Published:Updated:

சோகத்தில் மும்தாஜ், மஹத் விடுதலை, பொன்னம்பலத்துக்கு டாஸ்க்...! - மிட்நைட் மசாலா அலப்பறைகள்

தார்மிக் லீ

37- ம் நாள் பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது?

சோகத்தில் மும்தாஜ், மஹத் விடுதலை, பொன்னம்பலத்துக்கு டாஸ்க்...! - மிட்நைட் மசாலா அலப்பறைகள்
சோகத்தில் மும்தாஜ், மஹத் விடுதலை, பொன்னம்பலத்துக்கு டாஸ்க்...! - மிட்நைட் மசாலா அலப்பறைகள்

நினைத்தது போலவே `கார்கில் காலிங்' டாஸ்க் சீறும் சிறப்புமாகப் போகிறது. உண்மையிலேயே நேற்று பிக் பாஸ் வீடு போர்க்களம் போல்தான் காட்சியளித்தது. மும்தாஜ் - ஜனனி, ஐஸ்வர்யா - ரித்விகா, அவ்வப்போது ஷாரிக்... எனப் பஞ்சாயத்து தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. இதைத் தொடர்ந்து பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது? 

* மும்தாஜ் பாத்ரூமில் தனியாக உட்கார்ந்து சோக வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்தார். ஜனனியுடன் சண்டை, உற்ற உறவென நினைத்துக்கொண்டிருந்த ஷாரிக், இவரை எதிர்த்து பேசத் தொடங்கியிருப்பது என அனைத்தையும் நினைத்து சோக மழையில் நனைந்துகொண்டிருந்தார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. `என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி...' என்ற பாடல் மட்டும்தான் பின்னணியில் ஒலிக்கவில்லை. அந்த அளவுக்கு அழுகாத குறையாக வருந்திக்கொண்டிருந்தார், மும்தாஜ். ஒருவேளை, இவர் அழும் போர்ஷன் இன்று ஒளிபரப்பாகலாம். மறுபக்கம், `சினங்கொண்ட சிங்கத்தை செல்லுல போட்டா, அது செல்லையே செதச்சிடும் பரவால்லையா?' என்றபடி நேற்றுவரை சிறையில் அடைப்பட்டிருந்த மஹத், இரவோடு இரவாக விடுதலை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், மும்தாஜ் அணியுடன் சேர்ந்து டாஸ்கிலும் பங்கேற்று விளையாடிக்கொண்டிருந்தார். இன்று இரவு இவரை வைத்தும் சில பஞ்சாயத்துகளை எதிர்பார்க்கலாம்!

* மேலும் ஓர் அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், மஹத் சிறைக்குள்ளே களி சாப்பிடும்போது கண்ணீரில் மிதந்த பாலாஜி, மஹத்தை  டாஸ்குக்காக வெளியே அனுப்பிவிட்டு சிறையின் உள்ளே சென்றுவிட்டார். சிறைக்குள் இருந்தும் சும்மா இருக்காமல், போவோர் வருவோர் அனைவரிடமும் ஒரண்டை இழுத்துக்கொண்டிருந்தார், பாலாஜி. மற்றவர்களும் விடாமல் இவரை வைத்து செய்துகொண்டிருந்தனர். `என்னடா இது கலக்கப்போவது யாரு ஜட்ஜுக்கு வந்த சோதனை!'. மறுபக்கம் வெளியே நடக்கும் கூத்துகளில் பங்கேற்ற கொஞ்ச நேரத்திலேயே, `பிக் பாஸ் தயவு செஞ்சு என்னை மறுபடியும் ஜெயிலுக்கே அனுப்பி வெச்சுடுங்க, மனுஷய்ங்களா இவய்ங்க' என்ற ரேஞ்சில் கேமரா முன் நின்று மன்றாடிக்கொண்டிருந்தார், மஹத். `இருப்பே உன்னை வெச்சுதான் கன்டென்டே எடுக்கணும்' என்பதுதான் பிக் பாஸின் மைண்டு வாய்ஸாக இருந்திருக்கும். 

* நேற்று வைத்த போட்டிகள் அனைத்திலும் ஜனனி தலைமை தாங்கிய நீல நிற அணியே வென்றது. இன்று காற்று மும்தாஜ் தலைமை தாங்கும் மஞ்சள் நிற அணியின் பக்கம் அடிக்கிறது போல! பிக் பாஸ் வைத்த ஒரு டாஸ்கில் வென்ற மும்தாஜ் அணி, டேனியலுக்கு என்ன டாஸ்க் கொடுப்பது எனக் கலந்துரையாடிக்கொண்டிருந்தது. பேசிக்கொண்டே இருக்கையில் மஹத், `நாய் மாதிரி நாலு கால்லேயும் ஷூ போட்டு வீடு முழுக்க நடக்கவிடுவோம்' எனச் சொல்லி முடித்ததும், `இப்படி அவமானப்படுத்த வேண்டாமே!' என வைஷ்ணவி மஹத்திடம் அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். மறுபக்கம், பொன்னம்பலத்தை தனது அணியில் சேர்த்ததற்காக டேனியலிடம் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார், ஜனனி. ஸோ, சேட்! 

* கடந்த வாரம் மௌன விரதத்தில் இருந்த டேனியல், இந்த வாரம் `பேக் டூ தி ஃபார்ம்' மோடுக்குத் திரும்பிவிட்டார். `இவர் ரொம்பக் கத்திப் பேசுறார், மற்றவர்களை அவரோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரணும்னு நினைக்கிறார், எல்லோரையும் இழிவுபடுத்துற மாதிரி கிண்டல் பண்றார்!' என்பதுதான் இவர் மீது வைத்த மேஜர் குற்றச்சாட்டுகள். ஆனால், இன்று கிச்சனில் சமைத்துக்கொண்டே கத்திக் கத்தி பாட்டுப் பாடியும், எல்லோரையும் பழையபடி கலாய்த்தும் காமெடி செய்துகொண்டிருந்தார், டேனியல். இவரைச் சுற்றியிருந்தவர்களும் அதை என்ஜாய் செய்தனர். மற்றவர்கள் எப்போது அம்பியாக இருக்கிறார்கள், எப்போது அந்நியனா மாறுகிறார்கள் என்பதுதாம் இன்னும் புரியவில்லை. 

* `யாருடைய உதவியும் இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் பெயரையும் தனித் தனியே சொல்லவேண்டும்' என்ற கடுமையான டாஸ்கினை பொன்னம்பலத்திடம் கொடுத்தார், வைஷ்ணவி. போட்டி ஆரம்பித்து ஐந்து வாரங்களைக் கடந்தும் வீட்டில் இருக்கும் சிலரின் பெயர் பொன்னம்பலத்துக்கு இன்னும் தெரியவில்லை. ஆகையால், கண்டிப்பாக இவர் அதில் சொதப்புவார், ஜனனி கடுப்பாவார், சித்தப்ஸுக்கு செம டோஸ் இருக்கும் என்பது மட்டும் உறுதி. இன்னொரு பக்கம், டாஸ்க் காரணமாக விடுதலையான மஹத், மீண்டும் ஜெயிலுக்கே திரும்பிவிட்டார். அதுவரை உள்ளே சிறைக்குள் இருந்த பாலாஜி, `தலைமகனே கலங்காதே, தனிமை கண்டு வருந்தாதே' என்பதுபோல், மஹத்தை சிறைக்குள் வழியனுப்பி வைத்தார்.

ஆகமொத்தம், பிக் பாஸ் வீட்டின் கார்கில் போர் இன்னும் முடிந்த பாடில்லை. பிரச்னை இன்னும் வளர்ந்துகொண்டேதான் போகிறது. நேற்று அரசல் புரசலாக ஆரம்பித்த பஞ்சாயத்து, இன்று உக்கிரமாகத்தான் போகும்போல! மும்தாஜ், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, ஷாரிக் ஆகியோருக்குள் இன்றும் பிரச்னை தொடரலாம். பொருத்திருந்து பார்ப்போம்!