Published:Updated:

"'5 நிமிஷத்துல கிழிச்சிடுவேன்னு சொன்னீங்க..!" - செம ஆங்ரி கமல் #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
"'5 நிமிஷத்துல கிழிச்சிடுவேன்னு சொன்னீங்க..!" - செம ஆங்ரி கமல் #BiggBossTamil2
"'5 நிமிஷத்துல கிழிச்சிடுவேன்னு சொன்னீங்க..!" - செம ஆங்ரி கமல் #BiggBossTamil2

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் குறிப்பிடும் அளவிற்கு எந்தவொரு சர்ச்சையோ, சம்பவமோ நிகழவில்லையே… வார இறுதியில் வரப்போகும் கமல், எதைப் பற்றித்தான் பேசப் போகிறாரோ என்று நேற்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், கோடு போட்டால் மேடு போட்டு விடும் அபாரமான கதைசொல்லி என்பதை கமல் நிரூபித்தார். ‘என்னைப் போல் ஒருவன்’ டாஸ்க்கை முன்னிட்டு போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் பல கோணங்களில் பிழிந்தெடுத்தது சிறப்பு. 

‘Weird’ என்று சொல்லக்கூடிய விஷயங்களும் நடந்தன. பொன்னம்பலம் பற்றி கமலுக்கு எழுதிய அநாமதேய பிராதைப் பற்றி விசாரிக்கும் போது முன்னும் பின்னுமாக பேசி மறுத்து குழப்பினார், டேனி. சபை நாகரிகமின்றி, நாடகத்தனமாக கமல் அந்தக் கடிதத்தை தூக்கி எறிந்தாலும் ‘என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க’ என்று கோபித்துக்கொண்டது ஒருவகையில் நியாயமானது. 

‘எனக்கு அஞ்சு நிமிஷம் போதும். இங்க இருக்க எல்லோருடைய முகத்திரையையும் கிழிச்சிருவேன்’ என்று கொலைவெறியுடம் ஆவேசமாக கூறிய வைஷ்ணவி ‘சரி அஞ்சு நிமிஷம். நான் தர்றேன். கொசஞ்சம் கிழிங்களேன்’ என்று கமல் சொன்னதும்.. ‘அது வந்து.. என்னால பண்ண முடியும்’னுதான் சொன்னேன். ஆனா எனக்கு விருப்பமில்லை’ என்று மறுத்தார். (வாடா.. வாடா.. என் ஏரியாவிற்கு வாடா..) பிறகு தான் புண்பட்ட காரணத்தைச் சொன்னபோது அது அத்தனை ஒன்றும் பெரிதாக இல்லை. வாய்ப்பு காலிங்பெல்லை அடிக்கும்போது எழுந்து போய் மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்வது முறையாகாது. அதனால் ஏற்படும் இழப்பு நமக்குத்தான். 

யாஷிகாவிற்கும் மஹத்திற்கும் உள்ள உறவைப் பற்றி, ஒரு தகப்பனுக்கே உள்ள கவலையும் கருணையும் கண்களில் தெரிய யாஷிகாவிற்கு கமல் செய்த உபதேசம் அட்டகாசம். ‘அன்பு கிடைக்குதோ, இல்லையோ. கொடுத்துடணும்’ என்று அவர் சொன்னது வேத வாக்கியத்திற்கும் மேலே. 

“எனக்குப் புரியும். நானும் இந்த மாதிரி நிறைய அன்பு கொடுத்திருக்கேன். சிலது திரும்பி வரல. அதனாலதான் கவிதை வருது. கண்ணீர் வருது. ‘’ச்சீ.. இந்தப் பசங்களே இப்படித்தான்னு ஒரு கிழவன் மாதிரி முகஞ்சுளிக்க மாட்டேன். எனக்குப் புரியும்” என்று அவர் சொன்னது கிழவர்களுக்கு மட்டுமானதல்ல, பழமைவாத இளைஞர்களுக்கும் சேர்ந்தது. 

இன்றைய நாளில் வேறென்ன நிகழ்ந்தது என்பதைப் பார்ப்போம். 

**

கமல் அரங்கத்தில் நுழையும் போது பின்னணயில் ஒலிக்கும் இசை இல்லை. அமைதி. இதற்கான காரணம் வெளிப்படை. திரு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரையும் எழுந்து நிற்க வேண்டினார் கமல். ‘தமிழ் உலகில் ஒரு பிக் பாஸ் – கலைஞர்’ என்று தன் அஞ்சலிக்குறிப்பைத் துவங்கிய கமல், திரைத்துறையில் அற்புதமான வசனங்களின் மூலம் கருணாநிதி ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார். காஃபி வித் அனு நிகழ்ச்சியில், கமலின் கவிதைத் திறனை அவர் பாராட்டிய காணொளியை வெளியிட்டு நெகிழ்ந்து போனார். 

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் 55வது நாள் காட்சிகள் ஒளிபரப்பாகின. காலையில் பிக்பாஸ் வீட்டின் சுப்ரபாதம் ஒலித்தது. சென்றாயனால் வாழ்க்கை முழுவதும் மறக்கவே முடியாத பாட்டு. ‘டேரா... டேரா... டேரா பைட்டா காதல் இருக்கு’ 

‘நான் என்ன இந்த வீட்டில் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் எதிர்பார்க்கிறேனா?’ என்று சொல்லிக்கொண்டிருந்த மும்தாஜ், காலையுணவைப் பற்றி டேனியிடம் விசாரித்து, ‘அது வேண்டாம்’ வேறு செய்து கொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். ‘மைதா வேணாம். ஒத்துக்காது. கோதுமை வாங்கலாம்னு இதுதான் சொல்லிச்சு. இப்ப மாத்திச் சொல்லி தொல்லை பண்ணுது. கமல் சார் கிட்ட சொல்லிட வேண்டியதுதான்” என்று சென்றாயனிடம் புலம்பினார், டேனி. 

‘கடந்த வாரத்தில் வந்த விருந்தினர்களை விடவும் இந்த வாரம் வந்த ஹரீஷ் – ரைசாவைப் பார்த்தவுடன் பிக் பாஸ் வீட்டில் சிலரிடம் மாற்றம் தெரிகிறது’ என்று சொல்லிக்கொண்டிருந்தார், பாலாஜி. ‘ஹீரோவாகி விட்ட ஹரீஷை, மஹத் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாராம். வைஷ்ணவி உடற்பயிற்சியெல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டாராம்’. (ஆல் தி பெஸ்ட் வைஷ்ணவி!).

அகம் டிவி வழியே அகத்திற்குள் வந்தார், கமல். ‘நேரா எவிக்ஷன்னுக்கு போயிடலாமா?” என்று சிறிது நேரம் போக்கு காட்டிவிட்டு ‘அப்படில்லாம் உடனே சொல்லிடுவேனா’ என்று போட்டியாளர்களை சத்தாய்த்துவிட்டு கிளம்பினார். 

திரும்பி வந்த அவர், ‘எனக்கு அட்ரஸ் பண்ணி ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கு. யார் எழுதினது. அவங்களா ஒத்துக்கிட்டா பெரிய மனுஷன். இல்லைன்னா. வெறும் மனுஷன்’ என்றதும் சில தயக்கங்களுக்குப் பிறகு ‘நான்தான்’ என்று டேனி ஒப்புக்கொண்டார். ‘பொன்னம்பலம் பெண்களைப் பற்றி தவறாக பேசுகிறார். என்னைப் பற்றியும் கமல் சாரிடம் தப்புத்தப்பாக சொல்கிறார். அவரிடம் பொய்த்தனம் இருக்கிறது’ என்பது அந்தக் கடிதத்தின் சாரம்.

“முன்ன அவர் மேல கோபம் இருந்துச்சு சார். இப்ப இல்ல. கடிதம் எழுதும்போது அது பொய். எந்தவொரு விஷயத்திற்கும் இந்த வீட்டில் உள்ளவர்கள் ஒன்றாக வருவதில்லை. அதை சோதித்துப் பார்க்கத்தான் எழுதினேன். கடிதம் எழுதி ஒரு வாரமாச்சு. அன்பு வந்து மூணு வாரமாச்சு” என்று குழப்பமாக கூறினார் டேனி. ‘இந்த உலகத்திற்கு அவர் ஏதோ சொல்ல வர்றார்’ என்பதுதான் புரிந்ததே தவிர, என்ன சொல்கிறார் என்று கமலைப் போலவே எனக்கும் புரியவில்லை. கடிதத்தை விட்டெறிந்த கமல், ‘இனி என் நேரத்தை இம்மாதிரி வீணடிக்காதீர்கள்’ என்றார். 

இதைப் போலவே வைஷ்ணவியும் தனக்கு தரப்பட்ட வாய்ப்பை வீணடித்தார். ‘அஞ்சு நிமிஷத்துல கிழிச்சுடுவீன்னீங்களே.. இப்ப என்னதான் கிழிக்கறீங்கன்னு பார்க்கலாம்’ என்று கமல் சொன்னதற்குப் பிறகு அவரால் எதையும் கிழிக்க முடியவில்லை. ‘என்னால முடியும் சார். ஆனா செய்ய மாட்டேன்’ என்றது வெட்டி வீறாப்பு. இது ஒருபக்கம் அவரது நல்லியல்பை சுட்டினாலும் மனதில் உள்ளதை வாய்ப்பு கிடைக்கும் போது கொட்டிவிடுவதும் முக்கியமானது. ‘அப்ப இப்படியேதான் மனசுல இருக்கற சொல்லாத நடிச்சிட்டு இருக்கப் போறீங்களா?’ என்று கமல் சுட்டிக்காட்டியது சரியானது. 

“சண்டை போடறவங்களை இந்த வீட்ல மறுபடியும் பார்க்க வேண்டியிருக்கு’ என்றொரு காரணத்தை டேனி சொன்னதும் ‘உலகமும் அப்படித்தானே. மறுபடியும் அவர்களை பார்க்க வேண்டியிருக்கும். ஸாரி, தாங்க்யூ சொல்ல வேண்டியிருக்கும் பாலாஜி –நித்யா விவகாரமும் அதானே’ என்றார் கமல். 

“மஹத்கிட்ட திறமை இருக்கு. ஆனால் சட்டென்று வருகிற கோபம் பெரிய பலவீனம். அதைச் சுட்டிக்காட்டத்தான் அவருடைய பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்’ என்றார் பொன்னம்பலம். “மிமிக்ரில பாத்தீங்கன்னா, அது செய்யப்படுபவர் அத்தனை எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார். ‘என் குரல் மாதிரி இல்லையே’ என்று அழிச்சாட்டியம் செய்வார். கொஞ்சம் சாயல் இருந்தாகூட நான் கைத்தட்டுவேன். மஹத்தின் வயதில் விமர்சனங்களை ஏற்க முடியுமா?’ என்று சொன்ன கமல் அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தார். 

“சென்றாயன்..உங்க புகார் என்ன?” என்றதும் ‘தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா...’என்கிற ஜனகராஜின் காமெடியைப் போல ‘ஐஸ்வர்யா என்னை நாய்’னு சொல்லிட்டாங்க சார்” என்று கடந்த வார புராணத்தை மறுபடி ஆரம்பித்தார். அந்த ‘நாய்’ மிக நன்றியுள்ளது போல... அவர் மனதிலிருந்து இன்னமும் நகராமல், அங்கேயே இருக்கிறது!. கமல் எடுத்துக்கொடுத்தும் அவரால் பாயின்ட்டிற்கு வர முடியவில்லை. ‘வைஷ்ணவி இன்னுமும் திருந்தலை’ என்றார் அடுத்தபடியாக. 

பிறகுதான் விஷயத்திற்கு வந்தார். “ஆமாம் சார். பாத்ரூம் கழுவுவதற்கு இந்த வீட்டில் பலர் ஆர்வமாக முன்வருவதில்லை. ‘பாத்ரூமா... மசாஜ்ஜான்னா... வைஷ்ணவி புள்ள மசாஜ் செய்யப் போயிடும்” என்ற சென்றாயனின் புகாரை மறுத்தார் வைஷ்ணவி. தன்னுடைய ஆரோக்கிய பிரச்னையை வழக்கம் போல் சுட்டிக் காட்டிய மும்தாஜ் ‘வீட்ல எல்லாம் நான்தான் பண்ணுவேன். இப்ப குனிய முடியதில்லை’ என்றார். “பழைய பாத்ரூமா இருந்தா ரொம்ப குனியணும்.. இப்ப அப்படியில்லையே. ஒண்ணு பிரஷ் நீளமா இருக்கணும். இல்லைன்னா, டாய்லெட் உயரத்தை அதிகப்படுத்தணும். அப்படிப் பண்ணிட்டா உபயோகிக்கறது கஷ்டம்” என்று பல விதங்களில் மும்தாஜை நையாண்டி செய்தார் கமல். 

இந்த வீட்டில் இதுவரை கழிவறைப் பணியில் ஈடுபடாதவர்கள் மும்தாஜூம் பொன்னம்பலமும். ‘நான் வீட்லலாம் செஞ்சிருக்கேன் சார். எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன்’ என்றார் பொன்னம்பலம். நன்று. ஆனால் சிலர் தங்கள் வீட்டின் கழிவறை என்றால் தேய்.. தேய்.. என தேய்த்து சுத்தம் செய்வார்கள். ஏனெனில் அது அவர்களது அழுக்கு என்பதால். இதுவே பொதுவிடம் என்றால் தண்ணீர்கூட ஊற்றாமல் அருவருப்புடன் கிளம்பிவிடுவார்கள். ஏனெனில் அது மற்றவர்களின் அழுக்கு. 

“சரி.. என்னைப் போல் ஒருவன் டாஸ்க் படி உங்க டீஷர்ட்டை மாத்திக்குங்க.. இப்ப வர்றேன்’ என்று கிளம்பிய கமல், முன்பு வீசியெறிந்த கடிதத்தை  கீழே குனிந்து எடுத்துச் சென்றது நல்ல முன்னுதாரணம். 

திரும்பி வந்த கமல், அகத்திற்குள் நுழைவதற்கு முன், பார்வையாளரிடம் ‘உள்ள பயங்கரமா டூப் அடிக்கறாங்கள்ல’ என்று சிரித்துக்கொண்டே கூறினார். 

“உள்ளே போய் யோசிச்சுப் பார்த்தேன். ‘ஒரு புகார்’னு சொல்லி எனக்கு கடிதம் எழுதியிருக்கீங்க. சபைல அதைப் படிச்சு.. விசாரிக்கலாம்னு வந்தா.. சும்மா லுலுவாய்க்கு எழுதினோம்-ன்றீங்க.. என் நேரத்தை வீணடிக்காதீங்க. நீங்க ஜெயிக்கறதுக்காக வந்திருக்கீங்க. நான் ஜெயித்ததனால் வந்திருக்கிறேன். உங்களைப் போலவே என்னை மாத்திடாதீங்க. இந்த வீட்டு மேல எனக்கு உண்மையாவே அன்பு இருக்கு. என்னால் பொய்யாக நடிக்க முடியாது” என்ற கமலின் குரலில் வருத்தமும் கண்டிப்பும் இருந்தது. 

‘அஞ்சு நிமிஷத்துல கிழிச்சுடுவேன்னாங்க. வைஷ்ணவி.ஆனால ஒண்ணும் பண்ணலை’ என்றதற்கு அதே பதிலை மறுபடியும் கூறினார் வைஷ்ணவி. ‘மத்தவங்க முதுகு மேல ஏறி நின்று விளையாட விரும்பவில்லை. நேர்மையாக விளையாட முடிவு செய்திருக்கிறேன்’ என்றார். ஆனால் வைஷ்ணவி சொல்லத் தயங்கியதை பாலாஜி எடுத்துக் கொடுத்தார். பிறகுதான் வைஷ்ணவி பேச ஆரம்பித்தார்.

“மும்தாஜ் மேடம் சொன்ன அட்வைஸ்னாலதான் நான் எதுவும் சொல்லலை. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுடுன்னு சொன்னாங்க. முன்ன ஒரு பிரச்னை இருக்கும் போதே டேனி கிட்ட பேசினேன். கத்திப் பேசறாரு. அவரோட தமிழ் கமாண்ட் என் கிட்ட இல்ல. அதனால நான் பிரேக் ஆயிடறேன்’ என்றதும்.. “டேனி.. இப்ப சும்மா இருக்கணும். உங்க தமிழ் வன்மையையெல்லாம் காட்டக்கூடாது. இப்ப சொல்லுங்க’ என்றார் கமல் கிண்டலாக.

“பொதுவுல இருக்கும் போது ஒருத்தரைப் பற்றி ஜாடையாக சொல்லி விடுகிறார். இதனால் ‘புறம் பேசி விட்டார்’ என்கிற குற்றச்சாட்டில் இருந்து அவர் தப்பித்துக் கொள்கிறார். ‘என்னைப் போல் ஒருவன்’ டாஸ்க்கில் நான் சொன்ன ஐடியாக்களை எடுத்துக் கொள்ளவில்லை’ என்ற வைஷ்ணவியின் புகாரைத் தொடர்ந்து டேனியை விசாரித்தார் கமல். ‘வேணுமின்னா மத்த டீம் மேட்ஸ் கிட்ட விசாரிச்சுப் பாருங்க’ என்றார் டேனி. ‘அவர் அப்படியொண்ணும் மத்தவங்க பாயிண்ட்ஸை அமுக்கற மாதிரி தெரியலை’ என்றார் சென்றாயன். ‘வைஷ்ணவிக்கும் டேனிக்கும் இடையே ஒரு பனிப்போர் இருக்கிறது” என்றார்கள் மஹத்தும் ஐஸ்வர்யாவும். 

“ஆனா இந்த டேனி – வைஷ்ணவி சண்டையை நம்ப முடியாது சார். ஒரு நிமிஷம் சண்டை போட்டுட்டு மறு நிமிஷமே பேசிடறாங்க.. இன்னொன்னு.. நான் பொன்னம்பலம் வேஷத்துல இருக்கும் போது பாலாஜி என்னை நிறையத் திட்டினார். நான் பாலாஜியை நேராகத் திட்ட முடியாது என்பதால் ‘பொன்னம்பலத்தின்’ பாத்திரத்தை உபயோகித்து பதிலுக்கு நிறையத் திட்டினேன். நியாயமாக பாலாஜிதான் இதற்கு கோபித்துக் கொள்ள வேண்டும். ஆனால் பாலாஜியின் வேடத்தில் இருந்த வைஷ்ணவி கோபித்துக் கொள்கிறார். இந்த லாஜிக் புரியலை’ என்று சென்றாயன் விளக்கமளித்ததும்.. ‘இது என்னமோ சுத்தி சுத்தி வருது. சரி விளையாட்டுக்குப் போவோம்’ என்று டிஷர்ட் விளையாட்டுக்குள் நுழைந்தார் கமல்.

அந்தந்த டிஷர்ட் அணிந்திருக்கும் நபர்களை நோக்கி கமல் சில கேள்விகள் கேட்பார். அந்தப் பாத்திரத்தில் இருந்து கொண்டு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். 

மும்தாஜ் பாத்திரத்தில் நடித்த மஹத்திடம் கேள்விகள் துவங்கிய உடன் ‘பெண்மைத்தனத்துடன்’ நாணிக் கோணி பதில் சொல்ல ஆரம்பித்தார் மஹத். (கலைஞன்டா!). “உங்கள் நட்சத்திர அந்தஸ்தை மற்றவர்களுக்கு அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்களா?’ என்பது முதல் கேள்வி. “அப்படி கிடையாது சார். என்னோட ஹெல்த் இஷ்யூஸ் இருக்கு. அதனால அப்படி நெனச்சுக்கறீங்க” என்று பதில் வந்தது. ‘இந்த வீட்டில் ஒருசிலரை மட்டம் தட்டுகிறீர்களா?” என்பதற்கு ‘நான் ஒரு மிரர் மாதிரி. மத்தவங்க என்ன தர்றாங்களோ.. அதையேதான் திருப்பிக் காட்டுவேன்” என்று மஹத் சொன்னதும் ‘இப்ப அந்தக் கண்ணாடில என்ன தெரியுது மும்தாஜ்’ என்கிற கமலின் கேள்வியை விளங்கிக் கொள்ள முடியாத மஹத், வெட்கிச் சரண் அடைந்து ‘அடுத்த கேள்விக்குப் போயிடலாம் சார்” என்றார். 

“டாஸ்க் செய்யாமலிருக்க உடல்நிலையை காரணம் காட்டுகிறீர்களா?” என்ற கேள்விக்கு “அப்படில்லாம் இல்லை சார். உடல்நிலைதான் காரணம்” என்று மஹத் சொன்னதும் “அப்ப பானை மேலலாம் நடந்தீங்களே.. அப்போ?” என்று கமல் மடக்க முயல ‘அப்போ உடல்நிலை பரவாயில்லாமல இருந்திச்சு சார்” என்றார் மஹத் என்கிற மும்தாஜ்.

அடுத்ததாக டேனி என்கிற பாலாஜி. இதைக் கேட்டவுடனே முடியைக் கலைத்துக் கொண்டு தயாரானார் பாலாஜி. அவர் அவ்வப்போது அப்படிச் செய்யும் போது டோப்பா முடி மாதிரி இருக்கிற அவரது சிகை, கையோடு வந்து விடுமோ என்று கலவரமாக இருந்தது. ‘இந்த வீட்டின் பலமான போட்டியாளர் யார்” என்று கமல் கேட்டதும் ‘நான்தான் சார்’ என்று தலையைக் கலைத்துக் கொண்டு சொன்னார் பாலாஜி. “நீங்கள் ஏதோவொரு உத்தியைப் பயன்படுத்துவதாக சொல்கிறார்களே. அதைப் பற்றி..?” என்ற கேள்விக்கு ‘கடவுள் என்ன கொடுத்திருக்கிறாரோ அதுதான் கிடைக்கும். என்னுடைய ஏரியாவில் நான் நடித்துக் கொள்கிறேன்.. Attention seeking-ஆ இருக்கேன். மத்தவங்க உத்தின்னு நெனச்சிக்கிட்டா நான் என்ன செய்யறது” என்று உடம்பை குலுக்கிக் கொண்டு பாலாஜி  சொன்னதைப் பார்த்து ரசித்து சிரித்தார் டேனி. 

அடுத்ததாக மும்தாஜ் என்கிற ஐஸ்வர்யா. ‘சர்வாதிகாரி டாஸ்கைப் பயன்படுத்தி தனிப்பட்ட பழிவாங்குதலில் ஈடுபட்டிருக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டார் மும்தாஜ். டேனி என்கிற யாஷிகாவிடம் நகர்ந்தார் கமல் ‘உங்கள் உடை ஆபாசமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?’ என்றதும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பதில் சொல்லத் துவங்கினார் டேனி.  ‘அது என் சுதந்திரம். ஆபாசம் –ன்றது உங்க கண்லதான் இருக்கு” என்று பதில் வந்தது. “மஹத்தோடு உங்களுக்கு உள்ளது வெறும் நட்புதானா?” என்ற கேள்விக்கு ‘beyond the relationship’ சார்’ என்றார் டேனி. ‘அதையும் தாண்டி புனிதமானதா?” என்று கிண்டலடித்தார் கமல். “இந்த வீட்டின் கடைசி போட்டியாளர் ஐஸ்வர்யா என்றால் விட்டுத் தருவீர்களா?’ என்ற கேள்விக்கு ‘இல்லை சார். போட்டி வேற. ஃபிரெண்ட்ஷிப் பேற’ என்று டேனி பதில் சொன்னதும் ‘சோல் வேற ஆள் வேற –ன்றீங்களா? என்று சொல்லி அசத்தினார் கமல். ரித்விகா பற்றி… என்று கேட்கப்பட்டதும், தடுமாறிய டேனி “இருங்க சார். காரெக்ட்டரில் இருந்து வெளியே வந்துட்டேன்’ என்று வழிந்து.. பிறகு சுதாரித்து “அவங்க பண்றது அவங்களுக்கு சரியா தெரியலாம். மத்தவங்களுக்கு தெரியாது’ என்று எதையோ சொல்லி முடித்தார்.

அடுத்ததாக வைஷ்ணவி என்கிற பாலாஜி. கமல் கேட்கத் துவங்கியுடன் கைவிரல்களில் தாளம் போட்டுக் கொண்டு பாலாஜி பாத்திரத்திற்குள் புக ஆரம்பித்தார் வைஷ்ணவி. “ஐஸ்வர்யா.. உங்களைப் பழி தீர்த்துக்கிட்டாரா? என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் வந்தது. ‘தந்தை –மகள்’ சமரசம் உண்மையா, நடிப்பா?’ என்ற கேள்விக்கு ‘என் பொண்ணு மாதிரிதான் நெனக்கறேன். என்னளவில் அது உண்மைதான்’ என்று பதில் வந்தது. அடுத்தது சென்றாயனாக நடித்த ஜனனிக்கு சில கேள்விகள். சென்றாயனின் பாணியில் பதில் சொன்னார் ஜனனி.

மஹத்தாக வாழ்ந்த பொன்னம்பலத்திடம் அடுத்த கேள்வி. ‘உங்கள் காதலிக்கு நீங்கள் சொல்லும் செய்தி’ என்றவுடன் ‘பூபூ- ஐ லவ்யு’’ என்று சொல்லி வெட்கத்துடன் நாக்கை கடித்துக் கொண்டார் பொன்னம்பலம். 

பொன்னம்பலமாக நடித்த சென்றாயனிடம் சில கேள்விகள். ஆரம்பித்ததுமே ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று கும்பிடு போட்டு காரெக்ட்டருக்குள் ஆவேசமாக புகுந்தார் சென்றாயன். ஆனால் கமல் கேட்ட கேள்விகளுக்கு பொன்னம்பலமாக அல்லாமல், ‘சென்றாயனின்’ பாணியில் நகைச்சுவையாக பதில் தந்தார். 

ஜனனியாக நடித்த ஐஸ்வர்யாவிடம் கேள்விகள் சென்றன. ‘நாசூக்காக சண்டை மூட்டி விடுவது உங்கள் உத்தியா?” என்கிற கேள்விக்கு, சுற்றி வளைத்து ‘அப்படித்தான்’ என்பது போல் பதில் சொன்னார் ஐஸ்வர்யா. ‘வெறுக்கும் நபர்’ என்ற கேள்விக்கு ‘எல்லோரும் பிடிக்கும். ஆனா யாஷிகா –ஐஸ்வர்யா கொஞ்சம் பிடிக்கும்” என்று கொஞ்சி கொஞ்சி பதில் சொன்னார் ஐஸ்வர்யா. 

அடுத்ததாக வைஷ்ணவி என்கிற யாஷிகா. முதல் கேள்வியே கிடுக்கிப்பிடி போல் இருந்தது. ‘இந்த வீட்டில் உங்களைத் தவிர புறம் பேசும் இன்னொரு நபர் யார்?” என்கிற அந்தக் கேள்வியைக் கவனித்தால் வைஷ்ணவி புறம் பேசுவது உண்மை என்பது போல அடங்கியிருக்கிறது. “டேனியல்’ என்று பதில் அளித்தார் யாஷிகா. ‘உங்களுக்கு ஒரு நண்பராவது இந்த வீட்டில் இருக்கிறாரா?” என்ற கேள்விக்கு சமீபத்திய ஆலோசகரான மும்தாஜை குறிப்பிட்டார் யாஷிகா. ‘தன்னை அதிகம் ஒதுக்கும் நபர்’ என டேனியலை குறிப்பிட்டார். 

‘இரண்டாம் வாய்ப்பு தரப்பட்ட பிறகு வைஷ்ணவியிடம் மாற்றம் தெரிகிறதா?” என்கிற பொதுவான கேள்விக்கு பொன்னம்பலம் ஆம் என்றார். ஆனால் “துளி கூட அவங்க மாறலை. இன்னமும் மோசமாயிருக்கு” என்று சென்றாயன் சொன்னதும் கைத்தட்டல்கள் கேட்டன. வைஷ்ணவியின் முகம் இருள் அடைந்தது. (பாவம்.. எவ்ளதான் அந்தப் புள்ளய அடிப்பீங்க?!) ‘வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை’ என்பதை டேனியும் அழுத்தமாக தெரிவித்தார். ‘அவங்களுக்குள்ள ஏதோ ஒரு stress இருக்கு’ என்று பாலாஜி தெரிவித்தார். “சார்.. அவங்க சீக்ரெட் ரூம்ல இருந்து வெளியே வந்ததும் நாங்களாத்தான் அவங்க கிட்ட போய் விவரங்கள் கேட்டோம்’ என்று வைஷ்ணவிக்கு ஆதரவு தந்தார் ரித்விகா. இருவருக்கும் ‘நன்றி’ என்றார் வைஷ்ணவி. 

மும்தாஜாக நடித்த மஹத்தின் சேஷ்டைகள் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை கோபமும் சிரிப்பும் கலந்து சொன்னார் மும்தாஜ். பத்து சதவீத கேரக்ட்டரை மட்டுமே மஹத் செய்திருக்கிறாராம். இந்த டாஸ்க்கில் மனம் புண்பட்டவர்களாக ஐஸ்வர்யா மற்றும் பொன்னம்பலம் இருந்தார்கள். பிறகு மும்தாஜூம் வந்து இணைந்தார். 

ரசம், பொறியல், வடகறி என்கிற சங்கேதப் பெயர்களைப் பற்றி விசாரித்த கமல் ‘பாருங்க.. டேனி.. நீங்க பண்ணும் போது கோபப்படறாங்க.. அன்பா குறும்பு பண்ணுங்க. ஒத்துக்குவாங்க” என்று உபதேசம் செய்தார். பாலாஜி என்ன நக்கலடித்தாலும் அது சொல்லப்படும் தொனியால் தான் அவற்றை எளிதாக கடந்து விடுவதாக வைஷ்ணவியும் தெரிவிக்கிறார். எனவே டேனி இதைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

“இங்க வந்தப்ப டேனி, பாலாஜி.. சென்றாயன்.. போன்ற நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால் வீடு கலகலப்பாக இருந்தது.  அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கிட்டீங்க.. பட்டப்பெயர் வெக்கறதுலாம் என்னைப் பொறுத்தவரை ஜாலிதான். ஆனா மத்தவங்க ஹர்ட் ஆகாம பார்த்துக்கங்க.. ஜாலியாக இருங்க” என்றார் கமல். ஆம் அதையேதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். பூனைகள் மாதிரி எப்போதும் பிராண்டிக் கொண்டிருப்பது சலிப்பூட்டுகிறது. 

மஹத் –யாஷிகா உறவு பற்றி உண்மையான கவலையுடனும் அக்கறையுடனும் கமல் சொன்ன உபதேசங்கள் இளம் தலைமுறைக்கு மட்டுமல்ல சென்ற தலைமுறைக்குமானது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘போன வாரம் இயல்பா ஷாரிக்கை நாமினேட் செஞ்சீங்க.. அது உண்மையாயிடுச்சு.. இந்த வாரம் ஜனனியை யாஷிகா நாமினேட் செஞ்சிருக்காங்க” என்று பொடி வைத்து பேசுவதின் மூலம் ‘ஜனனி’ வெளியேறுவார் என்கிற பாவனையை கமல் துவங்கி வைத்தார். ‘எதுன்னாலும் சரி’ என்கிற ஜென் நிலையை ஜனனி காட்டினார். ‘நாளைக்கு சொல்றேன்’ என்று இன்றைய நிகழ்ச்சியை முடித்து விட்டார். ‘உங்களில் நான்’ என்று வழக்கமாக சொல்வதை மறந்து ‘bye bye’ சொல்லி விட்டார். 

ஆனால் – நீண்ட காலமாக டபாய்த்து வந்த பொன்னம்பலம்தான் இந்த வார பலியாடு என்கிற தகவல் காற்றில் வந்திருக்கிறது. உறுதியான தகவல்தானா என்பதை இன்று பார்த்து விடுவோம். ஜெய்ஸ்ரீராம்