Published:Updated:

டெரர் வில்லன் சென்றாயன்... `பாய்' பியூட்டி ஐஸ்வர்யா! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
டெரர் வில்லன் சென்றாயன்... `பாய்' பியூட்டி ஐஸ்வர்யா! #BiggBossTamil2
டெரர் வில்லன் சென்றாயன்... `பாய்' பியூட்டி ஐஸ்வர்யா! #BiggBossTamil2

பிக்பாஸ் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ‘உயிரைக்’ கொடுத்து செய்ய வேண்டிய டாஸ்க்குகளை பிக்பாஸ் தருவார் என்று பார்த்தால் கதை வேறு மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. ‘முடியரசன்’ டேனி இப்போது இருந்திருந்தால் அவருக்கு சலூன் செலவு மிச்சமாகியிருக்கக்கூடும். ஆண்களுக்கான டாஸ்க் என்றால் சக போட்டியாளர்களை வைத்தே ஜீரோ பட்ஜெட்டில் முடித்து விடும் பிக்பாஸ், பெண் போட்டியாளர்களுக்கு என்றால் அதற்குரிய பணியாளர்களை வரவழைப்பதின் மூலம் ஆண்குலத்துக்கு ஓரவஞ்சனை செய்திருக்கிறார். நாட்டாமை இது குறித்து விசாரித்தேயாக வேண்டும். 

பாலாஜிக்கு மொட்டை, சென்றாயனின் தலையில் மிளகாய் அரைத்தல், விஜயலட்சுமிக்கு மாட்டுச்சாண குளியல், ஜனனிக்கு புருவச் சேதம், நடமாடும் விளம்பரப் பலகையாக ரித்விகாவை மாற்றியது, ஐஸ்வர்யாவின் சிகையைக் குட்டையாக்கியது என்ற வரிசையில் வேறென்ன விபரீதமான டாஸ்க்குகளை பிக்பாஸ் வைத்திருக்கிறாரோ என்று கலவரமாக இருக்கிறது. ஆனால், இந்தத் தண்டனைகள் ஒருவகையில் போட்டியாளர்களுக்குச் சாதகமாகவே அமைந்திருக்கின்றன. ‘சிவாஜி’ திரைப்படத்தின் ‘மொட்டை பாஸ்’ ரஜினி போல பாலாஜி ஸ்டைலாக இருக்கிறார். ஒருபக்கம் அயல்கிரத்து ஜீவி போலவே இருந்தாலும் சென்றாயனின் தோற்றம் அட்டகாசமாக மாறி வில்லன் நடிகர் போலிருக்கிறார். ஐஸ்வர்யாவுக்குத் தண்டனையே ஒரு பரிசாக அமைந்து மேலும் க்யூட்டாகிவிட்டார். ஜனனியின் நிலைமை மட்டும் தற்காலிகமாக ஒரு மார்க்கமாக இருக்கிறது. காந்தக் கண்ணழகி தன் வனப்பை மீண்டும் விரைவில் அடைவார்.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. நாமினேஷன் சடங்கு என்பது வாரா வாரம் அவர்கள் எதிர்கொள்கிற விஷயம்தான். சிறப்பான போட்டியாளர்களாக இருந்தால், மக்களாலோ அல்லது பிக்பாஸாலோ நிச்சயம் காப்பாற்றப்படப் போகிறார்கள். எனில் இத்தனை மனஅழுத்தத்துடன் எதற்காக இந்த டாஸ்குகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. ‘விட்டுக்கொடுக்கும்’ தன்மை என்பது தன்னைச் சேதப்படுத்திக்கொள்வதிலா அடங்கியிருக்கிறது? ‘திரும்ப வளர்ந்துரும்’ங்கிற தைரியத்துலதானே சாமிக்கு முடியைக் காணிக்கையாக் கொடுக்கறீங்க. இதே கைவிரல், கால்விரல்லாம் கொடுப்பீங்களா?” என்று தனக்கேயுரிய பாணியில் ‘நாத்திக’ கிண்டலடித்திருக்கிறார் எம்.ஆர்.ராதா. 

சரி, பிக்பாஸின் சில விஷயங்கள் எவ்வித தர்க்கத்துக்கும் அடங்காது. அப்படியே இவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். 

**

79-ம் நாளின் சம்பவங்கள் தொடர்கின்றன. பாலாஜியை மொட்டையடிக்க சம்மதிக்க வைப்பதற்காக விதவிதமான கெஞ்சலைத் தொடர்கிறார் ஜனனி. “ஏன் கீழே உட்கார்ந்துட்டே?” என்று பாலாஜி கேட்கும் அளவுக்கு ‘படுத்தேவிட்டானய்யா’ மோடிற்கு சென்றார் ஜனனி. ஒருவரை வழிக்குக் கொண்டு வர சாமம், பேதம், தானம், தண்டம் ஆகிய படிநிலை உபாயங்களைப் பயன்படுத்தலாம் என்கிறது அர்த்தசாஸ்திரம். இதில் முதல் வழிமுறையான சாமத்தைத் திறமையாகப் பயன்படுத்தினார் ஜனனி. (சாமம்: இருவருக்கும் பொதுவான நன்மைகளை எடுத்துக் கூறியோ, எதிராளியின் மனம் குளிர அவரைப் பாராட்டியோ, ஒரே இயல்புகளைக் கருத்தில்கொண்டோ சமரசம் செய்தல்). 

‘இதை ஒப்புக்கொள்றதால உங்களுக்கும் அட்வான்டேஜ் இருக்கு’ என்று ரித்விகா ஆலோசனை கூறினார். பார்வையாளர்களிடம் நன்மதிப்பைப் பெற முடியும் என்பதே அவர் கூற வருவது. அதற்காக இல்லாவிடினும் சில காரணங்களுக்காக இதற்கு ஒப்புக்கொள்வதாக கேமரா முன்பு வந்து சொன்னார் பாலாஜி. 

பாலாஜி நடிகர் என்பதால் தன் தலைமுடியை இழப்பதற்காகக் கவலைப்படுவதில் உண்மையிலேயே அர்த்தமுண்டு. மகள் சென்டிமென்ட் வேறு. ஆனால் ஜனனியையும் தன் மகளாகக் கருதுவதால் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இதற்கு ஒப்புக்கொண்டார். பலியாடு போல சென்றாயனின் தலைமுடி கண் எதிரேயே வண்ணம் மாறிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர் தயங்கியிருக்கலாம். விஜயலட்சுமி தொடங்கி வைக்க மும்தாஜ் இந்தத் திருப்பணியை முடித்துவைத்தார். ‘அந்த டாஸ்க் பரவாயில்ல போலிருக்கு. இந்தச் சிவப்பு டை கண்ணெல்லாம் எரியுதே’ என்று சென்றாயன் இன்னொருபுறம் புலம்பிக்கொண்டிருந்தார். பாலாஜியின் தியாகத்தைக் கண்டு கண்கலங்கினார் ஜனனி. 

புதிய ‘லுக்’கில் சென்றாயன் நன்றாகவே இருந்தார். காமெடியனிலிருந்து வில்லனாவதற்குகூட சான்ஸ் கிடைக்கும். ஆனா, மறுபடியும் கௌரியாவே வந்துறாதீங்க ப்ரோ! ‘போறதுக்குள்ள என்னைப் பழையபடி மாத்தி விட்டுருங்க பிக்பாஸ். என் தெருவுல நாய் கண்டா விடாது” என்று அவர் கெஞ்சியது காமெடி. இதைச் சொல்லி முடித்ததும் அவர் செய்த ஸ்டைலான தோரணையெல்லாம் வேற லெவல்.

ஐஸ்வர்யாவின் ‘டாஸ்க்’ வெற்றிகரமாக முடிந்ததால் அவருக்கு வாழ்த்துகளைச் சொன்ன எப்ஃஎம் ஆசாமி, மும்தாஜை கூப்பிடச் சொன்னார். அவருக்கான டாஸ்க் விநோதமாக இருந்தது. மாட்டுச்சாணம் அடங்கிய தொட்டியில் விஜயலட்சுமியைச் சம்மதிக்க வைத்து அமர வைக்க வேண்டும். “உங்களுக்கு வசதியா இருந்தாப் பண்ணுங்க’ என்று இதற்கான தேர்வை அவரிடமே தந்துவிட்டார் மும்தாஜ். ‘கொஞ்சம் டைம் கொடுங்க’ என்று விஜயலட்சுமி தயங்கினாலும் சில நொடிகளிலேயே தன் சம்மதத்தைத் தெரிவித்தது நல்ல விஷயம். 

ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் இதற்கான ஏற்பாடுகள் ‘சிறப்பாக’ செய்யப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்த மும்தாஜூம் விஜயலட்சுமியும் முகத்தைச் சுளிப்பதிலிருந்தே அந்த நாற்றத்தை நம்மால் உணர முடிந்தது. (இனி இரவு உணவைச் சீக்கிரமாகச் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இனி வரும் டாஸ்க்குகளில் என்னென்ன காட்டப் போகிறார்களோ?!) ‘ஹைஜீன் ராணி’யான மும்தாஜ் தனது டாஸ்க்கை முடிப்பதற்காக முகபாவத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார். மாட்டுச்சாணம் கிருமி நாசினி என்கிற காரணங்கள் இருந்தாலும் நகரவாசிகளுக்கு அது சங்கடம்தான். இந்த நோக்கில் இதற்கு சம்மதித்த விஜயலட்சுமியைப் பாராட்ட வேண்டும். 

விஜயலட்சுமியின் முகச்சுருக்கங்களைப் பார்த்த மும்தாஜ், ‘உங்களுக்குப் பிடிக்கலைன்னா விட்டுடலாம்’ என்று பாவனையாகக் கூற, ‘நீங்க வேண்டாம்னு உறுதியாச் சொன்னா நான் போயிடறேன்’ என்று விஜயலஷ்மி அதிரடியாகச் சொல்ல, ‘இல்ல... உங்களால முடியும்னா பண்ணுங்க’ என்று சமாளித்தார் மும்தாஜ். ஒருமாதிரியாக தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு உள்ளே அமர்ந்த விஜயலட்சுமியை, ‘கழுத்து வரை மூழ்க வேண்டும்’ என்று கட்டளையிட்டார் கல்லுளிமங்கர் பிக்பாஸ். அதற்குள் விஜயலட்சுமிக்குக் கண்ணீர் வழிந்தது. மற்றவர்களும் வந்து உற்சாகப்படுத்தலாம் என்று பிக்பாஸ் சொன்னவுடன் இதரப் போட்டியாளர்களும் வந்தனர். ‘தலையையும் முக்கி எடுக்கணும்னு சொன்னா நான் செத்தேன்’ என்று விஜயலட்சுமி கலக்கத்துடன் சொல்ல, “நீயே பிக்பாஸூக்கு ஐடியா தராதே” என்று சரியாகக் குறிப்பிட்டார் ஜனனி. 

சிறிது நேரத்தில் டாஸ்க் முடிந்ததற்கான பஸ்ஸர் அடித்ததும் விஜயலட்சுமியைக் குளிப்பாட்டி தன் டாஸ்க்கை வெற்றிகரமாகக் கழித்தார் மும்தாஜ். 

“விஜயலஷ்மிக்கான டாஸ்க் வந்தா நான் நிச்சயம் பண்ண மாட்டேன்’ என்று ஐஸ்வர்யா ஒருபக்கம் வீம்பு பேசிக்கொண்டிருக்க, “முதல் அடி நான் அடிக்க மாட்டேன். ஆனா அடி விழுந்தா சும்மா இருக்க மாட்டேன்’ என்று இன்னொருபுறம் விஜயலட்சுமி முண்டாவைத் தட்டிக்கொண்டிருந்தார். ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் மீண்டும் ஏற்பட்டிருக்கும் பிளவைச் சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் மும்தாஜ். ‘வந்தா வா, வராட்டி போ’ என்கிற மோடியிலேயே எப்போதும் இருக்கும் யாஷிகா வழக்கம்போல் இதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் யாஷிகா எதிரணியுடன் இணைந்திருப்பதால் ‘பொஸஸிவ்னஸ்’ காரணமாக ஐஸ்வர்யா முறைத்துக்கொண்டிருக்கிறார். 

‘இந்த ஹேர்ஸ்டைலோட நைட்ல வெளில உலாத்தாதே’ என்று சென்றாயனை பாலாஜி கிண்டலடித்துக்கொண்டிருந்தார். ‘என் தோல், முடி போன்றவை பாழாகும்படியான டாஸ்க் என்றால் நிச்சயம் நான் செய்ய மாட்டேன். பொருள் இழப்பு போன்றது என்றால் ஓகே” என்று பாலாஜி, ஜனனியிடம் மும்தாஜ் சொல்லிக்கொண்டிருக்கும் காட்சியோடு அன்றைய நாள் முடிந்தது. மும்தாஜ் அதைச் சொல்லாமலே இருந்திருக்கலாம். கழுகு போல் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிச்சயம் அதைத்தான் செய்யப் போகிறார் என்று தோன்றுகிறது. 

**

80-ம் நாள் காலை. ‘மாமா மாமா உன் பொண்ணைக் கொடு மாமா’ என்கிற பாடல் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்திலிருந்து ஒலிபரப்பானது. (டேனி ஒருவேளை இங்கு இருந்திருந்தால் இந்தப் பாடல் பொருத்தமாக அமைந்திருக்கும்). யாஷிகாவுடன் ‘டூ’ விட்டிருப்பதால் தனியாக நடனம் ஆடிக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. 

‘விஜயலட்சுமி ஒரு டார்ச்சர். அவங்களுக்காக நான் எதுவுமே பண்ணமாட்டேன்’ என்று தனிமையில் அமர்ந்து புலம்பிக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ‘அவ பண்ற தப்புக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியிருக்கு’ என்று இன்னொரு பக்கம் மும்தாஜிடம் சொல்லிக்கொண்டிருந்தார் யாஷிகா. இருவரையும் இணைத்து வைக்க மும்தாஜ் மேற்கொண்ட நடவடிக்கை, ஐஸ்வர்யாவின் சிறுபிள்ளைத்தனத்தால் தோற்றுப்போனது. “ஜஸ்வர்யா அதிக தவறு செய்திருப்பதால் இந்த வாரம் எப்படியும் போய்விடுவார். அதனால் கிடைத்திருக்கிற குறுகிய நேரத்தில் ஏன் சண்டை போட வேண்டும்?” என்கிற மும்தாஜின் நல்ல நோக்கத்தை இருவரும் புரிந்துகொள்ளவில்லை. 

மணியோசை கேட்டது. மும்தாஜின் டாஸ்க்கை முடித்ததற்காக அவருக்கு வாழ்த்து சொன்ன எஃப்எம் ஆசாமி, யாஷிகாவை அழைக்கச் சொன்னார். ‘நீண்ட நாள் கழித்து ஓர் அந்நியக் குரலைக் கேட்கிறேன்’ என்று யாஷிகா சற்று நெகிழ்ந்தது அழகு. ‘நான் உங்க ஃப்ரெண்டுன்னு வெச்சுக்கங்களேன்’ என்று அந்த அநாமதேய ஆசாமி சொன்னதும் அழகு. யாஷிகாவுக்கான டாஸ்க், ஜனனியின் புருவங்களை ‘ப்ளீச்’ செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும். ஜனனியின் சிறப்பம்சங்களுள் ஒன்றே ஒன்று அந்தக் கண்கள்தாம். அதற்கு வேட்டு வைக்க முயன்ற பிக்பாஸின் வில்லத்தனத்தைப் புரிந்துகொள்வதைவிடவும் பத்து ‘சைக்கோ’ படங்களைப் பார்த்து விடுவது எளிதான காரியம். 

‘நமக்குள்ள சில தவறான புரிதல்கள் இருக்கலாம். ஆனா நான் இத்தனை நாள் சமாளிச்சுட்டேன். இப்போ ஃபைனல் போகணும். இது உங்கள் அழகை பாதிக்கலாம்’ என்று ஜனனியிடம் நேர்மையாக தன் முறையிடுதலை முன்வைத்தார் யாஷிகா. ‘ஒண்ணும் ஆகாது. அப்புறம் சரியாயிடும்’ என்கிற ஆறுதலைத் தந்தனர் மும்தாஜூம் ரித்விகாவும். ‘உன் முடிவா இது இருக்கட்டும்’ என்றார் பாலாஜி. இவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு தன் சம்மதத்தைத் தந்தார் ஜனனி. மும்தாஜ்தான் இந்தத் திருப்பணியையும் செய்தார். முடித்து விட்டுப் பார்க்கும்போது ஜனனியின் முகம் சற்று மாறுதலாகத்தான் தெரிந்தது. ஒரு மாதிரியாக தன்னைத் தேற்றிக்கொண்டார் ஜனனி. 

யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் தங்களின் இடையில் உள்ள மனஸ்தாபங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். வழக்கம்போல் விலகலான மனநிலையில் யாஷிகா பேசிக்கொண்டிருக்க, அவரைவிட முடியாமலும் அதே சமயத்தில் தன்னுடைய பிடிவாதத்தை விட்டுக்கொடுக்க முடியாத வீம்புடனும் அவரிடம் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. சென்றாயன் டாஸ்க் பற்றி மும்தாஜிடம் யாஷிகா சொல்லிவிட்டார் என்பது ஐஸ்வர்யாவின் சந்தேகம் போலிருக்கிறது. ‘மும்தாஜே கண்டுபிடிச்சிட்டாங்க. நான் என்ன செஞ்சேன்?” என்பது யாஷிகாவின் நியாயமான வாதம். ‘இன்னும் கொஞ்ச நாள்ல போயிடப்போறேன்’ என்று ஐஸ்வர்யா முறையிட்டதும் ‘என்னை நீ வேண்டும்போது உபயோகப்படுத்திக் கொள்கிறாய்’ என்கிற புகாரை முன்வைத்தார் யாஷிகா. இத்தனை நெருக்கமான தோழிகளாக இருந்தாலும் ‘போங்க... வாங்க’ என்று அவர்கள் சமயங்களில் பேசிக்கொள்வது சற்று நெருடலாக இருக்கிறது. ‘மாட்டிக்காதே’ என்று யாஷிகா சொன்னதை ‘மாத்திக்கிட்டே’ என்று ஐஸ்வர்யா புரிந்துகொண்டதால் ‘கடவுளே’ என்று சலித்துக் கொண்டார் யாஷிகா. 

யாஷிகா போன்ற நண்பர்கள் இருமுனையிலும் கூர் கொண்ட கத்தியைப் போன்றவர்கள். பாதுகாப்பாகப் பயன்படுத்தினால் சிறந்த ஆயுதம். அலட்சியமாகப் பயன்படுத்தினால் நம்மையே தாக்கும் அபாயம் உண்டு. 

அடுத்த மணியோசனை விஜயலட்சுமிக்கு வந்தது. பிக்பாஸின் லோகோவில் இருக்கும் ‘ஐ’யை ரித்விகாவுக்குப் பச்சை குத்த வைக்க சம்மதிக்க வேண்டும். ‘ஐ’ என்கிற எழுத்து என்பதாக விஜயலட்சுமி முதலில் தவறாகப் புரிந்துகொள்ள, அது ‘I” இல்ல. ‘eye’ என்று திருத்தினார் மும்தாஜ். சில நிமிட யோசனை, ஆலோசனைகளுக்குப் பிறகு இதற்கு சம்மதம் தெரிவித்தார் ரித்விகா. ‘உனக்கு இன்ஜெக்ஷன்னா பயமாச்சே... முடியுமா?” என்று ரித்விகாவைக் குழப்பிவிட்டார் மும்தாஜ். ‘அவங்க சம்மதம் சொல்லிட்டாங்க. உங்க ஐடியாவைத் தூக்கி அவங்க தலைல போடாதீங்க” என்று எரிச்சலானார் விஜயலட்சுமி. 

ஐஸ்வர்யா, சென்றாயனிடம் பேசிக்கொண்டிருந்த போது தான் தலையிட்டது தவறு என்கிற பாடத்தை விஜயலட்சுமி ஒருவேளை இப்போது உணர்ந்திருக்கலாம். ஐஸ்வர்யா செய்வது ஏமாற்று என்றாலும் அது அவருடைய உத்தி என்பதைப் புரிந்துகொண்டு சென்றாயனிடம் தனிமையில் பேசியிருக்கலாம். அருகிலேயே அமர்ந்து சீண்டுவது சம்பந்தப்பட்டவருக்கு எரிச்சல் தரும் என்கிற பாடம் அவருக்கே திரும்பி வந்தது. 

இன்னொரு பக்கம், மும்தாஜூம் இப்போது அதே தவற்றைச் செய்கிறார். தனக்காக மாட்டுச்சாணியில் முக்கியெழுந்த விஜயலட்சுமியின் தியாகத்தை உதறிவிட்டு ரித்விகாவைக் குழப்புவது முறையானதே அல்ல. அவருக்கு ரித்விகாவின் மீது உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில் தனியாக அழைத்து தன் ஆலோசனைகளைச் சொல்லலாம். இந்த நோக்கில் விஜயலட்சுமியின் கடுமையான ஆட்சேபணை சரியானது. ‘இங்க இருந்ததெல்லாம் தத்தியா இருந்ததுங்க. நீதான் விஜயலட்சுமி சரியாப் பண்றே” என்று பிறகு பாலாஜி இதற்காகப் பாராட்டினார். 

‘என்னடா இது கீரிப்புள்ள மாதிரி ஒருதலை. கையை வெச்சா ரத்தம் வந்துடும் போல இருக்கு' என்று செந்திலின் விநோதமான சிகையலங்காரத்தை கவுண்டணி ஒரு திரைப்படத்தில் கிண்டல் செய்வார். அது போன்ற சிகையுடன் ஓர் ஆசாமி பச்சைக் குத்துவதற்காக வந்திருந்தார். ஊசியை எதிர்பார்க்கும் குழந்தையின் முகபாவத்துடன் நடுக்கமாக இதை எதிர்கொண்டார் ரித்விகா. ‘இப்பக் கூட முடியலைன்னா விட்டுடு’ என்று மறுபடியும் குட்டையைக் குழப்பினார் மும்தாஜ். அது நிரந்தரமான டாட்டூ என்பதால் ஏன் இதை ரித்விகா செய்ய வேண்டும் என்பது மும்தாஜின் அக்கறையாக இருக்கலாம். ரித்விகாவின் அழுகையைப் பார்த்த விஜயலட்சுமியும் ‘விட்டுடுங்க.. நாமினேஷனை ஃபேஸ் பண்ணிக்கலாம்’ என்று சொல்ல, ‘நான் விஜயலட்சுமிக்காக மட்டும் பண்ணலை. என் உறுதியை நானே சோதித்துப் பார்க்க முயல்கிறேன்’ என்கிற மனவுறுதியுடன் என்று பச்சை குத்துதலை பாசிட்டிவாக எதிர்கொண்டார் ரித்விகா. பக்கத்திலிருந்த யாஷிகாவும் அவரை உற்சாகப்படுத்தினார். 

‘இனிமேல் நீ வெறும் ரித்விகா அல்ல. பிக்பாஸ் ரித்விகா’ என்று அழைக்கப்படுவாயாக” என்று வாழ்த்துமொழி சொல்லுமளவுக்கு பிக்பாஸூடன் ஐக்கியமாகி விட்டார் ரித்விகா. பிக்பாஸின் கண்களும் நிச்சயம் கலங்கியிருக்க வேண்டும். மும்தாஜின் இடையூறைப் பற்றி பின்பு பாலாஜியிடம் புகாராக வைத்துக்கொண்டிருந்தார் விஜயலட்சுமி. ‘இந்த முறை மட்டும் லக்ஸரி பட்ஜெட்ல எனக்கு வேண்டியதை கொடுக்காமப் போகட்டும். கச்சேரியை வெச்சுக்கறேன்’ என்று இந்தக் கோபத்தில் சென்றாயனும் இணைந்து கொண்டார். பாவம் பிரிட்ஜில் வைத்த இரண்டு நாள் ரசத்தை மனிதர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். 

‘விஜயலட்சுமி ஏன் இப்படி ரூடா இருக்காங்க?” என்கிற ஐஸ்வர்யாவின் கேள்வியை ‘ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. அவங்க காரெக்டர் அப்படி!” என்று சொன்ன ஜனனி, பின்பு விஜயலட்சுமியிடமும் இதைப் போட்டுக் கொடுத்து விட்டார். (டேனியின் தீர்க்க தரிசனம் வாழ்க!). ‘நான் என்ன அத்தனை ரூடாவா பேசறேன்” என்று சந்தேகப்பட்டார் விஜயலட்சுமி. (ஆமாம்மா.. நான் கூட சென்னை-28ல பார்த்த சாதுவான பொண்ணா இது.. என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கிறேன்!). 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

அடுத்த மணியோசை சென்றாயனுக்கு வந்தது. அவருக்கு அளித்த டாஸ்க்கின் படி ஐஸ்வர்யாவுக்கு ‘பாய் கட்’ செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும். பல பெண்களுக்குச் சிகையில்தான் உயிரே இருக்கிறது. இதை இழக்க எளிதில் சம்மதிக்க மாட்டார்கள். மும்தாஜ் இதற்கு உதாரணம். சென்றாயனும் இதைச் சொல்வதற்கு பல்வேறு விதமாகத் தயங்கினார். 

ஆனால், சென்றாயனுக்கு முன்பே வாக்கு அளித்திருந்த காரணத்தினால், இதற்கு உடனே சம்மதித்து விட்டார் ஐஸ்வர்யா. ஆனால் கூட இருக்கும் யாஷிகா சற்றல்ல நிறையவே குழப்பி விட்டார். “முடி வளர திரும்பவும் ஒரு வருடம் கூட ஆகலாம். உன்னோட கரியர் இருக்கு. விக் வெச்சுச் சமாளிக்க முடியுமா, ஃபங்ஷன்லயும் கலந்துக்க வேண்டியிருக்கும்’ என்கிற யாஷிகாவின் ஆலோசனையினால் சற்றுக் குழம்பினார் ஐஸ்வர்யா. ‘நான் உன் நிலைமைல இருந்தா, சென்றாயனுக்கு வாக்கு கொடுத்த மாதிரிதான் செய்வேன்’ என்று சொன்ன ரித்விகாவின் ஊக்கம் ஐஸ்வர்யாவின் குழப்பத்தைச் சற்றுத் தெளிவு செய்தது. 

‘பாய் கட்’ ன்னா முடி ரொம்ப கட் ஆகிடுமே. கழுத்து வரைக்கும் னா ஓகே’ என்பது போல் விதியைத் தளர்த்த முடியுமா என்கிற ஐஸ்வர்யாவின் கோரிக்கையை பிக்பாஸ் ஆசாமியிடம் வைத்தார் சென்றாயன். ‘லேடீஸ் பாய் கட்’ன்னு சொல்லுங்க. கழுத்து வரைக்கும்தான் முடியை வெட்டுவாங்க’ என்ற பதில் வந்தது. (தலதளபதி மாதிரி அதென்ன லேடீஸ் பாய் கட்?!). ‘அவளுக்கு பாய் கட் பண்ணா நல்லாத்தான் இருக்கும்” என்று மற்றவர்கள் பேசிக்கொண்டார்கள். 

தன் சிகையழகு அத்தனை பாதிக்கப்படாது என்கிற நம்பிக்கை வந்தவுடன் இதற்குச் சம்மதித்தார் ஐஸ்வர்யா. சிகையலங்கார நிபுணர் வந்தவுடன் இந்த ஆபரேஷன் ஆரம்பித்தது. ஐஸ்வர்யா உள்ளிட்ட மற்றவர்கள் தயங்கிய படி இது வினையாக முடியவில்லை. முன்பை விடவும் அதிகப் பொலிவுடன் இருந்தார் ஐஸ்வர்யா. சிலருக்குத் தண்டனை கூட பரிசாக அமையும் என்கிற அதிர்ஷ்டம் ஐஸ்வர்யாவுக்கு அடித்தது. ‘நல்லாத்தான் இருக்கு’ என்று மற்றவர்கள் பாராட்டில் ஐஸ்வர்யா புன்னகை பூக்க நிகழ்ச்சி முடிந்தது. 

அடுத்து எந்த உடல் பாகத்தை பிக்பாஸ் குறிவைப்பாரோ என்கிற திகிலுடன் வரும் நாள்களைக் கழிக்க வேண்டும் போல.