Published:Updated:

பிக்பாஸில் 'உன்னைப் போல் ஒருவனின்' உவ்வேக் காட்சிகள்! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
பிக்பாஸில் 'உன்னைப் போல் ஒருவனின்' உவ்வேக் காட்சிகள்! #BiggBossTamil2
பிக்பாஸில் 'உன்னைப் போல் ஒருவனின்' உவ்வேக் காட்சிகள்! #BiggBossTamil2

பிக் பாஸ் வீட்டில் ‘உன்னைப் போல் ஒருவன்’ என்கிற டாஸ்க்  தொடர்பான கலாட்டாக்கள் இன்றும் தொடர்ந்தன. ஆனால் சில போட்டியாளர்களின் செய்கைகள் எல்லை மீறின. குறிப்பாக சிவப்பு அணி கட்டுப்பாடுடன் இருந்த போது நீல அணி செய்த சில விஷயங்கள் முகஞ்சுளிக்க வைப்பதாக இருந்தன. மும்தாஜ் பாத்திரத்தில் இருந்த மஹத்தும், பாலாஜியின் பாத்திரத்தில் இருந்த வைஷ்ணவியும் தங்களின் சீக்ரெட் டாஸ்க்கை முடிப்பதற்காக செய்த அத்துமீறல்கள் உவப்பானதாக இல்லை. 

அவர்களின் எல்லை மீறல்களுக்கு பிக் பாஸ் ஒரு மறைமுக காரணம் என்றாலும் சிவப்பு அணியைப் போல ஒரு கட்டுப்பாடுடன் தங்களின் சீக்ரெட் டாஸ்க்கை முடித்திருக்கலாம். (விதிவிலக்காக சிவப்பு அணியில், மஹத்தின் தனிப்பட்ட விஷயத்தைக் கிண்டலடித்த பொன்னம்பலம் செய்த காரியம் சற்று ஓவர்). ஒருவேளை சிவப்பு அணிக்கு சீக்ரெட் டாஸ்க் தந்திருந்தால் அவர்களும் இப்படித்தான் நடந்திருப்பார்களோ என்னமோ. 

“ஒரு பாத்திரத்தின் இயல்பை பின்பற்றுவது என்பது வேறு, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காரெக்ட்டரை கொலை செய்வது வேறு’ என்று தொடர்ந்து யாஷிகா சொல்லிக் கொண்டிருந்தது சரியான கருத்து. 

சற்று விரிவாகப் பார்ப்போம். குழப்பம் நேராமல் இருக்க, பாத்திரங்களின் பெயர்களை அல்லாமல் பல இடங்களில் போட்டியாளர்களின் சொந்தப் பெயர்களையே பயன்படுத்தியிருக்கிறேன். 

**

52-ம் நாள் காலை. பிக் பாஸ் வீட்டின் காலையில் அடிக்கடி விஜய் நடித்த திரைப்படப்பாடல்களாக போடப்படுவதின் ரகசியம் புரியவில்லை. ‘பைரவா’ திரைப்படத்திலிருந்து ‘பாப்பா.. பாப்பா’’ என்ற பாடல் ஒலித்தது. மும்தாஜின் வேடத்திலிருந்த மஹத்திற்கான சமர்ப்பணமோ, என்னவோ. 

யாஷிகாவின் பாத்திரத்தில் இருந்த டேனியும், ஐஸ்வர்யாவின் பாத்திரத்தில் இருந்த மும்தாஜூம் அவர்களை நகலெடுப்பது போன்று ஆடிக் கொண்டிருந்தார்கள். டேனியின் சேஷ்டைகளைப் பார்த்து நடுவரான ரித்விகா சிரித்துக் கொண்டிருந்தார். 

ஸ்மோக்கிங் ரூம் மறுபடியும் காட்டப்பட்டது. சந்திரமுகி போல முழு மும்தாஜாகவே மாற மஹத் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். நேற்று வரை தலைக்கு முக்காடு மட்டும் போட்டுக் கொண்டிருந்த அவர், இதற்காக இன்று பெண் உடையை  அணிய, வைஷ்ணவி, ஐஸ்வர்யா அவருக்கு உதவினர். ஆனால் மஹத்தின் பின்பக்கம், மும்தாஜை வெறுப்பேற்றுவது போல் மிகையாக இருந்தது. பெண் ஒப்பனையில் வந்த மஹத்தைப் பார்த்த மும்தாஜ் திகைப்பாக பார்த்தார். அவரது அதிருப்தி முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அவரை இப்படி சீண்டுவதுதானே நீல அணியின் நோக்கம்?! “பின்னாடி இருக்கறத எடுத்துடுடா மஹத்” என்று சிரிப்புடன் எச்சரித்துக் கொண்டிருந்தார் ரித்விகா.

ஐஸ்வர்யாவைப் போல் சோம்பலாக மும்தாஜ் தூங்கிக் கொண்டிருக்க நாய் குரைத்தது. இவரும் டேனியும் சேர்ந்து நாயை விடவும்  அதிகமாக குரைத்ததில் அது சோர்ந்து ஓடிப் போய் விட்டது. 

சமையல் அணியில் உதவிக் கொண்டிருந்த சென்றாயனை, ‘கைய கழுவினீங்களா?” என்று ‘ஹைஜீனாக’ கேட்டுக் கொண்டிருந்தார் மஹத். பொங்கல் என்கிற பெயரில் பால் பாயாசத்தை மஹத் முயன்று கொண்டிருந்ததை மற்றவர்கள் விசாரிக்க ‘நார்த் இண்டியன் ஸ்டைல்ல’ இப்படித்தான் பண்ணுவாங்க” என்று மஹத் சொல்லிக் கொண்டிருந்தனின் மூலம் மும்தாஜை தொடர்ந்து சீண்டுவதுதான் அவருடைய நோக்கம் என்பது தெளிவாகப் புரிந்தது. “தமிழ் கலாசாரப்படி இப்படித்தானே கிண்டணும்?” என்று டேனி கேட்டார். பொன்னம்பலத்தை டார்க்கெட் செய்யறாராம். “உங்க டீமுக்குள்ள நீங்களே கலாய்ச்சுக்காதீங்க” என்று எச்சரிக்கை தந்தார் ரித்விகா.

வேட்டியும் தொப்பையுமாக பாலாஜி வேடத்தில் நேற்று இருந்த வைஷ்ணவி இன்று சற்று முன்னேறி தாடியெல்லாம் வைத்துக் கொண்டு அந்தப் பாத்திரத்தின் முழுமையை எட்டி அடைய முயற்சித்துக் கொண்டிருந்தார். பாலாஜியைப் போலவே இழுவையாக பேசுவது, கையைச் சொறிவது என்று இவரது முயற்சி அருமையாக இருந்தது. 

‘பார்த்துட்டான்.. பார்த்துட்டான்’ என்கிற தொப்புள் காமெடியை இன்றும் முயன்றார் டேனி.  ‘இந்த டீம்ல இருந்துக்கிட்டே சென்றாயன் என்னை abuse பண்றான். இந்த டீம்ல இருக்கவே பயமா இருக்கு” என்று ரகளையாக அலப்பறை செய்து கொண்டிருந்தார். இந்த டாஸ்க்கில் டேனியின் தொப்புள் ஒரு முக்கிய பங்காற்றியது என்றாலும் அதில் மிகையில்லை நேற்று இதை காமெடியாக எடுத்துக் கொண்ட யாஷிகா இன்று அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை என்பது பிறகு தெரிந்தது. 

பாலாஜி அவ்வப்போது காரெக்ட்டரில் இருந்து வெளியே வந்து ஜோக் அடித்துக் கொண்டிருந்தார். ‘சென்றாயன் மாதிரி நடந்து நடந்து காலே அகண்டு போச்சு” என்று ஜனனியை கிண்டலடித்தார். உடை குறித்த மும்தாஜின் நியாயமான ஆட்சேபணையை மஹத்திடம் கொண்டு சென்றார் நடுவர் ரித்விகா. ‘பின்னாடி இருக்கற குறைச்சுக்க. அவங்க கிட்ட ஸாரி சொல்லு” என்கிற அவரின் குறிப்பை மஹத் கேட்பதாயில்லை.

பொன்னம்பலமும் மும்தாஜூம் முறையே மஹத் மற்றும் ஐஸ்வர்யா பாத்திரத்தில் ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். மும்தாஜின் கன்னத்தை பிடித்திழுத்தார் பொன்னம்பலம். (ஐயோ! தமிழ் கலாசாரம்!) முன்பு, சாப்பாடு விஷயத்தில் முறைத்துக் கொண்டிருந்த இருவரையும் இந்த டாஸ்க் இணைத்து வைத்தது விநோதம். 

நீல அணி நேற்று மூன்று டாஸ்க்கை முடித்திருந்தது. இன்னமும் இரண்டு டாஸ்க்கை முடிக்க வேண்டும். எனவே அது தொடர்பாக பல ரகசிய சதியாலோசனைகளை முயன்றார்கள். விதம் விதமான முயற்சிகளை செய்தார்கள். இவர்கள் ரகசியமாக அடிக்கடி தங்களுக்குள் கூடிப் பேசுவதைக் கண்ட சிவப்பு அணிக்கு சந்தேகம் வந்தாலும் உறுதிப்படுத்தாத நிலையில் குழம்பி நின்றார்கள். பிக்பாஸிடம் முறையிட மட்டும்தான் முடிந்தது. ஆனால் கல்லுளி மங்கரான பிக்பாஸ் தனக்கு ஏதும் தெரியாது என்பது போலவே பாவனை செய்தார்.

அதுவரையில் டிஷர்ட்டை ஒழுங்காக போட்டுக் கொண்டிருந்த டேனி, நேற்று போல் தொப்புள் தெரியும்படியாக சுருட்டிவிட்டுக் கொண்டு “நடுவர் அவர்களே.. பாருங்க.. இந்த பொன்னம்பலத்தை.. (சென்றாயன்) கீழே தண்ணீர் ஊற்றி விட்டு வேண்டுமென்றே என்னை குனிய வைக்கிறார்’ என்று காமெடியும் வில்லங்கமும் கலந்த புகாரை முன்வைத்தார். அசல் பொன்னம்பலம் இதனால் சற்று எரிச்சல் அடைந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இதில் நடந்த களேபரத்தில், சென்றாயனை பொன்னம்பலம் முதுகில் அழுத்தமாக தள்ளி விட “பிக்பாஸ்.. அடிக்க வைக்கும் டாஸ்க்கை முடித்து விட்டோம்” என்று காமிராவில் ரகசியமாக பெருமிதப்பட்டார் சென்றாயன். 

மும்தாஜ் பாத்திரத்தில் இருந்த மஹத் சற்று வில்லங்கமாக யோசித்தார். பெண் உடையில் இருக்கும் அவர், மும்தாஜின் கண்ணில் படும்படியாக உடையைக் கழற்றினால் நிச்சயம் அவர் டென்ஷன் ஆகி ‘கெட்ட வார்த்தையில் திட்டுவார்’ என்கிற ‘கேடுகெட்ட’ பிளானைப் போட்டார். பிறகு அதன்படி கார்டன் ஏரியாவில் வந்து, உடம்பில் ஏதோ பிரச்னை என்பது போல சட்டென்று உடையின் கீழ்ப்பகுதியை கழற்றி அரைநிர்வாணமாக நிற்க, இதை சற்றும் எதிர்பாராத சிவப்பு அணி சிரிக்க ஆரம்பித்து விட்டது. சற்று தூரத்தில் இருந்த மும்தாஜின் எதிர்வினைகள் காட்டப்படவில்லை. மனதிற்குள் கோபம் இருந்தாலும் இதற்கு ரியாகஷன் தர வேண்டாம் என்று அவர் முடிவு செய்திருக்கலாம். 

பாத்ரூமில் அருவருக்க வைக்கும் கழிவு மாதிரியான ஒன்றை தயார் செய்து விட்டு ‘பாத்ரூம்ல பாருங்களேன்.. ஏதோ இருக்கு’ என்று வலுக்கட்டாயமாக மும்தாஜை அழைத்துச் சென்றார்கள். ‘ஹைஜீன் ராணியாக’ இருக்கும் அவர் நிச்சயம் இதை அருவருப்புடன் பார்ப்பார் என்கிற அவர்களின் நோக்கம் நிறைவேறியது. ‘உவ்வேக்’ என்கிற மாதிரியான எதிர்வினையை மும்தாஜ் நிகழ்த்த, “பிக்பாஸ்.. எதிர் டீம்ல ஒருத்தரை சங்கடப்பட வெச்சுட்டோம்’ என்று பெருமிதப்பட்டது நீல அணி. (இதெல்லாம் பெருமையா, கடமை!).

அடுத்து யாஷிகாவை எப்படியாவது அழச்செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது நீல அணி. ‘அவங்க காரெக்ட்டரை டிகிரேட் செய்யறது ரொம்ப தப்பு. காரெக்ட்டரை மட்டும்தான் ஃபாலோ பண்ணணும். நாம அவங்க லெவலுக்கு இறங்க வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் யாஷிகா. 

எதிரணி ஓவராக செயல்படுவதைக் கண்டு எரிச்சலான பொன்னம்பலம் தானும் ஓவர் ஆக்ட் செய்ய ஆரம்பித்து விட்டார். ஆனால் இது தனிப்பட்ட தாக்குதலாக அமைந்தது துரதிர்ஷ்டமானது. மஹத் தனது கேர்ள் பிரெண்டுக்கு சொல்வது போல ‘ஐ லவ் யூ பூபூ’ என்று தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார். ‘திவ்யா.. திவ்யா..’என்று கத்தும் ‘காதல் கொண்டேன்’ தனுஷ்ஷை நினைவுப்படுத்துவது போல் வெறியுடன் கத்திக் கொண்டிருந்த இவரைப் பார்த்து மஹத் சற்று டென்ஷன் ஆக, டேனி அவரைச் சமாதானப்படுத்தினார். பிறகு ‘டேய் பொன்னம்பலம் ஒழுங்கா நடிடா” என்று சென்றாயனை சொல்வது போல உண்மையான பொன்னம்பலத்தை வெறுப்பேற்ற முயன்றார். 

நீல அணியை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ், ‘நீங்கள் செய்ததில் மூன்று எதிர்வினைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அழ வைப்பது, அலறும்படி கத்த வைப்பது, சங்கடப்படுத்த வைப்பது போன்ற எதிர்வினைகளை எதிரணியிடமிருந்து வரவழைக்க வேண்டும். ஏற்கெனவே டார்க்கெட் செய்த நபர்களை விட்டு விட்டு வேறு ஆட்களிடம் முயல வேண்டும். கூடுதலாக ஆறாவது ரியாக்ஷனையும் நீங்கள் வரவழைத்து விட்டால் சிறப்பு பரிசு காத்திருக்கிறது’ என்று நீல அணியை பிக்பாஸ் ஏற்றி விட, கொலைவெறியோடு வெளியே வந்தார்கள். 

சிறிது நேரத்தில் சிவப்பு அணியையும் பிக்பாஸ் வரவழைத்தார். அவர்களை ஆழம் பார்ப்பதற்காக, ‘இதுவரையில் உங்கள் பணியைச் சரியாக செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று தூண்டிலைப் போட, “பிக்பாஸ் எதிரணியினர் சமயங்களில் எல்லை மீறுகிறார்கள். விநோதமாக நடந்து கொள்கிறார்கள்’ என்கிற புகாரை அவர்கள் வைத்தனர். திருடனுக்கு தேள் கொட்டியது போல, ‘நாங்கள்தான் அவர்களுக்கு சீக்ரெட் டாஸ்க் தந்திருக்கிறோம்’ என்பதைச் சொல்ல முடியாத பிக்பாஸ், ‘எல்லாம் கடவுள் பார்த்துப்பார்’ என்பது போல ‘நடுவர் அனைத்தையும் கவனித்துக் கொள்வார்’ என்று ஆறுதல் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். (என்னா வில்லத்தனம்!).

நீல அணி, உண்மையாகவே காரெக்ட்டரில் இருக்கிறார்களா அல்லது எல்லை மீறுகிறார்களா என்று அழுத்தமாக சோதித்துப் பார்க்க முடிவெடுத்த மும்தாஜ், தன்னிடமிருந்த ‘ஐஸ்வர்யா’ பாத்திரத்தை இதற்காகப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஐஸ்வர்யாவிற்கு முன்பு காலில் சிறிய அளவில் எலும்பு விரிசல் ஏற்பட்டது. அதை நினைவில் கொண்டு, அதே மாதிரி காலில் அடிப்பட்டதொரு பாவனையில் மிகையாக  வலியில் கத்த ஆரம்பித்தார் மும்தாஜ். வலியுடன் கதறித்துடித்த அவரது ஓவர் பர்பாமன்ஸூக்கு நீல அணி எந்த ரியாக்ஷனையும் தரவில்லை. மாறாக தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள். ‘சீரியல் வாய்ப்பு கன்ஃபர்ம்’ என்று பாவனையாக மும்தாஜை கிண்டலடித்தார் டேனி. 

கார்டன் ஏரியாவில் இருந்த ஒரு பல்லியை இம்சை செய்து பிடித்தார் மஹத். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மும்தாஜ், இதை வெச்சுல்லாம் என்னைப் பயமுறுத்தினாங்கன்னா.. எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும். பல்லின்னா எனக்கு அவ்வளவு பயம்” என்று முன்கூட்டியே பயந்து கொண்டிருந்தார். கழிவறைக்குச் சென்றிருந்த ஜனனியின் பின்னாலேயே சென்ற மஹத், கதவு திறந்த நேரம் பார்த்து பல்லியை தூக்கிப் போட பயந்து அலறினார் ஜனனி. “பொம்பள பாத்ரூமுக்குள்ள ஒரு ஆம்பளை சட்டுன்னு வந்தா பயப்படத்தானே செய்வாங்க” என்று பிறகு சமாதானம் கூறினார். இவர் பயந்தது பல்லிக்காகவா அல்லது மஹத்திற்காகவா என்பது தெரியவில்லை. (பல்லி நிச்சயம் ஜனனியின் க்ளோஸ் ஃபிரெண்டாக இருக்க முடியாது).

‘இந்த மாதிரில்லாம் பயமுறுத்தினா நான் அனுமதிக்க முடியாது’ என்று ரித்விகா எச்சரிக்க, ‘என்ன நீங்க.. எப்பப்பாரு எங்க கேம்ல வந்து டிஸ்டர்ப் செய்யறீங்க?” என்று அவரை ஜாலியாக கலாய்த்தார்கள். நீல அணிக்கு ‘சீக்ரெட் டாஸ்க்’ தரப்பட்டிருக்கும் விஷயம் நடுவரான ரித்விகாவிற்கும் ‘அதிகாரபூர்வமாக’ தெரியாது என்பதால் அவரால் நீல அணியை அதிகம் கட்டுப்படுத்த முடியாமல் விழித்தார். ‘கால் கழுவுவதற்காக’ மறுபடியும் கழிவறைக்கு செல்ல விரும்பிய ஜனனி தனியாகச் செல்ல பயப்பட்டு பொன்னலம்பத்தை துணைக்கு அழைத்துச் சென்றார். ‘தனியா மாட்டாமயா போயிடுவே’ என்றார் பின்னாலேயே வந்த மஹத். 

“நாங்க பல்லியெல்லாம் பிடிக்கலை. எந்த விலங்கையும் துன்புறுத்தல. (திரைப்பட சென்சார் சர்ட்டிபிகேட் நன்றாக வேலை செய்கிறது). சும்மா டிஷ்யூ பேப்பரை வெச்சு பயமுறுத்தினோம்” என்று காமிராவின் முன்பு பிறகு தெளிவுப்படுத்தினார் மஹத். (பல்லி விஷயம் இப்படி ‘சில்லியாக’ முடிந்தது).

பாலாஜிதான் அடுத்த டார்க்கெட் என்று முடிவான பிறகு விதம் விதமாக அவரை இம்சிக்கத் துவங்கியது நீல அணி. பாலாஜியின் ஆருயிர் நண்பனான சென்றாயன், பாலாஜியை வாய்க்கு வந்தபடி அர்ச்சிக்கத் துவங்கினார். பாலாஜி அதுவரை தந்த வசையையெல்லாம் இந்த சாக்கில் திருப்பித் தருவது போலவே அவரது செய்கைகள் இருந்தன. ‘நீ சோறுதான் தின்றியா.. வேற ஏதாவது தின்றியா.. “ என்று ஆரம்பித்த சென்றாயன் ‘குசு பாக்டரி’ என்று பாலாஜியின் ஆரோக்கிய குறையை கிண்டலடிப்பது வரை கீழே இறங்கினார். 

பாலாஜியின் வேடத்தில் இருந்த வைஷ்ணவியையும் இதற்காக பயன்படுத்திக் கொண்டார்கள். “ஏன் வேஷ்டி மேல  வேஷ்டி கட்டியிருக்க.. நீ ஒரு ஆம்பளை வைஷ்ணவி’ என்றெல்லாம் அவர்கள் அடித்த கிண்டல்களை ‘அப்படி துப்பிட்டு கிளம்பு’ என்பது போல் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார் பாலாஜி. ‘இன்னமும் கூட கோபம் வரலையே?” என்று ஆதங்கப்பட்டார் சென்றாயன். 

தனிப்பட்ட தாக்குதல்கள் சற்று மிகையாக செல்ல, நடுவர் தலைமையில் இந்த டாஸ்க் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. ‘என் கேர்ள் பிரெண்ட் பத்தி யாரு பேசறது.. பர்சனல் லைஃப் பத்திலாம் பேசலாமா? யாரு இதை ஆரம்பிச்சது? என் கேர்ள் பிரெண்ட் பேர் சொல்ல எந்த நாய்க்கும் தகுதியில்லை’ என்றெல்லாம் ஓவராக கூவி அதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தை மிகையாக வெளிப்படுத்தினார் மஹத். 

“நீங்க மும்தாஜ் மாதிரி வல்கரா பண்ணீங்க?” என்று சிவப்பு அணி கோரஸாக மஹத்தை நோக்கிப் பாய களேபரமாக இருந்தது. பதிலுக்கு மஹத்தும் எகிறிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் மஹத்தை பொன்னம்பலம் தனியாக இழுத்துச் செல்ல முயற்சித்து சில நிமிட போராட்டத்திற்குப் பின்பு வெற்றி பெற்றார். இருவரும் குசுகுசுவென்று பேசிக் கொண்டர்கள். (பாலாஜியைப் பற்றியதல்ல). ‘டாஸ்க்’கிற்காக செய்தேன் என்பது போல் பொன்னம்பலம் தாழ்மையாக விளக்கியிருப்பார் போலிருக்கிறது. மஹத் சமாதானம் ஆகி திரும்பி வந்தார்.

“எனக்கு கால்ல அடிபட்டப்போ இவ்ளோ ஓவர் ரியாக்ட் பண்ணலை. ஆனா மும்தாஜ் அப்படிப் பண்ணாங்க. அது மட்டும் கேரக்ட்டர்ல இருக்கறதா?” என்று மேலும் குட்டையைக் குழப்பினார் ஐஸ்வர்யா. இவருக்கும் யாஷிகாவிற்கும் முட்டிக் கொண்டது. 

“நாம டாஸ்க்ல இல்லாத போது அவங்க அவங்களுக்கு நெருக்கமானவங்கள கூப்பிடற செல்லப் பெயர்களை பகிர்ந்திட்டு இருப்போம். அதைப் பொதுவுல தயவு செய்து சொல்லாதீங்க. கெட்ட வார்த்தைகள் பேசாதீங்க” என்று அழுத்தம் திருத்தமான குரலில் ஏறத்தாழ கத்திச் சொன்னார் ரித்விகா. ‘ஓகே ஜூட்” என்று அவர் சொன்னதும் மறுபடியும் புனைவு கதாபாத்திரங்களுக்குள் ஆவேசமாக பாய்ந்தார்கள். 

‘பொன்னம்பலம் ஐயாவைப் பத்தி தப்பா பேசிட்டாங்களே” என்று சிவப்பு அணி புலம்பியது. தங்களின் வலைக்குள் எப்படியாவது பாலாஜியை சிக்க வைத்து விட வேண்டும் என்று நீல அணி மல்லுக்கட்டியது. இதற்காக பாலாஜி பாத்திரத்தில் இருக்கும் வைஷ்ணவியைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர்கள் இதற்காக யோசித்த வழி வில்லங்கமானது. இதற்காக வைஷ்ணவியும் எவ்வாறு ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை. நேற்றைய கட்டுரையில் விவரித்ததும் இதைத்தான். பிக்பாஸ்ஸின் கட்டளைகளை ஆட்டு மந்தைகள் போல் பின்பற்றும் இயந்திரங்களாக போட்டியாளர்கள் மாற்றப்படுகிறார்கள். 

நீல அணியின் ஆலோசனைப்படி பாலாஜியின் எதிரேயே ‘கதாபாத்திர’ பாலாஜி உடைமாற்றினால் அசல் பாலாஜி, சங்கடப்படுவார் என்பது அவர்களின் ‘அபத்தமான’ யோசனை. இதற்கிடையில் காமிராவின் முன்பு வந்த வைஷ்ணவி ‘நான் ஷோவை விட்டுப் போறேன். என்னை கன்ஃபெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க. இதுவரை நான் கேட்டதில்லை. முதன்முறையாக கேட்கிறேன். பேசணும். கூப்பிடுங்க” என்று நாமினேஷன் செய்தவற்கு முன்னால் அடம்பிடித்த பாலாஜியை இமிடெட் செய்ய ‘என்ன பர்பாமான்ஸூ இது’’ என்று வாயால் காற்றை ஊதிய படி சிரித்தார் ஒரிஜினல் பாலாஜி. 

பாலாஜியை சங்கடப்படுத்தும் வேலையை வைஷ்ணவி ஆரம்பித்தார். இவருடைய வேட்டியின் மீது தண்ணீரை தெரியாமல் ஊற்றியது போல் ஐஸ்வர்யா பாவனை செய்ய, ஆண்களின் பெட்ரூமிற்குள் வேக வேகமாக சென்ற வைஷ்ணவி, ‘அவள் ஒரு தொடர்கதை’ சுஜாதா மாதிரி சட்டென்று மேல் சட்டையைக் கழற்ற, பாலாஜி உள்ளிட்டவர்கள் திகைத்துப் போனார்கள். வேறு சட்டையை மாற்றிக் கொண்ட வைஷ்ணவி அதே வேகத்தில் திரும்பினார். ‘பாலாஜி கேரக்ட்டர்ல இது இல்லையே.. பாலாஜி இவ்வளவு பதட்டப்பட மாட்டான்’ என்று பேசிக் கொண்டிருந்தார் அசல் பாலாஜி. ‘பாலாஜியை சங்கடப்பட வைத்து விட்டேன்’ என்று காமிராவின் முன்பாக பெருமிதப்பட்டுக் கொண்டார் வைஷ்ணவி. 

‘அடுத்து என்னென்ன கழற்றுவார்களே’ என்று நாம் பயப்படத் துவங்குவதற்குள், நீல அணி தங்களின் டாஸ்க்குகளை இன்னமும் முடிக்காத சூழலில் ‘என்னைப் போல் ஒருவன்’ டாஸ்க் முடிந்ததாக பிக்பாஸ் திடீரென அறிவித்தார். இதற்கான காரணம் பிறகுதான் புரிந்தது. 

‘அப்பாடா!’ என்று ஏறத்தாழ அனைவரும் பெருமூச்சு விட்டார்கள். ‘நான் ஏதேனும் தப்பா செஞ்சிருந்தா மன்னிச்சுடுங்க’ என்று பரஸ்பரம் ஆரத்தழுவிக் கொண்டார்கள். மஹத்தும் பொன்னம்பலமும் முத்தம் கொடுத்து மிகையான அன்பை பரிமாறிக் கொண்டார்கள். நகலாக நடித்தவர்கள், அசலான பாத்திரங்களை தேடிச் சென்று கட்டிக் கொண்டார்கள். ‘ரொம்ப ஓவரா பண்ணே” என்று வெட்கச்சிரிப்புடன் மஹத்திடம் சொன்னார் மும்தாஜ். 

“நான் உன் கேர்ள் பிரெண்டை சொன்னது உன் கேரக்ட்டர்ல இருந்துதான். நீ கூட இத்தனை முறை சொல்லியிருக்க மாட்டேன். அத்தனை முறை லவ்யூ சொன்னேன்” என்பது போன்று கண்றாவியான ஒரு விளக்கத்தை பொன்னம்பலம் தர, “சூப்பர்ணே.. நீ என் கிட்ட விளக்கம் சொன்னவுடனே.. கம்ப்ளீட்டா நான் ஆஃப் ஆயிட்டேன்” என்று புளகாங்கிதம் அடைந்தார் மஹத். பிக்பாஸ் வீட்டிற்கும் சிறிதும் தொடர்பில்லாத நபர்கள் விளையாட்டுக்களில் சிக்குவது துரதிர்ஷ்டமானது. ஆண்கள் விளையாடும் பகடைக்காய்களாக பெண்கள் இருக்கும் சூழலையே இது பிரதிபலிக்கிறது. 

**

தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதியும் முன்னாள் முதல்வருமான திரு.கருணாநிதி மறைந்த, சோகமும் அதிர்ச்சியுமான செய்தியை பிக்பாஸ் தெரிவித்தார். ஏறத்தாழ அனைவருமே ஒருகணம் அதிர்ச்சியடைந்து திகைப்புடன் நின்று விட்டனர். அதிக அதிர்ச்சியை அடைந்த மஹத்தை, வைஷ்ணவி கட்டியணைத்து ஆறுதல் படுத்தினார். 

கடந்த சீஸனில் துளியளவு வெளிச்செய்தியும் போட்டியாளர்களுக்கு தெரியாத அளவிற்கு ரகசியம் காக்கப்பட்டது. போட்டியாளர்களின் கவனம் எதிலும் திசை திரும்பாமல் தங்களுக்குள் அடித்துக் கொள்வதில் மட்டுமே அவர்கள் ஃபோகஸ் செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணம் காரணமாக இருக்கலாம். ஆனால் இம்முறை நிறைய விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டு விட்டன. விருந்தினர்களின் வருகை அடிக்கடி இருக்கிறது. நாமினேஷன் பற்றிய தகவல்களை பொதுவிலேயே பேசிக் கொள்கிறார்கள். பேப்பர், பேனா எல்லாம் எளிதாக கிடைக்கிறது. 

மறைந்தவரைப் பற்றிய இரங்கல் செய்தியை ஒவ்வொருவரும் உருக்கத்துடன் பேசினார்கள். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாத சூழலில் மாட்டிக் கொண்டேமே என்கிற வருத்தத்தை தெரிவித்தார்கள். அஞ்சலிக் குறிப்புகள் முடிந்ததும் ஆங்காங்கே அமர்ந்து திரு.கருணாநிதியின் அரசியல் மற்றும் சினிமா பங்களிப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் ஒலித்த பின்னணிக்குரலும் அழகான தமிழில் இதையே வழிமொழிந்ததோடு இன்றைய நிகழ்ச்சி முடிவு பெற்றது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இதுவொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றாலும், தமிழகத்தின் முக்கியமான இழப்பையும் துயரத்தையும் இடையில் பதிவு செய்தது சிறப்பான விஷயம்.