Published:Updated:

``என்னால பிராப்ளமே இல்லை... வயசுக் கோளாறு ஷாரிக்!" `பிக் பாஸ்' ரம்யா ஷேரிங்ஸ் #VikatanExclusive

கு.ஆனந்தராஜ்
``என்னால பிராப்ளமே இல்லை... வயசுக் கோளாறு ஷாரிக்!" `பிக் பாஸ்' ரம்யா ஷேரிங்ஸ்  #VikatanExclusive
``என்னால பிராப்ளமே இல்லை... வயசுக் கோளாறு ஷாரிக்!" `பிக் பாஸ்' ரம்யா ஷேரிங்ஸ் #VikatanExclusive

`பிக் பாஸ்' நிகழ்ச்சியின் போட்டியாளராக பாசிட்டிவ் இமேஜூடன் மக்கள் மனதில் இடம்பிடித்தவர், பின்னணிப் பாடகி என்.எஸ்.கே.ரம்யா. யாரும் எதிர்பாராதவிதமாக, இந்த வாரம் எலிமினேட் ஆகிவிட்டார். தன் `பிக் பாஸ்' அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார்.

``எப்படி `பிக் பாஸ்' நிகழ்ச்சியின் போட்டியாளரானீங்க?"

``என் ஃப்ரெண்டு வீஜே கீர்த்தியும் நானும் `பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பற்றி டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தோம். `நீ போட்டியாளரா போவியா?'னு கீர்த்தி கேட்டாங்க. `நீ வந்தால் நானும் போகத் தயார்'னு விளையாட்டாச் சொன்னேன். சர்ப்ரைஸ்... நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னாடி, விஜய் டிவியிலிருந்து அழைப்பு. பேச்சுவார்த்தை முடிஞ்சு, உடனே போட்டியாளராப் போயிட்டேன்." 

``உங்க மேலே எந்த நெகட்டிவ் இமேஜும் இல்லாத நிலையில், எலிமினேட் பண்ணிட்டாங்க. இதற்கு என்ன காரணம்?"

``நல்லவங்களா இருந்தா அப்படிதானே நடக்கும் (சிரிக்கிறார்). இந்த நிகழ்ச்சிக்கு எமோஷனலை வெளிப்படுத்தும் நபர் தேவை. அப்படி கான்ட்ரோவர்ஷியலான விஷயங்கள் என்னால் அவங்களுக்குக் கிடைக்கலை. இனியும் என்னால் எந்தப் பயனும் இருக்காதுனு நினைச்சு எலிமினேட் செய்திருக்கலாம். மற்றபடி, மக்களின் வாக்குகள் பற்றி கருத்துச் சொல்ல விரும்பலை. மக்கள் என் மேலே ரொம்பவே அன்பு வெச்சிருந்தாங்க."

``அமைதியான கேரக்டரா இருந்த உங்களிடம் கடந்த இரு வாரங்களாகக் கோபம் வெளிப்பட்டுச்சே..."

``எனக்கு ரொம்ப கோபம் வரும். பொய் பேசினால், கெட்ட வார்த்தை, டபுள் மீனிங் பேசினால் அதிகம் கோபம் வரும். `பிக் பாஸ்' வீட்டுல தொடக்கம் முதலே சண்டைகள் நடந்துட்டே இருந்துச்சு. நாள்கள் போகப் போக, போட்டியாளர்களின் வேற முகங்கள் வெளிப்பட ஆரம்பிச்சது. ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு மாதிரி பேசறது, பொய் பேசறதுமா பலரும் நடந்துகிட்டாங்க. மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு விளையாடாம இருந்தாங்க. அதைப் பார்த்து ஒருகட்டத்துல என் உணர்வுகளைக் கோபத்தின் மூலமா வெளிப்படுத்தினேன். அது தப்பில்லைனு நினைக்கிறேன்."

``உங்களை எலிமினேட் பண்ணினதில் வருத்தமில்லையா?"

`` `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பலரும் தப்புப் பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு மன்னிப்பும் வழங்கப்பட்டிருக்கு. ஆனால், விதியை மீறிட்டதா என்னை நேரடியா நாமினேஷனுக்கு செலக்ட் பண்ணிட்டாங்க. `எனக்கு மட்டும் வார்னிங் கொடுக்காமல் இப்படிப் பண்ணிட்டீங்களே. ஒருதலைபட்சமா நடந்துக்கிறீங்க' எனக் கமல் சார் மற்றும் சகப் போட்டியாளர்களிடம் சொன்னேன். பொதுவா, எது நடந்தாலும் நல்லதுக்குனு நினைச்சுப்பேன். வருத்தப்படமாட்டேன். அதுதான் என் குணம். கடந்த வாரம் எலிமினேஷனில் அஞ்சு பேரில் ஒருத்தியா இருந்தபோதும் கவலைப்படலை. ஆனால், இன்னும் 1000 நாள் `பிக் பாஸ்' வீட்டுல இருந்தாலும், என்னால் எந்த கான்ட்ரோவர்ஷியல் விஷயமும் நடக்காம மொக்கையா இருந்திருக்கும். என்னை மாதிரியான ஒரு நபர், அந்த நிகழ்ச்சிக்கு ரொம்ப நாள் தேவைப்படாது. அதனால், நிச்சயம் எலிமினேட் ஆகிடுவேன்னு நம்பினேன். அந்த வீட்டுல தொடர்ந்து போட்டியாளரா இருக்க எனக்கும் விருப்பமில்லை. ஒருவேளை என்னை எலிமினேட் பண்ணாம இருந்திருந்தாலும், ஆர்வமில்லாமலே இருந்திருப்பேன். வெளியே வந்ததில் சந்தோஷமே. இறுக்கமான ஓர் இடத்துல, பிடிக்காத விஷயங்களைச் சகிச்சுட்டு இருக்கவேண்டிய அவசியமில்லை."

``சக போட்டியாளர்கள் உங்களிடம் எப்படி நடந்துக்கிட்டாங்க? நீங்க மத்தவங்ககிட்ட எப்படி நடந்துக்கிட்டதா நினைக்கறீங்க?" 

``ஷாரிக் என் தம்பி மாதிரி. விளையாட்டுப் பிள்ளையா இருக்கான். `வயசுக் கோளாறில் இப்படிப் பண்ணாதடா'னு பலமுறை அட்வைஸ் பண்ணியிருக்கேன். வைஷ்ணவி என் நல்ல ஃப்ரெண்டு. அவங்ககிட்ட இருக்கும் சில தவறான விஷயங்களைச் சரிபடுத்திக்கிட்டா சிறப்பா இருக்கும். அதை அவங்ககிட்ட சொல்லியிருக்கேன். மும்தாஜ் சில விஷயங்களுக்கு அடம்பிடிப்பாங்க. அதை மாத்திக்கிட்டா, ரொம்பவே ஸ்ட்ராங்கான, ஸ்வீட் பர்சனா எல்லோர் மனசுலயும் இடம்பிடிப்பாங்க. அதையும் அவங்ககிட்ட சொல்லியிருக்கேன். இப்படி, எல்லோரிடமும் விருப்பு வெறுப்பு இல்லாம அன்பாகப் பழகினேன். என்கிட்டயும் மத்தவங்க அப்படித்தான் பழகினாங்க. வெளியே வரும்போது பலரும் என் பிரிவுக்காக வருத்தப்பட்டாங்க. அவங்க மனசுல இடம்பிடிச்சதில் சந்தோஷப்படறேன்."

``யார் ஃபைனல் வரைக்கும் வருவாங்கனு நினைக்கறீங்க?"

``ஜனனி ஐயர் மற்றும் ஷாரிக். ரித்விகா என்னை மாதிரி அமைதியா இருந்தாலும், ஒருவேளை ஃபைனல் வரை வர வாய்ப்புண்டு. ரித்விகாவாலும் எந்த கான்ட்ரோவர்ஷியலான விஷயங்கள் நடக்கலைன்னு அவங்களும் சீக்கிரமே எலிமினேட் ஆகிட வாய்ப்புண்டு. இன்னும் கொஞ்ச நாள் போனால், உள்ள இருக்கிற போட்டியாளர்களின் உண்மை முகம் வெளிவரும். அப்போ யார் நல்லவங்கனு மக்களே முடிவுபண்ணிக்கட்டும்."

``பிக் பாஸிலிருந்து வெளியே வந்ததும் செய்த விஷயங்கள்...''

``முதல் வேலையா அம்மா மற்றும் என் ஃப்ரெண்ட்ஸ் பலரிடம் சந்தோஷமாப் பேசினேன். எனக்காகப் பலரும் சோஷியல் மீடியாவில் சப்போர்ட் பண்ணி கருத்துகளை தெரிவிச்சிருக்காங்க. அதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டேன். பலருக்கும் பதில் ரிப்ளை கொடுத்தேன். அம்மா சமையலை ரசிச்சுச் சாப்பிட்டேன். நல்லா தூங்கினேன்."

ரம்யாவின் விரிவான வீடியோ பேட்டியைப் பார்க்க, கீழ்க்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.