனி. “இல்ல.. அப்படி இருக்காது.. பாலாஜி பேசினதுதான் அவ மைண்ட்டுக்குள்ள நல்லா ஏறிடுச்சு.. ஷாரிக் குடும்பத்துக்கு இவ செட் ஆக மாட்டா –ன்னு அவர் சொன்னது நல்லா ஏறிடுச்சு.. இருந்தாலும் குப்பை கொட்டினதுல்லாம் ஓவர்’ என்றார் ஜனனி. 

நீச்சல் குளத்திலிருந்து வெளியே வந்த சென்றாயனுக்குப் பொதுமக்களுக்கான உணவு தயார் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டது. ‘சப்பாத்தியும் சுரைக்காய் கறியும்’ 

“சோறு வடிச்சிடட்டுமா?’ என்று வெள்ளந்தியாகக் கேட்ட சென்றாயனிடம் ‘ராணிம்மா முடிவு செஞ்சதைத்தான் செய்யணும்” என்றார் ஜனனி. சிலையைச் சுத்தம் செய்து ஒரு கீறலும் விழாமல் இரவும் பகலும் பாதுகாக்கும் பொறுப்பு ஷாரிக் பையனுக்கு வழங்கப்பட்டது. ராணிக்கு மசாஜ் செய்யும் வேலை ரித்விகாவுக்காம். ராணி உணவு சாப்பிடும் போது அவரை மகிழ்விக்க வேண்டிய பொறுப்பு பொன்னம்பலத்துக்கு. 

பொன்னம்பலத்தின் கவர்ச்சி நடனத்தையெல்லாம் பார்க்க வேண்டிய கர்ண கொடூரமான சூழல் ஏற்பட்டு விடுமோ.. என்று நாம் மனதிற்குள் பதறிக் கொண்டிருக்கும் போது ‘ஒரு கதை சொல்லட்டுமா.. சார்’ என்று ஆரம்பித்தார் பொன்னம்பலம்.. ‘ஒரு ஊர்ல. விறகுவெட்டியாம்.. அங்க ஒரு மோகினிப் பேயாம்..” என்று ஆரம்பித்தார்.  பொன்னம்பலத்தின் கதையை சகிக்க முடியாமல் காட்சி துண்டிக்கப்பட்டது. (புத்திசாலி எடிட்டர்!)

ஒரு கிராமமே சாப்பிடும்படியான சப்பாத்தி மாவை தயார் செய்து அதிக தண்ணீர் ஊற்றி அதனுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார் சென்றாயன். சிரிப்பு தாங்காமல் டேனி இதை மும்தாஜிடம் காட்ட, ‘சமையல் டீம்ல இடம் பிடிக்கணும்னு இதுக்குத்தான் போராடினீங்களா’ என்று சமயம் பார்த்து குத்திக் காட்டினார் மும்தாஜ். (உதவியாளர் பணிக்குத்தானே மேடம் அவர் வர்றேன்னு சொன்னாரு!). இதற்கிடையில் ‘இந்த டாஸ்க் முடியட்டும். என்ன பண்றேன்னு பாரு’ என்று ஐஸ்வர்யாவின் சிலையிடம் ராவடி செய்து கொண்டிருந்தார் மஹத். 

‘ராணி மகாராணிக்கு ஜே’ என்ற முழக்கத்துடன் சிறைக்குச் சென்ற மும்தாஜ் பிறகு,  ‘இங்க ரொம்ப டர்ட்டியா இருக்கு. நான் உட்கார மாட்டேன்’ என்று அலம்பல் செய்தார் ‘ஹைஜீன்’ ராணி. பாலாஜியின் உண்ணாவிரதப் போராட்டத்தை முறியடிக்க ஆலோசனை கேட்டார் ராணி. பாதுகாவலரும் ஆலோசகரும் மொக்கையான ஐடியாக்களைத் தந்து ‘அவர் சாப்பிடலைன்னா என்ன செய்ய முடியும்?” என்று விழித்தனர். பிறகு ராணியே யோசனை செய்து ‘பாலாஜியை சாப்பிட வைக்கும் டாஸ்க்கை மஹத்திற்கு தரலாம்’ என்று ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ ஆலோசனையை முன்வைத்தார். 

தூங்கிக் கொண்டிருந்த பாலாஜியிடம் சென்று கரண்டிகளை வைத்து சத்தம் எழுப்பினார் ராணி. எதற்கும் அசராமல் தூங்குவது போலவே பாவனை செய்தார் பாலாஜி. ‘பிக்பாஸ்.. அவங்களை கன்ட்ரோல்ல வைங்க’ என்று சிறையில் இருந்த மும்தாஜ் முனகிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் படுக்கையை மாற்றுவதில் ஏதோ பிரச்னை வர.. ‘நாங்க சொல்றதையும் கேளுங்க’ என்று பாலாஜி சொல்லியதற்கு, ரகசிய அறையில் இருந்த வைஷ்ணவி ‘கரெக்ட்’ என்று ஆமோதித்தார்.  

பாலாஜியை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்கிற டாஸ்க் மஹத்திற்கு தரப்பட்டது. ‘பிடிவாதம் பிடிக்கிறவரிடம் எப்படிங்க ஊட்ட முடியும்?’ என்று புலம்பிய மஹத், ‘பாருங்க.. இப்ப ஒரு டெமோ காட்டறேன்.. என்ன செய்யப் போறார்னு பாருங்க” என்று சப்பாத்தியை ஊட்ட ‘பச்சக்கென்று’ துப்பினார் பாலாஜி. (ஆனால் நள்ளிரவுக்கு மேல் சென்றாயன் எடுத்து வந்து தந்த உணவை போர்வைக்குப் பின்னால் ஒளித்து பாலாஜி சாப்பிட்டார்.... ப்ச்..பாவம்!). ‘என்னால் இரவு முழுவதும் சிறையில் இருக்க முடியாது. ராணியம்மா கிட்ட சொல்லுங்க’ என்று பிக்பாஸிடம் அனத்தினார் மும்தாஜ். பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

நள்ளிரவில் சோபாவில் அமர்ந்திருந்த பாலாஜியிடம் ‘போய்ப் படுங்க’ என்று டேனி சொல்ல.. ‘இருப்பா… பாத்ரூம் போயிட்டுதான் தூங்கப் போகணும்.. பின்னே.. எங்க வாய்லயா போறது” என்று பாலாஜி ஓவராக வாய் விட “உங்களுக்கு யார் மேல கோபமோ அங்க காட்டுங்க.. தேவையில்லாம சம்பந்தப்படாதவங்க கிட்ட காட்டாதீங்க” என்று பாலாஜி செய்யும் சிறுபிள்ளைத்தனத்தைச் சரியாகச் சுட்டிக் காட்டினார் டேனி. 

“உங்களுக்கு பாலாஜி மேல எப்படி அக்கறை இருக்கோ.. அதே மாதிரி அந்தப் பொண்ணு மேல எனக்கு அக்கறை இருக்கு. பாலாஜி எங்க அம்மா பத்தியும் தப்பா பேசியிருக்காருன்னு கேள்விப்பட்டேன். இருந்தாலும் ஐஸ்வர்யா பண்ணது தப்பு. எங்கே இருந்து அந்த தைரியம் வருது” என்று தாயுள்ளத்தோடு ஜனனியிடம் நியாயம் பேசிக்கொண்டிருந்தார் மும்தாஜ்.

நள்ளிரவில் டேனியிடமும் ஜனனியிடமும் புலம்பினார் ஐஸ்வர்யா.  ‘அவர் இந்த ஷோல என்னைக் கீழ இறக்கினார் என்றால் இதே ஷோவில் என்னால அதைச் செய்ய முடியும். மோமோ பத்தி கெட்ட வார்த்தை சொல்றாங்க.. “நீ நல்ல ஃபேமிலில இருந்து வந்திருக்கேன்னு’ ஷாரிக் கிட்ட சொல்றாங்க.. அப்ப நாங்க என்ன கெட்ட ஃபேமிலியா.. செத்துப் போன எங்க அம்மாவைப் பத்தி இவங்களுக்கென்ன தெரியும்? ஏன் கெட்ட வார்த்தை பேசணும்? ‘என்று சுயபச்சாதாபத்துடன் புலம்பிய ஜஸ்வர்யாவை ‘கமல் சார் கிட்ட சொல்லலாம். விடு’ என்று ஆறுதல் படுத்தினார் டேனி. 

45-ம் நாள் காலை. ‘அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ.. ஒத்திக்கோ..’ என்கிற ரகளையான பாடலுடன் விடிந்தது. தன் நெருங்கிய தோழிக்கு உடம்பு சரியில்லை என்றும் பாராமல் அனைத்துத் துணிகளையும் அயர்ன் செய்யும் டாஸ்க்கை யாஷிகாவுக்குத் தந்து காலைப்பொழுதை மங்களகரமாக ஆரம்பித்தார் ராணியம்மா. 

மஹத்திற்கு ‘பெட்ரூம் க்ளீனிங், ஷாரிக்கிற்கு பாத்ரூம் க்ளீனிங் என்று பணிகள் பிரித்து தரப்பட்டன. ‘சாப்பாட்டையெல்லாம் கார்டன் ஏரியால வெயில்ல உட்கார்ந்து சாப்பிடணும்னு சொல்லுங்க” என்று அடுத்த அதிரடி உத்தரவு பறந்தது. ‘ஜனனி எங்கேம்மா போயிட்ட, இவ கிட்ட என்னை மாட்டிட்டு’ என்று பதறிக்கொண்டிருந்தார் டேனி. 

‘டாஸ்க்கை டாஸ்க்கா விளையாடணும். டேனி அவ்ளோ பேசறாரு.. தண்ணி எடுத்து வந்து வெச்சிருக்காரு. நேத்து மிளகா தண்ணி மட்டும் எடுத்து வந்து என் மேல ஊத்தியிருக்கணும்.. என்ன நடந்திருக்கும்னே தெரியாது’ என்று அப்பிராணி சென்றாயனிடம் ஆவேசப்பட்டுக்கொண்டிருந்தார் பாலாஜி.

தன்னைப் பற்றி சில விஷயங்களை பொதுவில் உளறி விட்டார் என்கிற கோபம் சென்றாயன் குறித்து பாலாஜிக்கு இருக்கிறது போல. ‘எத்தனை படங்கள்ல நடிச்சிருந்து என்ன உபயோகம்? உனக்குப் பேசத் தெரியலை’ என்று தன் கோபத்தைச் சென்றாயனிடம் காட்டிக் கொண்டிருந்தார். “நான் அப்படில்லாம் செய்வேனா’ என்று சென்றாயன் பரிதாபமாகச் சொன்னதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

காலை ட்ரில் ஆரம்பித்தது. ராணியின் புகழ் பற்றிய பாடல் பாடப்பட்டது. அரையும் குறையுமாக முணுமுணுப்பாக தேசிய கீதம் பாடும் பள்ளிப் பிள்ளைகள் போல் பொதுமக்கள் பாடினர். “வாயை விட்டுச் சிரிக்கணும், சத்தம் வராமல் சிரிக்கணும்’ என்கிற விநோதமான விஷயங்கள் தரப்பட்டன. கீழே உருண்டு புரண்டு சிரித்துக் காண்பித்தார் ஐஸ்வர்யா. அனைத்திலும் கலந்துகொள்ளாமல் சம்பிரதாயத்துக்குக் கடமையே என்று நின்றிருந்தார் பாலாஜி.

“சரி.. உங்களுக்கான இன்றைய சிரிப்பு கோட்டா முடிந்தது. இனிமே சிரிக்கக் கூடாது. சேர்ந்து நிக்காதீங்க. மீறினா தண்டனை’ என்று கும்பலைக் கலைத்தார்கள் டேனியும் ஜனனியும். 

பிறகுதான் ஆரம்பித்தது சென்றாயன் உடனான பஞ்சாயத்து. அவர் அருந்திக்கொண்டிருந்த டீயை வாங்கி சிங்க்கில் ஊற்றினார் ராணியம்மா.. “ஏன் சிங்க் இப்படி க்ளீனா இல்லை” என்கிற விசாரணைக்கு, குஷி படத்தில் ‘ஐயோ.. பாவம்..’ என்று சொன்ன அதே மாடுலேஷனில் விளக்கம் தந்தார் மும்தாஜ். 

தன்னிடமிருந்து தேநீர் பிடுங்கப்பட்டு கீழே ஊற்றப்பட்டது குறித்து பயங்கரமாகக் கோபப்பட்டார் சென்றாயன். ‘ராணியே இன்னும் டீ குடிக்கலை’ என்பது ஐஸ்வர்யாவின் வாதம். ‘ஏ.. வாயை மூடுங்க.. என்று ஆரம்பித்து.. வாயை மூடு.. லூஸூ என்று கீழே இறங்கினார் ஐஸ்வர்யா. இருவருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு அடிதடி ஆகும் போன்ற சூழல் ஏற்பட்டது. ‘இன்னிக்கு ஃபுல் டே சாப்பாடு தராதீங்க’ என்கிற ஆணையை ஐஸ்வர்யா போட.. ‘அப்படி மட்டும் நடக்கட்டும்.. என்ன நடக்குதுன்னு பார்க்கறேன்’ என்று அதற்கும் மேலாகக் கோபப்பட்டார் சென்றாயன். பாலாஜி இவரைக் கட்டுப்படுத்த முயன்றார். ‘என்னை என்ன பண்ணப் போறீங்க.. பார்ப்போம்..” என்று சென்றாயனின் பின்னாலேயே சென்றுகொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ‘நீ லூஸூ.. நாயி கழுதை’ என்று ஏக வசனங்கள் பரஸ்பரம் பறந்தன. 

சென்றாயனை தாக்க விட்டு பிரச்னையைப் பெரிதாக்க ஐஸ்வர்யா முயன்றது வெளிப்படையாகத் தெரிந்தது. சென்றாயன் ஏறத்தாழ ஐஸ்வர்யாவை அடிக்கப் போய் கட்டுப்படுத்திக் கொண்டார். பாதுகாவலர் டேனி இதைத் தடுக்க முயலவில்லை. ‘யார் டீ போட்டது?” என்று ரித்விகாவிடம் ஜனனி விசாரித்துக்கொண்டிருக்க அதிரடியாக நுழைந்த ஐஸ்வர்யாவிடம் ‘நான்தான் போடச் சொன்னேன்’ என்று பழியை ஏற்றுக்கொண்டு ரித்விகாவைக் காப்பாற்றினார் ஜனனி. "அப்ப நீ அரை மணி நேரம் வாய மூடுன்னு " ஜனனிக்குத் தண்டனை தரப்பட்டது. 

‘கொடுங்கோல் ஆட்சின்னா இப்படித்தான் இருக்கும்” என்று டேனி விளக்கம் அளிக்க, ‘அப்ப மக்களும் என்ன வேணா பண்ணலாமா” என்று ஆவேசமாகக் கேட்ட சென்றாயனின் கோபத்தில் நியாயம் இருந்தது. (இப்பத்தான் சரியான திசைல யோசிக்கறீங்க செண்டு). “டீ போடச் சொன்னேனே.. தவிர.. குடிக்கச் சொல்லலை” என்று சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் வழியாக பிறகு வெளியே வர முயன்றார் ஜனனி.

‘இனிமே சென்றாயனை அனைவரும் லூஸூன்னுதான் கூப்பிடணும்” என்பது ராணியின் அடுத்த அபத்தக் கட்டளை.  ‘ஒரு பெரிய மனுஷனைப் போய் லூஸூன்னு சொல்லலாமா,? வயது வித்தியாசம் இல்ல.. நான் கிளம்பறேன்” என்று ஆத்திரப்பட்டார் சென்றாயன். (நியாயமான கோபம்!) “எங்களால் எதுவும் சொல்ல முடியவில்லை’ என்று ஆலோசகர் ஜனனி கையறு நிலையில் சொன்னார். குரலை உயர்த்திப் பேசியதால் மன்னிப்பு கேட்கச் சொல்லி உத்தரவிடப்பட்டது.  ‘ஸாரி கேட்டுட்டு போய்டுங்க. அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று ரகசியமாகச் சொல்லி உதவினார் டேனி.

‘அஞ்சு பக்கெட் தண்ணி எடுத்துட்டு வாங்க” என்கிற ராணியின் உத்தரவை ‘வீட்ல ரெண்டு பக்கெட்தானே இருக்கு” என்று அந்த உத்தரவை காமெடியாக்கினார் டேனி. (இதுதான் சரி!). ‘வீட்ல சமையலுக்கே மிளகாய் தூள் கம்மியா இருக்கு.. இவங்க வேற’ என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் அதையும் காமெடியாக்கினார். 

பெட்ரூமில் இந்தத் தண்டனையைச் செய்ய வேண்டும் என்று அடம்பிடித்த ஐஸ்வர்யாவை ‘பிக்பாஸ் பிராப்பர்ட்டியைச் சேதம் படுத்த விதி கிடையாது” என்று நல்லதனமாகப் பேசி சம்மதிக்க வைத்தார்கள். ‘உனக்குன்னு ஒண்ணும் வரும் போதுதான் தெரியுதா..” என்று இந்தச் சமயத்தில் சென்றாயனை வெறுப்பேற்றினார் பாலாஜி. தண்ணீரில் டீத்தூள்.. முட்டை’ என்றெல்லாம் போட முயல.. “முடியை வெச்சுத்தான் என் வாழ்க்கை.. நடிப்புல்லாம் இருக்கு. அதுல ஏதாவது ஆச்சுன்னா.. அவ்வளவுதான்’ என்று நியாயமாகக் கோபப்பட்டார் சென்றாயன். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

“சும்மா லுலூவாய்க்கு.. அதுல முட்டை போடல.. வெறும் ஓட்டை மட்டும் காண்பிச்சு.. ராணியை ஏமாத்திட்டோம். ஷாம்பு, கண்டிஷனர்தான்” என்று டேனி சமாதானப்படுத்தினார். “ப்ளீஸ் அண்ணா.. தலைவர் பதவியை விட்டுக் கொடுங்கன்னு கேட்டுது. அதுக்கு காட்டற நன்றியா.. இது’ என்றும் ஐஸ்வர்யா குறித்து ஆதங்கப்பட்டார் சென்றாயன்.

ரித்விகா சென்றாயனின் மேல் தண்ணீரை ஊற்ற நீராட்டும் வைபவம் கார்டன் ஏரியாவில் நடந்தது. ‘ஐஸ்வர்யா ராஜ்ஜியம் ஒழிக’ என்ற கோஷத்துடன் தண்டனையை ஏற்றார் சென்றாயன். ‘தலைலயும் ஊத்துங்க’ என்ற ராணியிடம் ‘பொடுகு பிரச்னையிருக்கு” என்று எதையோ சமாதானம் சொல்லி தவிர்த்தார் டேனி. 

மஹத் தூங்கியதால் அவருக்கான தண்டனையாக வெயிலில் 24 மணி நேரம் முட்டி போடும் தண்டனை வழங்கப்பட்டது. சிறிது நேரம் இருந்த அவர் பின்பு வழக்கம் போல் எகிற ஆரம்பிக்கவும், ‘இவரைச் சிறையில் அடைக்கலாம்’ என்று வெயிலிலிருந்து டேனி காப்பாற்றியதைக் கூட மஹத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிறையில் ஹாயாக அமர்ந்திருந்த அவரை ‘அங்கே முட்டி போடச் சொல்லுங்க’ என்றார் கறார் தலைவி.

நொண்டியாடிக் கொண்டே போகும் தண்டனை ஷாரிக்குக்குத் தரப்பட்டது. சர்வாதிகாரி இம்சை அரசியாக மாறிக் கொண்டிருந்தார். ‘கவலைப்படாதே சகோதரா.. நமக்குன்னு ஒரு நேரம் வரும்’ என்று ஷாரிக்குக்கு ஆறுதல் கூறினார் மஹத். 

‘ஒரு சிலரின் வார்த்தைகளால் புண்பட்ட மகாராணியின் கொடுங்கோல் ஆட்சி வீட்டில் உச்சம் பெற, பொதுமக்கள் இதன் முடிவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதன் முடிவுதான் என்ன?” என்கிற பின்னணிக்குரலுடன் இன்றைய நாள் முடிந்தது. 

இந்த டாஸ்க் முடிந்ததும் ஐஸ்வர்யாவின் மீது ஒட்டுமொத்த வீடும் கொலைவெறியுடன் பாயும். ஆக.. ரணகளத்தின் இரண்டாம் பாகம் காத்திருக்கிறது! 

ஐஷ்வர்யா சர்வாதிகார ஆட்சி என்னும் பெயரில் நிகழ்த்தும் செயல்கள் பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.