Published:Updated:

அய்யகோ... சென்றாயனுக்கு நடந்த துயரம்... இதைக் கேட்பாரில்லையா?! #BiggBossTamil2

அய்யகோ... சென்றாயனுக்கு நடந்த துயரம்... இதைக் கேட்பாரில்லையா?! #BiggBossTamil2
அய்யகோ... சென்றாயனுக்கு நடந்த துயரம்... இதைக் கேட்பாரில்லையா?! #BiggBossTamil2

பிக்பாஸ் வீட்டில் இன்று மூன்று முக்கியமான விஷயங்கள் நடந்தன. அதைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம்.

ஒன்று, சமையல் போட்டியில் சென்றாயன் வெற்றி பெற்றது. ‘அவருக்கு சமையல் வராது. அவரோட வொர்க் பண்றது எனக்கு ஒத்துவராது, ஹைஜீனா இருக்க மாட்டாரு” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த மும்தாஜே ‘சென்றாயன் சமையல் சூப்பர்’ என்று விருதிற்காக சென்றாயனைத் தேர்ந்தெடுத்திருப்பதில் நமக்கான செய்தியும் இருக்கிறது. ‘விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி’.

சமையல் போட்டி துவங்கிய போது மற்ற எல்லோரும் பரபரப்பாக தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருக்க, பத்தாவது முறை அரியர்ஸ் எழுதும் ‘பிட்டு இல்லாத’ மாணவன் போல சென்றாயன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். கல்லில் மாவை தாறுமாறாக ஊற்றி விட்டு ‘என்னய்யா.. இது சரியா வரல. கார்.. பஸ்.. மாதிரி என்னென்னமோ வருது’ என்று அதை அப்படியே தூக்கிப் போட்டார். வியர்க்க வியர்க்க மறுபடியும் இன்னொரு முயற்சி. அதுவும் சரியாக வரவில்லை. இவர் எங்கே வெற்றி பெறப்போகிறார், சமையலில் கில்லியான டேனிதான் ஜெயிக்கக்கூடும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது  சென்றாயன் பரிசை வென்றது உண்மையிலேயே மகிழ்ச்சி. 

சென்றாயனுக்கு முன்பு ‘ஆமை’ விருதை தந்த டேனி, ‘முயல் – ஆமை’ கதை மாதிரி பிக்பாஸில் நீ வெற்றி பெற வாழ்த்து’ என்று சொன்னது உண்மையிலேயே நிஜமாகி விடும் போலிருக்கிறது. சென்றாயன் எல்லோரையும் ஒரம் தள்ளி விட்டு பிக்பாஸ் டைட்டிலை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

பிக்பாஸிற்கு நன்றி சொன்ன சென்றாயன், தன்னை சமையல் அணியில் இணைப்பதற்கு அழுத்தமாக பரிந்துரை செய்த கமலுக்கு நன்றி சொன்னது சிறப்பு. அந்த சமையல் பொருளை ‘இரண்டு நிமிடங்களில்’ தயாரித்து விட முடியும் என்கிறார்கள். ஆனால் போட்டிக்கான விதிகளை பதினைந்து நிமிடத்திற்கும் மேலாக படித்துக் கொண்டிருந்தார் ரித்விகா. உணவைத் தயாரிப்பது மட்டுமன்றி அதற்கான ஸ்லோகனையும் சொல்ல வேண்டும் என்ற போது யாஷிகா துவக்கிய ‘பாகுபலி’ உதாரணத்தை, ஜனனியும் ஐஸ்வர்யாவும் காப்பியடித்தது காமெடி. ‘உப்புமா பத்துமா’ மாதிரி எதையோ சொன்னார் விஜயலஷ்மி. 

இரண்டாவது விஷயம், வீட்டின் தலைவராக மஹத் வந்தது. ஒரு வீட்டிற்கு சோதனை மேல் சோதனை வரும் என்பது இதுதான். இவர் மீது மக்களுக்கு எரிச்சல் ஏற்பட்டாலும், பரபரப்பான ஃபுட்டேஜ்களை தரும் சாகச திலகமான மஹத்தை இழந்து விட பிக்பாஸ் விரும்ப மாட்டார். இந்த வார பஞ்சாயத்தில் தப்ப வைத்து விட்டு அடுத்த வார பாதுகாப்பை மஹத்திற்கு உறுதி செய்ய அவரைத் தலைவராக்கி விட வேண்டுமென்று முடிவு செய்திருக்கலாம்.

அறிவுசார்ந்த போட்டியாக இருந்தால் மஹத்தால் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்று பிக்பாஸிற்கு தெரியும். எனவே உடல் சார்ந்த போட்டி. ‘உத்தம வில்லன்கள்’ டாஸ்க்கில் மோசமான பங்களிப்பாளர்களாக தேர்வான டேனி, பாலாஜி, ரித்விகா, ஜனனி ஆகியோர் தலைவருக்கான போட்டியில் கலந்து கொள்ள முடியாது. இதன் மூலம் வலிமையான போட்டியாளரான டேனியை முதலிலேயே ஓரம் தள்ளியாகி விட்டது. போட்டியாளர்களில், மும்தாஜால் நிச்சயம் ஓட முடியாது. காலில் அடிபட்டிருக்கும் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் வெல்வதற்கான சாத்தியக்கூறு குறைவு. சென்றாயன் பதட்டத்திலேயே விட்டு விடுவார். ஆக மீதமிருப்பது மஹத். எனவே பிக்பாஸின் சதி வென்றது. ‘மஹத்’தான் தலைவராக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்த யாஷிகாவின் பிரார்த்தனை உண்மையாயிற்று. எனில் இந்தக் கூட்டணியின் ஆட்டம் இனி அதிகமாகும். 

புதிய தலைவரான மஹத் வந்தவுடனே தன் ஓரவஞ்சனையை காட்டத் துவங்கி விட்டார். கழிவறை சுத்தத்திற்காக டேனியையும் பாலாஜியையும் இறக்கி விட, ‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று எரிச்சலுடன் ஒதுங்கி விட்டார் பாலாஜி. 

மூன்றாவது விஷயம், வைல்ட் கார்ட் எண்ட்ரி. இந்தியச் சுதந்திரம் போல் நள்ளிரவில் வந்து சேர்ந்தார் புதிய போட்டியாளர் விஜயலஷ்மி. நடுராத்திரியில் சரோஜாவை தொந்தரவு செய்தது மட்டுமல்லாமல் போட்டியாளர்களின் உறக்கத்தையும் கலைத்து இம்சைப்படுத்தினார்கள். விஜயலஷ்மி நன்றாகவே நடனமாடுகிறார். அழுத்தமான நபர் கூட என்று வந்தவுடனேயே புரிந்து விட்டது. 

“உங்களுக்கு எந்த படுக்கை வேண்டும், ஏனெனில் அவற்றில் சிலவற்றை நாங்கள் எடுத்து வைத்திருக்கிறோம்’ என்று மும்தாஜ் கேட்கும் போது சம்பிரதாயமெல்லாம் பார்க்காமல் ‘திருப்பிக் கொடுங்கள்’ என்று அழுத்தமாக கேட்டதில் இந்த வீட்டிற்கு ஏற்ற ஆள்தான் என்று தோன்றி விட்டது. வீட்டிற்குள் உறவினர் வந்தால், தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் எழுந்து கொள்ளாமல் அடம்பிடிப்பது போல ‘ஐஸ்வர்யாவும் யாஷிகாவும்’ தொடர்ந்து தூங்க முயன்றது பார்க்க நகைச்சுவையாக இருந்தது. ‘தான்தான் ஹீரோயின்’ என்கிற கெத்துடன் சுத்திக் கொண்டிருக்கும் யாஷிகாவிற்கு இன்னொரு ‘ஹீரோயின்’ வந்தவுடன் நிச்சயம் சங்கடமாகும் என்பது பாலாஜியின் கணிப்பு. (“ரெண்டு பேரும் ஹீரோயின்களா? சொல்லவேயில்ல”).எந்தவொரு புதிய விருந்தினர் வந்தாலும் அதிக எக்சைட் ஆகி விடும் சென்றாயன் இந்த முறையும் அதே போல் செயல்பட தவறவில்லை. வருபவர் அனைவரிடமும் ‘இப்ப நேரம் என்னா? இன்னிக்கு தேதி என்ன,’ என்பதை ஏன் விசாரிக்கிறார் என்று தெரியவில்லை. திஹார் சிறையில் இருக்கும் போது வெளியே அமாவாசையாக இருந்தால் என்ன, பெளர்ணமியாக இருந்தால் என்ன? ‘அது மமதியோட நம்பர்’ என்று வந்தவுடனேயே விஜயலஷ்மியை சென்ட்டிமென்ட்டாக கவிழ்த்து நட்பாக்கிக் கொள்ள முயலும் மும்தாஜின் தந்திரம் சூப்பர். 

‘இந்த டாஸ்க் முடிஞ்சதும் மஹத் கிட்ட பேசத்தான் போறீங்க?” என்று தூண்டிலை மும்தாஜ் வீச, ‘சேச்சே. அவன் சாவகாசமே வேண்டாம். இனி அவன் மூஞ்சியிலயே முழிக்கப் போறதில்லை’ என்பது போல் பாலாஜியையும் டேனியையும் சொல்ல வைக்கிறார் மும்தாஜ். ‘உத்தமவில்லி’. 

வந்த முதல் நாளிலேயே போட்டி விதிகளை கறார் + கனிவு கலந்து சொல்லி ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் விஜயலஷ்மி. ‘‘பிடிச்ச எபிஸோடாக’ சர்வாதிகாரி டாஸ்க்கை குறிப்பிட்டார். (அப்படிப் போடு!. அப்ப அம்மணி கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்). ‘பயங்கரமா சண்டை போடறீங்க. அடுத்த நிமிஷமே கட்டிப் பிடிச்சக்கறீங்க. பார்க்கற மக்கள் முட்டாள்தனமாக உணர்றாங்க” என்று சீஸன் 2-வை அலசி ஆராயுமளவிற்கு கருத்துக்களை உதிர்க்கிறார் விஜயலஷ்மி. **

மஹத்தால் டேனி தாக்கப்பட்டதின் காரணமாக, டேனி, பாலாஜி மற்றும் மும்தாஜ் ஆகியோர் ‘உத்தமவில்லன்’ டாஸ்கில் கலந்து கொள்வதில்லையென்று ‘ஒத்துழையாமை இயக்கத்தில்’ ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். பிக்பாஸிடம் பேச்சு வார்த்தையை நடத்தி விட்டுத்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்று காத்திருந்தார்கள். இதற்குள், ‘இவர்கள் விளையாடப் போவதில்லையாம்’ என்றொரு வதந்தி பரவி விட, இதை விசாரிக்க வந்த சென்றாயனின் மூலம் வதந்தியை அறிந்து கொண்டு அதன் பின் வந்த ஜனனியின் மீது பாலாஜி அதிகம் கோபப்பட, ஆனால் அதைச் சொன்னது ஐஸ்வர்யா என்பது பிறகு தெரியவந்தது. 

ஒரு விஷயம் எவ்வாறு தவறாக பரவுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு  நல்ல உதாரணம். தொழில்நுட்ப வசதிகள் அதிகமாக அதிகமாகத்தான், தகவல் இடைவெளிகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பது நடைமுறை உண்மையும் கூட. 

எளிய டார்க்கெட் ஆன சென்றாயனிடமிருந்து சாவியைப் பறிப்பதற்காக யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் பலவந்தமாக முயன்றார்கள். இதில் சென்றாயனின் வேட்டி நழுவும் அபாயம் இருந்தது. இதுவே பெண் போட்டியாளராக இருந்தால் கலவரமாகியிருக்கும். “எங்களுக்கும் கற்பு காளியாத்தா, வெக்கம் வேலாயுதம்லாம் இருக்கு” என்று கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் சொல்வதைப் போல ஆணின் வேட்டி அவிழ்ந்தால் அது பஞ்சாயத்தாக ஆகக்கூடாதா? ‘உள்ளே ஏதாவது போட்டிருந்தீங்களா, குனியும் போது பொம்மை தெரியுது’ன்னு சொன்னாங்க’ என்று வில்லங்கமாக சொல்லிக் கொண்டிருந்தார் ஜனனி. (விஷம பாட்டில்) ஆணாய் பிறந்த ஒரே பாவத்துக்காக சென்றாயன் மீது இவ்வளவு அக்கிரமங்களை நிகழ்த்துகிறார்கள் போலும். அய்யகோ... இதைக் கேட்பாரில்லையா?!‘அவங்க விளையாட வரலைன்னா நம்ம ஆடறது வேஸ்ட். அடுத்த முறை நீங்க போங்க. நான் வரலை’ என்று குற்றவுணர்ச்சியில் பேசிக் கொண்டிருந்த மஹத், பஸ்ஸர் அடித்தவுடன் உடனே எழுந்து சென்றது காமெடி. ஆளே இல்லாத டீக்கடையாக இருந்தாலும் தன் வீரத்தை நிலைநாட்டியே ஆக வேண்டும் என்கிற ஆவேசத்தில் இருக்கும் மஹத்தின் கடமையுணர்ச்சியைப் பாராட்டியாக வேண்டும். 

அணியிலுள்ள மற்ற மூவரும் ‘ஒத்துழையாமை இயக்கத்தில்’ இருக்கும் போது அதே அணியில் இருக்கும் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் ஆட்டத்தைத் தொடர்ந்து ஒருவகையில் துரோகம். ஆனால் இன்னொரு பக்கம், கால் உடைந்த நிலையிலும் விடாமுயற்சியோடு போட்டியில் ஈடுபட்ட அந்த அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டியாக வேண்டும். இருவரும் வேறு கலாசாரத்தில் இருந்து வந்தவர்கள் என்பதற்கும் ஸ்போர்ட்மேன்ஷிப்பை விடாமல் இருக்கும் ஆர்வத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்று ஆராய வேண்டும். 

இந்த வாரம் மஹத் வெளியேற்றப்படா விட்டால் தாங்கள் போய்விடுவோம் என்பது போல் மும்தாஜ், டேனி, பாலாஜி கூட்டணி பேசிக் கொண்டிருந்தது. இவர்கள் பேசியதில் ஒரு வார்த்தை புரியாமல் ‘கோளாறு means…’ என்று மும்தாஜ் கேட்க அதை ஆங்கிலத்தில் சரியாக சொல்ல வராமல் ‘வக்கீல் வண்டு முருகன்’ போல் உளறிக் கொட்டினார் பாலாஜி. ‘அவன் சொன்ன கெட்ட வார்த்தைகள்லாம் எனக்கு ஞாபகமிருக்கு. நான் சொல்றேன்’ என்று டேனி சொன்னவுடன் ‘அதான் எல்லாமே காமிரால ரெக்கார்ட் ஆகியிருக்கும்ல’ என்றார்கள் பாலாஜியும் மும்தாஜூம். என்னத்த ரெக்கார்ட் ஆகி என்ன பயன்? ‘எதுவுமே தெரியாத மாதிரி’தான் நாட்டாமை பஞ்சாயத்தை ஆரம்பிக்கப் போகிறார். இதில் ‘am watching’ என்று பந்தாவுடன் அடிக்கடி சொல்வதில் மட்டும் குறைச்சல் இல்லை. 

தன்னுடைய பெயர் எத்தனை வாசனையுடன் வெளியில் பரவியிருக்கிறது என்பதை விஜயலஷ்மியின் வருகையின் மூலம் மோப்பம் பிடிக்கத் துவங்கியிருக்கிறார் மஹத். ‘இங்க இருக்கற மத்தவங்களை விட என்னைத்தான் அவளுக்கு நல்லாத் தெரியும். ஆனா என் கிட்ட நெருங்க மாட்டேன்றா. டேனி, மும்தாஜ், சென்றாயன் கிட்டலாம் நல்லாப் பேசறா. நம்மள எப்படி காமிச்சிருக்காங்கன்னு தெரியலை” என்று அனத்திக் கொண்டிருந்தார் மஹத். ஆனால் ஐஸ்வர்யா என்கிற மந்த புத்திக்கு அப்போதும் புரியவில்லை. ‘நாம டேஞ்சர்’னு தெரிஞ்சிடுச்சோ” என்கிறது புத்திசாலித்தனமாக. ‘ஜெனிலியா’ கேரக்ட்டருக்கு சரியான ஆள். 

‘நீ வெகுளிடா.. ஒண்ணும் தெரியாது. டாஸ்க்ல கான்ஸ்ட்ரேட் பண்ணு மச்சான். உனக்கு கடிக்கும் போதுதான் தெரியும்’ என்றெல்லாம் சர்காஸ்டிக்காக பேசிக் கொண்டிருந்த டேனியைப் பார்த்து ‘நான் என்னடா பண்ணுவேன்’ என்று சென்றாயன் விழித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க ஒருபக்கம் நகைச்சுவையாகவும் இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது. ஒருபக்கம் சென்றாயனுக்கு ஆதரவு தருவது போல் பேசி இன்னொரு பக்கம் அவரைத் தூண்டி விடும் வேலையையும் மும்தாஜ் தன் வழக்கமான நுட்பத்தின் படி செய்தார். “டேனி ஏன் இப்படி மாறிட்டான்னு தெரியலையே” என்று ஐஸ்வர்யா வருத்தப்பட, ‘இப்பத்தான் அவன் ரியல் காரெக்ட்டர் வெளியே வருது’ என்கிறார் யாஷிகா. காதல் கண்ணை மறைக்கும் என்பது உண்மைதான் போல. சில விஷயங்களில் புத்திசாலித்தனமாக இருக்கும் யாஷிகா வேறு சமயங்களில் சுயநலத்துடன் மட்டுமே செயல்படுகிறார். தன்னை மஹத் அப்படி மூர்க்கமாக இழுத்துப் போட்டது குறித்து அவருக்கு எவ்வித புகாரும் இல்லை. ஏனெனில் இழுத்தது மஹத் என்பது காரணம். இதுவே வேறு நபராக இருந்தால்? தலைமுடியைப் பிடித்து இழுத்ததற்காக ஐஸ்வர்யா போட்ட சீன் கொஞ்ச நஞ்சமா என்ன?

வழக்கமாக ஒப்பனையில்லாமல் இருக்கும் ஜனனி, இன்றைக்கு ஸன்ஸ்கீரின் கிரீம் எல்லாம் போட்டுக் கொண்டதற்கும் விஜயலஷ்மியின் வருகைக்கும் தொடர்பிருக்குமா என்று தெரியவில்லை. ஜனனியின் ஒப்பனையையும் அவர் காமிராவிடம் பேசும் பழக்கத்தையும் பாலாஜி கிண்டலடித்துக் கொண்டிருந்தது சுவாரஸ்யம். ‘இந்த வீட்ல அழகு தேவதை இவதான். இவளை காமிரால பார்த்தவங்க மூணு பேர் ஆம்புலன்ஸ்ல போயிட்டாங்க. கண்ணு தெரியாத கபோதிதான் இவளையே உத்துப் பார்த்துட்டிருப்பான். அது புரியாம இது காமிராவைப் பார்த்து பேசிட்டிருக்கும்’ என்று ரகளையாக கிண்டலடித்தார் பாலாஜி.

பாலாஜியின் இது போன்ற கிண்டல்கள் மட்டும் இல்லையென்றால் பிக்பாஸ் வீடு, மனநல விடுதி போலவே இருக்கும். இந்த வார பஞ்சாயத்தில் ‘இரண்டே நிமிடங்கள்’ மட்டுமே பேசப் போவதாக டேனி கூறியிருக்கிறார். ‘என்ன பண்ணப் போறேன்னு மட்டும் கவனி’ என்று சென்றாயனிடம் கூறியிருக்கிறார். மஹத்தின் அட்டூழியங்கள் பற்றிய புகார்களை டேனி, மும்தாஜ், பாலாஜி ஆகியோர் நாட்டாமையிடம் முன்வைப்பார்கள் என்று தெரிகிறது. 

சம்பந்தமில்லாத வியாக்கியானம் எல்லாம் பேசிக் கொண்டிருக்காமல் ஆண்டவர் இதை தீவிரமாக விசாரிப்பாரா அல்லது.. அடப் போங்கப்பா சொல்லி சொல்லி போரடிக்குது. 
 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

**

இதே 68-வது நாளில் முதல் சீஸனில் என்னவெல்லாம் நடந்தது? ஹரீஷிற்கும் பிந்துவிற்கும் இடையேயான நிச்சயசார்த்த ஏற்பாடு உண்மையாகவே ஆகி விடுமோ என்கிற அளவிற்குப் போனது. ஹரீஷ் மீது உண்மையாகவே லவ் சிக்னலை தந்து கொண்டிருந்தார் பிந்து மாதவி. ஒரு தந்தையாக இது குறித்து சீரியஸாகவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் வையாபுரி. ‘இதெல்லாம் சரியா வராதும்மா” என்று ஒரே அட்வைஸ் மழை. ஆனால் இது பிந்து மாதவிக்கு தரப்பட்ட சீக்ரெட் டாஸ்க் என்பது பிறகுதான் தெரிய வந்தது. 

மறுவருகையில் நுழைந்திருக்கும் ஜூலியும் ஆரத்தியும் பூனை – எலி போல ஒருவரையொருவர் பிறாண்டிக் கொண்டேயிருந்திருக்கிறார்கள். ஆரத்தியின் தொடர்ந்த புண்படுத்தலால் மனம் நொந்திருக்கிறார் ஜூலி. முன்பாவது காயத்ரியின் ஆதரவு இருந்தது. இப்போதும் அதுவும் இல்லை. ‘நீ பற்ற வைத்த நெருப்பு’.. என்கிற வசனம் ஜூலிக்குப் பொருந்தும்.