Published:Updated:

பிக்பாஸ் டார்ச்சர்லயே இதுதான் பெரிய டார்ச்சர்... பாவம், விட்ருங்க! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
பிக்பாஸ் டார்ச்சர்லயே இதுதான் பெரிய டார்ச்சர்... பாவம், விட்ருங்க! #BiggBossTamil2
பிக்பாஸ் டார்ச்சர்லயே இதுதான் பெரிய டார்ச்சர்... பாவம், விட்ருங்க! #BiggBossTamil2

ஒரு மகிழ்ச்சியான தகவலுடன் இந்தக் கட்டுரையை துவங்குகிறேன். நீங்கள் விரைவில் வாசித்து முடித்துவிடும்படி இன்றைய பிக்பாஸ் கட்டுரை சிறியதாகத்தான் இருக்கும். (‘நீங்கள் எழுதாமல் இருந்தால் நாங்கள் இதைவிடவும் மேலதிக மகிழ்ச்சியுடன் இருப்போம்’ என்கிறவர்களை பெருந்தன்மை புன்னகை). வேறென்ன செய்ய? இன்று பிக்பாஸ் வீட்டில் குறிப்பிடும்படி ஒரு சம்பவமும் நடக்கவில்லை. 

‘கொடும கொடுமன்னு கோயிலுக்குப்போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்ஜிங்குன்னு ஆடுச்சாம்’ என்றொரு பழமொழி உண்டு. (சிநேகனின் பாணியில் சொன்னால் ‘சொலவடை’). அதுபோல் ஏற்கெனவே ‘ஒரு மார்க்கமாக’ சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் புதியவர்கள் நுழைந்தால் அது சுவாரஸ்யமாக இருக்கும் என்று பார்த்தால் அவர்கள் மேலும் அசுவாரஸ்யப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிக்பாஸின் இந்த திட்டத்தை மெகா தோல்வி எனலாம். 

இம்சையான விருந்தினர்கள் நம் வீட்டிற்கு வந்தால் ‘எப்போதடா கிளம்புவார்கள்’ என்று உள்ளுற தவிப்புடன் காத்துக்கொண்டிருப்போம் அல்லவா? அது போலவே பிக்பாஸ் சீனியர்கள் போடும் மொக்கையைத் தாங்க முடியாமல் ‘கிளம்பினால் தேவலை’ என்று தோன்றி விட்டது. சீஸன் 2 போட்டியாளர்களை கடுப்பேற்றவும் உத்வேகப்படுத்தவுதான் இவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை. ஆனால் இவர்கள் போடும் திட்டம் எல்லாம் ‘சிரிப்பு போலீஸ்’ மாதிரி ஃபணால் ஆகி விடுகிறது. 

‘வெள்ளைச்சாமி மறுபடியும் பாட ஆரம்பிச்சிட்டான்’ என்பது மாதிரி சிநேகன் மறுபடியும் கவிதை சொல்ல ஆரம்பித்து விட்டார். ஐஸ்வர்யாவைப் பற்றி இவர் ஒரு உருக்கமான கவிதையொன்றை சொல்ல, பாவம் அதற்கு புரியாமல் “தேமே’ என்று அமர்ந்து இளித்துக் கொண்டிருந்தது. எத்தனை பார்வையாளர்களின் காதுகளில் ரத்தம் வந்ததோ?

‘அடிச்சுக்கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க’ காமெடியை காப்பியடித்து ஜனனியை ‘சோதனை எலி’யாக்கி இவர்கள் செய்ய முயன்ற விஷயங்கள் எல்லாம் ‘prank’ என்றால் அந்த வார்த்தையின் மதிப்பே போய் விடும். ‘இது இட்லின்னா சட்னி கூட நம்பாது’ மோமெண்ட். திடீரென்று யாரோ கூப்பிடுவது போல வையாபுரி வெளியே ஓட பெரும்பாலோனோர் கவனிக்கவில்லை. ‘சும்மா விளையாடறாங்க’ என்று சேம் சைட் கோல் போட்டார் சுஜா. (இவங்களையெல்லாம் வெச்சுக்கிட்டு ஒழுங்கா ஒரு கொலைகூட பண்ண முடியாது!). ஜனனியின் ஓவர் பெர்பாமென்ஸூக்கு ஆஸ்கர் கூட கிடைக்கலாம். 

மும்தாஜூக்கு இந்த வீட்டில் அளிக்கப்படும் தனிப்பட்ட சலுகைகளை ஆராயத் துவங்கினால் ‘ஜூனியர் விகடனில்’ ஒரு தொடர் கட்டுரையாகவே எழுதலாம் போலிருக்கிறது. அத்தனை ‘திடுக்கிடும்’ தகவல்கள் வெளிவருகின்றன. அவருக்காக பிரத்யேகமாக உபயோகப்படுத்தப்படும் ‘ஆலிவ் ஆயில்’ சமாச்சாரம் நமக்குத் தெரியும். பாத்ரூமில் அவருக்கென்று ‘தனி ஏரியா’ அமைக்கப்பட்டிருப்பதெல்லாம் ரொம்பவும் ஓவர். அடுத்த முதல்வர் ஆவதற்கான அடையாளங்கள் எல்லாம் மும்தாஜிடம் தெரிகின்றன. ஆரத்தி கேட்டதைப் போல ‘இதையெல்லாம் பிக்பாஸ் எப்படி அனுமதித்தார்?” ஒரு போட்டியாளருக்கு இத்தனை தனிப்பட்ட சலுகைகள் வழங்கப்படுவது இந்தப் போட்டியின் ஆதார தன்மையையே சிதைத்து விடும். (பிக்பாஸ் மும்தாஜ் ஆர்மியைச் சேர்ந்தவரோ?!) பிக்பாஸ் வீட்டில் மும்தாஜ் உண்மையிலேயே ‘ராஜமாதாவாக’த்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. 

‘அழுக்குத்தண்ணியை தலையில் ஊற்றியது, தலையில் முட்டை உடைத்தது’ போன்ற சாகசங்களுக்காக ஆர்த்திக்கு ‘வீரசக்ரா விருது” ஏதேனும் இந்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும். மேடம் அதை எல்லோரிடமும் சொல்லி சொல்லி சந்தோஷமாக அலுத்துக் கொள்கிறார். ‘அந்தக் காலத்துல எல்லாம்” என்று சீனியர்கள் செய்யும் வழக்கமான அலப்பறைகள். ஆனால் சமயங்களில் பிக்பாஸையே ஆர்த்தி கலாய்த்துக் கொண்டிருந்தது சுவாரஸ்யம். “பாலாஜி பிரஷர் குக்கர் மாதிரி. மேலயும் விசில் வரும். கீழயும் விசில் வரும்’ என்றது ஒருமாதிரியான வில்லங்க நகைச்சுவை. 

ஜனனிக்கு, தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களே தெரியவில்லை. ‘எல்கேஜி’ பாப்பா மாதிரி சொல்லித்தர வேண்டியிருக்கிறது. ‘அன்று ஊமைப் பெண்ணல்லோ” என்ற பாடலில் வரும் ஜெமினி, சாவித்திரி மாதிரி, சிநேகன் ஜனனிக்கு சொல்லித் தந்து கொண்டிருந்தார். மனிதர் எந்தவொரு சான்ஸையும் விடுவதில்லை. இந்த லட்சணத்தில் ‘தமிழ்ப்பெண்கள்’ ஜெயிக்கணும் என்று ஜனனி அலட்டுவதெல்லாம் அவல நகைச்சுவை. (‘ச -ன்னா’ வும் வராது, ‘ஷ-ன்னா’வும் வராது, பேர் மட்டும் சுப்ரமண்ய பாரதி!). நல்லவேளை, ‘தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது, யார் அங்கிள்?” என்று ஜனனி கேட்டிருந்தால் சிநேகனின் முகம் மாறியிருக்கும். (துபாய்ல நீ என்ன வேலைப்பா செஞ்சிட்டிருந்தே?!). ஜனனியின் ஆடையில், உயிர், மெய் எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருந்தன. புறவயமாக மட்டுமே ‘தமிழ் அடையாளத்தை’ உணர்ச்சி பொங்க கடைப்பிடிக்கும் சில தமிழர்களின் போலித்தனத்தின் குறியீடாக அது இருந்தது. 

‘ஸ்ட்ரெஸ் இருந்ததால.. ஓவியா பாதிலயே போயிட்டாங்க. ஆனா அவங்களுக்கு வெளிய பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. அது அவங்களுக்கு அப்ப தெரியாது. சீஸன் 2-ல, முதல் நாள் இங்க வரும் போது இதையே அவங்க சொன்னாங்கள்ல.. அதனால நீ பிரேக்டவுன் ஆயிடாம தைரியமா விளையாடணும்” என்று ஐஸ்வர்யாவிற்கு டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் காயத்ரி.  “கமல் சார் பேசறது எனக்கு பாதி  புரியலை” என்றார் ஐஸ்வர்யா பரிதாபமாக. (எங்களுக்கும் அதே நிலைமைதான் ஐஸூ! உங்களுக்காவது பாதியாவது புரியுது!) ‘அப்ப எனக்கும் நெறய பேன்ஸ் இருக்காங்களா?” என்று ஆவலாக கேட்டார் ஐஸ்வர்யா. அப்போதைய முகபாவத்தைக் காண்பித்திருந்தால் காமெடியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. புகையறை என்பதால் கதவுக்கு வெளியே காமிரா தேவுடு காத்துக் கொண்டிருந்தது.

**

‘திரும்பிப்பார்க்கும் போது நாம் இந்த வீட்டில் பட்ட வேதனைகள்லாம் எத்தனை சுகமா இருக்குதுல்ல” என்று சிநேகன் nostalgia மூடில் அனத்திக் கொண்டிருக்கும் காட்சியோடு இன்றைய நாள் துவங்கியது. (கவிஞர்கள்னாலே இப்படித்தான் வானத்தைப் பார்த்து எதையாவது பேசிட்டு இருக்கணுமா?!) ‘போட்டுத் தாக்கு.. போட்டுத் தாக்கு’ என்ற பாடல் ஒலித்தது. சீஸன் 1 போட்டியாளர்களுக்கான குறியீடு போல. அவர்கள் அப்படி எதையும் போட்டுத் தாக்கவில்லை. ‘கூடிக் கும்மியடிப்பது’ என்பதை வார்த்தைகளில்தான் பார்த்திருக்கிறேன். அதைப் புறவயமாக இன்று பிக்பாஸ் வீட்டார் கூடி நடனமாடும் போதுதான் உணர்ந்தேன். 

‘டாஸ்க் செய்ய வேண்டும், வீட்டு வேலை செய்ய வேண்டும்’ என்றால் ‘இங்க வலி அங்க வலி’ என்று முனகும் மும்தாஜ், ‘ஹீல்ஸ் செருப்பு போடுவது எப்படி?’ என்கிற வரலாற்றுச் சந்தேகம் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்தது. அதைப் பற்றி நைசாக விசாரித்தார் காயத்ரி. “மூட்டு தேய்மானத்துக்கு அப்புறம்தான் ஹீல்ஸ் போடுகிறேன்’ என்கிற விநோதமான மருத்துவத்தைச் சொல்லி காயத்ரிக்கு பல்பு கொடுத்தார் மும்தாஜ். 

‘இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் போன்று பல நாடுகளில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஆதரவு தந்தாங்க’ என்று கோபால் பல்பொடி விளம்பரம் போல் காமிராவின் முன்னால் கண்ணீர் மல்கிக் கொண்டிருந்தார் சிநேகன். சீனியர்களை ‘குழந்தைகளாக’ நினைத்து அவங்க செய்யப் போற தப்புகளை மன்னித்து விடணுமாம். (உலகத்திலேயே தாடியோட எந்தக் குழந்தையும் இல்லை கவிஞரே!).

தயிர், ஆலிவ் ஆயில் உள்ளிட்ட பொருட்களை ஸ்டோர் ரூமிற்கு கொண்டு செல்வதின் மூலம் ஜூனியர்களை பதட்டப்பட வைக்க முடியுமா என்று பார்த்தார்கள் சீனியர்கள். ‘வடபோச்சே’ மாதிரி ‘நெய் போச்சே’ என்று கவலைப்பட்டார் ஜனனி. ‘எனக்கென்ன, ஆலிவ் ஆயில் போச்சுன்னா அது எனக்கு பிரச்சினையில்லை. பிக்பாஸூக்குத்தான் பிரச்சினை’ என்று இதை அலட்சியமாக டீல் செய்தார் மும்தாஜ். ஆனால், ‘அவர்களுக்கு தந்திருக்கும் பொருட்களை எடுக்காதீர்கள்’ என்று பிக்பாஸ் சொன்னதின் மூலம் சீனியர்களுக்கு பல்பு கிடைத்தது. 

‘வேண்டுமானால் பொருட்களை ஒளித்து வையுங்கள். சுவாரசியம் என்று கருதும் எதையும் நீங்கள் செய்யலாம்” என்றும் பிக்பாஸ் அறிவுறுத்தினார். (ஆக.. பிக்பாஸ், டாஸ்க் –குன்னு எதையும் சொந்தமா யோசிக்கறதில்ல. மத்தவங்க முதுகுலயே சவாரி செய்யறது!).

‘ஏழாங்கல்’ பாணியில் சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் இடையில் ஒரு போட்டி நடந்தது. காபி கோப்பைகளை ஒரு அணி அடுக்கிக் கொண்டிருக்கும் போது பந்துகளை எறிந்து இன்னொரு அணி அதை கலைக்க வேண்டும். இதில் ஜூனியர்கள்தான் ஜெயித்தார்கள். என்ன இருந்தாலும் சீனியர்கள் வயதானவர்கள் அல்லவா? தங்கள் முறை வந்த போது போர்வையை எடுத்து வந்து மறைத்தார்கள் ஆர்த்தியும், வையாபுரியும். (lateral thinking என்பதற்கும் ‘அழுகிணி ஆட்டம்’ என்பதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது).

‘தமிழ்ப் பொண்ணுங்க’தான் ஜெயிக்கணும்-ன்ற மாதிரி பேசாதீங்க. யார் வேணா ஜெயிக்கலாம். நாம் இந்தியர்கள் இல்லையா?” என்று சுஜா உணர்ச்சிகரமாக முழங்கியதில் பத்து அர்ஜூன் படங்களை சேர்த்து பார்த்த வெறி உள்ளுக்குள் ஏறியது. ‘தமிழ்த் திரைப்படங்களில்தான் தமிழ்ப் பொண்ணுங்களை ஏத்துக்க மாட்றீங்க. இங்கயாவது ஜெயிக்கட்டுமே?” என்றார் காயத்ரி. (தமிழ் சினிமாவின் இயக்குநர்களின் பார்வைக்கு). 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

“கண்டிப்பா யாஷிகா ஃபைனல் வருவாங்க. நீயும் எப்படியாவது அங்க நிக்கணும்.. னு மைக்கை கழட்டி வெச்சிட்டு ஜனனி கிட்ட சொன்னேன்” என்றார் ரித்விகா. (நோட் திஸ் பாயிண்ட் பிக்பாஸ்). “ரித்விகா இறுதிப் போட்டியில் ஜெயிப்பது மாதிரி கனவு கண்டேன்” என்றார் சுஜா. (ஆடு காணாமப் போற மாதிரி கனவு வந்தது). “உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணவங்க யாரு?” என்ற கேள்விக்கு ‘ஐஸ்வர்யாதான். நாம் யாரை ரொம்ப லவ் பண்றமோ, அவங்க ஹர்ட் பண்றதுதான் அதிகம் வலிக்கும்” என்று யாஷிகா சொன்னது மிக நுட்பமான உண்மை. 

**

சில தமிழ்ப் பழமொழிகளை வைத்து இரண்டு அணிகளும் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்ளும் டாஸ்க் நடந்தது. (இதை பழமொழி டாஸ்க் என்பதை விட ‘பழிமொழி’ டாஸ்க் எனலாம். அத்தனை கலாய்த்தல்கள் இருந்தன).
இதற்கான பழமொழிகளை தேர்ந்தெடுக்கும் போது மும்தாஜூக்கும் ஐஸ்வர்யாவிற்கும் முட்டிக் கொண்டது. ஏதோவொரு அக்கறையில் ஐஸ்வர்யாவின் முன்மொழிதலை மும்தாஜ் தடுக்க, வழக்கம் போல் சிறுபிள்ளைத்தனமாக கோபப்பட்டார் ஐஸ்வர்யா “இனிமே நீங்க பேட்டா –ன்னு கூப்பிட வேண்டாம். உங்க அன்பு வேணாம்’ என்று பழைய புராணத்தைப் பாட “you don’t deserve that’ என்று எரிச்சலானார் மும்தாஜ். இதைப் போலவே ஜனனிக்கும் பாலாஜிக்கும் ஏதோ முட்டிக் கொண்டது. ‘இதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்’ என்று எரிச்சலடைந்தார் பாலாஜி. ஆனால் இந்த மோதல்கள் செயற்கையாக இருப்பதாகத் தோன்றியது. 

‘மொசப் பிடிக்கற நாயை மூஞ்சைப் பார்த்தாலே தெரியும்” என்று பாலாஜிக்கு வழங்கப்பட்ட விருது நியாயமானதுதான். ‘என் மேல தண்ணியை மட்டும் ஊத்தட்டும். அப்புறம் இருக்கு” என்று ‘வாடா.. வாடா.. என் ஏரியாவிற்கு வாடா’ என்கிற காமெடி ரவுடியாகவே இருக்கிறார் பாலாஜி. மறுப்பேதும் சொல்லாமல் இந்த விருதை அவர் வாங்கிக் கொண்டார். ‘சக்தியில்லையேல் சிவம் இல்லை’ விருதை சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டார் காயத்ரி. ‘எரியறதைப் பிடுங்கினா கொதிக்கறது அடங்கும்’ என்கிற பழமொழி, ஐஸ்வர்யாவைத் தவிர வேறு எவருக்கும் பொருந்த முடியாது. யாஷிகா இல்லையென்றால் தண்ணீரில் இருந்து வெளியே எறியப்பட்ட மீன் போலாகி விடுவார் ஐஸ்வர்யா. 

‘மாமியார் உடைச்சா மண்குடம்’ பழமொழி விஜிக்குப் பொருந்தும். தன் அணி செய்யும் தவறுகளை அவர் கண்டுகொள்வதில்லை. தமிழ்க்கூட்டணி விசுவாசம். “ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்’ ரித்விகாவிற்கு சாலப் பொருத்தம். ‘நல்லவரா, கெட்டவரா” என்று கண்டுபிடிக்க முடியாதவாறான ஒரு பர்ஃபாமென்ஸ். 

‘தவளை தன் வாயால் கெடும்’ – பழமொழியும் ஐஸ்வர்யாவிற்கென்றே உருவாக்கப்ட்டது. “ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்கிற ‘பழமொழியை’ மறுத்து விவாதம் செய்தார் மும்தாஜ். போலவே ‘கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை’ பழமொழி விருதையும் மறுத்துப் பேசினார். 

‘உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்கிற பழமொழியை மறுத்தார் சுஜா. ஓவியாவின் நகல் என்று தன் மீது சுமத்தப்படுகிற புகார் கடந்தகாலத்துக்குரியது என்றும் அதில் உண்மையில்லை என்றும் வாதாடினார். ஆனால் வந்த புதிதில் இவர் ஓவியாவைப் போன்று நகலெடுக்க முயன்றார் என்பதுதான் உண்மை. 

‘அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது’ என்கிற பழமொழியுடன் நானும் இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.