Published:Updated:

``எல்லோரையும் காப்பாத்திட்டா, யாருப்பா நாமினேட் ஆவீங்க?!" - பிக் பாஸ் மசாலாஸ்

தார்மிக் லீ

பிக் பாஸ் மார்னிங் மற்றும் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது?!

``எல்லோரையும் காப்பாத்திட்டா, யாருப்பா நாமினேட் ஆவீங்க?!" - பிக் பாஸ் மசாலாஸ்
``எல்லோரையும் காப்பாத்திட்டா, யாருப்பா நாமினேட் ஆவீங்க?!" - பிக் பாஸ் மசாலாஸ்

`பிக் பாஸ் போட்டியில் சிறந்த போட்டியாளர் உள்ளே இருப்பவர்கள் யாரும் இல்லை... நான்தான்' என்ற ரேஞ்சில் காலரைத் தூக்கிவிட்டு தனது சித்து வேலைகளைக் காட்டுகிறார், பிக் பாஸ். டாஸ்க் ஒவ்வொன்றிலும் தன்னை மெருகேற்றி அனைவரையும் முறுக்குப் பிழிகிறார். சென்டு ப்ரோ மண்டைக்குச் சிவப்பு டை அடித்தது, பாலாஜி ப்ரோவுக்கு மொட்டையடித்தது... என அனைவரின் மண்டைகளையும் பதம் பார்க்கிறார், பிக் பாஸ். இதைத் தொடர்ந்து பிக் பாஸ் மசாலாக்களில் என்ன நடந்தது?!

* `சிவாஜி' படத்தின் க்ளைமாக்ஸ் ரஜினிகாந்தாகவே தன்னை மாற்றிக்கொண்டார், பாலாஜி. கமல் ஷோவில் இருந்துகொண்டு ரஜினியைப் பிரதிபலிப்பது நாட் குட் பாலாஜி ப்ரோ. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனனியை போஷிகாவாக நினைத்து அவரைக் காப்பாற்ற, அவருக்கு இந்தப் பரிசை அளித்தார், பாலாஜி. செஃப் மும்தாஜிடம் அறிவுரை வாங்கிக்கொண்டு ஆக்ரோஷமாகக் காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தார். ஆள் பழைய படத்தில் வரும் வில்லன்போல் இருந்ததால், பார்க்கவே பயங்கரமாக இருந்தது. கிச்சனில் மும்தாஜ் சொல்லும் அத்தனை வேலைகளையும் செய்துவிட்டு, கார்டன் ஏரியாவுக்கு வந்ததும் ரித்விகாவிடம் சமையலைப் பற்றிப் புலம்பிக்கொண்டிருந்தார், பாலாஜி. எம்.ஜி.ஆரும் நான்தான் சிவாஜியும் நான்தான் மொமன்ட்!

* ஆப்பிளை வைத்து பாலாஜியும் டேனியலும் சண்டை போட்டுக்கொண்டதை சென்றாயன் கார்டன் ஏரியாவில் இருந்த அனைவரிடமும் இமிடேட் செய்து கலாய்த்துக்கொண்டிருந்தார். புலம்பலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாலாஜியும் இயல்பு நிலைக்கு வந்து, சென்டு ப்ரோ செய்யும் லூட்டிகளைப் பார்த்து சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தார். பேச்சுத் துணையின்றி பரிதவித்துக்கொண்டே கிச்சன் ஏரியாவில் சமைத்துக்கொண்டிருந்த மும்தாஜ், தனக்குத்தானே பேசிக்கொண்டு வேலைகளை மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார், பாவம். இந்தக் களேபரங்களுக்கு நடுவே ஜனனியைக் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், அவரின் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. ரைட்டு, பிக் பாஸ் போட்டியாளர்களின் அழகு சார்ந்த விஷயங்களை வைத்து விளையாடுவது அப்போதுதான் புரிந்தது. இன்னும் யார் யாருடைய முகம் என்னென்ன ஆகப்போகிறது என்பது போகப் போகத் தெரியும்.  

* நேற்று முழுக்கவே மிட்நைட் மசாலாவில் ஐஸ்வர்யாவைக் காட்டவில்லை. ஏதோ வலுவான டாஸ்க் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்க, இன்று வெளிவந்த ப்ரோமோவின் மூலம்தான் தெரிந்தது, சென்றாயன் நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆக, ஐஸ்வர்யா அவருடைய முடியை கத்திரித்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல் டாஸ்க்கைக் கொடுத்திருக்கிறார், பிக் பாஸ். இப்படியே எல்லோரும் சொன்னதைச் செய்து நாமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டால், அடுத்த வாரம் யார்தான் எவிக்‌ஷனுக்கு நாமினேட் ஆவீர்கள், மதிப்பிற்குரிய போட்டியாளர்களே. அப்போதும் வேறு ஏதாவது டாஸ்க் கொடுத்து நாமினேஷனை பிக் பாஸ் நடத்துவார் என்பது போட்டியாளர்களுக்குப் புரியவேயில்லை பாவம். இதைத் தொடர்ந்து மார்னிங் மசாலாவிலும் சமையல் பிரச்னைகளே தொடர்ந்துகொண்டிருந்தது. 

* வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்த சென்றாயன், விளக்குமாற்றைக் கீழே போட்டுவிட்டு, `கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தை வெச்சுப் படம் எடுக்கப்போறதா சொன்னாங்களே. ஷூட்டிங் முடிஞ்சதா... அஜித்துடைய `விஸ்வாசம்' படம் என்ன நிலைமையில இருக்கு' என ரஜினியையும் அஜித்தையும் விஜயலட்சுமியிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார், சென்டு ப்ரோ. ஒட்டுமொத்த வீடுமே கைகோத்து காலை உணவை சமைத்துக்கொண்டிருந்தது. மார்னிங் மசாலாவிலும் ஐஸ்வர்யாவை ஒரு ஃப்ரேமில்கூட காட்டவில்லை. யாஷிகாவது அவ்வப்போது ஸ்க்ரீனில் வந்து போனார். ஆனால், இந்த ஒட்டுமொத்தக் கூட்டத்திலும், ஐஸ்வர்யாதான் மிஸ்ஸிங். தன் முடியைப் பறிகொடுத்த சோகத்தில் தலைமறைவாக இருக்கிறாரோ என்னவோ! 

தொடர்ந்து அழகு சார்ந்த விஷயங்களை வைத்தே பிக்பாஸ் அங்கிருப்பவர்களுக்கு டாஸ்க் கொடுத்து வருகிறார். ஐஸ்வர்யா முடியை இழந்தார். ரித்விகா விஜயலட்சுமியைக் காப்பாற்ற தன் கையில் நிரந்தர டாட்டூ போட்டுக்கொண்டார். ஹ்ம்ம்... எல்லோரையும் காப்பாற்றிவிட்டால் எலிமினேஷன் இருக்காது என்று போட்டியாளர்கள் நினைக்கிறார்களோ என்னவோ. கிளிப்பிள்ளை போல் பிக் பாஸ் சொல்லும் அனைத்துக்கும் தலையாட்டிக்கொண்டிருக்கிறார்கள். இது எங்குபோய் முடியப்போகிறதோ. பொறுத்திருந்து பார்ப்போம்!