Published:Updated:

``பாலாஜி செய்த தவறுகளை மன்னிக்க ரெடியா இருக்கேன்!" - நித்யா

வே.கிருஷ்ணவேணி

பாலாஜியின் மனைவி நித்யா 'பிக் பாஸ்' வீட்டுக்குள் சென்று வந்திருக்கிறார். அது குறித்து அவரிடம் பேசினோம்.

``பாலாஜி செய்த தவறுகளை மன்னிக்க ரெடியா இருக்கேன்!" - நித்யா
``பாலாஜி செய்த தவறுகளை மன்னிக்க ரெடியா இருக்கேன்!" - நித்யா

ன்று வெளியான பிக் பாஸ் 2-வின் புரொமோவில் பாலாஜியின் மனைவி நித்யா பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று பாலாஜியிடம் பேசிய விஷயங்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து நித்யாவிடம் தொடர்புகொண்டு பேசினேன். 

''நான் இப்போவும் அதையேதான் சொல்றேன். ஒரு தோழியாக அவருக்குப் பக்கபலமாக இருக்க ரெடி! பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து பிக் பாஸ் பார்த்துக்கிட்டு இருக்கேன். பாலாஜியின் நடவடிக்கையில் நல்ல வித்தியாசம் தெரியுது. இப்படியே தன்னை திருத்திக்கொண்டு புது மனிதராக வெளியே வந்த பிறகு சில காலம் பார்த்துவிட்டுதான் எந்த முடிவையும் எடுக்க முடியும். எனக்கும் போஷிகாவுக்கும் அவரின் நடவடிக்கைகள் பிடித்திருந்தால் கண்டிப்பாகச் சேர்ந்து வாழத் தயாராகவே இருக்கிறேன். நான் தோழியாக மட்டுமே பழகுவேன்னு எழுதிய லெட்டரை பிக் பாஸில் காண்பித்த பிறகு, அன்றைக்கு விடிவதற்குள்ள, எட்டாயிரத்துக்கும் அதிகமான ட்வீட்ஸ் அதை எதிர்த்துப் போட்டிருந்தாங்க. 'மனைவியா இருந்துட்டு எப்படி ஃபிரெண்டா மாறுவீங்க'னு பலரும் பதிவிட்டிருந்தாங்க. இப்படிப் பலர் எங்க தனிப்பட்ட வாழ்க்கைமேல அக்கறை காட்டுறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருந்துச்சு. அதுக்காக, மறுபடியும் பாலாஜி பழையபடியே இருந்தா கண்டிப்பாக ஏத்துக்க மாட்டேன். நானும் மனுஷிதானேங்க!" என்று கலங்கியவர்,

''பாலாஜி ஒருமுறை பிக் பாஸில் அழுதது எனக்கு வேதனையாக இருந்தது. அவருடைய அப்பா இறந்தபோதுகூட துக்கத்தை மனசுலேயே வெச்சுக்கிட்டவர் பாலாஜி. ஒரு கண்ணீர் துளிகூட சிந்தவில்லை. ஆனா, இப்போ எங்களை நினைச்சு அழும்போது உண்மையிலேயே என்னை அறியாம எனக்கு அழுகை வந்திடுச்சு. அவர் செய்த தவறுகளை மன்னிக்க ரெடியாக இருக்கேன். ஆனா, பழையபடி எங்களைத் துன்புறுத்தாம இருந்தா போதும். அவர் எங்களுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்கிட்டா நாங்க ஏன் அவரை விட்டுப் பிரிஞ்சிருக்கப் போறோம். அவர் செய்த எதையும் நான் இன்னும் மறக்கல. அவர் என்னை மாடிப் படியிலிருந்து தள்ளிவிட்டது, வீட்டுக் கதவுக்கு நெருப்பு வெச்சது, போஷிகாகிட்ட நடந்துகிட்டது... இப்படிப் பல சம்பவங்கள் இப்போவும் வந்து வந்து போகுது. இதெல்லாம் இனியும் நடக்காம இருந்தா, போஷிகாவின் எதிர்காலம் கருதி நிச்சயம் அவருடன் வாழ யோசிப்பேன்'' என்ற நித்யாவிடம், பிக் பாஸ் வீட்டுக்குள் போனதும் அழுதது ஏன்? எனக் கேட்டேன்.  

''நான் அங்கே 28 நாள்கள் இருந்திருக்கேன். எல்லோர்கிட்டேயும் நல்ல முறையில் பழகியிருக்கேன். என்னை அவர்கள் எப்படி நடத்தியிருந்தாலும், எனக்கு நான் உண்மையானவளாக இருந்திருக்கேன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பிக் பாஸ் வீட்டுக்குள் போகக் கூடிய நுழைவாயில் வரை எனக்கு எதுவும் பெருசா தெரியல. உள்ளே நுழைந்ததும் இனம் புரியாத ஏதோ ஓர் உந்துதல் இருந்துச்சு. நான் அந்த வீட்டில் இருந்த ஞாபகம் எல்லாம் வந்துபோச்சு. என்னை அறியாம நான் அழ ஆரம்பிச்சுட்டேன். இப்போ கொஞ்சம் கொஞ்சமா பாலாஜி மாறிக்கிட்டு இருக்கார். நான் அவர்கூட வாழ்ந்த நாள்களில் என்னைக்குமே நான் கஷ்டப்படக் கூடாதுனு எவ்வளவு மனக் கஷ்டமாக இருந்தாலும், அவருக்குள்ளயே போட்டுப் புதைச்சுக்குவார். அப்படிப்பட்டவர்தான், அதுக்குப் பிறகு என்னைக் கஷ்டப்படுத்திட்டார். என்னதான் இருந்தாலும் அவரைக் காதலிச்சு கல்யாணம் பண்ணி இத்தனை வருடம் அவர்கூட வாழ்ந்திருக்கேன். அவர் அன்னைக்கு அழுதது எனக்குக் கஷ்டமா இருந்தது. அப்புறம், எப்போவும் போஷிகான்னே சொல்லிக்கிட்டு இருக்கார். அவருடைய முதல் மனைவியின் குழந்தை தருணின் பெயரை ஏன் சொல்லவே மாட்டேங்கிறார்னு தெரியல. அந்தக் குழந்தைக்கும் தன்னோட அப்பா இவர்தான்னு சொல்லிக்க ஆசை இருக்கும்ல... போஷிகாவுக்கு முன்னாடி அந்தக் குழந்தைக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. இன்னொன்னு, முழு மனசோட அவர் என்கூட வாழ வந்தா மட்டுமே அவரை நான் ஏத்துப்பேன்" என்றவர்,

''பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ள சிலர் இன்னும் தன்னுடைய உண்மையான முகத்தைக் காட்டாம நடிச்சுக்கிட்டு இருக்காங்களோனு தோணுது. அதிலிருந்து வெளிய வரணும்னு நினைக்கிறேன். பாலாஜி விஷயத்தைப் பொருத்தவரை நான் இப்போவரை சமூகம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கேன். பெண்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், கால நேரம் பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்றேன். ஆனால், இதெல்லாம் பாலாஜிக்குப் பிடிக்காது. `நீ எதுக்கு அடுத்தவங்க விஷயத்துல தலையிடுற?'னு சொல்வார். இப்போ நான் செஞ்சுக்கிட்டு இருக்கிற இந்த வேலைக்கு அவர் தடை போடாம இருக்கணும்ங்கிறது என் எதிர்பார்ப்பு. பார்ப்போம்... இதுக்கு காலம்தான் பதில் சொல்லணும்!'' என்கிறார் நித்யா.