Published:Updated:

"'சுங்கிடிச் சேலை' யாஷிகா... `முடியாது' மும்தாஜ்..!" - பிக்பாஸ் மசாலாஸ்

தார்மிக் லீ

பிக்பாஸ் மிட்நைட் மற்றும் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது?!

"'சுங்கிடிச் சேலை' யாஷிகா... `முடியாது' மும்தாஜ்..!" - பிக்பாஸ் மசாலாஸ்
"'சுங்கிடிச் சேலை' யாஷிகா... `முடியாது' மும்தாஜ்..!" - பிக்பாஸ் மசாலாஸ்

`பாஞ்சலங்குறிச்சி' படத்தில் வரும் வடிவேலுவைப் போல் `உள்ளூரா... வெளியூரா.. சிகை அலங்காரமா... முக அலங்காரமா...' என்பதுபோல கேட்டு, போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் அழகு சார்ந்த விஷயங்களையும் வைத்து விபரீதமாக விளையாடிக்கொண்டிருக்கிறார், பிக்பாஸ். ஐஸ்வர்யாவுக்கு பாய் கட்டிங், ரித்விகாவுக்கு நிரந்தர டாட்டூ, விஜயலட்சுமியை விநோதமாகக் கையாண்ட பிக்பாஸ், `சாண' டப்பில் படுக்க வைத்தது, ஜனனியின் புருவத்தைப் பதம் பார்த்தது. இப்படியாக நேற்று அதகளம் பண்ணினார், பிக்பாஸ். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் மசாலாவில் என்ன நடந்தது?! 

* எடுத்த எடுப்பில் `எனக்கு மீன் குழம்பு வேணும். எதுவும் சாப்பிடாம, எனக்கு நாக்கு செத்துப்போயிடுச்சு' என மும்தாஜிடம் வாதிட்டுக்கொண்டிருந்தார், சென்றாயன். `எனக்கும் அப்படித்தான் இருக்கு, நான் அசைவமும் சாப்பிடமாட்டேன்' எனத் தன்னுடைய புலம்பலையும் இதுதான் சாக்கு எனக் கொட்டித் தீர்த்தார், ஜனனி. `நீ ஒண்ணும் கவலைப்படாத தங்கம். நான் உனக்கு காரக் குழம்பு வெச்சுத் தர்றேன்' என ஜனனிக்கு ஆறுதல் கூறினார், சென்றாயன். மண்டைக்கு சிவப்பு டை அடித்ததாலோ என்னவோ கோபமாகவும், காரக் குழம்புமாகவும் பேசிக்கொண்டிருக்கிறார் அவர். தொடர்ந்து லக்ஸரி பட்ஜெட்டில் என்ன பொருள்களைத் தேர்ந்தெடுப்பது எனப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. 

* நேரடி நாமினேஷனில் இதுவரை யார் பெயரும் இடம்பெறவில்லை. டாஸ்க் செய்யாமல் இன்னும் லிஸ்டில் இருப்பது, ரித்விகாவும் பாலாஜியும்தான். இன்று வெளியான ப்ரோமோவில், மும்தாஜ் அவரது தலைக்குப் பச்சை நிற டை அடித்தால்தான் ரித்விகா நேரடி நாமினேஷனிலிருந்து தப்பிக்கலாம் என்பதுபோல் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மும்தாஜ் அதைச் செய்ய மறுத்துவிட்டார். இது நடந்து முடிந்த பின், ரித்விகா கார்டன் ஏரியாவில் `ஏன் பண்ண மாட்றாங்க' என்று புலம்பிக்கொண்டிருந்தார். `இந்நேரம் எனக்கு மட்டும் இந்த டாஸ்க் வந்திருந்தா, சாஷ்டாங்கமா மும்தாஜ் மேடம் கால்ல விழுந்திருப்பேன்!' என மும்தாஜின் காதுபடவே சொல்லிக்கொண்டிருந்தார் சென்றாயன். இதைக் கேட்டும் கேட்காததுபோல் மும்தாஜ் தனது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டிருந்தார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ப்ரோ! 

* `எனக்கு இன்னும் என்னுடைய மூஞ்சிமேல அக்கறையே வரமாட்டேங்குது' எனச் சென்றாயன் ரித்விகாவிடம் சொல்ல, `ஏன் அக்கறை இல்ல. வெளியில போய் பெரிய ஹீரோ ஆகப்போறீங்க' எனச் சொன்னார். `என்ன தங்கம் இப்படிச் சொல்ற' எனப் பாவமாக கேட்டார், சென்றாயன். `உண்மையைத்தான் சொல்றேன். உங்களுக்குன்னு ஒரு ஸ்க்ரிப்ட் இந்நேரம் யாராவது எழுதி வெச்சிருப்பாங்க. நீங்க வெளியே போகும்போது ஹீரோ ஆகிடுவீங்க' என ரித்விகா சென்றாயனை ஆசுவாசப்படுத்தினார். ஜனனி, பிக்பாஸ் வீட்டிலிருந்த அனைத்துக் கண்ணாடிகளிலும் தன் புருவத்தைப் பார்த்து ஃபீல் செய்துகொண்டிருந்தார், பாவம். அதன் பிறகு டின்னருக்கான சமையல் மட்டுமே நடந்துகொண்டிருந்தது. 

* இன்று ஒளிபரப்பப்பட்ட மார்னிங் மசாலாவில் கண்ட முதல் காட்சியே, கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. பாலாஜியைக் காப்பாற்ற யாஷிகாவுக்குக் கொடுத்த டாஸ்க்கா என்பது தெரியவில்லை. யாஷிகா சுங்கிடிச் சேலைகட்டி, கிராமத்துக் குயிலாகவே மாறியிருந்தார். பல் துலக்கிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த ஐஸ்வர்யாவிடம், `ஹே டியூட்' எனச் சென்றாயன் வழி மறித்து வம்பிழுத்துக்கொண்டிருந்தார். பதிலுக்கு ஐஸ்வர்யாவும், `ஹேய் டியூட் வாட்ஸ் அப்' எனத் தன்னுடைய பிரத்தியேக ஆங்கிலத்தில் ரிப்ளை செய்தார். சென்றாயன், என்ன ரியாக்ட் செய்வதெனத் தெரியாமல், `ஃபேஸ்புக்... ட்விட்டர்... இன்ஸ்டாகிராம்... ஸ்னாப்சாட்... மியூசிக்கலி' என வறட்டு மொக்கை ஜோக்கை அடித்தார். இதற்கு நடுவில் காரணமே இல்லாமல் கட்டிய சீலையோடு நீச்சல் குளத்துக்குள் குதித்துக்கொண்டிருந்தார், யாஷிகா. எதற்காக, என்ன டாஸ்க் என்பது இன்று இரவுதான் தெரியும். 

ஆகமொத்தம், எல்லோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை செய்து, மற்றவர்களை நேரடி நாமினேஷனிலிருந்து தப்பிக்க வைத்துவிட்டார்கள். மும்தாஜ் மட்டும்தான் தனக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்கிற்கு தன்னுடைய ஸ்டைலில் `முடியாது' என்று சொல்லிவிட்டார்போல. இதனால், ரித்விகா நேரடி நாமினேஷனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!