Published:Updated:

'சந்திரமுகி' ஐஸ்வர்யா, 'ஐ' டாக்டர் மும்தாஜ், 'நல்ல சிவ' கமல்..! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
'சந்திரமுகி' ஐஸ்வர்யா, 'ஐ' டாக்டர் மும்தாஜ், 'நல்ல சிவ' கமல்..! #BiggBossTamil2
'சந்திரமுகி' ஐஸ்வர்யா, 'ஐ' டாக்டர் மும்தாஜ், 'நல்ல சிவ' கமல்..! #BiggBossTamil2

பிக்பாஸ் வீட்டில், கமலின் பஞ்சாயத்து நாள் இன்று பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். கடந்த சீஸனில் ஓவியாவை தூங்க விடாமல், காயத்ரி, ஜூலி, நமீதா ஆகியோர்கள் செய்த ராவடிகளை கமல் விசாரணை செய்த பஞ்சாயத்து நாளின் வீடியோவை இத்தனை நாட்கள் கழித்து இன்று பார்த்தாலும்கூட அத்தனை சுவாரசியமானதாக இருக்கிறது. அதிலும் காயத்ரி அவ்வப்போது உதிர்க்கும் வசைச் சொல்லை, தலைமுடியை தொட்டுக் காட்டி கமல் உணர்த்திய விதமெல்லாம் அட்டகாசம்.  எனவே, இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும், அதுபோன்றதொரு விருந்து இன்று இருக்கும் என நம்பினேன். 

டேனி மற்றும் ரித்விகாவிடம் உடல்ரீதியாக மஹத் நிகழ்த்திய வன்முறை, சென்றாயன் ஐஸ்வர்யாவின் மீது நிகழ்த்திய குடுமிப்பிடி சண்டை, மூலப்பொருட்களை கைப்பற்றுவதில் நிகழ்ந்த தள்ளுமுள்ளுகள், மும்தாஜ் கார்னர் செய்யப்படும் விதம் போன்றவற்றைப் பற்றி அழுத்தமாக விசாரணை செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

‘அந்தாளு வரட்டும், நாக்கைப் பிடுங்கிக்கறா மாதிரி கேப்பாரு” என்று நாம் ஒருவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது ‘குழந்தாய்.. இனி அவ்வாறு செய்யக்கூடாது. என்ன... நீ சமர்த்துப் பாப்பாவாச்சே..!” என்று வந்தவர்  கொஞ்சினால் எப்படி கடுப்பாக இருக்கும்? அப்படித்தான் இருந்தது கமலின் இன்றைய விசாரணை. குழந்தைகளுக்கு வேண்டுமானால் அந்த அணுகுமுறை சரியாக இருக்கலாம். ஆனால் வளர்ந்தபிறகும் குழந்தைத்தனமாக இருப்பவர்களுக்கு சற்று அதிரடியைக் கலப்பதுதான் சரி. மயிலிறகால் தடவி மய்யமாக பேசி சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தினார் கமல். ஆனால் அவரது வழக்கமான நையாண்டிகள், வார்த்தை விளையாட்டுக்கள், சாமர்த்தியமான குறுக்கு விசாரணைகள் போன்றவை அபாரமாக இருந்தன. 

கமல் வந்திருக்கிற நாள் அன்றும் ருத்ர தாண்டவம் ஆடிய மஹத்தும் ஐஸ்வர்யாவும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்களுடைய நோக்கில், மும்தாஜ் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துவது உண்மை என்றாலும்கூட அதற்கான எதிர் உத்திகளைப் பயன்படுத்துவதுதான் முதிர்ச்சியே தவிர, இப்படி கத்தி கூப்பாடு போடுவது முட்டாள்தனம். ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பது பழமொழி. அதற்கான முழு உதாரணம் ‘மஹத். அறுபது நாள்களுக்கும் மேலாக அந்தச் சூழ்நிலையில் அவர்கள் இருப்பதால் உளவியல் ரீதியான பாதிப்பு இருக்கக்கூடும் என்பதையே மஹத், ஐஸ்வர்யாவின் செய்கைகள் காட்டுகின்றன. 

ரித்விகா மீதான தள்ளுமுள்ளு குறித்து ‘பெண்களிடம் வன்முறை கூடாது’ என்று மேம்போக்காக மஹத்தைக் கண்டித்த கமல், ‘டேனி சமாளிச்சுடுவாருன்னு தெரியும்’ என்றது ஏமாற்றம். வன்முறை எந்தவகையிலும் எவர் மீதும் நிகழ்த்தப்படக்கூடாது என்பதையே அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும். “அவன் வந்த வேகத்துக்கு மூஞ்சை உடைச்சுடுவான்னோ–ன்னு பயந்துட்டேன்’ என்று சிரித்துக்கொண்டே சொல்லி, வெளிப்படையாக டேனி ஒப்புக்கொண்டது பரிதாபமாக இருந்தது. போட்டியாளர்களின் பாதுகாப்பு சார்ந்த நம்பிக்கையை கமல் தெளிவாக ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

பொதுவாக அந்த வீட்டில், தூங்கி எழுந்த சமயத்திலும்கூட அழகாக தென்படக்கூடிய ஒரே முகம் ஐஸ்வர்யதான். ஆனால் அது இன்று மிக  கோரமாக தென்பட்டது. கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் நாம் பேசும் போது நம் முகம் எத்தனை கொடுமையானதாக இருக்கும் என்கிற கற்பனையை ஐஸ்வர்யாவின் மூலமாக இன்று காண முடிந்தது. 

‘மைக் சரியில்லை’ என்று கமல் ஓர் இடைவெளி விட்டது நாடகமாக இருக்கக்கூடும் என்பது நமக்கே புரியும் போது, சில போட்டியாளர்களுக்கு புரியாமல் போனது ஆச்சரியம். கோபம் கண்களை மறைக்கும் என்பது இதுதான் போல. “எமோஷன்களை வைத்து விளையாடுகிறார்கள்” என்று மும்தாஜ் மீது குற்றம் சாட்டும் மஹத்திற்கு, இந்த விளையாட்டின் அடிப்படையே அதுதான் என்கிற எளிய உண்மை ஏன் புரியாமல் போனது? இதே கோபத்தை பிக்பாஸ் மீதும் அவர் காட்டுவாரா?

‘உணர்ச்சிகளை வெளிப்படையாக கொட்டி விடுபவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். மாறாக சிக்கலான சூழலிலும் அழுத்தமாக இருப்பவர்களை நம்பவே கூடாது’ என்பது நம்மிடையே உள்ள பொதுவான நம்பிக்கை. இது உண்மையாககூட இருக்கலாம். ஆனால் சகிப்புத்தன்மையை சோதிப்பதற்காகவே நிகழ்த்தப்படும் இந்த விளையாட்டில் அது சார்ந்த பிரக்ஞையை இழந்து விடுபவர்கள், பலவீனமான போட்டியாளராகவே அறியப்படுவார்கள். மஹத், ஐஸ்வர்யா அந்த வரிசையில் நிற்கிறார்கள். 

**

“9வது வாரம், பத்து போட்டியாளர்கள் இருக்காங்க. அதுவும் ஒன்பதா குறையப் போகுது. பொம்மை டாஸ்க் ரொம்ப நல்லா பண்ணாங்க. எனக்கே ஆச்சரியமா இருந்தது. குழந்தைத்தனமா இருக்காங்க.. அதான்’ன்னு நெனச்சேன். ஆனா பெரியவங்களாத்தான் இருந்தாங்க. வன்மங்கள் இருந்தது. ஃபுட்பால்ல நல்லா விளையாடிட்டு இருக்கும் ஒரு வீரர் திடீர்னு ஒருத்தர மூக்குல குத்தி ஆட்டத்தைக் கெடுத்தா நமக்கு எப்படி அதிர்ச்சியா இருக்குமோ அப்படி இருந்தது. அங்க ரெஃப்ரீ ரெட் கார்டு கொடுத்திடுவார். அந்த ரெட் கார்ட் உங்க கையில் இருக்கு” என்கிற முன்னுரையுடன் நிகழ்ச்சியைத் துவங்கிய கமல், அந்த வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் சிறிய தொகுப்பை ஒளிபரப்பினார். 

பிறகு அகம் டிவி வழியே உள்ளே வந்த கமல், போட்டியாளர்கள் பொம்மை செய்த விதத்தை பாராட்டி விட்டு ‘அடுத்த முறை என் டிரஸ் தைக்கற வேலையை உங்க கிட்ட கொடுத்துடலாம்’னு நெனக்கறேன்’ என்றது குறும்பு. அடுத்ததாக நாமினேஷன் விஷயத்திற்குள் வந்தவர் ‘குத்திக் காட்டறதுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நல்லாவே குத்திட்டீங்க. குத்துப்பட்டவர்கள் சொல்லுங்க. உங்க மேல சொல்லப்பட்ட காரணங்கள் நியாயம்’னு நெனக்கறீங்களா? என்று பஞ்சாயத்தை ஆரம்பித்தார்.

“நான் மாறலை.. மாறலை’ன்னு இம்சைப்படுத்தறாங்க” என்று முதல் குரலைத் தந்தார், வைஷ்ணவி. ‘பொன்னம்பலம் மாதிரி என்னை ஆக்கிட்டாங்க சார். தொடர்ந்து நாமினேஷன் பண்றாங்க. அவங்க இங்லீஷ்ல பேசறது புரிய மாட்டேங்குது. ஆனா ‘உனக்குப் புரியலை. புரியலை’-ன்னு சொல்றாங்க. ‘சரியாக பங்கேற்காதவர்’ விருது தந்தது வருத்தம்’ என்றெல்லாம் அடுக்கினார் சென்றாயன். 

‘மும்தாஜ் மேடம் தையல் வேலையை சரியாக செய்யவில்லை’ என்கிற புகாரை இன்று மறுபடியும் வைத்தார் சென்றாயன். ஆனால் நேற்றிரவு மும்தாஜ் இதைப் பற்றி விசாரிக்கும் போது மஹத்தான் தன்னை செய்யவிடவில்லை என்பதை வெட்கச்சிரிப்புடன் ஒப்புக் கொண்டார். ஆனால் இன்று மறுபடியும் மாற்றிப் பேசுகிறார். மஹத் மீதான பயம் இதற்கு காரணமாக இருக்கலாம். “மைக் சரியில்லை” (?!) என்று சொல்லப்பட்ட காரணத்தையொட்டி கிடைத்த இடைவெளியில், மும்தாஜ் இதை தெளிவுப்படுத்த விரும்பி ‘மஹத்தின்’ பெயரை சொன்னதும்தான் தாமதம். எழுந்து ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்து விட்டார் மஹத். பக்க வாத்தியமாக ஐஸ்வர்யாவும் இணைந்து கொண்டார். சமயங்களில் பக்கவாத்தியம் மிகையாக சென்று விட்டது. மும்தாஜின் பக்கத்தில் யாஷிகா அமர்ந்து விட்டது வேறு இவர்களின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டது போல.

‘உள்ளே ஒரு துர்கா பூஜையே நடக்குது” என்று ஐஸ்வர்யாவின் ஆங்காரத்தைப் பார்த்து இடக்கரடக்கலாக சொன்னார் கமல். ஐஸ்வர்யாவின் பூர்விகம் கொல்கத்தா என்பதால். “மும்தாஜைப் பத்தி எல்லா விஷயமும் நீதானே சொன்னே.. இப்ப நீயே அவங்க பக்கத்துல உக்காந்திருக்க. நீ சொன்ன விஷயங்களை வெச்சுதானே நான் பேசினேன்’ என்றெல்லாம் தன் கோபத்தை யாஷிகாவின் மீது மடைமாற்றினார் மஹத். எனில் மஹத்திற்கு சுயபுத்தி ஒன்று இல்லை என்பதை அவரே வாக்குமூலம் தருவது போல் இருக்கிறது. ‘அந்தப் பொம்பளை’ என்றெல்லாம் அவர் வார்த்தைகளை இறைத்தது முறையானதல்ல. 

“கமல் சார் வந்திருக்காரு. அமைதியா இருங்க” என்று டேனி, பாலாஜி, ஜனனி, ரித்விகா உள்ளிட்டவர்கள், மஹத்தையும் ஐஸ்வர்யாவையும் கட்டுப்படுத்த முயன்றாலும் அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. ஐஸ்வர்யாவின் முகத்தில் உச்சபட்ச கோபம் தெரிந்தது. எந்நேரமும் அது அழுகையாக மாறக்கூடியதாகவும் இருந்தது. “ரித்விகா.. என்னை மன்னிச்சுடுங்க.. தெரியாம உங்களை நாமினேட் பண்ணிட்டேன். காலில் கூட விழுகிறேன்” என்கிற அளவிற்கு ஐஸ்வர்யாவின் கோபம் மும்தாஜின் மேல் இருந்தது. ‘கதவைத் திறங்க. நான் போகணும்’ என்று ஆவேசப்பட்ட போது இன்னமும் கூட அவங்க சர்வாதிகாரி பாத்திரத்தில் இருந்து வெளியே வரவில்லையோ என்று தோன்றியது. 

‘என்னை  immature-ன்னு அடிக்கடி சொல்றாங்க” என்பது இடையில் அவர் சொன்ன வசனம். ஒருபக்கம் அவரைப் பார்க்க பரிதாபமாகவும் இருந்தது. இந்த இருவரும் மும்தாஜ் மீது இத்தனை கோபம் கொள்கிறார்கள் என்றால், வெளியில் காட்டப்படாத காட்சிகளில் ஏதேனும் நிகழ்ந்திருக்குமோ என்று கூட தோன்றுகிறது. அத்தனை கோபம். இந்த இருவரையும் மும்தாஜ் சரியாகவே கையாண்டார். போலவே யாஷிகாவும். ‘எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துட்டா என்னையே விட்டுக் கொடுத்துட வேண்டியதுதான்’ என்ற யாஷிகா, மஹத்தை நோக்கி புகழ்பெற்ற ஓர் ஆங்கில வசையையும் வீசினார். 

இதையெல்லாம் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கமல், ஓர் இடைவெளி விட்டு திரும்பியவுடன் ‘அவங்களுக்குத்தான் டிப்ளமேட்டிக்கா நடிக்கத் தெரியும்-னு நெனச்சிட்டு இருக்காங்க. நமக்கும் தெரியும்-னு காட்டணும். கொஞ்சம் ஒத்துழைங்க’ என்று பார்வையாளர்களை கேட்டுக் கொண்டு “எங்கே விட்டோம்?” என்று ஒன்றுமே தெரியாதது போல் ஆரம்பித்தார் உலக நாயகன். கமல் இதைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும் என்று போட்டியாளர்கள் ஒருவருக்குமா தோன்றவில்லை?

ரித்விகாவிடம் தன் உரையாடலை மறுபடியும் அவர் துவங்குவதற்குள் அவரை இடைமறித்த ஐஸ்வர்யா, ‘சார்.. நான் தெரியாம ரித்விகாவை நாமினேட் பண்ணிட்டேன். மும்தாஜைத்தான் பண்ணியிருக்கணும். அந்தச் சமயத்துல அன்பு காட்டி ஏமாத்திட்டாங்க.” என்று புகாரை வைக்க விசாரணை திசை மாறியது. ‘எனக்கு என்ன இயற்கையாவே வருதோ, அதைத்தான் நான் செய்யறேன்” என்று மும்தாஜ் அளித்த விளக்கத்திற்கு ஐஸ்வர்யா நமட்டுச்சிரிப்பு சிரிக்க ‘என்னமோ சத்தம் வருதே?” என்று தெரியாத மாதிரி கேட்டார் கமல். ‘அவங்க சர்காஸ்டிக்கா சிரிக்கறாங்க” என்று மும்தாஜ் சொன்னதும் உரையாடலை மஹத்தும் ஐஸ்வர்யாவும் கைப்பற்றிக் கொண்டனர். “மும்தாஜ் என்றவங்க.. வில்லன்.. பெரிய பொய், அன்பு காட்டி காலை அறுத்துடுவாங்க’ என்று என்னென்னமோ உளறிக் கொட்டினார்கள் ஐஸ்வர்யாவும் மஹத்தும். ‘எனக்கு மைண்ட் சரியில்லைன்னு சொல்றாங்க. டாஸ்க் மட்டும்தான் நல்லா பண்றேன். மத்த சமயத்துல சோம்பேறி’ன்னு சொல்றாங்க” என்று மும்தாஜ் மீது குற்றம் சாட்டினார் ஐஸ்வர்யா. 

“அப்பாவியான யாஷிகா,  மும்தாஜின் அன்பு நாடகத்தால் அவர் பேச்சு கேட்டு நடக்கிறார்’ என்று இவர்கள் சொன்னதும் “எனில் யாஷிகாவிற்கு சுயபுத்தி இல்லையா என்ன?” என்ற சரியான கேள்வியை முன்வைத்தார் கமல். 

“எனக்குத் தோண்றதை நான் செய்யறேன். அவங்க எதுனா நினைச்சுக்கட்டும். எனக்கொண்ணும் கவலை இல்லை. சமயத்துல மும்தாஜ் காட்டற அன்பு உண்மையாகத்தான் இருக்கு” என்பது போல் இதற்கு விளக்கமளித்தார் யாஷிகா. 

“அன்பு காட்டி ஏமாத்தறீங்களா மும்தாஜ்?” என்று நேரடியாக கேட்டார் கமல். எதை எதையோ சொல்லத் துவங்கிய மும்தாஜ், பிறகு ‘அது அவங்களோட பார்வை’ என்றார் ஒரே வரியில். “யாஷிகா இதை ஒத்துக்கறாங்களா?” என்று அடுத்த கேள்வி வந்ததும், ‘ஆம். ஆனா என் கிட்ட இல்லை” என்றார் யாஷிகா. இதைக் கேட்டதும் மஹத்தும் ஐஸ்வர்யாவும் குஷியானார்கள். ‘எதிரிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு கழுத்தறுப்பதுதான் மும்தாஜின் பாணி’ என்றார் மஹத். 

“யாஷிகாவிற்கு நீங்க வழிகாட்டாதீங்க. அவங்க சொல்லட்டும். Don’t promt her’ என்று கமல் சற்று கண்டிப்பு காட்டியதும் அடங்கினார் மஹத். “அவங்க உத்தி அப்படியிருக்கு. சென்றாயனிடமும் ஜனனியிடமும் முதலில் பிரச்சனையிருந்த அவர், பிறகு மாறி விட்டார். நாமினேஷன் பத்தி எனக்கு குழப்பம் இருந்த போது ஜனனியை பெயரை சுட்டிக் காட்டினார். அப்ப அவர் ஜனனி கூட நல்லாத்தான் பேசிட்டு இருந்தார். சிலது சொன்னா அவங்க ஏத்துக்க மாட்டாங்க” என்பது யாஷிகா அளித்த விளக்கத்தின் சாரம். 

மும்தாஜின் பிரார்த்தனைகள் தங்களுக்கு பயமூட்டுவதாக மஹத்தும் ஐஸ்வர்யாவும் சொல்வது குழந்தைத்தனம் மட்டுமல்ல முட்டாள்தனமும் கூட. மதநல்லிணக்கதிற்கு ஊறு விளைவிக்கும் விஷயமும் கூட. ‘இது என் நம்பிக்கை. மரியாதையில்லாம பேசறதுக்குத்தான் பயப்படணும்’ என்று இதை சரியாகவே எதிர்கொண்டார்  மும்தாஜ். 

“பேய் இருக்கு –ன்னு சொல்றாங்க” என்றது ஐஸ்வர்யாவின் அடுத்த காமெடி. எல்கேஜி குழந்தைகளை விடவும் மோசமாக இருக்கிறார்கள். ‘சனிக்கிழமை வேற மும்தாஜ்ஜா இருக்காங்க.” என்றதும் ‘அப்ப சனிக்கிழமை பேய் வர்றதில்லையா” என்று கமல் கிண்டலடிக்க முயன்றதும்.. “நீங்க வந்ததும் பேய் அடங்கிடுது” என்று கமலுக்கே ஜெர்க் கொடுத்தார் மஹத். ‘அப்ப யாரை பெரிய பேய் –ன்றீங்க?” என்ற கமல், “நானே பாடியிருக்கேனே..  ‘பேய்களை நம்பாதே.. பிஞ்சுல வெம்பாதே’” என்று மகாநதி படத்தின் பாடலைப் பாடிக்காட்டினார். “பேய் இருக்குன்னா ஓட்டுங்க” என்று கமல் சொன்னதும் ‘அதான் பண்ணிட்டிருக்கோம்” என்று உற்சாகமானார் மஹத். 

‘இப்பத்தான் இவங்கள்லாம் ஹானஸ்ட்டா இருக்கற மாதிரி இருக்குல்ல” என்று கமல் சொன்னதும் அதைப் பாராட்டாக எடுத்துக் கொண்டு நன்றி சொன்னார்கள் மஹத்தும் ஐஸ்வர்யாவும். 

மறுபடியும் ரித்விகாவின் நாமினேஷன் விஷயத்திற்கு வந்தார் கமல். ரித்விகாவை நாமினேட் செய்ததற்கு குற்றவுணர்வு அடைவதாக சொல்லிய ஐஸ்வர்யாவிடம், சாமர்த்தியமாக உரையாடலை நகர்த்தி, ‘நீங்க கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. கொஞ்சம் செஞ்சுக்காட்டுங்க” என்று கேட்டுக் கொண்டார் கமல். சீரியலில் வில்லியாக நடித்த ஒருவர், அவார்டு திரைப்படத்தில் சாந்த சொரூபியாக நடிப்பது போல் ஐஸ்வர்யா underplay செய்ய, மும்தாஜை ஐஸ்வர்யா போல் நடித்துக் காட்டச் சொன்னார் கமல். ஐஸ்வர்யாவின் ஆங்காரத்தில் ஒரு ஐம்பது சதவீதத்தை மும்தாஜ் செய்து காட்டினார். அதிலேயே தாம் எப்படி இருந்தோம் என்பது ஐஸ்வர்யாவிற்குப் புரிந்திருக்க வேண்டும். “மும்தாஜின் பர்பாமன்ஸ் எப்படி இருந்தது?” என்று பார்வையாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கைத்தட்டிய போதாவது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆனால் புரியவில்லை. ‘இதுதான் நிஜ மும்தாஜ்” என்றார் மஹத், சந்தடி சாக்கில்.

பாவம் ரித்விகா. அவர் பேசத் துவங்கும் போதெல்லாம் உரையாடல் திசைமாறிக் கொண்டே இருந்தது. மஹத்தும் ஐஸ்வர்யாவுமே பெரும்பாலான நேரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள். இப்போது அவர் பேச சற்று இடைவெளி கிடைத்தது. “பாதிக்கிணறு தாண்டிட்ட பிறகு போறது கஷ்டமா இருக்கு” என்றார் ரித்விகா. “யாரெல்லாம் உண்மையாவே ஜெயிக்கணும்னு நெனக்கறீங்க?” என்கிற கமலின் கேள்விக்கு அனைவருமே கையை உயர்த்தினார்கள். 

“ஒண்ணு படைக்கு முந்தணும் இல்லை பந்திக்கு முந்தணும். ரெண்டுமே இல்லாம அப்படியே போற போக்குல சிலர் போயிட்டிருக்கீங்க. யாருன்னு சொல்லுங்க?” என்று ஆரம்பித்த கமல் சென்றாயனை விசாரித்தார். “புரியலைன்னா அதட்டிக் கேளுங்க.. நீங்க யாரை அப்படி நினைக்கறீங்க?” என்றதும் அவர் பாலாஜியின் பக்கம் பார்க்க, “அந்தப் பக்கம் பாரேண்டா” என்று விளையாட்டாக கலாய்த்தார் பாலாஜி. ‘அவர் தாலாட்டுதே வானம் –னு போறார்னா.. மஹத்..கைவீசுதேன்னு போறார் சார்” என்று சென்றாயன் சொன்னதும் ‘கைவீசறதை ஒத்துக்கறேன். ஆனா அவர் ஆக்டிவ்வா இருக்கார்” என்று கமல் சொன்னதும் மஹத்தின் முகத்தில் பெருமை பொங்கியது. இனி வரும் வாரங்களில் அவர் யாரையாவது நிஜமாகவே குத்தினால்தான் கமல் தட்டிக் கேட்பார் போலிருக்கிறது. 

சரியான பெயர்களைச் சொல்லுங்கள் என்று கமல் சொன்னதும், ரித்விகா தாமாக முன் வந்து ஒப்புக் கொண்டார். பிறகு ஜனனியும். பாலாஜி, சென்றாயன், (திரும்பிய) வைஷ்ணவி ஆகியோரையும் இந்த வரிசையில் சேர்த்த கமல், ‘தயங்காம தைரியமா விளையாடணும்” என்று உற்சாகப்படுத்தி விட்டு தன் வழக்கமான வார்த்தை விளையாட்டில் ரித்விகா காப்பாற்றப்பட்டதை அறிவித்தார். ‘இனிமேல் சிறப்பாக விளையாடுவேன்’ என்கிற நம்பிக்கையை தெரிவித்தார் ரித்விகா. ரித்விகா போன்ற சாதுக்களை மஹத் போன்று ஆக்ரோஷமாக குதிக்க வைப்பதுதான் பிக்பாஸ் வீட்டில் வெற்றிக்கான அளவுகோல் போலிருக்கிறது. 

“எனக்கு ஒண்ணு புரியலை. ஒருபக்கம் எல்லோரும் ஜெயிக்கணும்னு கையைத் தூக்கறீங்க.. இன்னொரு சமயத்துல யாரு வேணா போகட்டும்-ன்றீங்க. நான் போயிடறன்றீங்க. அஞ்சு நிமிஷம் வெளி கேட் திறந்திருக்கும். போகணும்னு விருப்பப்படறவங்க போகலாம். உங்களை விழிக்க வைக்கறதுக்காக இதைப் பண்றேன்” என்றார் கமல். “டேய் தம்பி. கதவை இழுத்துப்பூட்றா” என்ற ‘வேட்டையாடு விளையாடு’ ராகவன், இப்போது கதவை அன்போடு திறந்து வைத்தார். 

உணர்ச்சிவசத்தில் இருக்கும் ஐஸ்வர்யா உண்மையாகவே எழுந்து செல்ல பதறி எழுந்த பாலாஜி அவரைத் தடுக்க முயன்றார். அவருடன் மஹத்தும் இணைந்தும் கொண்டார். ‘என்னோட பியூச்சர் ஸ்பாயில் ஆயிடும். இங்க ஒரே சண்டையா இருக்கு. எனக்குன்னு யாரும் இல்லை. தனியாத்தான் இருக்கணும். என் பேர் இன்னமும் வெளியில் கெட்டுடும்’ என்றெல்லாம் புலம்பிய ஐஸ்வர்யாவைப் பார்க்க ஒருபக்கம் பரிதாபமாகத்தான் இருக்கிறது. வயது காரணமாக அதன் முதிர்ச்சியின்மையால் சில விஷயங்களைச் செய்து விடுகிறார். இதற்காக அவரை கடுமையாக வெறுப்பவர்களைப் பார்த்தால் எனக்கு நகைப்பாக இருக்கிறது. நம் வீட்டின் பிள்ளைகள் இப்படி நடந்தால் அவர்களை முழுமையாக வெறுத்து ஒதுக்கி விடுவோமா என்ன? டேனியிடம் இது குறித்து அவர் அழுது புலம்ப “பாதிக்கிணறு தாண்டிட்டோம். இங்க ஒரு நாள் சந்தோஷமா இருப்போம். மறுநாள் அழ வேண்டியிருக்கும். நீ உனக்காக விளையாடு” என்று சமாதானப்படுத்தினார் டேனி.

“உனக்குப் பதிலா நான் வேணா போறேன்” என்று ஐஸ்வர்யாவைத் தடுக்கும் விதமாக பாலாஜி கிளம்ப, “போஷிகா கிட்ட ஜெயிச்சுட்டு வர்றேன்’னு சொல்லியிருக்கீங்க. உள்ளே வாங்க” என்று அவரைத் தடுத்து அழைத்து வந்தார் வைஷ்ணவி. 

ஓர் இடைவெளி விட்டு வந்த கமல் ‘எத்தனை பேர் இருக்கிறார்கள்” என்று பாவனையாக தலைகளை எண்ணிப் பார்த்தார். ‘ஓகே.. யாரும் போகலை. இதுல உண்மையாகவே போறேன்னு கிளம்பினவங்க ஐஸ்வர்யா. அரை மனசா கிளம்பியது பாலாஜி. மத்தவங்க விளையாட முடிவு செஞ்சிருக்கீங்க. குட்.”என்று அவர்களைப் பாராட்டியவர், ‘உங்க நண்பர்கள் உங்க மேல வெச்சிருக்கிற நம்பிக்கையை கூட நீங்க உங்க மேல வெக்கலையே. அவங்க சொன்னது சரியானது கேட்டுக்கங்க” என்று ஐஸ்வர்யாவிடம் சொன்ன கமல் மஹத்தின் ‘குத்தையும்’ இடையில் குத்திக் காட்டினார். 

“ஆப்டர் ஆல்… இது ஒரு ரியாலிட்டி ஷோ. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கோபம் தேவை. ரெளத்ரம் பழகிட்டு தனியா எடுத்து வெச்சிடணும்.” என்ற கமல், ‘நீங்க வெளியே வந்த பிறகு யாராவது ‘மஹத்து .. என் கூட சண்டைக்கு வர்றியா’ன்னு கேட்டா என்ன பண்ணுவீங்க. அந்த மாதிரி வாய்ப்பை தராதீங்க’ என்று நாசூக்காக மஹத்தின் பிழையைச் சுட்டிக் காட்டினார். ‘அடி வாங்கினாத்தான் அடி கொடுக்கக்கூடாதுன்னு தெரியும்” என்று டேனியை முன்னிட்டு கமல் சொல்ல ‘நானும் மார்ஷல் ஆர்ட்ஸ்ல அடி வாங்கியிருக்கேன்’ என்றார் மஹத். ‘அப்ப சரியா வாங்கலைன்னு அர்த்தம். நான் வர்றேன்” என்றார் கமல். ஏற்கெனவே நடந்த விபத்தில் தன் முகம் கோணையாக ஆனதை குறிப்பிட்ட டேனி ‘மஹத் எங்கே தன்னை உண்மையாகவோ அடித்து விடுவாரோ’ என்று பயந்ததை வெளிப்படையாகவும் நகைச்சுவையாகவும் ஒப்புக் கொண்டது சிறப்பு. 

“என்னைத் தாக்குவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. என்னாலும் திருப்பி அடிக்க முடியும். அதை நான் செய்யவிரும்பவில்லை’ என்று தன்னம்பிக்கையாக ரித்விகா சொன்னது நன்று. “ஆனா வெளியே வந்தா ஒரு குத்து இருக்குன்னு சொல்லியிருக்கேன்” என்றார் நகைச்சுவையாக. “இல்லையே.. மஹத்திற்கு ஏதாவது ஒரு தண்டனை கொடுத்தாகணுமே’ என்ற கமல் ‘ரித்விகாவிற்கு குடை பிடிச்சுடுங்க. டேனி என்ன உதவி கேட்டாலும் செய்ங்க” என்று அகிம்சை வழியில் தீர்ப்பளிக்க, ‘சார் என் கிட்ட கூட கோபப்பட்டிருக்கான் சார். எனக்கும் ஏதாவது பார்த்து பண்ணுங்க சார்” என்று சந்தடி சாக்கில் சென்றாயனும் இடையில் புகுந்தார். 

“என்னை இவங்க அடிச்சிருக்காங்க” என்று ஐஸ்வர்யா நினைவுப்படுத்த, “நீங்க பேசாம இருந்திருந்தா கூட எனக்கு ஞாபகம் வந்திருக்காது. ஐஸ்வர்யா கிட்ட குடுமிப்பிடி சண்டை போட்டீங்கள்ல. அவங்களுக்கு குடை பிடிங்க’ என்று கமல் சொன்னதும் வீடே சிரிப்பலையில் மிதந்தது. ‘அவங்க லேடீஸ் சார். எங்க பிடிக்கறதுன்னு தெரியல” என்று விளக்கமளித்த சென்றாயனின் சங்கடத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஓர் இடைவெளி விட்டு வந்த கமல்,. “வாஸ்து படி அந்த சோபா சரியில்ல. ஆகி வந்த இடம். நெறய பொய் சொல்றீங்க. இங்க நெஜம் சொல்றீங்களான்னு பார்க்கலாம்” என்று இடத்தை ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்கு மாற்றினார். அதன் படி, தானாக முன்வந்து ஒரு போட்டியாளர் எழுந்து நிற்க வேண்டும். எதுவும் பேசக்கூடாது. மற்றவர்கள் அவருடைய விளையாட்டு உத்தி இன்னவற்றைப் பற்றி விளக்க வேண்டும். 

முதலில் எழுந்தவர் மும்தாஜ். அவரைப் பற்றி சொல்வதற்காக எழுந்த ஐஸவர்யா, “அவங்க அன்பு கட்டி கட்டி.. ஏமாத்தறாங்க. பொய் சொல்றாங்க. மத்தவங்க லைஃப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு யூஸ் பண்ணிக்கறாங்க” என்றார். “அவங்களுக்கு நிரந்தரமா ஒரு நண்பர் இல்லை. அவங்க அன்பை ஒரு உத்தியா பயன்படுத்தறதா மத்தவங்க சொல்றாங்க. ஆனா என்னால அப்படி உறுதியா சொல்ல முடியல. ஏன்னா.. நான் உண்மைன்னு ஃபீல் பண்றேன்” என்றார் ஜனனி.

ரித்விகாவின் அப்சேர்வேஷன் ரொம்பவும் ஷார்ப்பாக இருந்தது. ‘அவங்க எந்த உத்தியையும் பயன்படுத்தல. அன்பு காட்டி ஏமாத்தறாங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனா நாம அதை அளவா பயன்படுத்திக்கலாம். ரொம்பவும் கிட்டப் போய் ஈஷிக்க வேண்டாம். அவங்க உண்மையாத்தான் இருக்காங்க” என்றார். “மற்றவர்களின் பலவீனங்களை பலமாக ஆக்கிக் கொள்வது அவரது உத்திகளுள் ஒன்று’ என்பது போல் யாஷிகாவின் கருத்து இருந்தது. 

அடுத்து எழுந்து வந்தவர் சென்றாயன். “அவனுக்கு எதைப் பத்தியும் கவலை இல்லை சார். எல்லாம் கடவுள் விட்ட வழி-ன்றுவான். கடவுள் பக்தி கூட அவன் உத்தியா இருக்கலாம்’ என்றார் டேனி. ‘ஸோ. சென்றாயனோட சர்வைவல் டெக்னிக் சென்றாயனேதானா?” என்றார் கமல். “சமயத்துல அவர் காட்டற அன்பு உண்மையா இருக்கும் சார். தூங்கும் போது வந்து போர்த்தி விடுவார். (தமிழ் சினிமா நிறைய பார்ப்பார் போல!). நகைச்சுவை உணர்ச்சியும் அவரோட பலம்:” என்றார் ஜனனி. 

“சிலது தெரியாத மாதிரி இருக்கார். ஒரு டாஸ்க்கையே அவரால் வழிநடத்த முடியும். அவர் அவரா இருக்கார். சில சமயம் அப்படி.. சில சமயம் இப்படி. அப்பாவித்தனமா இருக்கறதுதான் உண்மை’ என்பது ரித்விகாவின் கணிப்பு. “போற போக்குல இருக்கார். அவரிடம் எந்த உத்தியும் இல்லை’ என்றார் மும்தாஜ். 

அடுத்து வந்து நின்றவர் ‘ஆங்க்ரி பேர்ட்’ ஐஸ்வர்யா. “அன்பு காட்டும் போது அன்பு காட்டுவாங்க. கோப்படும் போது கோபப்படுவாங்க. அவங்க அவங்களாத்தான் இருக்காங்க” என்று சான்றிதழ் தந்தார் மஹத். “நானாவது ரெண்டு, மூணு காமிரா முன்னாடிதான் நடிச்சிருக்கேன். இவங்க 65 காமிரா முன்னாடியும் நடிச்சிருக்காங்க.” என்று ஒரே போடாக போட்டார் சென்றாயன். “புரியாமயே கோபப்பட்டுடறாங்க” என்பதும் அவரின் இணைப்பு புகார்.

“கோபமே அவங்க உத்தியா இருக்கலாம்” என்பது ஜனனியின் கணிப்பு. வழக்கம் போல் பாயின்ட் பாயின்ட்டாக சொன்னார் ரித்விகா. “எண்டர்டெயின் பண்ணுவாங்க. ஒப்பனை உணர்வு அதிகம் உண்டு. அதிக அளவில் கோபப்படுகிறார்”.

“ஐஸ்வர்யாவிடம் யாஷிகாவின் பிம்பங்களையே அதிகம் பார்க்கிறேன்” என்று சரியான கோணத்தை முன்வைத்தார் பாலாஜி. “அப்படி சொல்ல முடியாது. ரெண்டு பேரும் சேர்ந்துதான் நெறய விஷயங்களைப் பண்ணினோம். சந்தோஷமா இருந்துச்சு. டாஸ்க்தான் ஐஸ்வர்யாவின் பலம்” என்றார் யாஷிகா. அதையே வழிமொழிந்தார் மும்தாஜ்.

‘நான் பார்த்தவரைக்கும் சென்றாயனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் சொல்லப்பட்ட காரணங்கள் சரியா இருந்த மாதிரி பட்டது. மத்தவங்களைப் பற்றி நாளைக்கு பார்ப்போம்’ என்று விடைபெற்றுக் கொண்டார் ‘உங்களில் நான்’.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

வைஷ்ணவிதான் வெளியேற்றப்படவிருக்கிறார் என்கிற தகவல் காற்றில் உலவுகிறது. உண்மையா என்று இன்று பார்த்து விடுவோம். நாட்டாமை இன்றாவது நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக எடுத்துச் செல்வாரா என்பதையும் காத்திருந்து பார்ப்போம்.

சந்திரமுகி துர்காஷ்டமி அன்று செய்யும் சாகசங்களை எல்லாம் செய்தார் ஐஷ்வர்யா. 'ஐ' படத்தில் வரும் டாக்டர் சுரேஷ்கோபி போல், அன்பு செய்வது போல் செய்து பின் காலை அறுக்கும் நபராக இருக்கிறார் மும்தாஜ் என்பது மஹத் , ஐஷ்வர்யாவில் கருத்து. கமலோ அதிரடி காட்டாமல், அன்பே சிவத்தில் விபத்துக்குப் பின் வரும் அன்பே உருவான நல்லசிவம் போல் அன்பாலே எல்லோரையும் திருத்த முயற்சி செய்கிறார். இதில் யார் சரி, யார் தவறு என்பது பார்வையாளர்கள் தான் சொல்ல வேண்டும்.