Published:Updated:

ஹேஹேய்.... ஐஸ்வர்யா, யாஷிகா, சென்றாயன்... இது புதுக் கூட்டணி! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
ஹேஹேய்.... ஐஸ்வர்யா, யாஷிகா, சென்றாயன்... இது புதுக் கூட்டணி! #BiggBossTamil2
ஹேஹேய்.... ஐஸ்வர்யா, யாஷிகா, சென்றாயன்... இது புதுக் கூட்டணி! #BiggBossTamil2

பிக்பாஸ் வீட்டின் கடந்த நாள்களில் நிறைய ‘ஆக்ஷன்’ காட்சிகளைப் பார்த்துவிட்டதால், இந்த வாரத்தை ‘சென்ட்டிமென்ட்’ வாரமாக ஆக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. விக்ரமன் படம் மாதிரி ஒரே ‘லாலாலா’ சத்தம். ஆனால், இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. அற்பக்காரணங்களுக்காக உடைந்து போயிருந்த உறவுகள், ஒரு மங்கலகரமான நாளில் உட்கார்ந்து மனம் திறந்து பேசினால் அந்த உறவு மேலதிகமாக இறுகிக்கொள்ளும் விநோதங்கள் நிகழ்கின்றன. இந்தச் சமயத்தில் மஹத்தும் இருந்திருக்கலாம் என்று மனதின் ஓரத்தில் தோன்றத்தான் செய்தது. இன்று என்ன நடந்தது என்று பார்ப்போம்.

சிம்புவின் குரலில், ‘ஒரு பொறம்போக்கு முதன்முதலா சரக்கடிக்க கத்துத் தந்தான்’ என்னும் ஆழமான கருத்துள்ள பாடல் காலையில் ஒலிபரப்பாகியது. 

நாமினேஷன் சடங்கை காலையிலேயே ஆரம்பித்தார் பிக்பாஸ். உத்தம வில்லன் டாஸ்க்கில் ‘சரியாக பங்கேற்காதவர்கள்’ என்கிற காரணத்தால் நேரடியாக எவிக்ஷன் பட்டியலில் வந்தவர்கள் டேனியல், பாலாஜி, ஜனனி மற்றும் ரித்விகா. இதில் ‘மற்றவர்களின் உத்தி என்ன’ என்பதை ஆராய்ந்து சொல்லும் டாஸ்க்கில் ரித்விகா சிறப்பாகச் செயல்பட்டதால் அவர் எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்படுவதாகக் கடந்த வாரம் கமல் அறிவித்துவிட்டார். ஆக பாக்கியுள்ள மூவரையும் நாமினேஷன் செய்ய முடியாது. புதிதாக வந்த விஜயலஷ்மியையும் தலைவர் சென்றானையும் நாமினேட் செய்ய முடியாது. மீதமிருப்பவர்கள் யாஷிகா, ஐஸ்வர்யா, மும்தாஜ் மட்டுமே. ஆளில்லாத கடையில் எதற்கு டீ ஆத்துவானேன் என்கிற காரணத்தால் இந்த வாரம் நாமினேஷன் கிடையாது என்று அறிவித்து விட்டார் பிக்பாஸ். “ஏன் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க’ என்று மக்கள் தலைமுடியைப் பிய்த்துக்கொண்டார்கள். அவர்கள் போட்டு வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் வீணாகின. 

ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் அந்த வீட்டில் தனிமைப்பட்டிருக்கிறார்கள். ‘`யாரும் நம்ம கூட பேசமாட்டேன்றாங்க. பிக்பாஸ் நமக்கு கொடுத்த வாய்ப்பை சரியா பயன்படுத்தி ரெண்டு பேரும் பெஸ்ட் பர்ஃபாமர் ஆகணும்” என்று  யாஷிகா சொல்லும் அனைத்துக்கும் ‘ஆமாம் சாமி’ போட்டுக்கொண்டிருந்த ஐஸ்வர்யாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ‘வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம். இந்த வெற்றி மஹத் மற்றும் ஷாரிக்குக்கு சமர்ப்பணம்’ என்று வீராவேசமாக முழங்கிக்கொண்டிருந்த யாஷிகாவின் இசைக்கு மயங்கிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ‘வெளில போகலாம்’ என்று கடந்த வாரத்தில் பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போது மனமாற்றம் அடைந்திருப்பது நல்லது. ‘இன்னிக்கு குளிச்சீங்களா... என்ன... அழகா இருக்கீங்க” என்று விசாரித்தபடி வந்தார் புது தலைவர் சென்றாயன். 

‘16 வயதினிலே’ சப்பாணி மாதிரி சென்றாயனை கேலியாக அணுகிக்கொண்டிருந்தவர்களின் கண்களில் இப்போதுதான் ‘சுப்பிரமணி’யாக தென்பட்டுக்கொண்டிருக்கிறார். இதுவரை சென்றாயனை எள்ளலாகவே கையாண்டு கொண்டிருந்த ஐஸ்வர்யா, யாஷிகா டீம், இப்போது தனிமை ஃபீலிங்க்ஸில் இருப்பதால் சென்றாயனை மதித்து அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். “நீங்கதான் வின்னர் ஆவிங்க. எங்களுக்கு அப்பவே தெரியும்’ என்றெல்லாம் சொல்ல ‘வின்னர்’ கைப்புள்ள, அப்போதே மன்னராகிவிட்ட சந்தோஷத்தில் மிதந்தார். 

‘தள்ளுவண்டி விளையாட்டில் மஹத் உங்களுக்கு விட்டுக் கொடுக்கறதாத்தான் பிளான் பண்ணியிருந்தான். நீங்க தலைவராகணும்னு அவன் ஆசைப்பட்டான். ஆனா, அப்ப அவனே பிரச்னைல இருந்ததால, வேற வழியில்லாம வின் பண்ணான்’ என்று புதிய கதைகளையெல்லாம் அள்ளி விட்டுக்கொண்டிருந்தார் யாஷிகா. உண்மையோ, பொய்யோ. 

`தான் பெருக்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் ஐஸ்வர்யாவின் ஷூவை நகர்த்த முயன்றபோது ‘அதைத் தொடாதே’ என்று கோபத்துடன் ஐஸ்வர்யா சொல்லிவிட்டார்’ என்பது ஜனனியின் ஆதங்கம். இதை மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். சர்வாதிகாரி மனநிலையின் எச்சம் இன்னமும் இருக்கிறதுபோல.

“மும்தாஜ் லேட்டாத்தான் எழுந்திருப்பாங்க. அவங்களுக்கு நம்ம யூஸ் பண்ற எண்ணைய்ல போடாம, ஆலிவ் ஆயில்ல தோசை சுட்டு தாங்க’ என்று ஓர் ஊத்தப்பத்தை எப்படியெல்லாம் தயார் செய்ய வேண்டுமென்கிற வடிவேலு மாதிரி சென்றாயன் விவரமாகச் சொல்லியதை ‘மாஸ்டர்... ஒரு ஊத்தப்பம்’ என்று ஒரே வார்த்தையில் காலி செய்தார் விஜயலஷ்மி. “என் வேலையை நான் செஞ்சு முடிச்சிட்டேன். அவங்க செளகரியத்துக்கு கிச்சன் பக்கத்துலயே நிக்க முடியுமா. நான் அவங்க அஸிஸ்டென்ட் இல்ல. போட்டியாளர்” என்றெல்லாம் விஜயலஷ்மி ரூல்ஸ் பேச, வாயடைத்துப்போய் கிளம்பினார் சென்றாயன். விஜயலஷ்மி தெளிவா இருக்கறாங்களாமாம்.

மாமியார் குறித்து அலட்சியம் கொள்ளும் புது மருமகள் மாதிரி விஜய்லஷ்மி சொல்வதின் மூலம் அவர் வெளிப்படையாக இருப்பது சிறப்புதான் என்றாலும் சகிப்புத்தன்மைதான் இந்த விளையாட்டின் ஆதாரமான விஷயம் என்பதைப் போட்டியாளர்கள் உணர மறுக்கிறார்கள். தன் வீட்டைப் போலவே பிக்பாஸ் வீட்டையும் ஒரு குடும்பம் என்று கருதத் தொடங்கினால் இப்படி பேசத் தோன்றாது. விஜயலஷ்மியால் வரும் வாரங்களில் நிச்சயம் சண்டை உண்டு என்கிற நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறார். 

**

‘கண்ட நாள் முதல்’ என்றொரு புதிய டாஸ்க்கை பிக்பாஸ் உருவாக்கினார். 70 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற போட்டியாளரைப் பற்றி ‘தொடக்க நாள்களில் எப்படி இருந்தார்கள், இப்போது அவர்கள் அடைந்திருக்கும் நேர்மறை அல்லது எதிர்மறை மாற்றம் என்ன’ என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டும். அதற்கேற்ப ஏஞ்செல் அல்லது டெவில் பேட்ஜை அணிவிக்க வேண்டும். 

பாலாஜியிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பலரும் பாராட்டினார்கள். அந்தக் கோபம் ஐஸ்வர்யாவுக்குப் பரவிவிட்டதை அதிருப்தியுடன் சொன்னார்கள். மும்தாஜிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் குறிப்பாகச் சொல்லப்பட்டது. யாஷிகாவின் பூடகம் பற்றி சிலர் குறிப்பிட்டார்கள். 

மும்தாஜின் பேச்சு உணர்வுபூர்வமாக இருந்தது. அதிலும் ஐஸ்வர்யா பற்றிய பகுதி உண்மையான நெகிழ்வு. ‘வேற்று கலாசாரத்திலிருந்து இங்கு வந்து பல போராட்டங்களுக்குப் பின் காலூன்றியவள் நான் என்கிற காரணத்தால் அதே மாதிரி வந்திருக்கும் ஐஸ்வர்யாவைப் புரிந்துகொண்டு அவள் மீது அன்பும் ஆதரவும் கொட்டினேன். ஆனால்…” என்று அவர் சொன்னது முக்கியமான பாயின்ட். தானாகக் கிடைக்கும் உண்மையான அன்பை நிராகரிப்பது போன்ற பாவம் ஏதும் கிடையாது. 

‘டிராமா க்வீன்’ என்பது முதற்கொண்டு மும்தாஜைப் பற்றி பல எதிர்மறைப் புகார்கள் சொல்லப்பட்டாலும், அன்பு செலுத்தும் விஷயத்தில் அவர் பொய்யாக நடிக்கவில்லை என்பதை இன்று அழுத்தமாக உணர முடிந்தது. முகத்தில் அதிக சலனம் இல்லாமல் மும்தாஜ் பேசுவதை ஐஸ்வர்யா கவனித்துக்கொண்டிருந்தார். மனச்சங்கடத்துடன் ‘டெவில்’ பேட்ஜை ஐஸ்வர்யாவுக்கு அளித்தார் மும்தாஜ்.

ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா தந்த அன்பால் வானத்தில் உயரப் பறந்த புறாவாக இருந்ததாகவும், பின்பு அவர்களாலேயே சுட்டு கீழே வீழ்த்தப்பட்டதாகவும் புறவயமான உதாரணத்துடன் அழகாக விளக்கினார் டேனி. “வந்தபோது இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கேன்னு வியந்துபோனேன். ஆனா நாளாக நாளாகக் கோபத்தால் அந்தப் பொண்ணு முகமே மாறிடுச்சு” என்று பாலாஜி குறிப்பிட்ட காரணத்தை நானும் உணர்கிறேன். 

மும்தாஜின் அன்பை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்த ஐஸ்வர்யா, ‘தன் குடும்பத்தினரைப் பற்றி பாலாஜி சொன்ன வசை, ‘இந்தப் பொண்ணு ஃபேமிலிக்கு செட் ஆக மாட்டா’ போன்ற கமென்ட் போன்றவற்றால் உணர்ச்சிவசப்பட்டு கோபம் தாங்காமல் அந்தத் தவற்றை செய்தேன்’ என்கிற வாக்குமூலத்தையும் தந்தார். “ஒரு சான்ஸ் கொடுங்க. மாத்திக்கறேன்” என்று அவர் கதறிய போது அவர் மீதுள்ள கோபமெல்லாம் காணாமல்போனது. வயது ஏற ஏற கிடைக்கும் அனுபவங்கள்தானே ஒரு மனிதனை தரப்படுத்துகின்றன? ஐஸ்வர்யாவுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். 

தொடக்கத்தில் நல்ல பிள்ளையாக இருந்த ரித்விகாவிடம் சமீபத்தில் ஏதோவொரு ‘நெகட்டிவ்வான’ விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறார் சென்றாயன். தன் பேச்சைக் கேட்க மறுத்த விஜயலஷ்மிக்கு ஏஞ்செல் பேட்ஜை இவர் தந்தது சிறப்பு. இறுதியாக, அதிக எண்ணிக்கையின் படி ஐஸ்வர்யாவுக்கு மூன்று டெவில் பேட்ஜ்களும் மும்தாஜுக்கு இரண்டு ஏஞ்செல் பேட்ஜ்களும் கிடைத்திருந்தன. 

ஒவ்வொரு போட்டியாளரும் மனம் திறந்து மற்றவர்களைப் பற்றிச் சொன்ன சாதக, பாதகங்கள் சிறப்பு. ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ என்ற பாடல் வரிகளையே இந்தப் பகுதி நினைவுப்படுத்தியது. எந்தப் பாதியை நாம் அதிகம் வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தே சாத்தான் ஆகவோ அல்லது தேவனாகவே மாறுகிறோம். “யார் கிட்டயும் பேசலைன்னா அது நெகட்டிவ்வா?” என்று பிறகு சிரிப்புடன் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார் யாஷிகா. 

**

“ஹவுஸ்மேட்ஸ்களின் வீட்டில் இருந்து கடிதங்கள், பொருட்கள் ஒவ்வொன்றாக வரும். அவர்களை அழைத்து வரவேற்பறையில் அனைவரையும் அமர வைத்து வாசிக்கச் சொல்ல வேண்டும்’ என்று பிக்பாஸ் சொன்ன குறிப்பை ‘ரெண்டு ஒயர்ல சிவப்புக்கலர் ஒயரை வெட்டணும். இல்லைன்னா பாம் வெடிச்சுடும். புரியுதா?’ என்பதுபோல் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சென்றாயன். இவர் கன்பெஷன் ரூமிலிருந்து வருவதற்குள் மக்கள் ஒரு சதித்திட்டம் தீட்டினார்கள். ‘அனைவரும் ஒளிந்துகொள்ளலாம். சென்றாயன் என்ன செய்கிறார் என்று வேடிக்கை பார்க்கலாம்’ என்கிற யாஷிகா முன்மொழிந்த குறும்பை செயல்படுத்த முடிவு செய்து மற்றவர்கள் பாத்ரூமில் ஒளிந்துகொள்ள, ஐஸ்வர்யாவும் யாஷிகாவும், கார்டன் ஏரியா சோபாவின் பின்னால் ஒளிந்துகொண்டார்கள். (இதிலயும் உங்க கூட்டணியை விட மாட்டீங்களா?).

பிக்பாஸின் அறிவிப்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று கெத்தாக வெளியே வந்த புதிய தலைவர், “என்னாடாங்கா... ஒரு ஈ காக்காவைக் காணோம்” என்று யாரையும் காணாமல் பதறிப்போனார். ஒவ்வோ இடமாகப் பதற்றத்துடன் தேடினார். பிக்பாஸ் வீட்டில் எதுவும் நடக்கலாம் என்பதால் நம்மை உள்ளே அனுப்பிவிட்டு மற்றவர்களை ஏதும் செய்துவிட்டார்களோ என்று அவர் நினைத்திருக்கலாம். ‘பாத்ரூமில் தான் மட்டும் இருக்கிறேன்’ என்பதுபோல் சென்றாயனை நினைக்க வைத்த மும்தாஜ் ‘சரியா தேடிப் பாருங்க’ என்றார். முதலில் சோம்பல் முறித்தபடி டேனி வெளியே வர ‘அடப்பாவி’ என்று சென்றாயன் பயம் விலகி சந்தோஷம் அடைந்ததும் மற்றவர்களும் ஒவ்வொருவராக வெளியே வர சூழல் ரகளையானது. ‘என்னப்பா... ஐஸ்வர்யாவையும் யாஷிகாவையும் காணோம். தப்பிச்சு போயிட்டாங்களா” என்று அப்போதும் அந்த விளையாட்டைத் தொடர முயல, சென்றாயன் அத்தனை யொன்றும் முட்டாள் இல்லை என்பதை அவர்களைக் கண்டுபிடிப்பதின் மூலம் நிரூபித்தார். 

பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது இது போன்ற குறும்புகள் நடந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். 

**

ஹவுஸ்மேட்ஸ்களின் வீடுகளிலிருந்து கடிதங்களும் பொருள்களும் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. மக்கள் பயங்கரமாக உற்சாகப்பட்டனர். ஐஸ்வர்யாவின் உற்சாகம் மிகையாக இருந்தது. கோபமென்றாலும் சரி, மகிழ்ச்சி என்றாலும் சரி, அதன் எல்லைக்கு சென்றுவிடுவது சரியான குணாதிசயம் அல்ல. முதல் கடிதம் வந்தது ஜனனிக்கு. அதை, சபையில் வாசித்து கண்கலங்கினார். 

வருங்கால மனைவியிடமிருந்து வந்திருந்த கடிதத்தைப் பார்த்து உடைந்து அழுத டேனியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. “என்னை வீட்டுக்குள்ளேயே வெச்சு வளர்த்திட்டீங்க... இப்ப எனக்கு சிரமமா இருக்கு. இருந்தாலும் போராடி வருவேன்’ என்று தன் தந்தை எழுதிய கடிதத்துக்கு ரித்விகா சொன்ன பதில் குறிப்பு அனைத்து பெற்றோர்களுக்கானது. தன் பெற்றோர்கள் எழுதிய கடிதத்தை வாசித்து மனம் உடைந்து அழுதார் யாஷிகா. மிகவும் நெகிழ்வான காட்சி. 

சென்றாயனின் மனைவி கயல்விழியின் புகைப்படத்தைக் காண பலரும் ஆவலாக இருந்தார்கள். ஆனால் கிருஷ்ணர் - ராதை இருக்கும் சிலையைக் குறியீடாக அனுப்பியிருந்தார் சென்றாயனின் மனைவி. (“பின்னால் நிற்கற மாடு நான்தான்” என்று சொல்லி அழுமூஞ்சியாக இருந்த சூழலைச் சற்று தளர்த்தி சிரிக்க வைத்தார் பாலாஜி). குழம்பு விஷயத்தில் சென்றாயன் அதிகம் குழம்பியிருக்கிறார் போலிருக்கிறது. ‘இனிமே நீ தண்ணிய கொடுத்தாலும்கூட குழம்பா நினைச்சுப்பேன்’ என்கிற அளவுக்கு மனைவி குறித்து நெகிழ்ந்து போனார். (அப்ப குழம்பை என்னவாக நினைப்பார்?). 

“நீ இல்லாத போதுதான் உன் அருமை எனக்குத் தெரியுது” என்று முகம் கோணி அழுத சென்றாயனைப் பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது. (“உனக்குப் புரியதா” என்பதுபோல் இந்தச் சமயத்தில் வீட்டம்மணி என்னைப் பார்க்க, நான் ரிமோட்டை தேடுவதுபோல பாவனை செய்ய வேண்டியிருந்தது). முதல் சீஸனில் இதே போல் மனம் மாறி சென்ற வையாபுரி இப்போது எப்படி நடந்துகொள்கிறார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. 

ஐஸ்வர்யாவுக்கு கரடிக்குட்டி பொம்மை, ஆடை, கடிதம் போன்றவை வந்திருந்தன. தன் தாயை நீண்ட காலம் பார்க்கவில்லை என்பதால் மனம் உடைந்து அழுதார் ஐஸ்வர்யா. ‘நான் இருக்கேன்’ என்பது போல் எழுந்து வந்து தேற்றினார் மும்தாஜ். ‘அவங்களுக்கு தமிழ் தெரியாதுல்ல. பெங்காலில சொல்லு’ என்று யாஷிகா சொன்னவுடன், பிக்பாஸ் வீட்டில் முதன் முறையாக வங்காள மொழி ஒலித்தது. 

மற்றவர்களுக்காவது அவர்களின் சொந்தங்கள் எளிதில் எட்டிவிடக்கூடிய அருகில் இருக்கின்றன. ஆனால் யாஷிகா, ஐஸ்வர்யா போன்று இன்னொரு பிரதேசத்திலிருந்து வந்திருப்பவர்களுக்குத்தான் அதிக ஆதரவும் அணைப்பும் தேவைப்படுகிறது. ‘உங்களைப் புண்படுத்தியதுக்கு மன்னித்துவிடுங்கள்’ என்று யாஷிகா, மும்தாஜிடம் மன்னிப்புக் கேட்டதும், இருவரும் பிரியத்துடன் அணைத்துக் கொண்டதும் கவிதையான தருணங்கள். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இந்தப் பகுதியில் அதிகம் உணர்ச்சிவசப்பட்டதும், எவர் அழுதாலும் எழுந்து சென்று அவர்களை அணைத்துக் கொண்டதும் மும்தாஜ். விஜயலட்சுமி தன்னுடைய குழந்தையை நினைத்து அழுத போது இவர்தான் ஆறுதல் சொன்னார். 

ஆக.. ‘அன்பாலே அழகாகும் வீடு’ என்கிற பாடலுக்கு உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது பிக்பாஸ் வீடு. ‘இதே மாதிரி போய்க் கொண்டிருந்தால் நம் பிழைப்பு என்னாவது.. செய்யறோம்.. ஏதாச்சும் செய்யறோம்’ என்று பிக்பாஸ் டீம் இந்நேரம் மூளையைக் கசக்கிக் கொண்டு புது ஐடியாக்களை யோசித்துக் கொண்டிருக்கலாம். எனவே “விக்ரமன் படம் மாதிரி இருக்கிறதே’ என்று சென்று விடாதீர்கள். சாகசக் காட்சிகள் நிச்சயம் இருக்கும். Don’t go away. Stay tuned.