நூறு நாட்களுக்கும் மேல் நீடித்த இந்தப் போட்டியின் முடிவு என்பது இன்று இரவு தெரிந்து விடும். (அதற்கு நீங்கள் நூற்றுக்கணக்கான விளம்பரங்களையும் இன்றைய தூக்கத்தையும் கடந்து வர வேண்டியிருக்கும்).
உறவுகளைப் பிரிந்து, வெளியுலகத் தொடர்பு இல்லாமல், ஒரு புதிய சூழலில், அந்நியர்களுடன் நூறு நாட்கள் புழங்குவது என்பது எளிதான காரியம் அல்ல. அதிலும் சென்சிட்டிவ்வானவர்கள், Introvert போன்றவர்களுக்கு இது பெரிய சவால். எஞ்சியிருக்கும் இந்த ஐந்து போட்டியாளர்களும் இறுதி வரை தாக்குப் பிடித்திருப்பதற்குப் பாராட்டு.
இன்று இறுதி நாள் என்பதால் கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார். பிறகு சிறப்பு விருந்தினர்கள் மீதமிருக்கும் போட்டியாளர்களை வடிகட்டி வெளியே அழைத்துச் செல்வார்கள். எஞ்சியிருக்கும் இரு போட்டியாளர்களில் இருந்து வெற்றி பெற்றவரை கமல் தேர்வு தேர்வார். இந்த சீஸனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் இன்று வருவார்கள். அவரவர்களின் குணாதிசயத்திற்கு ஏற்ப விருதுகள் தரப்படும்.

இன்று நடைபெறவிருக்கும் நடனம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகளில் நான் மிகவும் எதிர்பார்ப்பது ‘கலக்கப் போவது யாரு’ டீமின் காமெடிதான். போட்டியாளர்களின் நடை, உடை, பாவனையில் வந்து ஒவ்வொருவரையும் கதறக் கதற கிண்டல் செய்து விடுவார்கள்.
இந்த சீஸனின் வெற்றியாளர் என்பது இப்போதே உறுதியாகி விட்டது. அது சம்பிரதாயமாக அறிவிக்கப்படும் வரை சிறிய சஸ்பென்ஸ் இருக்கும். ஆனால் ‘யார் வெற்றியாளர்?’ என்பதில் மாற்றுக்கருத்து இருப்பவர்களும் நிறைய பேர் இருப்பார்கள். எனக்கும் அப்படி மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் ‘மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு’ என்பதுதான் அல்டிமேட். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
நாள் 104-ல் என்ன நடந்ததென்று பார்ப்போம்.
‘செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுத்த மாதிரி’ என்றொரு உள்ளூர் பொன்மொழி ஒன்று இருக்கிறது. அது போல் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு போட்டியாளர்கள் சோர்வாக அமர்ந்திருந்தார்கள். அதிலும் ரியோவின் முகபாவம் இருக்கிறதே... அவ்வளவு பாவமாக வைத்திருந்தார்.
சோர்ந்து போய் அமர்ந்திருந்த இவர்களை இன்று விதம் விதமாக கமல் ஆற்றுப்படுத்திய விதம் இருக்கிறதே... ஆஹா! அபாரம்! ஏற்கெனவே சொன்னதுதான். கமல் ஓர் ஆசிரியராகச் சென்றிருந்தால் சிறந்த ஆசிரியராக இருந்திருப்பார். போலவே ஒரு தந்தையாகவும் அவர் சிறப்பான வழிகாட்டலை நிகழ்த்தியிருக்கிறார் என்பதற்கு ஸ்ருதி மற்றும் அக்ஷராவின் குரல்களில் தெரியும் தன்னம்பிக்கையும் சுதந்திரயுணர்ச்சியும் சாட்சியாகத் திகழ்கிறது.

கண்ணுக்கு இதமான இளம்பச்சை நிறத்தில் கமல் இன்று அணிந்து வந்திருந்த உடை அட்டகாசமாக இருந்தது. ‘இன்று எதைப் பற்றிய தினம்?’ என்பதை இனி காலண்டரிலோ, இணையத்திலோ தேடி அறிந்து கொள்ள வேண்டியதில்லை. கமலுக்கு ஒரு போன் போட்டால் போதும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு விதம் விதமான தினங்களைத் தோண்டியெடுத்து வாரந்தோறும் நினைவூட்டுகிறார்.
‘காட்டில் களையெடுப்பது விவசாயம், நாட்டில் களையெடுப்பது ராணுவம்’ என்று ராணுவ தினத்தையும் உழவர் தினத்தையும் ரைமிங்காக அவர் மேட்ச் செய்தது சிறப்பு. ‘ஒரு யானை படுத்திருக்கும் நிலத்தில் ஏழு யானைகளுக்கான உணவை பயிரிடும் செழுமையான கலாசாரமாக தமிழர்களின் வேளாண் அறிவு இருந்தது என்பதை புறநானூற்றின் சாட்சியத்தோடு விவரித்தார். ‘உழவே தலை, உழவனை நினை’ என்கிற புதிய ஸ்லோகனையும் உருவாக்கினார். (அஜித் ரசிகர்கள் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்).

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்பட்டன. இறுதியில் கடினமானதொரு போட்டி நடக்கும் என்று எதிர்பார்த்தேன். இல்லை போலிருக்கிறது. இப்படியே விக்ரமன் படம் மாதிரி இறுதி வரைக்கும் கொண்டு வந்துவிட்டார்கள். சரி, பாடலிலாவது விளையாட்டு இருக்கட்டும் என்று நினைத்து ‘கபடி... கபடி’ என்கிற பாடலை காலையில் ஒலிபரப்பினார்கள் போலிருக்கிறது. பாலாஜி வேண்டாவெறுப்பாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
அன்புக்கூட்டணியின் புகைப்படங்களைப் பார்த்து நெகிழ்ந்து கொண்டிருந்தார் சோம். கேபியின் புகைப்படத்தைப் பார்த்து ‘பைத்தியம்’ என்று செல்லம் கொஞ்சினார். பக்கத்தில் உண்மையிலேயே பித்துப் பிடித்ததைப் போல் அமர்ந்திருந்த ரியோவையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
ஆடுகளுக்கு மஞ்சள், குங்குமம் எல்லாம் வைத்து பிரியாணிக்கு தயார் செய்வது போல் போட்டியாளர்களுக்கு விதம் விதமான ஒப்பனைகள் செய்யப்பட்டன. அப்படியே ரியோவின் முகத்தை சந்தோஷமாக மாற்றியமைப்பது போல் எதையாவது செய்து வைத்திருக்கலாம்.

பாலாஜிக்குப் போட்டியாக கேமரா முன்பு வந்து நின்று பேசிய ஆரி, “யார் ஜெயிச்சாலும் சந்தோஷம்தான். நான் அதிகம் படிக்காதவன். வாழ்க்கைப் பாடத்தை படித்தவன். பிக்பாஸ் பாடம் ஸ்பெஷலானது" என்றெல்லாம் பேசி உருகினார். (இனி ‘படிக்காத மேதை’ என்கிற டைட்டிலையும் ஆரி ஆர்மியினர் பேனர்களில் எழுதிக் கொள்ளலாம்).
உழவர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பெருமைகளைப் பற்றி போட்டியாளர்கள் பேச வேண்டுமாம். ஹைஸ்கூல் பிள்ளைகள் பேச்சுப் போட்டிகளில் பேசுவது மாதிரி ஆளாளுக்கு இஷ்டத்திற்கு அடித்துவிட்டார்கள். திருக்குறள் எழுதப்பட்டு மூவாயிரம் ஆண்டுகள் ஆகின்றது என்றார் பாலாஜி. உலகத்திலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ‘திருக்குறள்’ என்று பெருமிதத்தோடு சத்தியம் செய்தார் சோம். (ஆனால் அது ‘பைபிள்’).

தமிழர்களுக்கென்று தொன்மையும் பழைமையும் அமைந்த பல பெருமைகள் உள்ளதுதான். ஆனால் அவை மிகையான பெருமிதமாக போய்விடக்கூடாது. ‘கொரானோ பற்றி சங்ககாலத்திலேயே பாடல் எழுதப்பட்டிருக்கிறது’ என்று வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்தால் கையில் நரம்பு புடைக்க, கண்ணீர் மல்க உடனே நாம் நம்பி விடக்கூடாது.
‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தில் ஓர் அருமையான காட்சி உண்டு. பெண்களுக்கான இல்லம் நடத்தி வரும் ஒரு பெண்மணி, ‘ஆதரவற்ற பெண்களுக்கு தான் எப்படியெல்லாம் சேவை செய்கிறோம்’ என்பதை செயற்கையான தியாகவுணர்ச்சியோடும் மிகையான பெருமிதத்தோடும் பேச ஆரம்பிக்க, அந்த நேர்காணலை இயக்கிக் கொண்டிருக்கும் கமல், எரிச்சலோடு ‘கட் இட்’ என்பார். ‘Blah... Blah...’ என்று போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இப்படித்தான் தோன்றியது. அதென்னமோ விவசாயிகள் மீது திரைப்படத் துறையினருக்கு கூட திடீரென பாசம் வந்து விட்டது. சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ‘பூமி’யளவிற்கு பொறுமை வேண்டும் என்கிறார்கள்.
என்றாலும் ஆரி தனது பேச்சில் சொன்ன ஒரு விஷயம் என்னைக் கவர்ந்தது. மருத்துவம் உள்ளிட்ட பொருளியல் ஆதாயங்களை அள்ளித் தரும் கல்விக்கே நாம் முன்னுரிமை தருகிறோம். ஆனால் ஒரு சமூகத்திற்கு அவசியமான கலை உள்ளிட்ட பல விஷயங்களை ‘அதெல்லாம் வேணாம்ப்பா... சோறு போடாது’ என்று விட்டு விடுகிறோம். அதிலொன்று விவசாயம். தன் மகன் விவசாயியாக ஆக வேண்டுமென்று ஒரு விவசாயியே இன்று எண்ணுவதில்லை. அவர்களது நோக்கில் தவறில்லை. அந்த அளவிற்கு அந்தத் தொழில் மதிப்பிழந்து விட்டதோடு லாபத்தையும் தருவதில்லை.

‘அட... காடு வெளைஞ்சென்ன மச்சான். நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’ என்கிற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரி இன்றைக்கும் நிதர்சனமாகத்தான் இருக்கிறது. பிள்ளைகளுக்கு கல்வித்திட்டத்தில் வேளாண் சார்ந்த கல்வியை அளிக்க வேண்டும் என்கிற ஆரியின் வழிமொழிதல் அவசியமானது. ஒரு மருத்துவரைப் போல, ஒரு நிதி ஆலோசகரைப் போல ஒரு விவசாயிக்கும் சமூகத்தில் சமமான மதிப்பும், பொருளியல் ஆதாயமும் கிடைக்கும் சூழல் ஏற்பட வேண்டும்.
இதைப் போலவே தன் தாத்தா சொல்லியதாக ரம்யா சொன்ன ஒரு கருத்தும் என்னைக் கவர்ந்தது. இது நெடுங்காலமாக நானும் சொல்லியும் எழுதியும் கொண்டிருப்பதுதான். உயர்நிலைப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு ஒரு வருடம் கட்டாய ராணுவப் பயிற்சி என்பது மேற்கத்திய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அப்படியொரு நடைமுறை இங்கும் கொண்டு வரப்பட வேண்டும்.

‘தேசபக்தி’ என்பதை கையில் நரம்பு புடைக்க அதிகம் ரொமாண்டிசைஸ் செய்ய வேண்டியதில்லை. அது சுயநலம் கலந்த பொதுநலம். நம் வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தனிநபரும் எண்ணுவதைப் போல நாம் வாழும் பொதுநிலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. எனவே அது சார்ந்த சுயப்பொறுப்பும் கடமையுணர்ச்சியும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இருக்க வேண்டும்.
ஆனால் இங்கு என்ன நிகழ்கிறது? நாட்டைக் கூட அவர்கள் காப்பாற்றக் கூட வேண்டாம். வீட்டையே ஒழுங்காக காப்பாற்றாமல் பல இளைஞர்கள் பல்வேறு ஒழுங்கீனங்களில் அலைபாய்வதைக் கவனிக்கிறோம். இளமைப்பருவத்தில் அவர்களிடம் வெளிப்படும் செயல்திறனும் அதீதமான சக்தியும் வீணாகாதவாறு ஒழுங்குப்படுத்தப்பட வேண்டியது அவசியம். அதற்கு ‘ஒரு வருட கட்டாய ராணுவப் பயிற்சி’ போன்ற திட்டங்கள் உதவும். ஒவ்வொரு தனிநபரும் ஒழுக்கமாக இருந்தால்தான் அது சிறந்த சமூகமாக மாறும்.
ஆனால், விவசாயத்தைப் போல ராணுவச் செலவு அவசியமா என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஒவ்வொரு நாடும் தங்களின் பட்ஜெட்டில் ராணுவத்திற்காக ஒதுக்குவதுதான் அதிகம் செலவு வைக்கும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரு பக்கம் மக்கள் பட்டினியில் கிடக்க, இன்னொரு பக்கம் நவீன ரக ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் அபத்தமான நிலைமை எந்த நாட்டிலும் ஏற்படாத சூழல் மலர வேண்டும். ஆனால், அது சாத்தியமா?
‘வெள்ளச்சாமி மறுபடியும் பாட ஆரம்பிச்சிட்டான்’ என்பது மாதிரி மறுபடியும் கேமரா முன்பாக வந்து சுயவாக்குமூலம் தந்து கொண்டிருந்த பாலாஜி, "நான் என்னமோ நினைச்சு இந்த கேமிற்கு வந்தேன். ஆனா இது என்னையே எனக்கு கண்ணாடி மாதிரி காட்டிய நிகழ்ச்சி. என்னையெல்லாம் யாருக்கும் தெரியலையேன்னு ஆதங்கப்பட்டிருக்கேன். இப்ப மக்களுக்கு என்னைத் தெரிஞ்சிடுச்சு” என்று நெகிழ்ந்தவர், "ஆனா ரொம்ப தெரிஞ்சிடுச்சோன்னு பயமா இருக்கு" என்று சிரித்துக் கொண்டே சொன்ன பின்குறிப்பில் குசும்புத்தனம் இருந்தது. கிளைமாக்ஸில் கண்ணீர் மல்கி திருந்தும் நல்ல வில்லன் மாதிரி சோமிற்கு சட்டையைப் பரிசளித்தார் பாலாஜி.

‘கேபியைப் பார்க்கணும் மாதிரி இருக்கு’ என்று சோம் ஒருபக்கம் அனத்த, “நீங்க ரெண்டு பேரும்தான் என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டீங்க” என்று இன்னொரு பக்கம் ரியோ அனத்த... யப்பா சாமி முடியல. உண்மையில் எல்கேஜி குழந்தை ஷிவானி கூட இல்லை. ‘அன்புக்கூட்டணியைச்’ சேர்ந்தவர்கள்தான். மூக்கைச் சிந்துவதற்கும் ஒப்பாரி வைப்பதற்கும் குழுவாக இணைந்து கட்டிப்பிடித்து நெகிழ்வதற்கும் காரணங்களைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிறிய கேப் கிடைத்தால் கூட போதும். வெளுத்து வாங்குகிறார்கள்.
மேடைக்கு வந்த கமல், "வெளியில் இருந்து வந்தவர்கள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவார்கள் என்கிற நோக்கத்தில்தான் அவர்களை உள்ளே அனுப்பி வைத்தோம். ஆனால் தலைகீழாக நடந்திருக்கிறது. காற்று போன பலூன் மாதிரி போட்டியாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். என்னவென்று விசாரிப்போம்" என்று அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்தார்.

என்னதான் முடிவெட்டி, நகம்வெட்டி, தலைசீவி புதிய ஆடைகள் அணிந்திருந்தாலும் எவரின் முகத்திலும் சுரத்தில்லை. 'யாருப்பா அது வந்திருப்பது? கமல் சாரா? என்ன விஷயம்? சட்டு புட்டுன்னு சொல்லிட்டுக் கிளம்புங்க’ என்பது மாதிரியே அமர்ந்திருந்தார்கள். "வந்தவங்க உங்களை நல்லா குழப்பி விட்டுட்டாங்களா?" என்று கமல் பரிவுடன் கேட்க ‘ஆமாங்கய்யா...’ என்று ஆளாளுக்கு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்கள்.
"வாழ்க்கைன்னா மேடுபள்ளம் இருக்கத்தானே செய்யும்" என்று தத்துவம் பேச ஆரம்பித்தார் பாலாஜி. (வாங்கின அடி அப்படி போல. அதிலும் ஷிவானி அம்மா அடித்த அடி இருக்கே?!) ‘நான் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி’ என்று புன்னகையில் குளித்துக் கொண்டிருந்தார் சோம். (உங்களுக்கென்னப்பா... சும்மா இருந்தே ஃபைனல் வரைக்கும் வந்துட்டீங்க!). "இதுக்குத்தான் சார். நான் எவன் பேச்சையும் கேட்கறதில்லை” என்று தெளிவாக இருந்தார் ஆரி. (பின்னே..! நீங்களே பேசிட்டு இருந்தா மத்தவங்க பேசறது எப்படிக் கேட்கும்). "சார்... அது வந்து..." (போதும் ரியோ. நீங்க எதுவும் சொல்லவே வேணாம். மூஞ்சைப் பார்த்தாலே தெரியுது. ஆனா அந்த ‘இதயம்’ முரளி கெட்டப்பை மட்டும் கழற்றி வெச்சிடுங்க. பார்க்க முடியல). “மொதோ நாள் நல்லாத்தான் போச்சு. அப்புறம் தான் வெளில நடக்கறதை சொன்னாங்க” என்று இழுத்தார் ரம்யா. (விஷபாட்டிலை திறந்துட்டாங்களா?!).

“வெளில வந்தப்புறம் நீ தம்பியா இருப்பியா–ன்னு சந்தேகமா நிஷாவும் அர்ச்சனாவும் கேட்டாங்க. அதுதான் எனக்கு வருத்தம்” என்பது போல் ரியோ சொன்ன கருத்து தெளிவாக இல்லை. பக்கத்தில் இருந்த சோமுவும் இந்தத் தருணத்தில் ரியோவை சந்தேகமாகத் திரும்பிப் பார்த்தார். ‘எனக்கு அப்படி ஃபீல் ஆச்சு’ என்றார் ரியோ.
“நீங்க அப்படி இல்லல்ல... அப்புறம் என்ன?" என்ற கமல் "எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கணும்னா ஐஸ்கிரீம் விக்கறவராத்தான் இருக்கணும். அது கூட பல்வலிக்காரனுக்கு பிடிக்காது" என்று போகிற போக்கில் கொளுத்திப் போட்டது அட்டகாசமான நகைச்சுவை மத்தாப்பு. "ஒரு திறமையான போட்டியாளரை ஜெயிக்கறதுதான் உண்மையான சந்தோஷம். அதுல தோத்துப் போன கூட சந்தோஷம்தான். போட்டில பங்கெடுக்கறதுதான் முக்கியம்” என்றெல்லாம் ரியோவை உற்சாகப்படுத்திய கமல், எம்.என்.நம்பியார், இந்தி வில்லன் பிரான் போன்றவர்களையெல்லாம் சாட்சிக்குக் கூப்பிட்டு வந்தார்.

சமூகவலைத்தள கிண்டல்கள் குறித்து தனக்கு கவலை இருப்பதாக ரியோ தெரிவித்ததை ஒருபக்கம் புரிந்து கொள்ள முயன்றாலும் ஒருவர் புகழை அடைவதற்காகத் தரப்படும் விலைகளில் அதுவும் ஒன்று என்கிற யதார்த்தத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும். நம்மைத் திட்டுபவர்களையே நாம் அதிகம் கவனிக்கிறோம். மாறாக நம்மை விரும்புபவர்களை அதிகம் கவனித்தாலே போதும், இழந்த உற்சாகத்தைப் பெற்று விடலாம். (இந்த நோக்கில், விகடன் தளத்தில் இதுவரை வந்த ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றையும் நன்றியுடனும் நெகிழ்வுடனும் இந்தச் சமயத்தில் நான் நினைவுகூர்கிறேன். அதற்காக வசையாளர்களை நான் புறந்தள்ளவில்லை. முக்கியத்துவம் தந்து என்னை வாசித்ததற்காக நன்றி. அவர்கள் என் கருத்துடன் மாறுபடுகிறார்கள். அவ்வளவே!).
திரைத்துறையில் நடிகர்கள் எதிர்கொள்ளும் தோல்விகள், பிறகு அது வெற்றியாக மாறும் அதிசயம் (கமலின் சில படங்களே இதற்கு உதாரணம்) தனது நேரத்திற்காக காத்திருக்கும் நடிகர்களின் பொறுமை போன்று பல விஷயங்களைச் சொல்லி போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய கமல், "இப்ப உங்களைப் பார்த்து பொறாமைப்படும் இளைஞர்கள் பலர் வெளியே இருப்பார்கள்" என்றது சத்தியமான உண்மை. பிக்பாஸில் போட்டியாளராக இடம்பெறுவதே ஒரு பெரிய வெற்றிதான்.
"உங்களுக்கு இந்த நிகழ்ச்சி பெரிய வெளிச்சத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இனி மற்றவர்களுடனான அறிமுகம் என்பது சுலபமான விஷயம். உங்களைப் பிடிக்காதவர்கள் கூட ‘ஹலோ’ சொல்வார்கள். உங்களைப் பிடித்துப் போய் கொண்டாடுகிற கூட்டமும் இருக்கிறது" என்று சூசகமாகச் சொன்னார் கமல். (தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிக்பாஸ் பற்றி பலர் கேட்டது அவர் மைண்டில் ஓடியிருக்கும்).

"என் சிரிப்பைப் பொய்யின்னு சொல்லிட்டாங்களாம் சார்" என்று சங்கடத்துடன் சொல்லி விட்டு அதற்கும் சிரித்த ரம்யா, "பிக்பாஸ்ல இதெல்லாம் நடக்கும்னு தெரியும். நம்மைப் பிடிக்காத பக்கங்களும் இருக்கும்னு புரியுது" என்று நெளிந்து கொண்டே சொல்லும் போது, "புகழ்ன்றது தட்ப வெப்பம் மாதிரிதான். நிலைமைக்கேற்ப மாறிக்கிட்டே இருக்கும். இந்த விளையாட்டில் நீங்களா இருந்தீங்கள்ல... அந்த சந்தோஷம் உங்களுக்கு உதவும்" என்று கமல் சமாதானப்படுத்தியதற்குப் பிறகு சற்று தெளிவடைந்தார் ரம்யா.
பிக்பாஸில் பொழுது பூராவும் சண்டைக் கோழிகளாக சிலிர்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கூட ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் தனது பொறுமை, புன்னகை, சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக விளங்கும் ரம்யாவின் மீது எப்படி ஒரு பகுதியினருக்கு வெறுப்புணர்ச்சி ஏற்படுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. உடனே ‘ஆர்மி’ என்று முத்திரை குத்தி விடாதீர்கள். மற்றவர்களோடு ஒப்பிடும்போது பிக்பாஸ் வீட்டில் குறைந்த அளவு தவறுகள் செய்தவராக ரம்யாவையே சொல்வேன். அவரது புறத்தோற்றத்தை விடவும் அகத் தோற்றத்தின் அழகையே இதற்கு பிரதானமான அளவுகோலாக வைப்பேன். நூறு நாட்கள் ஒருவர் தொடர்ந்து முகமூடி அணிய முடியாது.
ஏறத்தாழ ரம்யாவிற்கு நிகரான சகிப்புத்தன்மை கொண்டவராக சோமை சொல்லலாம். ‘தவறான இடத்தில் இருக்கும் சரியான ஆசாமி’ என்றொரு சொற்பிரயோகம் உண்டு. அது போல் அன்புக்கூட்டணியில் சிக்கிக் கொண்டதுதான் அவரின் பெரிய பிழை. அர்ச்சனா வெளியேறிய போது சோமுவால் சற்று வெளியே வர முடிந்தது. ஆனால் கேபியும் ரியோவும் பின்னுக்கு இழுத்துக் கொண்டே இருந்தார்கள். இது சோமுவின் பலவீனம். அன்பு செலுத்துவதில் தவறில்லை. அது இன்னொருவருக்கு பாரபட்சம் காட்டும் எதிர்மறையாக மாறி விடக்கூடாது. இதுதான் சோமுவிடம் பல சமயங்களில் நிகழ்ந்தது. அன்புக்கூட்டணியின் ஜால்ராவாகவும் இருந்தார். மற்றபடி பழகுவதற்கு இனிமையானவராகவும் சகிப்புத்தன்மையிலும் குறை சொல்ல முடியாதவராகவும் இருந்தார்.
"உங்கள் மீது மட்டும்தான் பொதுவெளியில் குறை சொல்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். என்னையும் கூட குறை சொல்கிறார்கள். இதர ஷோக்களில் நடப்பதைப் போன்ற அதிரடி விஷயங்களை நீங்கள் செய்வதில்லை என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் அவற்றைச் செய்யக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். என் அணுகுமுறை மீது மட்டுமே எனக்கு நம்பிக்கையுண்டு. அதுவே சிறந்தது என்று நம்புகிறேன். எனவே அது போன்ற தன்னம்பிக்கையை உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன்" என்பது போல் பல அறிவுரைகளை ‘டிப்ஸ்’ ஆக கமல் வாரி வழங்கியது சிறப்பு.

"வெளியே இருந்து வந்தவர்கள் சொன்ன அபிப்ராயங்கள் உங்களை எப்படியெல்லாம் பாதித்தது?" என்று மற்ற போட்டியாளர்களிடம் விசாரித்த கமல் ஆரியை மட்டும் விட்டு விட்டார். “நீங்கதான் பெரிய கேட்டா போட்டு பூட்டிடீங்களே” என்று கமல் சொன்னதை ஏற்றுக் கொண்டார் ஆரி.
"வெளியே இருந்து வரும் கருத்துக்கள் என்பது அவரவர்களின் பார்வை. அவற்றை நான் அறிந்து கொள்வது என்னுடைய தனித்தன்மையையும் ஒரிஜினாலிட்டியையும் பாதிக்கும். கடைசி வரை நான் நானாக இருந்தே வெளியில் சொல்ல விரும்புகிறேன்" என்று தன் மனவுறுதியை கடைசி வரை ஆரி பின்பற்றுவது சிறந்த விஷயம். தன் குடும்பத்திடம் கூட இந்தக் கறார் உணர்ச்சியை ஆரி காட்டினார். மந்தையில் சேராத ஆடுகளின் தனித்தன்மை இது. இதற்காக கமலை முன்னுதாரணமாகக் காட்டி நெகிழ்ந்தார் ஆரி. உண்மைதான். பல விஷயங்களில் கமலும் மந்தையில் சேராத ஆடுதான்.
‘எவ்ளோ சொல்லியும் காத்துப் போன பலூன் மாதிரியே இருக்கீங்க... முதல்ல இந்த மூஞ்சை மாத்துங்க… நல்லா வாய் விட்டு சிரிங்க.. இப்ப எப்படி இருக்குது மூஞ்சி’ என்று போட்டியாளர்களை வலுக்கட்டாயமாக சிரிக்க வைத்து சூழலின் இறுக்கத்தை இலகுவாக்க முயன்றார் கமல். ஆனால் எத்தனை சொல்லியும் ரியோவின் பரிதாப முகத்தை மாற்றுவது சிரமமான பணியாக இருந்தது.
தன்னுடைய இளமைப்பருவத்தில் தலைமை நடன உதவியாளராக இருந்தபோது ஒரு சீனியர் நடிகையுடன் நிகழ்ந்த பிறாண்டலையும் அது பின்னர் நட்பாக மாறிய கதையையும் சுவாரஸ்யமாக விவரித்தார் கமல். காலம் என்பது எத்தகைய சிறந்த மருந்து என்பதற்கான உதாரணமாக அந்த அனுபவம் இருந்தது.

மற்றவர்கள் தன்னை தனிமைப்படுத்திய போது அல்லது தான் தனிமையாக நின்ற போது நிஷா முன்வந்து பேசியது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது என்று கண்கலங்கினார் ஆரி. இப்படி தனிமைப்படுதலில் ஆரியின் பங்கும் உண்டு என்பதை அவர் சுயபரிசீலனையுடன் யோசித்தால் விளங்கும்.
போட்டியாளர்கள் ஏற்கெனவே பல விதங்களில் குழம்பிக் கொண்டிருக்கும் போது கமல் ஓர் அதிர்ச்சி வைத்தியம் தந்தார். சம்பிரதாயமான திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு திரைப்பட கிளைமாக்ஸில் சட்டென்று ஒரு ஆன்ட்டி கிளைமாக்ஸ் வந்தால் எப்படியிருக்கும்? (உதாரணம் ‘பேட்ட’). அப்படியாக, "வெளியே இருந்து வந்தவர்கள் சொன்ன கருத்துக்கள் ஒருவேளை அவங்களோட உத்தியாக இருந்தால்? அவர்கள் இங்கிருந்து வெளியேறிவர்கள்தானே? இன்னமும் களத்தில் இருக்கும் உங்களைக் குழப்புவதற்காக செய்யும் சதியாக இருந்தால்..?" என்றெல்லாம் ‘இல்லுமினாட்டி’ ரேஞ்சில் கமல் குழப்பிய போது "இதெல்லாம் நம்பற மாதிரியா சார் இருக்குது?” என்று போட்டியாளர்கள் சிரித்தார்கள்.

"இல்லை. குழம்பறதுன்னு முடிவு பண்ணீட்டிங்க. அதான் இன்னமும் தெளிவா குழப்பலாம்னு முடிவு பண்ணேன்" என்று கமல் செய்த நையாண்டி சுவாரஸ்யம். கமலின் இந்தக் கோணம் மிகையானது என்றாலும் ஒரு விஷயத்தை அத்தனை சாத்தியமான கோணங்களிலும் யோசிக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும் அமைந்தது. போட்டியாளர்களை சமாதானப்படுத்துவதற்காகவே இந்த மிகையான கோணத்தை கமல் முன்வைத்திருக்க வேண்டும்.
“ஓகே... பணப்பெட்டியை எடுத்துட்டு எஸ்கேப் ஆன கேபியை பார்க்கலாமா?” என்று கமல் கேட்டதும் போட்டியாளர்கள் உற்சாகமானார்கள். புடவையெல்லாம் கட்டி பெரிய பெண்ணாக வந்த கேபியைப் பார்த்து ‘கேபி வரலையா?’ என்று கமல் கேட்டது சுவாரஸ்யமான குறும்பு. (இதே மாதிரியானதொரு காட்சியை ‘மகாநதி’ திரைப்படத்தில் கமல் கையாண்டிருப்பது அவரின் சிறப்பான நடிப்புத் தருணங்களில் ஒன்று).

அதுவரை புடவையணிந்த கேபியை நாம் பார்க்காததால் வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது. ஆனால் அவரின் ஒப்பனையில் ஏதோவொரு கோளாறு இருந்ததை உணர முடிந்தது. "பிக்பாஸ் போட்டியில் இரண்டு பேர்களுக்கு மட்டும்தான் Cash prize உண்டு. ஒன்று இறுதியில் வெற்றியாளராக வருபவர்களுக்கு. இன்னொன்று இது போன்ற வாய்ப்பை தவற விடாதவர்களுக்கு. அந்த வகையில் நீங்கள் செய்தது நல்ல முடிவுதான்" என்று கேபியைப் பாராட்டினார் கமல்.
“ஆமாம் சார். யோசிச்சுதான் முடிவு பண்ணேன். இருந்தாலும் கொஞ்சம் பயமாதான் இருந்தது. ஆனா வீட்லயும் சரி. சோஷியல் மீடியாக்களிலும் சரி, என்னோட முடிவைப் பாராட்டின போதுதான் நிம்மதியாச்சு" என்று சந்தோஷம் வழியும் முகத்தோடு சொன்னார் கேபி.

கேபியை ஒரு பக்கம் பாராட்டினாலும் இன்னொரு பக்கம் நெருக்கடி தரும் கேள்வியையும் கேட்டார் கமல். "ஒரு போட்டியில் இறுதிக்கோட்டை தொடுவதுதானே ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்கு அழகு?” என்று அவர் கேட்ட கேள்விக்கு, "இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வந்த போதே ஒரு நிறைவை எட்டி விட்டேன். அதற்கு முன்பாக என்றால் பணப்பெட்டியை நிச்சயம் தொட்டிருக்க மாட்டேன்" என்று கேபி சொன்னது ஒருவகையில் பொருத்தமான பதில். "மற்றவர்களையெல்லாம் பிக்பாஸ்தான் வெளியேற்றினார். ஆனால் என்னுடைய முறையில் அதை நான்தான் தேர்வு செய்தேன்" என்று கேபி சொன்னதும் சமயோசிதமான, சிறந்த பதில். கமலும் இதைப் பாராட்டினார்.
அகம் டிவி வழியாக தனது நண்பர்களைச் சந்தித்த கேபி மிகவும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தார். பெண்களை ‘டி’ போட்டு பேசும் பழக்கம் சோமுவின் அன்பையும் உரிமையையும் காட்டினாலும் பொதுவெளியில் அப்படிப் பேசுவதை அவர் குறைத்துக் கொள்ளலாம் என்று மீண்டும் தோன்றிற்று. தன் மனைவியாக இருந்தாலும் கூட நண்பர்களின் முன்னிலையில் ‘டி’ போட்டு அழைக்காமல் இருப்பதே அடிப்படையான நாகரிகம்.

"கேபியோட அம்மா வந்திருக்காங்கன்னு நெனச்சேன்" என்று கேபி புடவை அணிந்து வந்திருப்பதைக் கிண்டலடித்தார் சோம். ‘நல்லாயிருக்கீங்களா. நல்லாயிருக்கீங்களா?’ என்று கேபி பலமுறை விசாரித்ததை பாலாஜி கிண்டலடிக்க பிறகு அந்தக் கிண்டலைப் பின்பற்றி கமலும் விசாரித்தது அநியாயமான குறும்பு.
கேபியைப் பற்றிய வீடியோ ஒளிபரப்பானது. அதை மகிழ்ச்சியும் கண்ணீரும் கலந்த கலவையில் பார்த்துக் கொண்டிருந்தார் கேபி. பின்பு தனது வாழ்த்துகளைச் சொல்லி கேபியை வழியனுப்பிய கமல், இறுதிப் போட்டி பற்றிய அறிவிப்பை தெரிவித்து விட்டு விடைபெற்றுச் சென்றார்.
ஆக... இன்று மாலை ஆறு மணிக்கு டிவி முன்னால் அமர்ந்து விடிய விடிய குத்த வைத்துக் காத்திருந்தால் வெற்றியாளர் பற்றிய செய்தி வரும். அது ‘ஆரி’ப்போன தகவலாக இருக்குமா? அல்லது சூடானதாக இருக்குமா என்பதைக் காத்திருந்து அறிவோம்.