Published:Updated:

`தடவியலாளர்’ சினேகன் இஸ் பேக்... மிஸ் யூ ஓவியா! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்

DAY 87- பிக்பாஸ் வீட்டில் `இன்று' நடந்தது என்ன?

`தடவியலாளர்’ சினேகன் இஸ் பேக்... மிஸ் யூ ஓவியா! #BiggBossTamil2
`தடவியலாளர்’ சினேகன் இஸ் பேக்... மிஸ் யூ ஓவியா! #BiggBossTamil2

‘சீஸன் 1 போட்டியாளர்களால் நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்த முடியவில்லை’ என்கிற நிலைமை இன்றும் தொடர்கிறது. “என்னடா மார்க் இது, கேவலமா இருக்கு” என்று குதிக்கும் தகப்பனிடம், “அப்பா... இது உங்களோட பழைய ரிப்போர்ட் கார்டு. எதையோ தேடும்போது கிடைச்சுது” என்று மகன் சொல்லும் கதையாக, வண்டி வண்டியாக அறிவுரை சொல்லும் சீனியர்களும் கடந்த சீஸனில் அனைத்து அலப்பறைகளும் செய்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியங்கள் இன்று வெளிவந்தன.

“கமல் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா, நீங்க செய்யற தப்புக்கெல்லாம் அவர் மனம் உருகி மக்கள் கிட்ட பாவமன்னிப்பு கேட்கிறார் தெரியுமா? அவர் முன்னாடி போய் கால்மேல் கால்போட்டு சில போட்டியாளர்கள் உட்கார்ந்திருக்கீங்க... தனிப்பட்ட அளவில் எனக்கு இது கஷ்டமாக இருக்கிறது” என்று கண்ணீர் மல்கி மூக்கைச் சிந்தினார் சினேகன். ஐந்து செளகார் ஜானகியையும் மூன்று பண்டரி பாயையையும் கலந்த பிம்பமான மும்தாஜ், ‘எப்போதடா கண்கலங்க வாய்ப்பு வரும்’ என்று காத்துக்கொண்டிருந்ததற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் இதற்கு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிக்க, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த சினேகனும் அருகில் சென்று ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார். ‘பாட்டுக்குப் பாட்டு’ போட்டி மாதிரி சினேகனுக்கும் மும்தாஜுக்கும் இடையில் ‘ஒரு அழுகாச்சி போட்டி’ நடத்தலாம்போல. முணுக்கென்றால் கண் கலங்கிவிடுகிறார்கள். 

`தடவியலாளர்’ சினேகன் இஸ் பேக்... மிஸ் யூ ஓவியா! #BiggBossTamil2

பெரியவர்களின் முன்னால் கால்மேல் போட்டு அமர்வது நம் கலாசாரம் அல்ல என்பது உண்மைதான். இதன் மூலம்தான் ஒருவருக்கு நாம் மரியாதை தருகிறோம் என்பதெல்லாம் பழைமைவாதம். மேலும், கமல் இதையெல்லாம் தாண்டிய முற்போக்குவாதி. 

ஏற்கெனவே இந்தத் தொடரில் குறிப்பிட்ட சம்பவம்தான் இது. கமல்ஹாசனின் ரசிகர் மன்ற மேடையில் கலந்துகொண்ட எழுத்தாளர் ஜெயகாந்தன், ஞானச் செருக்குடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தபோது, ‘என் தலைவன் முன்னாடியா கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்க, கீழே போடுய்யா” என்று ஒரு ரசிகர் கூச்சலிட்டவுடன் கமல் அவரைக் கூப்பிட்டுக் கண்டித்த சம்பவம் இருக்கிறது. ‘அவர் கால்.. அவர் போட்டுட்டு இருக்கார். உனக்கென்னெய்யா பிரச்னை” என்றும் கேட்டிருக்கிறார். 

‘சாமியே சைக்கிள்ல போராறாம், பூசாரிக்கு புல்லட்டு கேக்குதாம் என்கிற கதையாக, ஒரு பிரபலத்தின்கூட இருக்கிற ஆசாமிகளே அதிக பந்தாவை ஏற்படுத்தி அந்தப் பிரபலத்தின் மீது எதிர்மறையான பிம்பம் உண்டாகிவிட காரணமாகிவிடுவார்கள். 

சினேகன் கண் கலங்கியதைக்கூட ஒருமாதிரி சகித்துக்கொள்ளலாம். ஆனால், வார இறுதியில் இதற்கு கமல் அளிக்கப்போகும் விளக்கத்தை நினைத்தால்தான் இப்போதே கலவரமாக இருக்கிறது. (குறிப்பிட்ட எபிஸோடுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது நானும்கூட கால் மேல்கால் போட்டுக்கொண்டிருந்தேன். மன்னியுங்கள், ஆண்டவரே!). 

இதில் கூடுதல் நகைச்சுவை என்னவென்றால், சீஸன் 1 நிகழ்ச்சியின் ஒரு நாளில் கமல் முன்பு சினேகனும் கால்மேல் கால் போட்டுதான் ஜம்மென்று அமர்ந்திருக்கிறார். (கவிதைக்குப் பொய் அழகு!).

**

86-ம் நாளின் சம்பவங்கள் தொடர்கின்றன. ‘அடிச்சுக்கூட கேப்பாங்க. சொல்லிடாத’ என்கிற டாஸ்க்கை ஜனனியை வைத்து சோதனை செய்யும் முயற்சியின் தொடர்ச்சியாக ‘உங்களுக்கு தரப்பட்ட டாஸ்க்கை எப்படியாவது முடிக்கணும்’ என்று பொதுச் சபையில் ஜனனிக்கு சினேகன் சொல்லிக்கொண்டிருக்க, அவரோ நடிகர் செந்தில் மாதிரி முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டிருந்தார். (ஓடாத படத்துக்கு எதற்கு கட்அவுட், தோரணம் எல்லாம்?)

`தடவியலாளர்’ சினேகன் இஸ் பேக்... மிஸ் யூ ஓவியா! #BiggBossTamil2

‘சாப்பிட்டுட்டு பேசலாமே. ஆறிப்போயிடும்’ என்று தோசை போட்டுக்கொண்டிருந்த ராஜமாதா, சினேகனைக் கூப்பிட, ‘பெரியவங்க பேசிட்டிருக்கமில்ல... ஊடால வந்து பேசிக்கிட்டு... கிறுக்குப் பய புள்ள’ என்பது மாதிரி பாலாஜி இதை ஆட்சேபித்தார். பிறகு, “நீ யார்கிட்ட வேணா பேசிட்டு போ... எனக்கென்ன… புதுசா வந்தவங்களுக்கு ஏத்த மாதிரி என்னால மாற முடியாது” என்று யாஷிகாவிடம் இதைப் பற்றி புறணி பேசிக்கொண்டிருந்தார் பாலாஜி. இந்த விஷயத்தில் இவர் மாறவே மாட்டார் போலிருக்கிறது. “பாதிப் பொருளை வேஸ்ட் பண்றா” என்று தன் செல்ல மகளான ‘ஜனனி’ பற்றியும் மற்றவர்களிடம் அங்கலாய்த்துக்கொண்டிருந்தார் பாலாஜி. அவர் புறணி பேசாத ஒரே நபர் பிக்பாஸ் மட்டும்தான் என்று நினைக்கிறேன். (அதையும் பேசிட்டாரோ, என்னமோ!).

“சீஸன் 1 ஆட்கள் எவ்வளவு ஸ்போர்டிவ்வா இருக்காங்க. நாம் ஏன் டாஸ்க்குன்னு வந்தா இப்படி பிறாண்டிக்கொள்கிறோம்” என்பதும் அவரது ஆதங்கம். ‘மொசப் பிடிக்கற நாய்’ என்கிற விருது அவரை ரொம்பவும் பாதித்திருக்கிறதுபோல. 

87-ம் நாள். ‘கண்டாங்கி... கண்டாங்கி... என்று விஜய் பாடிய பாடல். ஒரு புதிய சாக்லேட் பிராண்டைப் பற்றி சொல்லி ‘அந்தச் சாக்லேட் வேண்டுமென்றால் நான் சொல்லும் டாஸ்க்கை செய்யுங்கள்’ என்று பூச்சாண்டி மாதிரி ஆசை காட்டினார் பிக்பாஸ். அதை ஒரு கண்ணாடிப் பெட்டியில் போட்டு பூட்டி வைத்திருந்தார் ‘இந்தச் சாக்லேட்டுக்காக என் உயிரையும் தருவேன்’ என்றார் விஜி. ‘ஜெயிலுக்குப் போகக்கூட தயாரா இருக்கேன்” என்று பந்தா காட்டினார் ஆரத்தி. (பொண்ணுங்களை இம்ப்ரஸ் செய்ய நினைக்கற பாய்ஸ் நோட் செய்ய வேண்டிய பாயிண்ட் இது!).

சினேகனையும் ஐஸ்வர்யாவையும் இணைத்து மக்கள் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். மனிதரும் வந்த வாய்ப்பை விடாமல் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். காலையில் நடனமாடியபோதே ஐஸ்யர்வாவுக்கு பூவெல்லாம் தந்து தயாராக இருந்தார். இந்திப் படத்தின் நாயகன், நாயகி மாதிரி இருவரையும் ஆடச் சொல்லி (சினேகன் ஷாரூக்கானாம். என்னவொரு...) ஒரு துன்பியல் நாடகத்தை நடத்தினார்கள். புயலுக்குப் பின் அமைதியாக இருக்கிற ஐஸ்வர்யா பற்றி அவர்களுக்கு சரியாகத் தெரியவில்லைபோல. “ஐஸுவை சினேகன் பிள்ளையார் மாதிரி பூஜை பண்ணுவாரு. மூணாவது நாள் கிணத்துல தூக்கிப்போட்டுருவாரு” என்று பாலாஜி டைமிங்காக அடித்த கமெண்ட் சுவாரஸ்யம். உரையாடலின் இடையில் ‘hi bro’ என்று சினேகனை, ஐஸ்வர்யா சொல்லியதுதான் ஒரே ஆறுதல்.

ஐஸ்வர்யாவை சினேகன் தூக்கிக்கொண்டதைப்போல, வையாபுரியை பாலாஜி தூக்க நீண்ட நாள்களுக்குப் பிறகு, வீடு முழுவதும் கலகல உணர்வு வந்தது நல்ல விஷயம். 

**

சாக்லேட்டுக்கான ‘போட்டுத்தாக்கு’ டாஸ்க் நடந்தது. கடந்த சீஸனில் ரணகளமாக நடந்த டாஸ்க்தான் இது. ஓர் அணி பலூன்களை ஊதி பலகையில் ஒட்ட முயலும்போது, எதிர் அணி அதைத் தடுக்க வேண்டும். ‘நான் தடுக்கற வேலையைப் பார்த்துக்கறேன்” என்று சினேகன் அப்போதே ஆர்வமாக, ‘எதிர் டீம்ல லேடீஸா இருக்காங்க... எப்படித் தடுப்பீங்க” என்று விவரம் புரியாமல் கேட்டார் ஆரத்தி. (அதுதானே சினேகனின் ஆர்வத்துக்கு காரணம்.)

`தடவியலாளர்’ சினேகன் இஸ் பேக்... மிஸ் யூ ஓவியா! #BiggBossTamil2

போன்பூத் டாஸ்க் முடிந்து சில நாள்கள் கடந்தும் யாஷிகாவுக்கு உடைகளையும் ஒப்பனைப் பொருள்களையும் பிக்பாஸ் ஏன் திருப்பித் தரவில்லை என்று புரியவில்லை. குளோசப் காட்சிகளில் ஒப்பனையில்லாத யாஷிகாவைப் பார்க்கும்போது ரணக்கொடூரமாக இருக்கிறது. புடவையைக் கட்டிக்கொண்டு டாஸ்க்கில் ஓடுவதற்கும் அவருக்கு சிரமமாக இருந்தது, பாவம். இந்த டாஸ்க்கில் ஆண்களைத் தடுத்து நிறுத்துவதற்கு சங்கடப்பட்டார் மும்தாஜ். எனவே அந்தப் பணிக்கு அவர் வராமல் இருப்பதற்கான திட்டங்களை மற்றவர்கள் செய்து உதவினார்கள். ஆனால் ‘எல்லோரும் எல்லா விஷயங்களையும் செய்யும் படி இந்த டாஸ்க்கை கண்காணியுங்கள்’ என்று பிக்பாஸ், மும்தாஜுக்கு செக் வைத்தார். 

பழைய போட்டியாளர்கள் வந்ததில் இருக்கக்கூடிய நன்மை என்னவெனில், தங்களுக்குள்ள வேற்றுமைகளை மறந்துவிட்டு ஒன்றுகூட வேண்டிய கட்டாயத்துக்குள் சீஸன் 2 போட்டியாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். போட்டிக்கான உத்திகளைப் பற்றிப் பேசும்போது அவர்களுக்குள் இணக்கம் ஏற்படும் சந்தர்ப்பம் இருக்கிறது. 

மல்யுத்த போட்டி மாதிரி ஒருவர் மீது ஒருவர் உருண்டு புரண்ட இந்தப் போட்டி பார்ப்பதற்கே கலவரமாக இருந்தது. யார் மேலாவது விழுந்து பெரிய விபத்தை ஆரத்தி ஏற்படுத்திவிடுவாரோ என்று பயமாகவும் இருந்தது. ஜூனியர்களை விடவும் வயதான சீனியர்கள் இந்தப் போட்டியை ஆக்ரோஷமாக விளையாடினார்கள். சினேகன் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார். ஆனால், போட்டி முடிந்த பிறகு, பார்த்தால் அவர் உடல் முழுதும் நகக்கீறல்கள். வரிக்குதிரை மாதிரி ஆக்கி வைத்திருந்தார்கள். 

`தடவியலாளர்’ சினேகன் இஸ் பேக்... மிஸ் யூ ஓவியா! #BiggBossTamil2

ஆக்ரோஷமாக விளையாடிய வையாபுரியின் அளவுக்குக்கூட பாலாஜியால் செயல்பட முடியவில்லை. சுஜாவும் சினேகனும் அரண் போல் நின்றிருந்ததைத் தாண்டி அவரால் செல்ல முடியவில்லை. விதம்விதமாகக் கெஞ்சிப் பார்த்தார். ‘மொசப்பிடிக்கற’ விருது 2 கூட அவருக்கு கிடைக்கலாம் போலிருக்கிறது. “அவங்களை நேரா நின்னுல்லாம் தடுக்க முடியாது. நேரா கால்ல விழுந்துடலாம்” என்று ஜூனியர்கள் திட்டமிட்டபடி, யானையின் காலைப் பிடித்துக்கொண்ட முதலை மாதிரி சினேகனின் காலை வலுவாகப் பற்றிக்கொண்டார் மும்தாஜ். இந்தத் தள்ளுமுள்ளுவில் விஜயலட்சுமி நிலைகுலைந்து விழுந்தார். மற்றவர்கள் பதறி உதவிக்கு வந்தார்கள். தன் அணி வெற்றி பெறுவதற்காக அவர் செய்த நடிப்போ என்றுகூட முதலில் தோன்றியது. இல்லை, உண்மையாகவே காதில் அடிபட்டுவிட்டது போல. இந்த டாஸ்க்கில் சீனியர்கள் வென்றார்கள். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

**

“வந்ததுல இருந்து பார்க்கறேன். ரொம்ப அமைதியா இருக்கீங்க” என்று யாஷிகாவை விசாரிக்கத் தொடங்கினார் சினேகன். பெண்களுக்கு ஒரு துயரம் என்றால் முன்னணியில் வந்து நிற்கும் ஆத்மாவான சிநேகனுக்கு இந்தச் சந்தர்ப்பம் எல்லாம் அல்வா மாதிரி. ‘போன சீஸன்ல நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் தெரியுமா...' என்று கண்கலங்கத் தொடங்கிவிட்டார். “மத்தவங்க செஞ்ச தப்புயெல்லாம் என் மேல வந்து விழுந்தது. உண்மைன்னு நினைச்ச நபர்லாம் போலியாத் தெரிஞ்சாங்க. விளையாட்டுன்றதை தாண்டி இந்தக் கேமை என் வாழ்க்கையோடயும் கனெக்ட் பண்ணிக்கிட்டேன்’ என்று மெலிதாகக் கலங்கினார் யாஷிகா. `ஆறுதல் திலகம்’ என்கிற பட்டத்தை சினேகனுக்கு வழங்கலாம். 

‘கேள்விக்கு என்ன பதில்’ என்று அடுத்த நிகழ்ந்த டாஸ்க் சற்று சுவாரஸ்யமாக இருந்தது. முதல் சீஸன் மற்றும் இரண்டாம் சீஸன் தொடர்பான ‘குறும்படங்கள்’ திரையிடப்படும். சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் கருத்துகளைக் கூற வேண்டும். (நீண்ட நாள்கள் கழித்து ஓவியாவை வீடியோவில் பார்த்தபோது புல்லரித்துப் போயிற்று. ‘ஆமாம்... எனக்கு கொஞ்சம் பைத்தியம் இருக்கு” என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு மறுநிமிடமே சிவாஜி மாதிரி அவர் அழத்தொடங்கியபோது மனதின் உள்ளே ஒன்று உடைந்தது. உண்மையிலேயே அவங்க ஒரு தேவதை சார்!)

`தடவியலாளர்’ சினேகன் இஸ் பேக்... மிஸ் யூ ஓவியா! #BiggBossTamil2

ஓவியாவை தூங்க விடாமல் காயத்ரி, நமீதா, ஜூலி செய்த அழிச்சாட்டியங்களின் காட்சி ஒளிபரப்பானது. ‘சண்டை போடாதீங்கன்னு எங்களுக்கு அட்வைஸ் பண்ணீங்க. உங்க லட்சணம் சிரிப்பா சிரிக்குதே” என்று விஜி முன்வைத்த சரியான கேள்விக்கு ‘அப்ப நாங்க போட்டியாளர்கள். ஊருக்குத்தான் உபதேசம்’ என்று மொக்கையாக பதில் அளித்தார் காயத்ரி. “ஒரு தப்பு நாம செய்யும்போது தெரியாது. அப்புறமாத்தான் உணர்வோம். நாங்க உத்தமர்கள்னு சொல்லலை. நாங்களும் தப்பு பண்ணியிருக்கோம். நீங்களும் அதைச் செய்ய வேண்டாமுன்னுதான் அட்வைஸ் பண்றோம்” என்று சினேகன் சொன்னது பொருத்தமானதாகத் தெரிந்தது. 

‘ஒரு எபிசோட்லயே உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்’ என்று விசாரணை அறையில் விஜி அலப்பறை செய்ய, அதற்கு ஐஸ்வர்யா பதிலுக்கு வசைந்த காட்சி அடுத்து ஒளிபரப்பானது. ‘ஹிட்லர் டாஸ்க் பார்த்தும் எப்படி அவங்க கிட்ட தைரியமா பேசினீங்க?” என்று ஆரத்தி கேட்டதும், “நான் எப்பவுமே சண்டையை ஆரம்பிக்க மாட்டேன். வந்தா பதில் சொல்லாம விட மாட்டேன்” என்று தமிழ் சினிமா ஹீரோக்களின் கிளிஷேவான வசனத்தை சொன்னார் விஜி. “அந்த நாமினேஷன் டாஸ்க்ல தொடர்ந்து பல்வேறு விதமான கேள்விகளை எதிர்கொண்டேன். அந்த டென்ஷனில்தான் அப்படி ஆகிவிட்டது” என்றார் ஐஸ்வர்யா. “கூடயே இருந்தியே செவ்வாழ. நீயாவது புத்திமதி சொல்லக் கூடாதா’ என்று மும்தாஜின் கையைப் பிடித்து இழுத்தார் ஆரத்தி. “நான் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தியது போலவே விஜியையும் சமாதானப்படுத்தினேன்” என்று மும்தாஜ் அளித்த விளக்கத்தை மெலிதாக மறுத்து விஜி ஒரு பக்கம் பொங்கினார். தனக்கு ஆதரவாகத்தான் மும்தாஜ் பேசுகிறார் என்பதைக்கூட புரிந்து கொள்ளாமல் அவரின் மீது கோபத்தைக் காட்டி தன் சிறுபிள்ளைத்தனத்தை மறுபடியும் நிரூபித்தார் ஐஸ்வர்யா. பிறகு இரண்டு பேரையும் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வைத்தார் காயத்ரி. ஒப்புக்கு கட்டிக் கொண்டு விலகினார்கள்.

`தடவியலாளர்’ சினேகன் இஸ் பேக்... மிஸ் யூ ஓவியா! #BiggBossTamil2

கார்ப்பெட்டின் மீது நின்றுகொண்டிருக்கும் ஜூலியை தரதரவென்று ஓவியா இழுத்துச் செல்லும் காட்சி ஒளிபரப்பானது. ஜூலியின் மீது ஒருபக்கம் பரிதாபம் ஏற்பட்டாலும் இன்னொரு பக்கம் ஓவியாவின் அலப்பறையைப் பார்த்து சிரிப்பும் வந்தது. ஜூலி தனக்கு செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கு இப்படியாக ஓவியா பழிவாங்கினார் என்றாலும் அது ஓவர்தான். “சமாதானப்படுத்தும் கலையில் எப்படி சிறந்து விளங்குகிறீர்கள்” என்ற ரித்விகாவின் கேள்விக்கு "ஜூலிக்கு கவனஈர்ப்பு பிரச்னை இருந்தது. எவரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ நான் சமாதானம் செய்ய மாட்டேன். ஓவியா அப்போது மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். அவர் கன்னத்தைத் தாங்கி நான் சமாதானம் செய்த காட்சியை ஒருவர் ஓவியமாக வரைந்து அனுப்பியிருந்தார்” என்றார் சினேகன். (ஓவியாவுக்கே ஓவியமா?).

ஜனனிக்கும் மும்தாஜுக்கும் ஒருமுறை முட்டிக்கொண்ட காட்சி அடுத்து ஒளிபரப்பானது. “வீட்லகூட அவ அப்படித்தான். சண்டை வந்தா காதைப் பொத்திக்கிட்டு அங்க இருந்து நகர்ந்து போயிடுவா” என்று ஜனனியின் வீட்டார் அளித்த நேர்காணல் நினைவுக்கு வந்தது. மும்தாஜ் ஒரு காலத்தில் எத்தனை டெரராக இருந்தார் என்பதற்கான சாட்சியம் இது. “ஆம். அவசியப்படும் சந்தர்ப்பங்களில் ஆக்ரோஷமாகவும் துணிவாகவும் இருப்பேன்’ என்று விளக்கம் அளித்தார் மும்தாஜ்.

ஜூலிக்கும் ஆரத்திக்கும் நடந்த சண்டை அடுத்து வந்தது. “ஜூலி நடிக்கறாங்கன்னு நீங்கதான் முதல்ல சொன்னீங்க. எப்படி?” என்று ஆரம்பித்தார் மும்தாஜ். “ரத்தத்தைப் பார்த்து எப்படி ஒரு நர்ஸூக்கு மயக்கம் வர முடியும்” என்று சந்தேகம் வந்தது. அதை வைத்துதான் பேசினேன்” என்று தன் வழக்கமான அலப்பறைகளோடு பதில் சொன்னார் ஆரத்தி. ‘என்னால் அன்பாக நடிக்க முடியாது” என்று அவர் சொன்னது மும்தாஜ் மீதான குத்தலாக இருந்தது. 

`தடவியலாளர்’ சினேகன் இஸ் பேக்... மிஸ் யூ ஓவியா! #BiggBossTamil2

நாமினேஷன் செய்ய மறுத்த பாலாஜியின் காட்சி ஒளிபரப்பாகியது. ‘ஐயா. நாமினேஷன்னா என்னங்கய்யா?” என்று கஞ்சா கருப்பு சொன்ன வசனத்தைச் சொல்லி அவரைக் கிண்டலடித்தார் காயத்ரி. ‘அப்ப டென்ஷனா இருந்தேன்’ என்றார் பாலாஜி. 

“நாம் இங்கு ஒப்பந்தம் போட்டுத்தான் வந்திருக்கோம். எல்லா டாஸ்க்கையும் செய்யணும்” என்று ஆரம்பித்த சினேகன், கமல் முன்பு போட்டியாளர்கள் ‘கால்மேல் கால்போட்ட’ விவகாரத்தை ஆரம்பித்து ‘மக்கள்கூட இதற்கு கோபப்படறாங்க” என்று பார்வையாளர்களையும் இழுத்துப் போட்டார். காயத்ரியும் இதனுடன் இணைந்துகொள்ள, உணர்ச்சிவசப்பட்ட மும்தாஜ் பயங்கரமாக கலங்க ஆரம்பிக்க, கலவரமான பிக்பாஸ் இந்த டாஸ்க்கை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

“நீங்க இந்த வாரம் கிளம்புவீங்கதானே” என்று நம் மனதில் இருந்த அதே கேள்வியை ஐஸ்வர்யா, காயத்ரியிடம் கேட்பதோடு இன்றைய நிகழ்ச்சி முடிந்தது. 

இப்போதெல்லாம் ஒரு தொலைபேசி அழைப்பைச் செய்து முடித்துவிட்டு உடனே அடுத்த அழைப்பைச் செய்தவற்குக்கூட தயக்கமாக இருக்கிறது. ‘கால்மேல் கால்போட்ட’ குற்றமாக அது ஆகிவிடக் கூடாதல்லவா?