Published:Updated:

அர்ச்சனாவின் `மாமா' கமென்ட்.... கோபமே வரவில்லையா அந்த ரோபோவுக்கு?! பிக்பாஸ் - நாள் 71

பிக்பாஸ் - நாள் 71

‘அவனைத் தொட்டா இவனுக்கு வலிக்கும்’ என்கிற கணக்கின்படி அர்ச்சனாவிற்கு பெயர் சூட்டியதுதான் ரியோவிற்கு காண்டு. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 71

Published:Updated:

அர்ச்சனாவின் `மாமா' கமென்ட்.... கோபமே வரவில்லையா அந்த ரோபோவுக்கு?! பிக்பாஸ் - நாள் 71

‘அவனைத் தொட்டா இவனுக்கு வலிக்கும்’ என்கிற கணக்கின்படி அர்ச்சனாவிற்கு பெயர் சூட்டியதுதான் ரியோவிற்கு காண்டு. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 71

பிக்பாஸ் - நாள் 71
‘தலைவன்... வேற ரகம்… பார்த்து விளையாடு’ என்கிற தர்பார் படப்பாடலுடன் இன்றைய பொழுது விடிந்தது. இது அனிதாவைக் குறிக்கும் பாட்டாக இருக்கலாம்.

நிஷாவை உணர்ச்சிவசப்பட வைத்து, Topple Nomination Card வென்ற சமயத்தில் ‘வேட்டையாடவே வெறியோட சுத்தறான்’ என்று தத்தக்கா பித்தக்கா என்று அனிதா பாடி வரும் போது முன்பு காமெடியாக தெரிந்தது. ஆனால் சாம், ரமேஷ், நிஷா என்று ஒவ்வொருவராக அவர் காலி செய்து வரும் போது உண்மையிலேயே கொலைவெறியுடன்தான் அப்போது பாடியிருக்கிறார் போலிருக்கிறது. கங்கா சந்திரமுகியாகி மாறி வரும் மோமன்ட் இது.

‘அப்பவே சொல்லியிருந்தா’ என்கிற ரியோவின் அபத்தமான சமாளிப்பையொட்டி அனிதாவும் ரம்யாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். "Bossy-ன்னு சொன்னதால அர்ச்சனா அக்கா கோபப்பட்டிருக்காங்க. அதோட விளைவுதான் ரியோ என்னை நாமினேட் பண்ணது" என்று சொன்ன அனிதா, ரியோ விளக்கம் சொல்லும் போது ரிப்பீட் மோடில் அவரின் உடல்மொழி இருப்பதை செய்து காண்பித்தது சுவாரஸ்யம்.

வர வர பாலாஜிக்கு ஆஜீத்திற்கும் வித்தியாசமே தெரியவில்லை. இந்த உரையாடலின் போது, பக்கத்தில் இருந்த பாலாஜி எதுவும் பேசாமல் அமைதியாக அமைந்திருந்தது ஆச்சர்யம். ஆரி சொன்னது போல் ‘பயபுள்ள ஃபைனல் போக பிளான் பண்ணி’ சூதானமா விளையாடுது போல.

பிக்பாஸ் - நாள் 71
பிக்பாஸ் - நாள் 71
திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. தனியறையில் போய் கொலைவெறியுடன் அனத்தலாம் என்று ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு ஒரு ட்விஸ்ட் வைத்தார் பிக்பாஸ். ஓப்பன் நாமினேஷன்.

முதலில் எழுந்த ஆரி, ஆஜீத்தையும் ரியோவையும் நாமினேட் செய்து தன் பாணியில் அதற்கு தர்க்கபூர்வமான காரணங்களைச் சொல்லி அமர, "நானும் ரொம்ப நாளா காத்துக்கிட்டே இருந்தேன். ஆரி ப்ரோ எப்படித்தான் உள்ளே பேசுவாருன்னு பார்க்க... இன்னிக்கு பார்த்துட்டேன். சூப்பர் ப்ரோ" என்று பாராட்டினார் பாலாஜி. இதே போல் அர்ச்சனாவின் பாராட்டும் சர்காஸ்டிக்காக இருந்தது.

ரியோவின் முறை வந்த போது அவர் அனிதாவிற்கு எதிரான சில காரணங்களைச் சொல்லி விட்டு, "ஆனா நான் அவங்களை நாமினேட் பண்ணப் போறதில்லை" என்று ஆரியையும் பாலாவையும் நாமினேட் செய்தார். இது பிறகு சர்ச்சையாயிற்று.

ஆஜித் அர்ச்சனாவை நாமினேட் செய்து விட்டு, "ஒரு சமயம் அவங்க வீட்டுக்குப் போகணும்னு சொல்றாங்க. இன்னொரு சமயம் டைட்டில் வின் பண்ணணும்னு சொல்றாங்க.. குழப்பமா இருக்கு" என்று காரணம் சொல்ல, இங்கு இடைமறித்த பிக்பாஸ், "ஆஜீத்... நீங்க சொன்ன காரணம் எனக்கே குழப்பமா இருக்கு"என்று சொல்ல சபை வெடித்து சிரித்தது. ஆஜித் திணறித் திணறி சொன்னாலும் அவர் சொன்ன காரணம் சரிதான். பிக்பாஸ் ஆஜித்தை கலாய்த்திருக்கிறார் போலிருக்கிறது.
நாமினேட் செய்யப்பட்டவர்கள்!
ஆக... இந்த வாரம் வெளியேறுவதற்கான பட்டியலில் நாமினேட் ஆனவர்கள் ஆஜீத், சோம், ஷிவானி, அனிதா, அர்ச்சனா, ரியோ மற்றும் ஆரி.

நாமினேஷன் பட்டியலில் அர்ச்சனா வந்திருப்பது இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். அர்ச்சனாவின் அலப்பறைகளைக் கண்டு வெறுத்து ‘அவர் சீக்கிரம் வெளியே போக வேண்டும்’ என்று சிலர் ஆத்திரப்படுவதை இணைய எதிர்வினைகளில் கவனிக்கிறேன். அது தவறான முடிவு என்பது என் கருத்து.

பிக்பாஸ் - நாள் 71
பிக்பாஸ் - நாள் 71

அர்ச்சனா போன்ற வலிமையான போட்டியாளரும் வெளியேறி விட்டால் இந்த ஆட்டம் இன்னமும் சுவாரஸ்யம் குறைந்து போகும். வில்லன் வலிமையாக இருந்தால்தான் சுவாரஸ்யமான டிராமா கிடைக்கும். பாலாஜியும் அடக்கி வாசிக்கும் இந்தச் சூழலில் அர்ச்சனாவின் தேவை மிக அவசியம். எனவே வாக்காளப் பெருமக்கள் இதை நினைவில் வைத்துக் கொண்டால் நன்று.

இன்னொரு கொலைவெறி காரணமும் உண்டு. நிஷா வெளியேறிய போது அர்ச்சனா உடைந்து அழுதார் அல்லவா? ‘லவ் பெட்’ காலியாக காலியாக... அவரின் ரியாக்ஷன்ஸ் எப்படி இருக்கிறதென்று காத்திருந்து பார்க்க வேண்டும். குறிப்பாக சோம் வெளியேறும் போது அர்ச்சனாவின் நாடகம் இன்னமும் ரணகளமாக இருக்கும் என்று யூகிக்கிறேன்.

நாமினேஷன் சடங்கு முடிந்ததும் அனிதா எழுந்து சென்று, "ரியோ, நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட நேராகவே சொல்லியிருக்கலாம்" என்று ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிக்க அந்த விவாதம் சூடாக தொடர்ந்தது. நாமினேஷன் சமயத்தில் அனிதா பற்றிய விமர்சனங்களை ரியோ சொன்னது அநாவசியமானது. அவர் தன் கருத்தைப் பதிவு செய்ய விரும்பியிருந்தால் வேறொரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். நாமினேஷனின் போது சொல்லும் போது அது மற்றவர்களின் முடிவுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஒரு கட்டத்தில் அனிதாவிடமிருந்து ரியோ எஸ்கேப் ஆக முயலும் போது, "ஏன் பேச தைரியம் இல்லையா?" என்று அனிதா கேட்டது, ரியோவின் மண்டையில் ‘சுர்’ என்று ஏறி விட்டது. அர்ச்சனா அணியில் உள்ளவர்களைத் தூண்டி உணர்ச்சவசப்பட வைத்து அவர்களைத் தவறு செய்ய வைக்கும் மாஸ்டர் பிளானில் அனிதா இறங்கி விட்டார் போலிருக்கிறது. (வேட்டையாடவே வெறியோட சுத்தறான்).

"நான் மட்டுமே தனியாக நின்று சமைத்தேன் என்று சபையில் அனிதா சீன் போட்டிருக்க வேண்டாம். கேட்டிருந்தால் உதவிக்கு வந்திருப்போம்" என்பது ரியோ சொன்ன காரணம். இதுவும் ‘அப்பவே சொல்லியிருந்தா’ என்கிற மாதிரியான அபத்தமான விளக்கம். ஒருவர் தனியாக நின்று கிச்சனில் போராடிக் கொண்டிருக்கும் போது மனிதாபிமானம் உள்ள எவருமே தாமாக உதவ முன்வருவார் அல்லது அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார். "கேட்டிருந்தா... சொல்லியிருந்தா..." என்று எல்லாவற்றையுமே சொன்னால்தான் உதவி செய்வேன் என்று ரியோ சொல்வது முறையற்றது.

இதைப்போலவே மனிதர் அணியாக இருந்த போது அனிதா சமைத்தாரா, ரோபோ அணியாக இருந்த போது சமைத்தாரா என்பதில் ரியோவிற்குக் குழப்பம் நிலவியது. "எனக்கு அதெல்லாம் தெரியாது..." என்றார் ரியோ. "இந்தப் பாயின்டே தெரியலையா?" என்று வெறுப்பேற்றினார் அனிதா.

பிக்பாஸ் - நாள் 71
பிக்பாஸ் - நாள் 71

ரோபோ அணிதான் வீட்டு வேலைகள் முதற்கொண்டு அனைத்தையும் செய்ய வேண்டும். டாஸ்க்கில் இது குறித்த தெளிவான குறிப்பு இருந்தது. இந்த டாஸ்க் தொடர்பான அறிவிப்பை முன்பு வாசித்தவரே ரியோதான். "ரோபோவா இருக்கும் போதுதான் சமைச்சேன்" என்றார் அனிதா. ஆனால் "மனிதர்களாக இருக்கும் போதுதான் சமைச்சாங்க" என்று சாட்சியம் சொன்னார் ஆரி.

ஆரி சொல்வது உண்மையெனில் அனிதா தனியாக நின்று கஷ்டப்பட்டிருக்க தேவையில்லை. அவர் மனிதர் அணி என்பதால் ரோபோக்களை உதவிக்கு ஏவியிருக்கலாம். இரண்டு ரோபோக்களை மட்டும்தான் ஒரு சமயத்தில் ‘உணர்ச்சி’ தூண்டும் டாஸ்க்கை செய்ய முடியும். இதர ரோபோக்களை வீட்டு வேலை செய்ய வைக்கலாம் என்பதுதான் அறிவிப்பு.

இதில் எங்கு குளறுபடி நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் அனிதா தனியாக நின்று சமைக்கும்படி ஆயிற்றுபோல.

‘அவனைத் தொட்டா இவனுக்கு வலிக்கும்’ என்கிற கணக்கின்படி அர்ச்சனாவிற்கு பெயர் சூட்டியதுதான் ரியோவிற்கு காண்டு. அந்த ஆத்திரத்தில் அவர் தேடிச் தேடிச் சொல்லும் காரணங்களுக்கு லாஜிக் கண்டுபிடிக்க முடியாமல் அவரே இப்போது திணறுகிறார்.

“ஏன் கத்துறீங்க... நீங்க கத்தாதீங்க" என்கிற விடாக்கொண்டன், கொடாக்கொண்டன் போட்டியாக இந்த விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் அனிதா விலகிப் போக, "உங்களுக்கு தைரியம் இல்லையா?" என்று பதிலுக்கு வெறுப்பேற்றினார் ரியோ. அனிதா மாதிரியே செய்து காண்பித்து அனிதாவின் பிழைகளைச் சுட்டிக் காட்டுவதுதான் அவரின் நோக்கமாம்.

இவர்கள் ரணகளமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, மேக்கப்பின் மூலம் தனக்கு பட்டி டிங்கரிங் பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனா, "நீங்க டென்ஷன் ஆவாதீங்க... அதெல்லாம் சரியாயிடும்" என்று பார்வையாளர்களுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் - நாள் 71
பிக்பாஸ் - நாள் 71

"நானும் எவ்வளவோ பெஸ்ட் கொடுத்திருக்கேன்... யாரும் இங்க பாராட்டலை. எனக்கும் அந்த வலி இருக்கு. நீங்க சமைச்சத மட்டும் இப்படி தனியா சொல்லணுமா?" என்று விவாதத்தின் போது சொன்னார் ரியோ. ஆனால் இதற்கான பதில் எனக்கு அப்போதே தோன்றிற்று. ஆனால் அது அனிதாவிற்கு லேட்டாகத்தான் தோன்றியது போல.

எனவே விவாதம் முடிந்த கையோடு வெளியே சென்று சோமிடம் பேசிக் கொண்டிருந்த போது, "எனக்கு கிரெடிட் வேணும்னு நானும் அடம்பிடிக்கலை... ஆனா இந்த மேட்டர்ல நான் ஜெயிலுக்குப் போனேன். அதுதான் முக்கியமான விஷயம். அதைப் போய் அவர்கிட்ட சொல்லுங்க" என்றார் அனிதா. “எனக்கு பாராட்டுல்லாம் வேணாம். ஆனா அதே சமயத்துல என் உழைப்பை கொச்சைப்படுத்த வேணாம்" என்பது அனிதாவின் ஆதங்கம்.

"இந்த ரியோ பய இருக்கானே... தனியறைல போய் நாமினேட் பண்ணும் போதெல்லாம் ஒரு வரிதான் பேசிட்டு வருவான்… இன்னிக்கு மட்டும் ஏன் எக்ஸ்ட்ராவா பேசினான்?" – இப்படிச் சொன்னது யார் தெரியுமா? ரியோவேதான். தன்னையே சர்காஸ்டிக்காக குறை சொல்லிக் கொள்கிறாராம். "அந்தப் பய அப்படித்தான். டக்குன்னு எமோஷனல் ஆயிடுவான்" என்று அர்ச்சனாவும் அதே பேட்டனை ஃபாலோ செய்தார். ‘மற்றவர்களின் செல்வாக்கில் செயல்படுகிறார்கள்’ என்று இவர்கள் எதிரணியை குற்றம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

"என்ன சொல்ல... ஏது சொல்ல..?” என்று அர்ச்சனா பாட ஆரம்பிக்க, அதைத் தொடர்ந்து பாடிக் கொண்டு சென்றார் ரியோ. அர்ச்சனாவிற்கு ரியோ எப்போதும் பின்பாட்டு பாடுபவர் என்பது நன்றாகவே நமக்குத் தெரியும். இதை இப்படியெல்லாம் நிரூபிக்க வேண்டுமா ரியோ?!

அனிதாவிடம் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டு திரும்பிய சோமை சர்காஸ்டிக்காக வரவேற்றார் அர்ச்சனா. தன்னிடமுள்ள அடிமை சிறிது நேரம் காணாமல் போனால் கூட அர்ச்சனாவிற்குப் பதற்றமாகி விடுகிறது போல. "அனிதா உன் கிட்ட பேசணுமாம்டா...” என்கிற தகவலை ரியோவிடம் சொன்னார் சோம்.

அப்போது அர்ச்சனா சொன்ன ஒரு வசை எவரையுமே கோபப்பட வைக்கும். "நீ என்ன மாமாவா?’' என்று அவர் போகிற போக்கில் சட்டென்று சொன்னது பார்வையாளர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் சோமிற்கு எவ்வித சொரணையும் இல்லை. இதை கேட்டது போலவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. சோம் MMA பயின்றவர் என்று சொல்லப்படுகிறது. அதனுடன் கூடுதலாக ஓர் எழுத்தை இணைத்து பங்கமாகக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் அர்ச்சனா. அப்பவுமா இந்த ரோபோவிற்கு கோபம் வராது?!

பிக்பாஸ் - நாள் 71
பிக்பாஸ் - நாள் 71
இரண்டு அணிகளும் பகைமையுணர்ச்சியை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருந்தால்தான், தான் தலைவராக நீடிக்க முடியும் என்கிற அரசியல்வாதிகளின் டெக்னிக்கை அர்ச்சனாவும் அப்படியே பின்பற்றுகிறார் போலிருக்கிறது.

“தலையை வாரிக்கங்க. முகத்தை சிரிச்சா மாதிரி வையுங்க...” என்று பாஸ்போர்ட் போட்டோ எடுக்கப் போவது போல் சமாதானப் பேச்சிற்கு வந்திருந்த ரியோவைத் தயார் செய்து கொண்டிருந்தார் அனிதா. இரண்டு பேர்களும் கூலாக பேச வேண்டுமாம். (அப்படில்லாம் யோசிக்காதே கன்னுக்குட்டி... ஃபுட்டேஜ் பத்தாது... சந்திரமுகி ஆக்ஷன் பிளாக்தான் வேணும் என்று பிக்பாஸ் உள்ளுக்குள் கதறியிருக்கலாம்).

இரண்டு பேரும் புன்னகையுடன் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டது சுவாரஸ்யமான காட்சி. "இவிய்ங்க... ஒண்ணு கூடிடுவாயிங்களோ...” என்கிற மாதிரி உர்ரென்று பக்கத்தில் அமர்ந்திருந்தார் ஆரி.

அனிதாவும் ரியோவும் பரஸ்பரம் விளக்கம் கூறி சற்று அமைதி அடைந்தவுடன் ரியோ ஆரம்பித்த இன்னொரு தலைப்பும் அதன் லாஜிக்கும் சுவாரஸ்யமாக இருந்தது. "என்கூட சண்டை போட்டவங்கள்லாம் வெளியே போயிட்டாங்கன்னு நீ சொன்னேயில்ல அனிதா. ஆனா அப்படி கிடையாது... சுரேஷ் சார், சாம், சனம், நிஷா–ன்னு உன் கிட்ட சண்டை போட்டவங்கதான் வெளியே போயிருக்காங்க. பெரிய லிஸ்ட் இது... நிதானமா யோசிச்சிப் பாரு" என்று காரணங்களை அடுக்க நீண்ட நாள் கழித்து தன்னுடைய பாணியில் ‘அஹஅஹஅஹ’ என்று சிரித்தார் அனிதா.

"அப்ப ரம்யா செவரு இல்லையா... அனிதாதானா?" என்று பாலாஜி கிண்டலடிக்க, "பாவிங்களா... நீங்க பண்றதையெல்லாம் பண்ணிட்டு. என்னை இத்தனை நாளா குத்தம் சொல்லிட்டு இருந்தீங்களா. குட்டிச் செவருங்களா" என்று சிணுங்கினார் ரம்யா. "எங்களுக்காவது சண்டை போட்டாதான் பிரச்னை வரும். உன்னையெல்லாம் பார்த்தாலே வெளியே போயிடுவாங்க" என்று ‘லெக் தாதா’ ரேஞ்சிற்கு ரம்யாவை பங்கம் செய்து விட்டு கிளம்பினார் ரியோ.

வடிவேலுவும் சார்லியும் வைக்கோல் போரின் மீது படுத்துக் கொண்டு ‘நாளை இந்நேரம் இப்படி பண்ணி இருப்பாங்க இல்லடா’ என்கிற திரைப்படக்காட்சியின் புகைப்படம் என்பது ‘மீம்’ உலகில் பிரசித்தி பெற்றது. அப்படியாக அர்ச்சனா, சோம், ரியோ ஆகியோர் பீன் பேகில் ‘பப்பரப்பே’ என்று படுத்துக் கொண்டு நாமினேஷன் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள்.

பிக்பாஸ் - நாள் 71
பிக்பாஸ் - நாள் 71

"என்னை யார் யாரெல்லாம் நாமினேட் பண்ணாங்க... அவனை யாரு பண்ணது" என்று திருவிளையாடல் சிவாஜி மாதிரி தொடர்ச்சியாக கேள்விகளை கேட்க அவற்றிற்கு ஏறத்தாழ சரியாக பதில் சொல்லிக் கொண்டே வந்தார் ரியோ.

நான் இந்தக் கட்டுரைக்காக, ‘யார் நாமினேட் ஆகியிருக்கிறார்கள்’ என்பதை ஒவ்வொரு வாரமும் குறித்து வைத்து மறுபடி மறுபடி புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்ட வீடியோவை மறுபடியும் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆனால் ஒரேமுறையில் லைவ்வாக பார்த்த விஷயத்தை இவர்கள் இத்தனை துல்லியமாக ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பது பாராட்டத்தக்க விஷயம்தான். ‘'நமக்கு எதிராக எதிரணியினர் குத்தியிருக்கிறார்கள்'’ என்பதை காரணங்களுடன் அர்ச்சனா விளக்க ‘'நாம வெளியே போகணும்னு நெனக்கறாங்க போல'’ என்று பாவனையாக அலுத்துக் கொண்டார் ரியோ.

அர்ச்சனா டீம் ‘யார் யாரையெல்லாம் நாமினேட் செய்திருக்கிறார்கள்’ என்று பார்த்தால் அனைத்துமே எதிரணி நபர்கள்தான். இந்த லட்சணத்தில் இவர்கள் ஏதோ நியாயத்தின் பக்கம் நின்று கொண்டிருப்பது போல சலித்துக் கொள்வது நகைப்பாக இருக்கிறது.

ஜெயமோகன் எழுதிய ‘ஏழாம் உலகம்’ என்றொரு அற்புதமான நாவல் இருக்கிறது. பிச்சைக்காரர்களின் உலகத்தை அதன் பின்னுள்ள வணிக அரசியலை விரிவாக பதிவு செய்த நாவல் இது. இதன் ஒரு பகுதிதான் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் காட்சிகளாக வந்தது.

இதில் ஒரு பாத்திரம். ஆட்களை கடத்திக் கொண்டு வந்து அவர்களை ஊனமுற்றவர்களாக்கி கோயில் வாசலில் வைத்து பிச்சையெடுத்து சம்பாதிக்கும் ஆசாமி அவர். இப்படி பல கும்பல்கள் இருக்கின்றன. இந்த ஆசாமியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பிரச்னை வரும். இவருடைய மகள் திருமண ஏற்பாட்டின் போது நகைகளைத் திருடிக் கொண்டு ஒரு ரவுடியுடன் ஓடி விடுவாள்.

அது சார்ந்த துயரத்தில் இந்த ஆசாமி இருப்பார். அப்போது இவரின் மனைவி ‘நாம யாருக்கு என்ன பாவம் பண்ணோம்’ என்று கடவுளிடம் வேதனையோடு முறையிடுவார்.

பிக்பாஸ் - நாள் 71
பிக்பாஸ் - நாள் 71

எதற்காக இந்த உதாரணத்தைச் சொன்னேன் என்றால், நாம் அன்றாட வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும் பலரை மிதித்துக் கடந்திருப்போம். நமக்கு ஒரு பெரிய துயரம் வரும் போது நாம் செய்த பிழையெல்லாம் நம் நினைவில் வராது. நம்மை நல்லவராக உருவகப்படுத்திக் கொண்டு ‘நான் என்ன பாவம் பண்ணேன்’ என்று சுயபச்சாபத்துடன் உருக ஆரம்பிப்போம். சற்று நிதானமாக யோசித்தால்தான் நம்முடைய கடந்த கால கீழ்மைகள் நினைவிற்கு வரும்.

அர்ச்சனா டீமின் புலம்பலும் இதைத்தான் நினைவுப்படுத்துகிறது. குரூப் அமைத்துக் கொண்டு இவர்கள் போங்காட்டம் ஆடிக் கொண்டு எதிர் டீமை மட்டும் இவர்கள் சுட்டிக் காட்டுவதில் எந்த அறமும் இல்லை.

'‘இந்த விளையாட்டை அன்போட விளையாட முடியாதா?” என்று கேட்கிறார் அர்ச்சனா. நிச்சயம் முடியும். இந்த வீட்டில் உள்ள அனைவருமே ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புடன் இருந்தால் மட்டுமே அது சாத்தியமே. விளையாட்டு வேறு, தனிப்பட்ட நட்பு வேறு என்கிற துல்லியமான வரையறையும் புரிதலும் இருந்தால் ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டே ஆட்டத்தை ஆடலாம். இந்த வகையில் சிறிதாவது பொருந்திப் போகிறவர் ஆரி மட்டுமே.

ஆனால் பாரபட்சமும் ஒரவஞ்சனையும் தொட்டாற்சிணுங்கித்தனமும் உள்ள வீட்டில் அது எப்படி சாத்தியம்? முதலில் ‘அன்பை உபதேசம் செய்யும்’ அர்ச்சனாவே அதற்கு முன்னுதாரணம் இல்லையே? மற்றவர்களைத் தூண்டி விடும் ஆசாமியாக அல்லவா இருக்கிறார்?

‘'அவங்களுக்கு அன்பு பிடிக்காது. ஏன்னா... அன்பு அவங்க வீட்டு வேலைக்காரன்'’ என்று இந்தச் சமயத்தில் சோம் மொக்கையாக ஒரு ஜோக் அடிக்க ஏதோ அவர் உலகச் சிந்தனையைப் பிழிந்து நகைச்சுவை ரசமாக வடித்து விட்டதைப் போன்ற மகிழ்ச்சியுடன் எழுந்த அர்ச்சனா... ‘'சூரிய வெளிச்சத்துல நீ அடிச்ச நல்ல ஜோக் இது. இப்பத்தான் நீ விளையாட ஆரம்பிச்சிருக்கே. வெல்கம்’' என்று சோமைப் பாராட்டினார். ‘அப்ப இதுவரைக்கும் டம்மியா இருந்தேன்னு சொல்றியா?’ என்று பதிலுக்கு கேட்காமல் ‘தாங்க்யூ’ என்றது சோம் ரோபோ.

அன்பு என்கிற பெயரில் நிஷாவை இவர்கள் வேலைக்காரி போல் பயன்படுத்திக் கொண்டிருந்ததைத்தான் சோம் குறிப்பிடுகிறார் போல. சப்கான்ஷியஸில் இருந்து வெளிப்பட்ட உண்மை.

‘ஹமாம் இருக்க பயமேன்?’ என்கிற விளம்பரதாரர் டாஸ்க் நடந்தது. இதில் ஆரி இருக்கும் அணிதான் வெற்றி பெறும் என்பதை முன்பே யூகித்து விடலாம். ஏனெனில் அவர்தானே ‘நேர்மை’யின் விளம்பரத் தூதுவர்?

பிக்பாஸ் - நாள் 71
பிக்பாஸ் - நாள் 71

‘ஏனோதானா... எவனோ செத்தான்...’ ரேஞ்சிற்கு சுவாரஸ்யமில்லாமல் நடந்த இந்த விளையாட்டு டாஸ்க்கில் சிறு சண்டைகளுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ‘'ஏன் கத்தறீங்க. நீங்க ஒண்ணும் வீட்டு ஓனர் இல்லை'’ என்று ஓவர் ரியாக்ட் செய்தார் பாலாஜி. ‘'நாங்க நடுவர். எங்க வேலையைப் பார்க்க விடுங்க'’ என்றார் அர்ச்சனா. தனக்கு வழங்கப்பட்ட பணியை இன்னொரு நடுவரான அனிதா சரியாக செய்யாத காரணத்தினால் அர்ச்சனாவிடமிருந்து ஊமைக்குத்து ஒன்றைப் பெற்றார்.

அப்பாவியாக சப்பாத்தி உருட்டிக் கொண்டிருந்த ஷிவானியை ‘வாக்குமூல அறைக்கு’ கூப்பிட்டார் பிக்பாஸ். அப்போது ஷிவானிக்கு தெரிந்திருக்காது. பிக்பாஸ் தன்னைத்தான் பிறகு மாவு போல போட்டு பிசையப் போகிறார் என்று.

தேமேவென்று அமர்ந்திருக்கிற குழந்தையை வம்படியாக கூப்பிட்டு கிள்ளி அழ வைக்கிற டாஸ்க் இது. போட்டியாளர்களின் உணர்வுகளைத் தூண்டி அழ வைத்து அதைக் காட்சிப் பொருளாக்கும் முறையற்ற செயல். ஒட்டுமொத்த நோக்கில் பிக்பாஸ் என்பதே மனிதர்களின் அந்தரங்கத்தை காட்சியாக்கும் வணிகம் என்னும் போது இந்தப் பகுதியை மட்டும் விமர்சித்து என்ன பயன்? ரியாலிட்டி ஷோக்களில் இந்த உணர்வுச்சுரண்டல் என்பது ஒரு பகுதியாகவே மாறி விட்டது.

‘'எப்படி இருக்கீங்க ஷிவானி?” என்று அன்பாக விசாரிக்க ஆரம்பித்த பிக்பாஸ், ‘'இவ்வளவு நாள் இந்த வீட்ல இருந்திருக்கீங்க. அதைப் பத்தி சொல்லுங்க'’ என்று வலையை விரிக்க ஆரம்பித்தவுடன் ஷிவானியின் முகம் மாறத் துவங்கியது. கண் கலங்கியது. போகப் போக கேவி கேவி அழ ஆரம்பித்து விட்டார். திணறித் திணறி அவர் பேசியது விட்டு விட்டு கேட்க, இது முதலில் எனக்குப் புரியாமல் என் கணினி ஸ்பீக்கரில்தான் ஏதோ கோளாறு என்று நினைத்து விட்டேன்.

தேவையில்லாத இடங்களில் எல்லாம் சப்டைட்டில் போடும் பிக்பாஸ் டீம் இதற்கு போட்டிருக்கலாம். ‘'எந்த எதிர்பார்ப்பும் இல்லாமத்தான் இங்க வந்தேன். ஜாலியா இருக்கலாம்னு வந்தேன்'’ என்று ஷிவானி ஆரம்பித்த போது ‘இது ரத்தபூமி’ன்னு இவருக்கு முன்பே தெரியாதா என்று ஆச்சர்யமாக இருந்தது.

பிக்பாஸ் - நாள் 71
பிக்பாஸ் - நாள் 71

‘எல்லாத்திலயும் கடைசியா வர்றேன். எனக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாவுது. யார் கிட்ட சொல்லி அழறதுன்னு புரியலே. நான் நானாதான் இருக்கேன்’ என்று அழுகையை அடக்க முடியாமல் திணறிய ஷிவானியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

முன்பே சொன்னதுதான். ஷிவானி தனது இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவசியமான இடங்களில் கூட அமைதியாக இருக்கும் போதுதான் நெருடல் ஏற்படுகிறது. அவர் அடிப்படையில் ஒரு நடிகை என்று அறிகிறேன். ‘'இந்தக் காட்சியில் நீங்க கோபமா பேசி நடிக்கணும்மா” என்று இயக்குநர் ஒரு சூழலைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சமயத்திலும் ‘'இல்லைங்க. நான் வாய் திறந்து பேச மாட்டேன்’' என்றா செல்வார்?

அடிப்படையில் அமைதியாக உள்ளவர்கள் இந்தச் சமூகத்திற்காக தங்களை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. இதற்காக அவர்களின் அடிப்படையில் இருந்து பெரிதும் விலகி, சமூகத்திற்காக நடிக்க வேண்டாம். சூழல் தரும் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முயலலாம். இது சமூகத்தில் உள்ள ‘ஷிவானி’களுக்காக என் எளிய அறிவுரை. ‘டிப்ஸ்’ என்றும் வைத்துக் கொள்ளலாம்.

அம்மாவால் அதிகம் செல்லம் கொடுக்கப்பட்டு, சுயமாக எந்த முடிவும் எடுக்கத் தெரியாத, பிறரைச் சார்ந்தே வாழப் பழகிய குழந்தையாகவே ஷிவானியைப் பார்க்க முடிகிறது. இது பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அவர்களின் சுயத்தோடு சுதந்திரமாக வளர அனுமதியுங்கள்.

பிக்பாஸ் - நாள் 71
பிக்பாஸ் - நாள் 71

ஷிவானியின் அழுகையை தேவையான அளவிற்கு கசக்கிப் பிழிந்த பிக்பாஸ், பிறகு அவரைச் சமாதானப்படுத்தும் நோக்கில் ‘'நீங்க நீங்களாகவே இருங்க'’ என்று கூறி ‘'அழும் போது கூட நீங்க அழகாத்தான் இருக்கீங்க ஷிவானி’' என்று ஒரு பிட்டைப் போட்ட போது ஸ்விட்ச் போட்டால் போல மாறிய ஷிவானி மகிழ்ச்சியுடன் சிரிக்கத் துவங்கினார். (பெண்களுக்கு அடிப்படை ஆயுதம் கண்ணீர் என்பது போல பதிலுக்கு அவர்களை மடக்க சில அடிப்படை ஆயுதங்கள் உண்டு. அவற்றில் ஒன்று அவர்களின் அழகை புகழ்வது).

ஷிவானியின் அழுமூஞ்சியை டைட் குளோசப் கோணத்தில் காட்டி நம்மை பயமுறுத்தி விட்டு '‘அழகாத்தான் இருக்கீங்க’' என்று பிக்பாஸ் வழிந்த போது ‘'அதெல்லாம் நீ சொல்லக்கூடாது.. தப்பு தப்பு...'’ என்று கில்லி பிரகாஷ்ராஜ் போல் நாம்தான் மனதிற்குள் அலற வேண்டியிருந்தது.

ஷிவானியின் வேண்டுகோள்படி ‘ஷிவு’ என்றழைத்து அவரை இன்னமும் கூல் ஆக்கினார் பிக்பாஸ். அனைத்து சீஸனிலும் இந்த இயந்திரக்குரலின் மீது பெண் போட்டியாளர்கள் அதிக காதலை வெளிப்படுத்துவதின் உளவியல் புரிகிறதா? இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்க முயல்கிறேன்.

இந்த ‘அழுகாச்சி’ டாஸ்க்கில் அடுத்த பலிகடாவாக அழைக்கப்பட்டவர் ரியோ. ஆரியுடன் இவர் பேசிக் கொண்டிருந்த போது பிக்பாஸ் நீண்ட நேரமாக வெயிட் செய்தார் போலிருக்கிறது. பிறகு ‘ஆரி பேசி முடிக்கும் போது சேவல் கூவிடும்’ என்று நினைத்தாரோ என்னமோ, '‘ரெண்டு நிமிஷம் ரியோவை இங்க அனுப்புங்களேன்... நானும் கொஞ்சம் அடிச்சிக்கறேன்'’ என்கிற மாதிரி கூப்பிட்டார்.

ரியோவிற்கும் அதே டெக்னிக்தான். அவருடைய குடும்ப உறுப்பினர்களைப் பற்றி நினைவுப்படுத்தி கண்ணீரை பிழிய வைத்தார் பிக்பாஸ். ஷிவானியைப் போல ரியோ நம்மை குளோசப்பில் பயமுறுத்தவில்லை. அவருக்கு கேமரா பற்றிய கான்ஷியஸ் இந்த நிலையிலும் இருந்தது. எனவே எழுந்து சென்று பின்பக்கமாக அழுது தீர்த்து விட்டு வந்தார்.

ரியாலிட்டி ஷோ பாணிதான் என்றாலும் '‘உங்க குழந்தை சுவத்தைப் பிடிச்சு நடக்குதாம்.. அப்பா –ன்னு கூப்பிடுதாம்'’ என்றெல்லாம் சொல்லி ஓவராக சென்டிமென்ட் ஜூஸ் பிழிந்திருக்கத் தேவையில்லை. தங்களின் குழந்தைகளைப் பிரிந்திருக்கும் தகப்பன்களுக்குத்தான் தெரியும், இது எத்தனை பெரிய வலி என்பது. ரியோவாவது இன்னமும் முப்பது நாட்களில் தனது குழந்தையைச் சந்தித்து விடலாம். ஆனால் பொருளீட்டுவதற்காக அயல் பிரதேசங்களுக்கு சென்றிருக்கும் தகப்பன்மார்களின் நிலையை யோசித்துப் பார்த்தால் நமக்கே கண்ணீர் வரும்.

பிக்பாஸ் - நாள் 71
பிக்பாஸ் - நாள் 71

"ஓகே ரியோ... நீங்க போய் என்ன செஞ்சிட்டு இருந்தீங்களோ. அதைத் தொடரலாம்" என்று பிக்பாஸ் சொன்னவுடன், "அங்க என்னைத்தான் செஞ்சிட்டு இருந்தாங்க" என்று டைமிங்காக ரியோ சொன்னது சுவாரஸ்யம். இது போன்ற சமயங்களில் ரியோ நம்மைக் கவர்கிறார். குரூப்பில் சேர்ந்து நாசமாகப் போகாமல் தன்னுடைய நகைச்சுவைத் திறனை அதிக இடங்களில் ரியோ வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இது போன்ற அழுகாட்சி டாஸ்க்களில் நாம் உணரும் விஷயம் என்னவெனில் ஒருநோக்கில் மனிதர்கள் அனைவருமே பரிதாபமானவர்கள்தான். உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் அடிமையானவர்கள்தான். நல்லதும் தீதும் கலந்தவர்கள்தான்.

எனவே அனைத்து போட்டியாளர்களையும் இந்தக் கரிசனம் கலந்தே பார்க்கலாம். இவர்களை அயல்கிரக ஜீவிகள் போலவும், இவர்களின் ஒவ்வொரு அசைவும் உலகசதி போலவும் பார்க்கத் தேவையில்லை. இவர்களை தனியாகப் பிரித்து வைத்து இணையத்தில் ஆராய்ச்சியும் கிண்டலும் செய்யாமல் இவர்களின் வழியாக ‘நம்மைப் பார்ப்பதுதான்’ இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு செலவு செய்வதின் நிகர பலனாக இருக்கும் என்று தோன்றுகிறது.