Published:Updated:

'விஜயலட்சுமிலாம் ஆளே இல்ல..!' செம கெத்து யாஷிகா #BIggBossTamil2

'விஜயலட்சுமிலாம் ஆளே இல்ல..!' செம கெத்து யாஷிகா #BIggBossTamil2
'விஜயலட்சுமிலாம் ஆளே இல்ல..!' செம கெத்து யாஷிகா #BIggBossTamil2

‘தென்னை மரத்தின் சிறப்புகள்’ என்கிற கட்டுரையை நன்றாக மனப்பாடம் செய்திருந்த மாணவன், தேர்விற்குச் செல்லும்போது ‘பசு மாட்டின் பயன்கள்’ என்கிற கேள்வி எதிர்பாராமல் வந்ததும் திகைத்துப்போய் பிறகு சுதாரித்துக்கொண்டு, தான் படித்திருந்த தென்னை மரத்தின் சிறப்புகளையெல்லாம் விரிவாக எழுதிவிட்டு ‘இப்படிப்பட்ட சிறப்புகளைக்கொண்ட தென்னை மரத்தில்தான் பசுமாட்டைக் கொண்டு வந்து கட்டுவார்கள்’ என்றொரு வரி சேர்த்து முடித்ததாக ஓர் அரதப் பழசான நகைச்சுவை உண்டு. எவ்வித சர்ச்சையும் இல்லாமல் ‘அழுகாச்சி’ வாரமாக இருந்ததை வைத்து கமல் என்ன பேசப் போகிறார் என்று சலிப்பாக காத்துக்கொண்டிருந்தபோது கோடு இல்லாமலேயே ரோடு போடும் தனது திறமையைக்கொண்டு எப்படியோ ஒப்பேற்றிவிட்டார், கமல். 

‘போட்டியின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்’ என்பதை அடிக்கடி சொல்வதன் மூலம் இதன் தீவிரத்தைப் போட்டியாளர்களுக்கு உணர்த்த முயன்றார், கமல். 75 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் இனிமேலும் புதிய போட்டியாளர் எவரும் வரமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால், ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற பிக்பாஸ் தத்துவத்தின் படி எந்தவொரு ஆச்சரியமும் நிகழக்கூடும். 

**

‘இந்த வாரம், சென்ட்டிமென்ட் வாரமாய்’ இருந்ததை மெலிதாக கிண்டலடித்தபடியே நுழைந்த கமல், டேனியின் அம்மா ‘ரகசியம்’ சொன்ன விஷயத்தை அவரிடம் சிரிப்புடன் விசாரித்தார். ‘ஐஸ்வர்யாவின் அம்மா’, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்பதன் மூலம் வீட்டில் போடப்பட்ட குப்பையையெல்லாம் சுத்தம் செய்துவிட்டார் என்று சொன்ன விதம் சிறப்பு. இதை ‘ஸ்வச் பாரத்’ உடன் ஒப்பிட்டது குறும்பு. சென்றாயனின் மிகையான உற்சாகத்தையும் ஜாலியாக குறிப்பிட்டார், கமல். 

இந்த வாரச் சம்பவங்களின் சுருக்கமான தொகுப்பிற்குப் பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் ஒளிபரப்பாகின. ‘ஈசன்’ திரைப்படத்தில் இருந்து ‘இந்த இரவுதான் போகுதே’ என்கிற அட்டகாசமான பாடல் ஒலிபரப்பானது. (ஐந்து நிமிடப் பாடலுக்குள் பல்துலக்குவது முதல் நடனமாடுவதை வரை பல விஷயங்களை போட்டியாளர்கள் செய்துவிடுவது வியப்பு). மகளுக்கு வாக்களித்திருந்தபடி பாலாஜி ஒருநாள்தான் ஆடினார். இன்று ஆடவில்லை. 

ஓவியத்தின் மூலம் சமூக விழிப்புஉணர்வு செய்தியைச் சொல்லும் போட்டி நடந்தது. ‘வெட்டத் தெரியாதவனுக்கு ஆயிரம் வெட்டரிவாள்’ என்கிற பழமொழி போல, ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சீருடை, கையுறை, டப்பா டப்பாவாக பெயின்ட்டுகள், கேன்வாஸ் போன்றவை வழங்கப்பட்டன. இரண்டு அணிகளாகப் பிரிந்து ‘இந்த உலகத்திற்கு ஏதோவொரு கருத்து’ சொல்ல முயன்றார்கள். 

இதில் ஜனனி அணி ‘சிறார்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளைப்’ பற்றிய ஓவியத்தை எளிமையானதாகவும் அதே சமயத்தில் அழுத்தமானதாகவும் வரைந்திருந்தது. ‘வேடிக்கை மனிதர்களே, விளையாடதீர்கள்’ என்கிற தலைப்பு மட்டும் இன்னுமும் சிறப்பாக அமைந்திருக்கலாம். குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ பற்றி சொல்லித்தர வேண்டியதன் அவசியத்தை ஜனனி விளக்கினார். பெண் குழந்தைகள் மட்டுமல்லாமல், ஆண் குழந்தைகளையும் அவர் இணைத்தது சிறப்பு.

இதன் எதிரணியில் இருந்த சென்றாயன் எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பினார். சமையல் போட்டியில் வெற்றிபெற்றது, வீட்டின் தலைவரானது என்று நேர்மறையான மாற்றத்தில் பயணித்துக்கொண்டிருந்த சென்றாயன், பாலாஜியுடன் அநாவசியமாக முட்டிக்கொண்டதைத் தொடர்ந்து இந்த ஓவியப் போட்டியிலும் சொதப்புவதன் மூலம் பின்வாங்குகிறார். ஜனனி அணி, ஒரேயொரு விஷயத்தை எளிமையான சொன்னதற்கு மாறாக, எதிரணி பல விஷயங்களை கசகசவென்று வரைந்து குழப்பி வைத்திருந்தார்கள். 

ஓவியத்தைப் பற்றி சென்றாயன் விளக்கும்போது ‘ஆக்சிடென்ட் பண்ணவங்க எங்க” என்று நடுவரான டேனி கேட்கும்போது, ‘கெட்டவங்களை வரையக்கூடாது இல்லையா?” என்று அபத்தமாக மழுப்பினார், சென்றாயன். மழைநீர் வாசகம் சரியாக எழுதப்படவில்லையே என்று டேனி கேட்டபோது ‘அது மழை நீர் பட்டு அழிந்துவிட்டது’ என்றுகூட அவர் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். எய்ட்ஸ் நோயைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தற்கு தொடர்பில்லாமல் ஏதோவொரு விளக்கத்தை அவர் தர, அவருடைய அணியினரே சங்கடப்பட்டனர். தனது அணியினரே தனக்கு ஆதரவு தர மாட்டேன்கிறார்களே என்று கோபப்பட்ட சென்றாயன், வெளியே சென்று மறுபடியும் திரும்பிவந்தார். 

சென்றாயனுக்கு சில விஷயங்கள் புரியவில்லை என்பது பெரிய பிழையில்லை. ஆனால் தன்னுடைய பலவீனங்களை அறிந்திருப்பதும் கூட ஒருவரின் புத்திசாலித்தனம்தான். குடியின் கேடு, க்ளோபல் வார்மிங், மழைநீர் சேகரிப்பு, எய்ட்ஸ் பாதுகாப்பு என்று ஆர்வக்கோளாறு இயக்குநரின் திரைப்படம் மாதிரி பல செய்திகள் கோக்குமாக்காக இருந்ததால் எதிர்பார்த்தது போலவே ஜனனி அணியின் ஒவியத்தை தேர்ந்தெடுத்தார், டேனி. இதை எதிரணியே கைத்தட்டி ஒப்புக்கொண்டது. பிறகு தனிமையில் சோகத்துடன் அமர்ந்திருந்த சென்றாயனுக்கு விஜயலட்சுமி ஆறுதல் சொன்னார். 

தலைவி பதவியை யாஷிகா துஷ்பிரயோகம் செய்வதையும், ஐஸ்வர்யாவிற்கு சாதகமாக சில விஷயங்கள் செய்வதையும், யாஷிகா இல்லாமல் ஐஸ்வர்யாவால் தனித்து இயங்க முடியாது என்பதையும் மும்தாஜ், ரித்விகா, விஜயலட்சுமி கூட்டணி அமர்ந்து புறணி பேசிக்கொண்டிருந்தது. 

**

அகம் டிவி வழியே வந்த கமல், போட்டியாளர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு அவர்கள் உட்காரப் போகும் சமயத்தில் ‘ஃப்ரீஸ்’ என்று சொல்லிவிட, அவர்கள் உறைந்தார்கள். இதில் பாலாஜியின் பொசிஷன்தான் சிரமமானதாக இருந்தது. ‘உட்காருங்க’ என்று கமல் சொல்லிவிட்டுச் சென்றதை போட்டியாளர்கள் கவனிக்காததால் அவர் திரும்பி வரும் வரை அப்படியே இருந்தார்கள். ‘உட்காருங்கன்னு சொல்லிட்டுத்தானே போனேன்’ என்று சிரித்தபடி வந்தார், கமல். ‘பாலாஜி இருந்த பொசிஷன் எங்களுக்கு டேஞ்சர் சார்’ என்று அபஸ்வரமாக போட்டுக்கொடுத்தார், மும்தாஜ். 

சென்றயானின் மிகையான உற்சாகத்தை மறுபடியும் குறிப்பிட்டார் கமல். குழந்தையின்மையைப் பற்றி மற்றவர்கள் விசாரிக்கும்போது ஏற்பட்ட வலியைப் பற்றி சென்றாயன் சொல்ல, மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் இதெல்லாம் ஒரு பிரச்னையா? என்றார் கமல். ஒரு வகையில் அது சரியாக இருந்தாலும் தனக்கான வாரிசு வேண்டும் என்கிற தனிநபர் விருப்பத்தில் தலையீடு செய்வதுபோல் இருந்தது. ஏற்கெனவே சபையில் வாக்களித்திருந்தபடி இன்னொரு குழந்தையை தத்தெடுக்கவிருப்பதாக சென்றாயன் கூறியது சிறப்பு.

‘போன சீஸனில் மருத்துவ முத்தம் நடந்த மாதிரி, டேனிக்கு முத்த மாருதமே நிகழ்ந்துவிட்டது’ என்று டேனிக்கு கிடைத்த முத்தமழையைப் பற்றி கமல் கிண்டலடிக்க, வெட்கம் தாங்காமல் சிரித்தார், டேனி. ஏற்கெனவே பத்து செளகார் ஜானகிக்கு ஈடாக கலங்கும் மும்தாஜ், இந்த சென்ட்டிமென்ட் வாரத்தில் கூடுதலாக பத்து பண்டரிபாயை இணைத்துக்கொண்டதைப் பற்றி கமல் விசாரிக்க, “ஆமாம் சார்.. மத்தவங்க உறவினர்கள் வரும்போது எனக்கும் ஃபீல் ஆகுது” என்று வெட்கச் சிரிப்புடன் ஒப்புக்கொண்டார். 

தன்னுடைய பெற்றோர்கள் வரவில்லை என்று யாஷிகாவிற்கு இருந்த மனக்குறை இன்று தீர்ந்தது. அவர்களை மேடையில் அழைத்து கமல் பேச வைக்க மிகவும் நெகிழ்ந்து போனார், யாஷிகா. ‘வெற்றி பெறுவதுகூட முக்கியமில்லை. சிறப்பாக விளையாடுவதுதான் முக்கியமானது’ என்ற செய்தியை யாஷிகாவின் தந்தை சொன்னது சிறப்பு. ‘ஏக் துஜே கே லியே திரைப்படத்தில் கமலுக்கு தெரிந்த இந்தியின் அளவிற்குத்தான் எனக்கு தமிழ் தெரியும்’ என்றார் அவர். (வட இந்தியாவில் கமல்ஹாசனை இன்னுமும் அந்தத் திரைப்படத்தின் மூலம்தான் பலர் நினைவு வைத்திருக்கிறார்கள். அந்தக் காலக்கட்டத்தைத் தாண்டி பிறகு எத்தனையோ சாதனைகளை கமல் புரிந்துவிட்டார். அதையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதைப் போலவே மற்ற மாநிலங்களின் கலைஞர்களைப் பற்றியும் நாம் துளிதான் அறிந்திருக்கிறோம். நாமும்கூட இந்த விஷயத்தில் நிறைய அப்டேட் ஆக வேண்டும். இந்தியர்கள் என்று நாம் சொல்லிக்கொள்வதற்கு அப்போதுதான் பொருள் இருக்கும்)

ஐஸ்வர்யாவின் தாயும் மேடைக்கு அழைக்கப்பட்டார். (இவரின் கூடவே ஐஸ்வர்யாவின் தங்கையும் வந்திருந்தார் என்பதை ஆர்மிக்காரர்கள் கவனிக்க). ஐஸ்வர்யா சென்னைக்கு வந்த பிறகு, தூரம் காரணமாக இரண்டு இடங்களிலும் அடிக்கடி செல்ல முடியாது என்பதால் மகளைப் பிரிய நேர்ந்திருப்பதாக வேறு கோணத்தில் அமைந்த காரணத்தைச் சொன்னார் ஐஸ்வர்யாவின் தாய். 

அவரவர்களின் குடும்பத்தினர் ரகசியமாக (?!) சொல்லிச் சென்ற விஷயங்களை சபையில் போட்டு உடைக்க வைத்தார், கமல். “உங்கம்மா என்ன சொன்னாங்க?” என்று டேனியின் வாயைக் கிளற, அவர் சங்கடத்துடன் ‘யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம் ஜாக்கிரதையா இருக்கச் சொன்னாங்க” என்று சொன்னதுடன் “மஹத் கூட பிரச்னையானப்போ  ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணேன். யாரும் பேசலை. பாலாஜிகூட இதை முன்னமே சொன்னாரு. ‘உன்னை அவங்க பயன்படுத்தறாங்கன்னு, சரின்னு சுதாரிச்சுக்கிட்டேன்’ என்று தொடர்ந்தார், டேனி. “அப்படிலாம் இல்லை சார். அப்போ அவர் மும்தாஜ், பாலாஜிகூட எதிர் டீம்ல இருந்ததால நாங்க தொந்தரவு பண்ண விரும்பலை. மஹத் அப்போ தனியா இருந்ததால அவருக்கு ஆதரவு தந்தோம். இது தவறான புரிதலால் வந்தது. இப்போவும் நாங்க நண்பர்கள்தான்” என்று விளக்கமளித்தார் யாஷிகா. “நீங்க வேற.. ‘உத்தமர் டேனி’ன்னு சர்காஸ்டிக்கா சொன்னது ‘சுருக்’குன்னு குத்துச்சு. சரி, இதுல ஏதோவொரு விஷயம் இருக்கும் போலன்னு சர்ச்சைகளில் இருந்து தள்ளியிருந்தேன்’ என்று பிறகு கமலிடம் விளக்கம் தந்தார், டேனி.

“ஜனனி.. உங்க அம்மா ஏதோ சொல்லிட்டுப் போனாங்க போலிருக்கு” என்று கமல் அடுத்ததாக ஜனனியின் வாயைப் பிடுங்க முயல, ‘அதை நான் எப்படிச் சொல்லுவேன்’ என்பது மாதிரி தயங்கிய ஜனனி, வேறு ஏதோவொன்றைச் சொல்லி மழுப்பினார். ‘கரெக்ட்டா சொல்லுங்க’ என்று குறும்பாக சிரித்த படி கேட்டை சாத்தினார் கமல். ‘பாலாஜி கிட்ட ஜாக்கிரதையா இருக்கச் சொன்னாங்க’ என்று அரை வாக்கியமாக மென்று முழுங்கினார் ஜனனி. “அவங்க ஏன் அப்படிச் சொன்னாங்கன்னு புரியல. எனக்கு அப்படி எதுவும் தோணலை’ என்று ஜனனி சொன்னதை இடைமறித்த கமல், “அவங்க வெளில இருந்து பார்க்கறவங்க. ரெண்டு கோணத்திற்கும் அதிகம் வித்தியாசம் இருக்கு” என்று சரியாக சுட்டிக் காட்டினார். “ஜனனியும் எனக்கு ஐஸ்வர்யா மாதிரிதான் சார். சில வேலைகளை அப்படியே விட்டுட்டு போயிடுவாங்க. கோபத்துல பின்னாடி திட்டுவேன்” என்ற மாதிரி இதற்கு சமாளித்தார் பாலாஜி. 

“நித்யா உங்களுக்கு சில டிப்ஸ் கொடுத்தாங்க போல” என்று அடுத்ததாக மும்தாஜிடம் வம்பிற்கு வந்தார் கமல். கமலைப் பார்த்தாலே சரோஜாதேவி போல வெட்கப்படும் மும்தாஜ் இதற்கும் அது போல் செய்து விட்டு “என் இயல்புபடிதான் நடந்து கொள்கிறேன். எனக்கும் தெரியாமல் ஏதாவது நடந்திருக்கலாம் என்று மற்றவர்களிடம் விசாரித்தேன்’ என்றார் மும்தாஜ். “நித்யா எழுதிய கவிதைக்கு பாலாஜிதான் சரியான பொழிப்புரை தர முடியும்” என்று பாலாஜியையும் உள்ளே இழுத்துப் போட்ட கமல் அவரிடம் விசாரிக்க, சம்பந்தமேயில்லாமல் திடீரென்று கண் கலங்கினார் பாலாஜி. ‘எனக்குள் பல விஷயங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறேன். நித்யா நல்லாயிருக்கணும்ன்ற காரணத்துக்காக மும்தாஜ் என் கிட்ட சிலது பேசியிருப்பாங்க. நானும் பேசியிருப்பேன். அது நித்யாவிற்கு எந்த மாதிரி தெரிஞ்சதோ தெரியலை” என்று பாலாஜி சொன்னது கமலைப் போலவே எனக்கும் புரியவில்லை. 

“மும்தாஜ்.. ஆரம்பத்துல.. இது ஒரு ஃபேமிலில்லாம் கிடையாது’ன்னு சொன்னீங்க.. இப்ப என்ன சொல்றீங்க?” என்று கமல் விசாரிக்க ‘இப்ப கொஞ்சம் அப்படி நெருக்கமா இருக்கோம். ஆனா அடுத்த வாரம் என்னவாகும்னு தெரியாது. பிக்பாஸ் அப்படி இருக்க விடமாட்டாரே’ என்று உண்மையைப் போட்டு உடைக்க வெடித்து சிரித்தார் கமல். 

‘சரி. எவிக்ஷன் விஷயத்திற்கு போவோம்” என்று சஸ்பென்ஸ் வைத்து கிளம்பிய கமல், திரும்பி வந்ததும் “அதை அப்புறம் பார்த்துக்கலாம்” என்று திசை மாற்றி விட்டு “இது ஒரு வாய்ப்பு. தங்களைப் பற்றி தவறாக பதிந்துள்ள ஒரு விஷயத்தை போட்டியாளர்கள் சபையில் விளக்கி தெளிவுப்படுத்தலாம். கம்ப்யூட்டர்ல undo பண்ற மாதிரியான விஷயம்” என்றதும் மும்தாஜ் ஆரம்பித்தார். “நான் டவுன்டூஎர்த் பெர்ஸன். முன்னாடி மைக்கை கழட்டி வெச்சது திமிர்னால இல்லை. சில விஷயங்கள் பிக்பாஸை நம்பி வந்திருக்கோம். அதுல எழுந்த ஒரு நெருடலை தெளிவுப்படுத்திக் கொள்வதற்குத்தான் பிக்பாஸ் கிட்ட பேசணும்னு அப்படி பண்ணினேன். கவனஈர்ப்பிற்காக செஞ்சது அது. திமிர் இல்லை” என்று முந்தைய சம்பவத்திற்கு பூடகமாக விளக்கம் அளித்தார்.

“வந்த நாள்ல இருந்து நான் சைலண்ட்டா இருக்கேன் னு சொல்லிட்டிருந்தாங்க. அதுதான் என் இயல்பு. அதுக்கப்புறம் கொஞ்சம் மாறி மத்தவங்க கிட்ட பேச ஆரம்பிச்சிட்டேன். யாஷிகா, ஐஸ்வர்யா கூட மட்டும்தான் கனெக்ஷன் இல்லாம இருந்தது. இப்ப அதையும் ஆரம்பிச்சுட்டேன். கேம்லதான் என் ஃபோகஸ் இருக்கு. நேர்மையா இருக்கேன். இதுதான் என் நேச்சர்” என்பது ரித்விகாவின் தரப்பு. “நான் டிப்ளமட்டிக்கா இருக்கேன். எல்லோருக்கும் நல்லவர் –ன்னு பெயர் வாங்க நெனக்கறேன்”–ன்னு சொல்றாங்க. ஆனா அதான் என் நேச்சர்” என்று ரித்விகாவை காப்பிடியத்தார் ஜனனி. 

“பொன்னம்பலம் சொல்லிட்டுப் போனது எனக்கு இன்னமும் உறுத்திட்டே இருக்கு. யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை நான் தவறாக வழிநடத்தறதா சொல்லிட்டு இருந்தாரு. இங்க யாரும் குழந்தைங்க இல்லை. அப்படியொரு எண்ணம் எனக்கு இருந்ததேயில்லை” என்பது டேனியின் விளக்கம். “கோபப்படறது.. கெட்ட வார்த்தை பயன்படுத்தறது –ன்னு என்னைப் பத்தி சொல்றாங்க. பின்னாடி பேசுவேன். அது என் இயல்பு. எனக்கு ஆர்மியெல்லாம் ஆரம்பிச்சிருப்பாங்கன்னு நெனப்புலாம் எனக்கில்லை” என்றார் பாலாஜி. ‘சரி. உங்க நகைச்சுவையுணர்ச்சியை இழந்து விடாதீர்கள்’ என்று பாலாஜிக்கு உபதேசம் செய்தார் கமல்.

அடுத்து சென்றாயனிடம் வந்தார் கமல். “நான் கீழே உட்கார்ந்து சாப்பிடறது முதல் பல விஷயங்களை நடிக்கறான் –றமாதிரி முதல்ல சொன்னாங்க. இப்ப புரிஞ்சுக்கிட்டாங்க. அது போல எனக்கு ‘டாஸ்க் புரியலை’ன்றாங்க. பாலாஜி கூட அடிக்கடி கிண்டல் பண்ணுவார். நான் வீட்ல இருக்கற மாதிரிதான் இங்கயேயும் இருக்கேன். நான் நடிக்கலை. உண்மையாத்தான் இருக்கேன்’ என்று வெள்ளந்தியாக விளக்கம் அளித்தார் சென்றாயன். 

“இந்த வீட்டுக்கு செட் ஆக மாட்டார் –ன்னு ஒரு கெட்ட வார்த்தையோடு பாலாஜியண்ணா சொன்னது எனக்கு ரொம்ப ஹர்ட் ஆச்சு. ஷாரிக்கிக்கும் நானும் நல்ல ஃபிரெண்ட்ஸா இருந்தோம். அந்தக் கோபத்துல ஹிட்லர் டாஸ்க்ல நான் தப்பு பண்ணிட்டேன். ஒரு வாய்ப்பு கொடுங்க. வேற ஐஸ்வர்யாவைப் பார்ப்பீங்க” என்று உருகினார் ஐஸ்வர்யா. (ஊழல் அரசியல்வாதிகளையே மறுபடி அதிகாரத்தில் அமர வைக்கும் அளவிற்கு தமிழர்கள் பெருந்தன்மையானவர்கள். உங்களுக்கு இந்த வாய்ப்பை தராமலா இருப்பார்கள்?! நிச்சயம் தருவார்கள்).

“நான் அடிப்படையில் உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத நபர். நான் நிறைய பேசவில்லை என்கிற காரணத்திற்காக ‘எதிர்மறையானவள்’ என்னும் அடைமொழி தருவதை நான் விரும்பவில்லை. மஹத் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு சப்போர்ட்டாக இருந்தேன். அவர்களை தவறாக வழிநடத்தவில்லை. செல்வாக்கு செலுத்தவில்லை. நேர்மையாக இந்த விளையாட்டை விளையாடுகிறேன்” என்றார் யாஷிகா. (விஜயலஷ்மி சொன்ன ‘நெகட்டிவ்’ என்கிற கமெண்ட், யாஷிகாவை அதிகம் பாதித்திருக்கிறது போல).

“இது உங்களுக்கு தரப்பட்ட ஒரு வாய்ப்பு. அவ்வளவே. நினைத்ததை சாதித்து விட்டதாக நீங்கள் கருத அவசியமில்லை. அதே சமயத்தில் நம்பிக்கையையும் இழக்க வேண்டியதில்லை. மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முடிவு சரியாக இருக்கும். யாரை வெளியேத்தணும்னு அவங்களுக்கு நல்லா தெரியும்” என்று வழக்கம் போல் மக்களுக்கு ஐஸ் வைத்த கமல், எவிக்ஷன் பற்றிய ஆர்வத்தைக் கிளறி விட்டு ‘பிரேக்’கில் சென்று விட்டார்.

திரும்பி வந்த கமல், எவிக்ஷன் பற்றி பேசாமல், ‘இந்தப் போட்டியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் ஒருவர் வெற்றியடையப் போகிறார். ஆனால் – அந்த வெற்றிக்கு தகுதியில்லாதவர் என்று ஒருவரைக் குறிப்பிட வேண்டும்” என்ற வில்லங்கமான விளையாட்டைத் துவங்க, மும்தாஜ் சங்கடத்துடன் சிரித்தார். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

யாஷிகாவிடமிருந்து இந்த அபிப்ராயம் துவங்கியது. ‘நாங்க இத்தனை நாள் கஷ்டப்பட்டிருக்கோம். சமீபத்தில் வைல்ட் கார்டில் வந்த விஜயலஷ்மி வெற்றிக்கு தகுதியானவர் இல்லை’ என்பதாக சொன்னார். உண்மையில் யாஷிகா மழுப்பலாக சொன்னதை வெளிப்படையாக உடைத்துப் போட்டார் கமல். ‘மீதமிருக்கும் ஐந்து வாரங்களில் என்னை நிரூபிப்பேன்’ என்று தன்னம்பிக்கையுடன் சொன்னார் விஜயலஷ்மி. (பெயரில் ‘விஜய்’ இருக்கிறது. அப்ப வெற்றிதான்!).

“தகுதியில்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா physical task-ல ஜனனியால சிறப்பா செய்ய முடியல. எளிதா விட்டுக் கொடுத்துடறாங்க. எனவே அவங்களைச் சொல்வேன்” என்றார் ஐஸ்வர்யா. “விளையாட்டில் ஜெயிக்கலைன்னா என்னா சார். மக்களோட மனசுல ஜெயிச்சிருக்கேன்” என்று பொடி வைத்து பேசினார் ஜனனி. (அப்படி போடு… விஷபாட்டிலா.. கொக்கா..!). “யாஷிகா சொன்ன அதே காரணம்தான் சார். விஜயலஷ்மி இப்பத்தான் வந்திருக்காங்க. அவங்க ஜெயிக்க வேண்டாம்னு நெனக்கறேன்” என்று சென்றாயன் சொல்ல “என்னைப் பார்த்து பயப்படறாங்க. எனக்கு மகிழ்ச்சிதான்” என்று விஜயலஷ்மி சர்காஸ்டிக்காக சொன்னதை “நான் த்ரெட் –ன்னு சொல்லலை” என்று பெண்களுக்கேயுரிய பகைமை முகபாவத்துடன் அலட்சியமாகச் சொன்னார் யாஷிகா. 

“என்னையே சொல்லிப்பேன்” என்று கைதூக்கினார் பெருந்தன்மையாளர் பாலாஜி. (கூட்டம் கைத்தட்டியது). “நமக்கே தெரியும் இல்லையா. நான் நிறைய வெற்றியைப் பார்த்துட்டேன். மத்தவங்க வெற்றியடையறதை கீழே உட்கார்ந்து பார்த்து விசிலடிக்க காத்திருக்கேன்’ என்றார். (ச்சீ…ச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ கதை போலவே இருந்தது, பாலாஜியின் இந்த அபிப்ராயம்).

“பாலாஜி வாழ்க்கைல ஜெயிக்கத்தான் இங்க வந்திருக்கார். எண்பது சதவீதம் ஜெயிச்சுட்டார். பாக்கி இருபது சதவீதம் வெளியே போய் நிச்சயம் ஜெயிச்சுடுவார். அதனால் அவரைச் சொல்கிறேன்” என்று சாமர்த்தியமாக பாலாஜியை கழற்றி விட்டார் டேனி. (என்னவொரு வில்லத்தனம்!). “ஆனா பாலாஜிக்கு வெளியே பெரிய டாஸ்க் காத்திட்டிருக்கு. இன்னொரு பிக்பாஸை அவர் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று நித்யாவின் நிபந்தனையையொட்டி கமல் சொன்னதற்கு பாலாஜி உட்பட அனைவரும் சிரித்தனர்.

“ஐஸ்வர்யா.. ஒருமுறைதான் நாமினேஷன் ஆகியிருக்காங்க. நெறைய தடவை ஆகலை. மக்கள் கிட்ட போய் நிரூபிச்சுட்டு வந்தா நான் ஒத்துப்பேன். அதனால அவங்களைச் சொல்வேன்” என்று ஜனனி வில்லங்கமான அபிப்ராயத்தை துவங்கி வைக்க, ரித்விகாவும் அதை வழிமொழிந்தார். ‘கடவுள்லாம் அவங்களைக் காப்பாத்தல. யாஷிகாதான் காப்பாத்தினாங்க. மக்கள் முன்னாடி போயிட்டு வரட்டும். நான் ஒத்துக்கறேன்” என்று உண்மையை சபையில் போட்டு ஆவேசமாக உடைத்தார் ரித்விகா. (இந்தப் பொண்ணுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாருங்களேன்!).  ‘யாஷிகாவின் மூலமாக கடவுள் என்னைக் காப்பாற்றினார்’ என்று இதை சாமர்த்தியமாக மழுப்பினார் ஐஸ்வர்யா. ‘சாமி .. காப்பாத்தலைன்னுலாம் சொல்லக்கூடாது.. ரித்விகா.. சாமி கண்ணைக் குத்திடும். தப்பும்மா” என்பது மாதிரி தன் ‘பகுத்தறிவு’ ஜோக்கை குறும்புடன் சொன்னார் கமல்.

ஆக.. ஜனனி, ரித்விகா, விஜயலஷ்மி மற்றும் பட்டும்படாமல் மும்தாஜ் என்று ‘தமிழ்ப்பெண்கள்’ கூட்டணி வடஇந்தியாவிற்கு எதிராக உருவாகியிருக்கிறது போல. தென்னிந்தியாவா, வடஇந்தியாவா, ஜெயிப்பது யாரென்று பார்ப்போம். 

“யாஷிகா உருவத்தில் கடவுள் வந்து காப்பாற்றினார்’ என்று மறுபடியும் ஐஸ்வர்யா சொல்ல, ‘அவர் எல்லா உருவிலும் இருப்பாரா?” என்ற கமல் தானும் கடவுளாக மாறி ஐஸ்வர்யாவை வாழ்த்தினார். (அன்பே சிவம் கிளைமாக்ஸ் மாதிரி புல்லரிச்சு போச்சு ஆண்டவரே!). 

“ஐஸ்வர்யா, யாஷிகாவைச் சார்ந்திருக்கிறார். சுயத்தன்மையுடன் இல்லை. எனவே வெற்றிக்கு தகுதியில்லாதவர் என்று அவரைச் சொல்வேன்” என்பது விஜயலஷ்மியின் அபிப்ராயம். இந்த டாப்பிக்கில் முதலில் பேசத் தயங்கிய மும்தாஜ், இப்போது, ‘ரெண்டு சாய்ஸைகளை சொல்லலாமா?” என்று ஆர்வமுடன் கேட்க, கமலே வியந்து போய் ‘சொல்லுங்க’ என்று தூண்டி விட்டார். “ஒண்ணு, மத்தவங்க சொன்ன அதே காரணம்தான். இப்ப வந்த விஜயலஷ்மி வெற்றி பெறுவது சரியில்லை. இன்னொன்ணு, ஐஸ்வர்யா மீது சொல்லப்பட்ட காரணம்தான். அவர் யாஷிகாவைச் சார்ந்திருக்கிறார்”.

அனைத்து தரப்புகளையும் கேட்ட கமல், எதிர்பார்த்தது போலவே எவிக்ஷன் பற்றிய அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்கிற புன்னகையுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். ‘அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது ‘உங்களில் நான்’ என்கிற டயலாக்கை இப்போதெல்லாம் ஆண்டவர் சொல்ல மறந்துவிடுகிறார். 

இந்த வாரம் டேனிதான் வெளியேற்றப்படவிருக்கிறார் என்கிற அதிர்ச்சியான தகவல் காற்றில் உலவுகிறது. அது உண்மையாகஇருக்கக்கூடாது என்று விரும்புகிறேன். மற்றவர்களைப் போலவே டேனியிடமும் சில எதிர்மறை அம்சங்கள் இருந்தாலும், இந்த விளையாட்டை சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ற உழைப்புடன் பங்கேற்கும் வலிமையான போட்டியாளரான டேனியை இழப்பது அவருக்கு நஷ்டமோ இல்லையோ, இந்த விளையாட்டிற்குத்தான் பெரிய நஷ்டம். அவர் அளவிற்கு டாஸ்க்குகளில் ஆர்வமாக பங்கேற்பவர் யாஷிகா மட்டுமே. இதனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைக்கூடும். என்னவாகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.