Published:Updated:

மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2
மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2

ப்ரீஸ், ரிலீஸ் விளையாட்டால் சிரிப்பும் மகிழ்ச்சியும், உறவுகளின் வருகையால் அழுகையும் நெகிழ்ச்சியும் என இரண்டு விதமாக இருந்தது பிக்பாஸ் வீடு. பிக்பாஸ் டீமில் கடைந்தெடுத்த கல்லுளி மங்கர்கள் இருக்கிறார்கள் போல. உறவுகள் வரும் போது பேச விடாமல் குறும்புத்தனம் கலந்த வில்லத்தனத்தைச் சரியாகச் செய்து கொண்டிருந்தார்கள். சற்று விளையாடி விட்டு சரியான சமயத்தில் விடுதலையும் செய்து கொண்டிருந்தார்கள். 

இந்த ‘ப்ரீஸ்’ டாஸ்க்கை பற்றிய குறிப்புகளை டேனி வாசிக்கும் போது ‘பிக்பாஸின் ரிமோட் கன்ட்ரோல் இயக்கத்தின் படி போட்டியாளர்கள் செயல்பட வேண்டும்’ என்பது போல் ஒரு வரியைப் படித்தார். இந்த எழுபத்தியிரண்டு நாளா அதுதானே ஐயா நடந்து கொண்டிருக்கிறது. இது என்ன புதுசா?

மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2இந்த டாஸ்க் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் நாம் திகைப்படையும்படி போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்கள். இந்த டாஸ்க்கில் உறவினர்களைச் சந்திக்க முடியும் என்பது கடந்த சீஸன்களைப் பார்த்ததிலிருந்து அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களின் எதிர்வினை மிகையாக இருந்தது போல் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எழுபது நாள்களுக்கும் மேலாக, உறவுகளைப் பிரிந்து எவ்வித பொழுதுபோக்கும் இல்லாமல் ஒரே முகங்களைப் பார்த்தபடி அடைந்து கிடந்தால்தான் அந்த ‘ஹோம் சிக்னஸின்’ வலியும் தவிப்பும் புரியும். 

ஜனனிக்கு அவரை விடவும் உயரமான, அழகான ஒரு தங்கை இருக்கிறார் என்கிற வரலாற்றுத் தகவல் பதிவான நாள் இன்று. 

**

71-ம் நாளின் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. மும்தாஜின் குடும்பத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. ஊருக்கெல்லாம் உரக்க அழுகிறவர், தனக்கு அழ மாட்டாரா என்ன. எனவே அழுது தீர்த்தார். இவர் வாக்களித்திருந்தபடி சென்றாயனுக்குச் சட்டை அனுப்பியிருந்தார்கள். ‘இவங்களுக்கு கிஃப்ட் அனுப்பாம சென்றாயனுக்கு அனுப்பியிருக்காங்க பார்த்தியா?” என்று ஜனனி நெகிழ்ந்து போனார் உண்மைதான்.

மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2


72-ம் நாள் காலை. ‘ராசாத்தி.. ராசாத்தி… என்று கேட்கவே சகிக்க முடியாத ஒரு பாடலைப் போட்டார்கள். பாவம், பிக்பாஸ் மக்கள், எந்தப் பாட்டைப் போட்டாலும் ரசித்து நடனமாட வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். உறவுகளிடமிருந்த வந்த நினைவுச் சின்னங்களை சிலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “ஃபேமிலிய பார்க்கணும். அனுப்புங்க பிக்பாஸ்” என்றொரு கெஞ்சலை வைத்துக் கொண்டிருந்தார் ஜனனி. பெண் என்றால் பேயும் இரங்கும். பிக்பாஸ் இரங்க மாட்டாரா, செய்து விட்டார். தன் வருங்கால மனைவியின் புகைப்படத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார் டேனி. (“மொதல்ல முடியை வெட்டுடா.. என்று புகைப்படத்தில் இருந்தவர் சொல்லியிருக்கக்கூடும்).

‘ப்ரீஸ் & ரிலீஸ்’ டாஸ்க் பற்றிய அறிவிப்பை டேனி வாசித்துக் கொண்டிருக்கும் போது அப்போதே தனது குறும்புகளைத் தொடங்கி விட்டார் பிக்பாஸ். ஸ்லோ மோஷனில் வாசித்துக் கொண்டிருந்த டேனி, ரிலீஸ் ஆனதும் வழக்கத்துக்கு மாறியது நகைச்சுவை. இந்த டாஸ்க்கில் முதலில் மாட்டியவர் ரித்விகா. அரிசி களைந்து கொண்டிருந்தவர், ‘ரித்விகா ப்ரீஸ்’ என்ற அறிவிப்பு வந்ததும் உறைந்து நின்றார். அவரை பக்கத்தில் வந்து கிண்டலடித்துக் கொண்டிருந்த மும்தாஜுக்கு அடுத்த அறிவிப்பு. பிறகு சென்றாயன். 

மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2‘ஐய்யா.. ஜாலி.. ஜாலி..’ என்று பிறகு பொம்மை போல் ஆடிக்கொண்டிருந்த ஜனனிக்கு ‘லூப்’ என்ற அறிவிப்பு வந்ததும் அதே போல் பொம்மை போல் திரும்பத் திரும்ப ஆட வேண்டியிருந்தது. அவரை கிண்டலடித்துக் கொண்டிருந்த ரித்விகாவுக்கு அதே ஆணை வர மற்றவர்கள் வெடித்துச் சிரித்தார்கள். உரையாடலின் இடையே, ‘லூப்’ பற்றி விசாரித்துக்கொண்டிருந்த பாலாஜி, மஹத் எப்படிக் கோபப்படுவார் என்று செய்து காண்பித்துக் கொண்டிருக்கும் போது, கழுகு போல் பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ் டீம், ‘லூப்’ என்கிற ஆணையை பாலாஜிக்குத் தந்தது. 

முகத்தைக் கோரமாக்கி வைத்திருந்த பாலாஜி அதைத் திரும்பத் திரும்ப செய்ய வீட்டின் குழந்தைகள் பார்த்திருந்தால் நிச்சயம் பயந்திருக்கும். ``அண்ணனுக்காக ஒரு டான்ஸ் ஆடும்மா” என்று பாலாஜி, ஐஸ்வர்யாவை கோத்து விட அவர் பொம்மை போல் ஆடிக் கொண்டிருந்த போது அவருக்கும் ‘லூப்’ ஆணை கிடைத்தது. பிறகு ஸ்லோ மோஷனும். 

மும்தாஜ் ஆங்கிலத்தில் பேசியதால் ஐந்து பேர் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டியிருந்தது. இந்தத் தண்டனை பற்றி எப்போதாவது பிக்பாஸுக்கு நினைவு வரும் போல. ஏனெனில் இந்தத் தண்டனையைக் கறாராக நிறைவேற்றினால், பிக்பாஸ் வீடு மொத்தமும் மீன்கள் போல நீச்சல் குளத்தில்தான் வாழ வேண்டியிருக்கும். அந்தளவுக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள். பிக்பாஸூம் கண்டுகொள்வதில்லை. பலியாடுகளாக மூன்று ஆண்கள் சிக்க, ரித்விகாவும் ஜனனியும் குளத்தில் இறங்கி மும்தாஜின் பாவக் கணக்கைத் தீர்த்தார்கள். நீ்ச்சல் குளத்திலும் டாஸ்க் தொடர்பான கலாட்டாக்கள் நடந்தன.

மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2சிறிது நேரம் கழித்து அனைவருக்கும் ‘ப்ரீஸ்’ என்ற ஆணை கிடைத்த போதே தெரிந்து விட்டது, எவரோ வருகிறார்கள் என்று. மும்தாஜின் அம்மா, அண்ணன், அண்ணனின் மகன் ஆகியோர் உள்ளே வந்தார்கள். சும்மாவே செளகார் ஜானகிக்கும் மேலாக அழுது தீர்க்கும் மும்தாஜ், இப்போது சும்மாவா இருப்பார். தன் உறவுகளை ஓரக்கண்ணால் பார்த்தபடி கண்ணீர் வழிய துடித்த படி இருந்தார். பிறகு பிக்பாஸின் கட்டளைக்காகக் காத்திருக்காமல் ஓடிச்சென்று தன் சகோதரரைக் கட்டிக் கொண்டார். பிறகு உணர்ச்சிப் பெருக்குடன் தாயையும் மகனையும் கட்டியணைத்துக் கொண்டார். அனைவரும் ரிலீஸ் ஆக அவர்களும் வந்து இணைந்தனர். இவர்கள் சிறிது நேரம் உரையாடிய பிறகு, அனைவரையும் ‘ப்ரீஸ்’ செய்த பிக்பாஸ், மும்தாஜின் உறவுகளை வெளியே வரச் சொன்னார். முதல் நாள் எல்கேஜி குழந்தை அம்மாவைத் தேடிக் கதறுவது போல் உறைந்த நிலையில் கதறித் தீர்த்தார் மும்தாஜ். அவர்கள் வெளியே நகர்ந்து செல்ல, ‘என்னை ரிலீஸ் பண்ணுங்க பிக்பாஸ்’ என்றும் கல்லும் கரையும் படி கெஞ்சித் தீர்த்தார். ஆனால், கடப்பாறையையும் விழுங்கும் பிக்பாஸ் இன்னமும் சற்று நேரம் விளையாட, பிக்பாஸின் கட்டளையை இன்னொரு முறையும் மீறி தன் உறவுகளை நோக்கி ஓடினார். வேறு வழியின்றி அந்தச் சமயத்தில் ‘ரிலீஸ்’ என்று சொல்லி தன்னைத் தானே பிக்பாஸ் ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. வெளிகேட்டின் வாசலில் மறுபடியும் ஒரு பாசமழை. மும்தாஜுக்கும் குடும்பத்துக்குமான அழுத்தமான பிணைப்பும் பாசமும் பார்ப்பவரை நெகிழ வைத்தது. 

மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2‘allah hafiz’ (‘இறைவன் உன்னைக் காக்கட்டும்’ என்று பொருள்) என்கிற விடைபெறும் சமயத்தில் சொல்லும் வாழ்த்துகளைப் பரிமாறியபடி விடைபெற்றது மும்தாஜின் குடும்பம். ஏறத்தாழ கதவில் முட்டிக் கொண்டு விடைதந்த மும்தாஜ், உற்சாக மிகுதியில் பிறகு தந்த முகபாவங்களை நடிப்பில் கொண்டு வருவது சாத்தியமே இல்லை. அதனால்தான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வெற்றி பெறுகின்றன. இங்கு வெளிப்படும் சில தோரணைகளை நடிப்பில் செய்யவே முடியாது. 

அடுத்ததாக பாலாஜியின் வீட்டிலிருந்து பொம்மையும் கடிதங்களும் வந்திருந்தன. “வீட்டில் யாரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம். முகத்துக்கு நேராகப் பேசவும். என்றும் உனக்கு ஒரு தோழியாக (தோழியாக மட்டும்) ஆதரவாக இருப்பேன்’ என்று நித்யா எழுதியிருந்தார். ‘டியர் டல்கோ டாடி,.. நீங்க ஏன் வெளில வந்து டான்ஸ் ஆட மாட்டேன்றீங்க.. எனக்குப் பதிலா இந்தப் பொம்மையை வெச்சுக்கங்க. வின் பண்ணிட்டு வாங்க” என்று பாலாஜியின் மகள் போஷிகாவும் கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தில் இருந்த வில்லங்கமான குறிப்புகளைப் பற்றி மற்றவர்கள் பேசிக் கொள்ள, அப்செட் ஆன பாலாஜி தனிமையில் சென்று அமர்ந்தார். டேனி அவருக்கு ஆறுதல் சொல்ல விரைய ‘அவரைத் தனிமையில் விடுங்கள்’ என்று மும்தாஜ் கடிந்து கொண்டார். “குழந்தைக்காக ஒரு தகப்பன் என்ன வேணா செய்யலாம். அவ கேக்கறது சாதாரண விஷயம்” என்று மும்தாஜ் ஆறுதல் சொல்லி விட்டு ‘எழுந்து வாடா வெண்ணை’ என்பது போல் டேனியை கண்ணால் கண்டித்தார். பாலாஜி கலங்கி அமர்ந்திருக்கும் காட்சிகள் வந்தன. 

மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2ஏன் நித்யா அப்படி எழுதினார் என்று பார்வையாளர்களுக்குக் கூட நெருடலாக இருக்கலாம். இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய உரிமையும் சுதந்திரமும் நித்யாவுக்கு மட்டுமே உண்டு. சிறிது நேரம் வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கிறவர்கள் எதையும் உறுதியாக சொல்லக் கூடாது. 

**

மறுபடியும் எல்லோரும் ப்ரீஸ் என்கிற கட்டளை வந்தவுடன் தெரிந்து போயிற்று. அடுத்து எவரோ வரப்போகிறார்கள் என்று. மெயின் கேட் திறக்க அனைவரும் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எவரும் வரவில்லை. “என்ன பிக்பாஸ் விளையாடறீங்க?” என்று சலித்துக் கொள்ளும் போது வீட்டுக்குள்ளிருந்து ஜனனியின் சகோதரியும் தாயாரும் வந்தார்கள். 

அனைவரும் உறைந்த நிலையில் நிற்க, ‘அழக் கூடாது’ என்று உறுதியுடன் வந்திருந்த ஜனனியின் சகோதரி கிருத்திகா, பார்த்த மாத்திரத்திலேயே ஜனனியைத் தன்னிச்சையாகக் கட்டிக்கொண்டு கலங்கினார். அதற்குப் பிறகும் டாஸ்க்கை தொடர முடியாத ஜனனியும் பதிலுக்குக் கட்டியணைத்துக் கொண்டு கலங்க, அவரது அம்மாவும் வந்து இணைந்து கொண்டார். பிறகு மற்றவர்களும் விடுதலை செய்யப்பட அனைவரும் மகிழ்ச்சியாகக் கலந்துரையாடினார்கள். பிறகு ஜனனியை மட்டும் ப்ரீஸ் செய்து உறவுகளிம் பேச முடியாமல் விளையாட்டு காட்டினார் பிக்பாஸ். (வெஷம்.. வெஷம்!).

மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2சிறிது நேரம் கழித்து மற்றவர்கள் அனைவரையும் ப்ரீஸ் செய்து விட்டு ஜனனியை மட்டும் அவர்களின் குடும்பத்துடன் பேச விட்டார்கள். ஜனனியின் தாய் ஏதோ ரகசியம் சொல்ல முயல ‘அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்மா’ என்று ஜாக்கிரதையாகத் தடுத்தார் ஜனனி. ‘இங்க இருக்கப் போறது.. இன்னமும் கொஞ்ச நாள். எல்லோர் கிட்டயும் ஜாலியாப் பேசு’ என்று ஆலோசனை சொன்னார் கிருத்திகா. ஜனனி இனியாவது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் நெருங்கிப் பழகுவார் என்று எதிர்பார்ப்போம். மும்தாஜுக்கு விளையாடிய அதே விளையாட்டை ஜனனிக்கும் செய்து மகிழ்ந்தார் பிக்பாஸ்.

மும்தாஜின் மும்பை ஃப்ளாஷ்பேக்... ஜனனியின் ஸ்மார்ட் தங்கை! #BiggBossTamil2‘தினம் ஒரு சமையல்’ என்கிற புதிய டாஸ்க் பற்றிய அறிவிப்பு வந்தது. அதன்படி பாசுமதி அரிசியைக் கொண்டு தினம் தினம் விதமான உணவு வகைகளைச் செய்ய வேண்டும். முதல் நாள் மும்தாஜ் ‘ஹைதராபாத் பிரியாணி’ செய்தார். பார்க்கவே நாவூறியது. சமையலின் இடையே தன் குடும்பப் பின்னணி பற்றி மும்தாஜ் சொன்ன கதை உருக்கமானது. 

“நான் ஏன் பாலாஜிக்கு சப்போர்ட் பண்றேன்னா… எங்க அப்பா ஆக்சிடென்ட்ல செத்துட்டாருன்னுதான் இதுவரைக்கும் சொல்லிட்டு வந்தேன். அது பொய். அவர் எங்க அம்மாவை விட்டுட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். அதனால எங்க அம்மா அவரை டைவர்ஸ் பண்ணிட்டாங்க. ‘உங்க குடும்பத்தைப் பார்க்கக் கூடாதுன்னு புது மனைவி கேட்டுக்கிட்டதால எங்க அப்பா எங்களைப் பிரிஞ்சு போயிட்டார். எத்தனையோ வருஷம் கழிச்சு சமீபத்தில அவரை மும்பைல ஒரு நிமிஷம் தற்செயலாப் பார்த்தேன். அப்பா இல்லாம வளர்றது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். அந்த நிலைமை போஷிகாவுக்கு வரக் கூடாது” என்பது போல் மும்தாஜ் விவரிக்க, இவருக்குள் இப்படியொரு சோகமா என்று தோன்றியது. “அப்பா இல்லாத இடத்தை அண்ணன் நிரப்புகிறார்’ என்று அவர் சொன்னது நெகிழ்வு.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


இதற்குப் பிறகு யாஷிகாவின் தம்பி மற்றும் தங்கை வந்தார்கள். இதனால் யாஷிகா நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தாலும் தங்களின் பெற்றோர் வரவில்லை என்கிற மனக்குறை இருந்தது போல் தெரிந்தது. ‘எல்லோரிடமும் பேசிப் பழகு’ என்று ஜனனியின் சகோதரி சொன்ன அதே உபதேசத்தை யாஷிகாவின் தங்கை வழங்கினார். (பிக்பாஸ் சொல்லி அனுப்பறாரோ?!)

பிரியாணியைச் சாப்பிட்டுக் கொண்டே பாலாஜி, டேனி மற்றும் சென்றாயன் பேசிக் கொண்டிருந்தனர். ‘இவ்ளோ விஷயம் பண்ணியிருக்கியே.. எப்படி உங்க அப்பா அம்மா வருவாங்க.. அவங்க சாபத்தை மட்டும் வாங்கக் கூடாது” என்று யாஷிகாவைப் பற்றி பாலாஜி புறணி பேசிக் கொண்டிருக்க, டேனியும் அதை ஆமோதித்தார். 

“யாரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம். முகத்துக்கு நேராகப் பேசவும்’ என்று நித்யா எழுதியனுப்பியிருந்த குறிப்பை பாலாஜி அத்தனை சீக்கிரம் மறந்து விட்டார் போலிரு…. FREEZE.