Published:Updated:

"விஜி - மும்தாஜ் அக்கப்போர்... ஐஸ்வர்யா மீண்டும் ஆணவப் போர்" #biggBossTamil2

சுரேஷ் கண்ணன்
"விஜி - மும்தாஜ் அக்கப்போர்... ஐஸ்வர்யா மீண்டும் ஆணவப் போர்" #biggBossTamil2
"விஜி - மும்தாஜ் அக்கப்போர்... ஐஸ்வர்யா மீண்டும் ஆணவப் போர்" #biggBossTamil2

பிக் பாஸ் வீட்டில் இன்று, இரண்டு சர்ச்சைகள் பிரதானமாக அமைந்து நேரக்கடத்தலை சிறப்பாகச் செய்தன. ஒன்று, மும்தாஜுக்கும் விஜயலஷ்மிக்கும் இடையில் நிகழ்ந்த மோதல். இரண்டு, ஐஸ்வர்யாவும் மும்தாஜும் ஆங்கிலத்தில் பேசியதால் சைரன் ஒலிக்க, நீச்சல் குளத்தில் குதிப்பதற்காக மற்றவர்களிடம் வேண்டுகோள் வைக்காத ஐஸ்வர்யாவின் அகங்காரமும் சிறுபிள்ளைத்தனமும். 

சம்பவம் ஒன்று: உண்மையில் இது ஓர் அற்பமான விஷயம்தான். ஆனால், மனிதர்களின் அகங்காரமும் பகைமை உணர்ச்சியும் அற்ப விஷயங்களைக்கூட எரிமலையாக்கிவிடும் என்பதற்கான உதாரணம் இது.

மும்தாஜ் ஸ்டீம் அயர்னை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறார். அந்தச் சமயத்தில் விஜயலஷ்மி, பெண்கள் அறைக்கு வருகிறார். அவர் துணிகளை எடுப்பதைப் பார்த்த மும்தாஜ், ‘அவர் ஸ்டீமை உபயோகப்படுத்துவார் போலிருக்கிறது” என்ற எண்ணத்துடன் அதை அணைக்காமலேயே செல்கிறார். (இது மும்தாஜின் தரப்பு. மறந்துவிட்டும் அவர் சென்றிருக்கலாம்). விஜயலஷ்மி இதுகுறித்து விசாரிக்கும்போது, மும்தாஜ் அதிருப்தி அடைந்திருக்கலாம். எனவே, அதைச் சமன்செய்யும் விதமாக ‘ஸ்டீமின்  வயர், கேமராவை மறைக்காமல் வைக்க வேண்டும்’ என்று பிக் பாஸ் விதியிருக்கிறது என்றொரு ஆலோசனை சொல்கிறார். இது, விஜயலட்சுமிக்கு கடுப்பை ஏற்றுகிறது போல. (இது தொடர்பான காட்சிகள் காட்டப்படுவதில்லை. அவர்களின் உரையாடல்கள் வழியாகத்தான் அறிய முடிகிறது).

“நீங்க உயோகப்படுத்தப்போறீங்களா?” என்று மும்தாஜ் ஒரு வார்த்தை விஜயலஷ்மியைக் கேட்டிருக்கலாம். ஆனால் விஜயலஷ்மியுடன் உள்ள மனவிலகலால் மும்தாஜ் கேட்காமல் போயிருக்கலாம். அல்லது உண்மையிலேயே ஸ்டீமை அணைக்க மறந்து, விஜயலஷ்மி சுட்டிக்காட்டியவுடன் பதிலுக்கு தானும் ஒன்றைச் சொல்லியிருக்கலாம். பாலாஜி பிறகு சொல்லியதுபோல, ‘மத்தவங்க உபயோகப்படுத்தும்போது போட்டுக்கட்டும். நம்ம வேலை முடிஞ்ச பிறகு அணைச்சுட்டு வரலாமே” என்று மும்தாஜ் அணைத்துவிட்டு வந்திருக்கலாம். ஆனால், எது நடந்திருந்தாலும் விஜி பஞ்சாயத்தாக்கி  இருப்பார் என்பது மும்தாஜின் அனுமானம். விஜி பேசும் அணுகுமுறை தனக்கு உகந்ததாக இல்லை என்பதை அவர் மறுபடி மறுபடி சுட்டிக்காட்டுகிறார். 

விஜியின் கோணத்தில் இதை அணுகுவோம். மும்தாஜ் மறதியிலேயே விட்டுச் சென்றிருந்தால்கூட, அதை அணைத்துவிட்டு பிறகு இயல்பாக மும்தாஜிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். ஆனால், பதிலுக்கு மும்தாஜ் தன்னிடம் குறை கண்டுபிடித்துச் சொன்னதில் கடுப்பு, அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. மும்தாஜ் குளித்துவிட்டு வரும் வரை காத்திருக்கிறார். பிறகு, நாடகப் பாணியில் அனைவரையும் அழைத்து, ‘சபையோரே கேளுங்கள்’ என்று பஞ்சாயத்து வைக்கிறார். 

இதுபோன்ற பிரச்னைகளை நம் வீடுகளில்கூட நடைமுறையில் பார்த்திருப்போம். தண்ணீர்க் குழாயை சரியாக மூடாமல் செல்லுதல், அயர்ன் பாக்ஸை அணைக்காமல் வைத்திருத்தல், கழிவறையில் சரியாகத் தண்ணீர் ஊற்றாமல் இருத்தல் போன்றவற்றால் சர்ச்சைகள் எழுவதுண்டு. ‘நம் வீடுதானே' என்கிற  எண்ணத்தில் சிலர் அந்தக் குறைகளை இயல்பாக சரிசெய்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள். சாவகாசமானதொரு நேரத்தில் மென்மையாக சுட்டிக்காட்டுவார்கள். இது, பெருந்தன்மையான அணுகுமுறை. 

இன்னொன்றும் இருக்கிறது. அந்தச் சமயத்திலேயே சுட்டிக் காட்டி, 'யார் இதைச் செய்தது?' என்று உரத்த குரலில் பஞ்சாயத்தைக் கூட்டி ஏதோ திருடனைக் கண்டுபிடிப்பது மாதிரி சாட்சியங்களுடன் சூழல் ரணகளமாகும்படி சிலர் செய்வார்கள். அந்த அற்ப விஷயம் மெள்ள  மெள்ள தீ போல பற்றிப் பெரிய பிரச்னைகளுக்கு இட்டுச்செல்லும். 

விஜி செய்வது இரண்டாவது வகை. ஒருவரைச் சீண்டுவதிலும் வெறுப்பேற்றுவதிலும் விற்பன்னராக இருக்கிறார். தொடர்களில் நடித்த அனுபவம் கைகொடுக்கிறதோ என்னவோ,  திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில் கத்துகிறவா்களைக்கூட நம்பிவிடலாம்; சகித்துக் கொள்ளலாம். கோபம் அடங்கிய பிறகு விளக்கமளித்தால் ஒப்புக்கொள்வார்கள். நட்பை மீண்டும் அவர்களிடம் புதுப்பித்துக்கொள்ளலாம். ஆனால், ஒருவரை எங்கே அடித்தால் வலிக்குமோ, அங்கே அடிப்பதற்காகக் காத்திருந்து, அதற்கேற்ற முன்தயாரிப்புகளுடன் சீண்டுபவர்களை நம்பவே முடியாது. எத்தனை நட்பாக இருந்தாலும், அவர்களின் வன்மத்தைத் தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். 

இந்த சீஸனை ஏற்கெனவே பார்த்துவிட்டு வந்திருப்பதால், விஜி அதற்கேற்ற முன்தீர்மானங்களுடன் வந்திருக்கிறார். வந்த முதல் நாளில் இருந்தே மஹத் கூட்டணியிடமிருந்து அவர் விலகியிருப்பதிலிருந்து இது தெரிகிறது. ‘மும்தாஜுக்கு இப்படித்தான் உணவு செய்ய வேண்டும்’ என்று சென்றாயன் வேண்டுகோள் வைக்கும்போது, ‘நான் அவரது உதவியாள் அல்ல’ என்று விஜி அலட்சியமாகச் சொல்வதிலிருந்து ‘பிக் பாஸ் வீட்டில் எப்படி இருக்க வேண்டும்’ என்கிற முன் திட்டத்துடன் வந்திருக்கிறார். அவரது அதிரடியான இயல்பும் அதற்கு கைகொடுக்கிறது. போதாக்குறைக்கு ‘இங்க இருந்ததெல்லாம் தத்தியா இருக்குதுங்க. நீ பண்றதுதாம்மா கரெக்ட்டு” என்று பாலாஜி ஏற்றிக் டுத்ததின் காரணமாக  எளியவர்களைக் காக்க வந்த ஹீரோவாகவே தன்னை கற்பனைசெய்து கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. 

பிக் பாஸ் வீட்டை தன் சொந்தக் குடும்பமாகப் பாவித்துக்கொள்வதுதான் இந்த விளையாட்டின் அடிப்படையான விஷயம். ஆனால், பெரும்பாலும் இதைப் போட்டியாகவே கருதுவதால் வரும் பிரச்னைகள் இவை. தன் சொந்தச் சகோதரி இந்தத் தவற்றைச் செய்திருந்தால், விஜி இந்தப் பிரச்னையை இத்தனை பூதாகரமாக்காமல் இருந்திருக்கலாம். ‘இது, பிக்பாஸ் புராப்பர்ட்டி. ஸ்டீம் எப்படிப் போனா இவங்களுக்கு என்ன, கரன்ட் செலவானா இவங்களுக்கு என்ன?” என்று பிறகு மும்தாஜ் சொல்வதும் ‘தங்களின் வீடாக’ அவர் கருதவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. 

பிக்பாஸ் வீட்டின் பெரும்பாலான சர்ச்சைகளில் வடக்கு மற்றும் தெற்கு இடையிலான கலாசார வெறுப்பும் விலகலும் அடிநாதமாக உறைந்திருப்பதையும், இரு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிந்திருப்பதையும் துவக்கத்திலிருந்தே கவனித்திருக்கலாம். ஆரோக்கியமான போட்டிகளில் இனவாத அரசியல் நுழைவது விரும்பத்தக்கதல்ல. தகுதியுடையோர் வெல்ல வேண்டும் என்பதே அடிப்படையான அளவுகோல். 

**

சம்பவம் இரண்டு. (உண்மையில் இதுதான் முதலில் நிகழ்ந்த சர்ச்சை). இதை பூதாகரமாக்கியது ஐஸ்வர்யாவின் அகங்காரமும் சிறுபிள்ளைத்தனமும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

காலையில் எழுந்த ஐஸ்வர்யாவும் மும்தாஜூம், ஐஸ்வர்யாவின் காலில் நிகழ்ந்த எலும்பு விரிசல் தொடர்பான மருத்துவ ஆலோசனை பற்றிப் பேசுகிறார்கள். அப்போது பெரும்பாலும் அதில் ஆங்கிலம் கலந்திருக்கிறது. எனவே பிக்பாஸ் சைரனை ஊதுகிறார். 

இதில் புரியாத விஷயம் என்னவென்றால், அந்த வீட்டில் பல சமயங்களில் ஆங்கிலம் ஒலிக்கும்போது, சில குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் சைரன் ஒலிப்பது ஏன்? இவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் பார்த்தால் நீச்சல் குளத்தில்தான் வசிக்க வேண்டும். குறிப்பாக மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா உபயோகிக்கும் ஆங்கிலத்தின் அளவு அதிகம். அவர்களின் தாய்மொழி தமிழ் அல்ல என்பதால் அவர்களுக்கு இதுவொரு அசெளகரியம் என்கிற நடைமுறைப் பிரச்னை புரிந்தாலும் ‘தமிழில் பேசுவதுதான் இந்தப் போட்டியின் அடிப்படையான விதி’ என்னும்போது, அதைப் பின்பற்றுவதுதான் சரியானது. 

சைரன் ஒலித்ததும் ஒருவரையொருவர் பார்த்து திருதிருவென்று விழித்துக்கொள்கிறார்கள். ஆங்கிலம் பேசியதற்குத் தண்டனையாக ஐந்து நபர்கள் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும். ‘ஐஸ்வர்யா வந்து கேட்கட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஜனனி, ரித்விகா காத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘வாடா.. வாடா.. சண்டைக்கு வாடா’ என்கிற கொலைவெறியில் விஜியும் காத்துக்கொண்டிருக்கிறார். ‘லக்ஸரி பட்ஜெட் மட்டும் போச்சுன்னா நடக்கறதே வேற’ என்றும் உறுமுகிறார். ஒருவகையில் இவர்களின் எதிர்பார்ப்பில் பெரிய தவறு இல்லை. 

பிழைசெய்த மும்தாஜும் ஐஸ்வர்யாவும்தான் இதற்கான தீர்வைத் தாமே முன்வந்து சரிசெய்ய வேண்டும். உடல்நிலையைக் காரணம் காட்டி மும்தாஜ் மெளனமாகப் படுத்திருக்கிறார். இதுகுறித்து தன் எதிரிகளிடம் வேண்டுகோள் வைக்க விரும்பாத ஐஸ்வர்யா, தான் மட்டும் நீச்சல் குளத்தில் குதிக்கிறார். மிக முக்கியமாக விஜயலட்சுமியின் மீது அவருக்கு பிரதானமான கோபம். 

பிறகு யாஷிகாவும் சென்றாயனும் ஐஸ்வர்யாவுக்காக நீச்சல் குளத்தில் இறங்கி எழுகிறார்கள். புடவை கட்டியிருந்த அசெளகரியம் மற்றும் மாற்றுஉடை குறைவாக இருக்கிற நிலையிலும் நட்புக்காக யாஷிகா இதைச் செய்கிறார். இன்னமும் இரண்டு பேர் பாக்கி. ‘தவறு செய்தது அவள். ஆனால் ஒரு சம்பிரதாயத்துக்காகக்கூட வந்து கேட்கவில்லையே... என்கிற ஜனனி, ரித்விகாவின் தரப்பில் நியாயமிருக்கிறது. எனவே, யாஷிகா இதுகுறித்து விசாரிக்கிறார்.  ஐஸ்வர்யா அப்போதும் இறங்கி வரத் தயாராக இல்லை. யாஷிகாவின் வேண்டுகோளை ஏற்று ரித்விகாவும் ஜனனியும் நீச்சல்குளத்தில் இறங்குகிறார்கள். யாஷிகாவின் வேண்டுகோள் மட்டுமல்ல, இதனால் லக்ஸரி பட்ஜெட் போய்விடக்கூடும், அது தொடர்பான பஞ்சாயத்தில் தங்களின் பெயர் அடிபடக் கூடாது என்பதும் காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, இந்த விஷயத்தில் ஜனனி, ரித்விகாவின் தரப்பில் அதிக அளவு நியாயம் இருக்கிறது. 

‘லக்ஸரி பட்ஜெட் போனா எனக்கு பிரச்னையில்ல. நான் இனிமேல் தமிழ்ல பேச மாட்டேன். எனக்கு கொஞ்சம்தான் தமிழ் தெரியும். இதற்காக யார் கிட்டயும் போய் கெஞ்ச மாட்டேன்' என்று வீம்பின் உச்சியில் நின்றுகொண்டு அடம்பிடிக்கிறார் ஐஸ்வர்யா. அவர் ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசுவதால், இரண்டாவது சைரனும் அடிக்கிறது. இம்முறையும் யாஷிகாவும் சென்றாயனும் குளத்தில் குதிக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து இளிச்சவாயாக இருக்க முடியாது என்கிற கோபத்தில் ஜனனி செல்லவில்லை. ரித்விகாவையும் செல்லக்கூடாது என்று தடுத்துவிடுகிறார். விஜியும் பாலாஜியும் இதற்கு எப்போதுமே முன்வரத் தயாராக இல்லை. படுக்கையிலிருந்து எழுந்த வந்த மும்தாஜ். ‘முதல் சைரன் அடிச்சவுடனேயே குதிச்சிருக்கணுமே’ என்று எதையும் விசாரிக்காமல் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறார். வந்த நாள் முதலே உடல்நலத்தைக் காரணம் காட்டி நீச்சல் குளத்தில் இறங்காமலேயே சாதிப்பவர், இது குறித்து மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லாமல் அடக்கி வாசிக்க வேண்டாமா?

“மேடம் சொன்னா உடனே செஞ்சுடணுமா?” என்று விஜியும் பாலாஜியும் இதுகுறித்து கோபிப்பதில் நியாயம் இருக்கிறது. இரண்டாவது சைரன் அடித்தாலும் ஐஸ்வர்யாவுக்கு அதுகுறித்து எவ்விதக் கவலையும் இல்லை. தன்னுடைய கோபமும் அகங்காரமும் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க வந்த யாஷிகாவிடமும் தன் கோபத்தைக் காட்டுகிறார் ஐஸ்வர்யா. ‘புரியாத புதிர்’ திரைப்படத்தில் 'I know.. I know’ என்று ரகுவரன் வெறியுடன் கத்துவதைப் போன்று வெறியுடன் சொன்னதையே திருப்பிச் சொல்லி கத்துகிறார். ‘தப்பு உன் பக்கம் இருக்கும்போது நீதானே அவங்ககிட்ட போய் கேட்டிருக்கணும்’ என்கிற யாஷிகாவின் நியாயத்தை காது கொடுத்துக் கேட்க ஐஸ்வர்யா தயாராக இல்லை. ஆத்திரம் கண்ணை மறைக்க யாஷிகாவிடமும் சண்டை போடுகிறார். 

ஒரு spoiled child-க்கான குணாதிசயங்கள் அத்தனையும் அவரிடம் தென்படுகின்றன. மேலும், பிக்பாஸ் வீட்டு அழுத்தங்கள் காரணமாக  மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது. இந்த வாரம் அவர் வெளியேற்றப்படுவது மற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஐஸ்வர்யாவுக்கே கூட நல்லதுதான். தன் தாயின் வருகைக்குப் பின், ‘அத்தனை எதிர்மறைத்தன்மையும் அகன்றுவிட்டது. இனி இந்த விளையாட்டை நம்பிக்கையுடன் விளையாடுவேன்’ என்று அவர் முன்னர் அளித்த வாக்குறுதி, தற்காலிகமானதாகத் தெரிகிறது. ‘இன்னொரு சான்ஸ் கொடுங்க’ என்று கதறியழுததையும் மறந்துவிட்டார். உணர்ச்சிக்கு எளிதில் அடிமையாகிவிடும் ஐஸ்வர்யாவைப் போன்றவர்கள் பிக் பாஸ் விளையாட்டுக்குப் பொருந்தாதவர்கள். 

பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்ல, வெளியுலகிலும் கூட ஐஸ்வர்யாக்களின் மீது நம்முடைய கோபம் தற்காலிகமாக இருக்கலாமே ஒழிய, அவரை நிரந்தர விரோதியாகப் பார்ப்பது முதிர்ச்சியற்ற அணுகுமுறை. இவரைப் போன்றவர்களுக்கு தேவை அன்பும் அரவணைப்பும் மட்டுமே. மஹத்தைக்கூட இந்த வரிசையில் சேர்ப்பேன். ‘ஏன் ஐஸ்வர்யாவுக்கு மட்டும் இந்தச் சலுகையும் கரிசனமும்? மற்றவர்களும் இதேபோன்ற அழுத்தத்தில்தானே இருக்கிறார்கள்... அவர்களுக்கும் சொந்தப் பிரச்சினைகள் இருக்காதா?” என்று நினைக்கப்பட்டால் அது நியாயமே. 

ஒரு தாய்க்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் பலவீனமான, வெள்ளந்தியான, மந்தபுத்தியுள்ள பிள்ளைக்கே அந்தத் தாய் அதிக கவனத்தையும் முக்கியத்துவத்தையும் தருவார். இதற்காக மற்றவர்களின் கோபத்தையும்கூட சம்பாதித்துக்கொள்வார், சகித்துக்கொள்வார், இது இயல்பானது. யாருக்கு அதிக அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறதோ, அவருக்கு அதைத் தருவதுதான் நிபந்தனையற்ற அன்பின் முக்கியமான பண்பு.

பிக் பாஸ் வீட்டின் இதர போட்டியாளர்களுக்கும் அவரவர்களின் பிரச்னைகள் உண்டுதான். பாலாஜிக்கு விவாகரத்து  மற்றும் மகளைப் பிரிந்திருப்பது போன்று மற்றவர்களுக்கும் இருக்கக்கூடும். ஆனால், பெரும்பாலோனோர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். குடும்பத்தோடு வாழ்கிறவர்கள். அது சார்ந்த தன்னம்பிக்கை கொண்டவர்கள். ஆனால். வேற்றுக் கலாசாரத்தில் இருந்து வந்தவர்களின் மனச்சிக்கல் பிரத்யேகமானது. யாஷிகாவும் இதைப் போன்றவர் என்றாலும் அவர் நிதானமான போக்கும் சிக்கலான சூழலைக் கையாளும் சாமர்த்தியமும் உள்ளவர். மும்தாஜுக்கு அவரது குடும்பத்தின் அன்பு பக்கபலமாக இருக்கிறது. 

ஐஸ்வர்யாவின் நிலை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. பொருளீட்டுவதற்காக தன் குடும்பத்தை விட்டு தொலைதூரத்திலிருந்து இன்னொரு கலாசார சூழலில் வந்து காலூன்றுவதற்காக தனிமையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்.  வீட்டுக்கு மாதா மாதம் பணம் அனுப்பவேண்டிய சிக்கல் இருக்கிறது. இதன் பின்னால் உணர்ச்சிகரமான மிரட்டல்கள் இருக்கின்றன. தந்தையின் அரவணைப்பும் இல்லை. இதுபோன்ற சூழலில் வளரும் பிள்ளைகள், மனச்சிக்கல்களும் தாழ்வுணர்வும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் பிழைகளை, இந்தப் பின்னணிகளோடு இணைத்துப் புரிந்துகொண்டு அரவணைப்பது ஒருவரின் பெருந்தன்மை. 

“என்னய்யா இது, ஒரு போட்டியில் இதையெல்லாமா பார்த்துக்கொண்டிருப்பார்கள்?’ என்று தோன்றினாலும் அது நியாயமே. ஆனால் இது ஓட்டப்பந்தயம் போல உடல் தகுதியை மட்டும் வைத்து நிகழத்தப்படுவதல்ல. மனித உணர்வுகளும் அவர்களின் அகச்சிக்கல்களும் பின்னிப் பிணைந்த விநோதமான விளையாட்டு. எனவே இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தச் சூழலில், இணங்க முடியாத ஐஸ்வர்யா வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கமல் குறிப்பிட்டது போல ‘காக்கும் கரத்தின்’ அதிர்ஷ்டம் அவரைத் தொடர்ந்து காப்பாற்றியிருக்கிறது. இனிமேலும் அது நடக்காது என்றே தோன்றுகிறது. அவர் வெளியேற்றப்படுவதில் உள்ள நியாயத்தை வலியுறுத்தும் அதே சமயத்தில், அவரை வில்லியாகக் காணாமல், அவருக்குத் தர வேண்டிய அரவணைப்பையும் அன்பையும் மட்டும் உடன்படுவோர் ஏற்கலாம். உடன்படாதோர் மறுக்கலாம். இது அவரவர்களின் நியாயவுணர்ச்சியைப் பொறுத்த விஷயம். 

**

வேறென்ன? யாஷிகாவின் தலைமைப் பொறுப்பு முடிவடைவதால், புதிய தலைவருக்கான போட்டி நடந்தது. ஒரு சாய்பலகையின் மீது ‘CAPTAIN’ என்ற வார்த்தையை அடுக்க வேண்டும் என்பது சவால். மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களே வெல்ல முடியும். அந்த பண்பு நிறைந்த ரித்விகா இதில் வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். ‘போன் பூத்’ டாஸ்க்கில் அவருக்கு நேர்ந்த இழப்பு இவ்வகையில் சமனாக வேண்டும் என்று கருதினேன். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

“நான் போய் விட்டாலும் யாஷிகாவை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று மும்தாஜிடம் ஐஸ்வர்யா வைக்கும் வேண்டுகோள் நெகிழ்வானது. பயங்கரமாக அடித்துக்கொண்டாலும் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் மறுபடியும் இணைந்துகொண்டார்கள். அடுத்த வார நாமினேஷன் பற்றிய உரையாடல்கள் இப்போதே தொடங்கிவிட்டன. விஜியை குறி வைத்திருக்கிறார் மும்தாஜ். பாலாஜிக்கு அது குறித்தான அதிருப்தி இருக்கிறது. 

“நான் இந்த வாரம் போயிடுவேன்னு சொன்னீங்களாமே?” என்று மும்தாஜிடம் மறுபடியும் கோபித்துக்கொள்கிறார் ஐஸ்வர்யா. உண்மை நிலையும் அதுதானே? இது ஏன் அவருக்குப் புரியவில்லை? வீடே ஒட்டுமொத்தமாக எதிர்நிலையில் நின்றபோது தன்னை அரவணைத்துக்கொண்ட மும்தாஜின் அன்பை இத்தனை சீக்கிரம் நிராகரிக்கும் சிறுபிள்ளைத்தனத்தை ஐஸ்வர்யா தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறார். 

இந்த வாரம் நடந்த சர்ச்சைகள் நாட்டாமைக்கு பெரிய தீனிதான். சும்மாவே ஆடும் அவர், இத்தனை பெரிய சலங்கையைக் கொண்டு அனைத்து நடனங்களையும் நிச்சயம் ஆடிவிடுவார். எனவே, நல்ல விருந்தொன்று வார இறுதியில் காத்திருக்கிறது என நம்பலாம்.