Published:Updated:

பிக்பாஸ் நடத்துவதும், பார்ப்பதும் கேவலமா?! - பிக்பாஸ் வரலாறு! #LongRead

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் உள்ள பிரச்னை என்ன, அதன் உளவியல் என்ன, உண்மையில் அதனால் ஒரு சமூகத்தில் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன?

இது தேர்தல் சீஸன். அரசியல் கட்சிகள் மாறி மாறி வார்த்தைகளாலும் விமர்சனங்களாலும் சீண்டிக்கொள்ளும் டாஸ்க்குகள் இனிதே துவங்கியிருக்கின்றன. அதில், லேட்டஸ்ட் பேசுபொருள் 'பிக்பாஸ்'.

"பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது. நல்லா இருக்கிற குடும்பத்தைக் கெடுப்பதுதான் கமலின் வேலை. அந்தத் தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுப்போகும், நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டுப்போய்விடும்" என்று பகிரங்கமாக விமர்சித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதற்கு நடிகரும், 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், "முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று பதில் அளித்திருக்கிறார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் சாரத்தை, அதன் தன்மையை எடப்பாடி நியாயமாகத் தன் பார்வையில், தனக்குத் தோன்றிய விதத்தில் விமர்சித்திருக்கிறார் என இதை எடுத்துக்கொள்வோம். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் உள்ள பிரச்னை என்ன? அதன் உளவியல் என்ன? உண்மையில் அதனால் ஒரு சமூகத்தில் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன?

21 வருடங்களுக்கு முந்தைய கதை...

செப்டம்பர் 16, 1999... நெதர்லாந்து நாட்டின் எண்டமோல் நிறுவனம் முதன்முதலில் 'பிக் பிரதர்' நிகழ்ச்சியின் முதல் சீஸனை ஒளிபரப்புகிறது. பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 போட்டியாளர்கள் 'பிக் பிரதர்' வீட்டுக்குள் நுழைகிறார்கள். அப்போது யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். 20 ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சியும் இதன் மையக்கருவும் பல உலக நாடுகளைக் கட்டிப்போடும் என்று! ஆனால், அந்த மேஜிக் நடந்தது. அதுவரை, உச்ச நட்சத்திரங்கள் அல்லது புகழ்பெற்ற மனிதர்களைப் பார்ப்பதற்காக மட்டுமே டிவி பெட்டியின் முன் அமர்ந்த கூட்டம் முதன்முதலாகப் பெரிதாக அறிமுகமில்லாத, தனிப்பட்ட விதத்தில் யாரையும் பெரிதாக ஈர்த்திடாத நபர்களைப் பார்ப்பதற்காக தங்களின் பொன்னான நேரத்தைச் செலவிட எத்தனித்தது. அந்த வகையில் டிவி உலகில் இது ஒரு மாபெரும் புரட்சியே! அதற்கு முக்கியக் காரணம், 'பிக் பிரதர்' அதுவரை ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலிருந்து தனித்து நின்றதால்தான். அப்படியே அது பல நாடுகளுக்குப் பயணித்து இங்கே இந்தியாவில் 'பிக்பாஸ்' எனப் பல மொழிகளில் வழங்கப்படுகிறது.

பிக் பிரதர் - சீஸன் 1
பிக் பிரதர் - சீஸன் 1
'பிக் பிரதர்' என்ற சொல்லாடல் முதன் முதலில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய '1984' நாவலில் இடம்பெற்றது. எல்லாம் அழிந்துவிட்ட எதிர்காலத்தில் மக்களை எந்நேரமும் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் வைத்து ஆட்சி செய்யும் முகம் தெரியாத ஒரு கதாபாத்திரத்துக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. அதுவே பின்னர் அத்தகைய அரசியலைச் செய்யும் மனிதர்களுக்குப் பட்டப்பெயராகவும், புகழுரையாகவும் ஆகிப்போனது.

நிகழ்ச்சியின் நோக்கமும் அதன் மீதான விமர்சனங்களும்!

எந்நேரமும் விட்டைச் சுற்றி சுழலும் கேமராக்கள் போட்டியாளர்களின் சிறு அசைவுகளையும், மெலிதாக உதிர்த்துவிட்ட வார்த்தைகளையும் தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டின. ஒரு பேட்டியிலோ அல்லது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட ரியாலிட்டி ஷோவிலோ பங்கேற்பவர்கள் தங்களின் கோப முகத்தையோ, சிடுசிடு குணத்தையோ, சர்ச்சையான சித்தாந்தங்களையோ வெளியே காட்டிவிடக்கூடாது என ஒருவித கட்டுப்பாடுடன் செயல்படுவார்கள். ஆனால், முழுக்க முழுக்க ஒரு வீட்டில் அறிமுகமில்லாத நபர்களுடன் அதிக நாட்கள் இருக்கும்போது அவர்களே தவிர்க்க நினைத்தாலும் ஒரு கட்டத்தில் உடைந்து தங்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தியே தீர்வார்கள். இதுதான் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் லட்சியம். இது கிட்டத்தட்டப் போட்டியாளர்களை கார்னர் செய்து அவர்களின் முகமூடியை எப்படியாவது உடைத்து அவர்களின் சுயத்தை வெளியுலகுக்குக் காட்டவேண்டும் என்ற பிரயத்தனம்தான்.

இதை ஒருவகையான 'Voyeurism' என்றும் விமர்சனங்கள் எட்டிப் பார்க்கின்றன. அதாவது ஒருவருக்குத் தெரியாமலோ அவரின் சம்மதம் இல்லாமலோ அவரின் அந்தரங்கங்களை ரசிப்பது அல்லது காட்சிப்படுத்துவது. ஆனால், இதைப் பொழுதுபோக்காக மாற்றி கல்லா கட்டுவதே தயாரிப்பு நிறுவனங்களின் இலக்கு என்றாலும் 'இந்த நிகழ்ச்சி இப்படியானதுதான்' என்று போட்டியாளர்களும் அறிந்தேதான் உள்ளே கால் வைக்கிறார்கள். 'எண்ணற்ற கேமராக்கள் உங்களைக் கண்காணிக்கின்றன. நீங்கள் நீங்களாக இருந்து கேம் ஆடி வெல்லுங்கள்' என்ற அறிவுரையுடன் 'பிக்பாஸ்' வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும், 'ஊரே பார்க்கிறது... இயல்பாக இருங்கள்' எனும்போது ஒன்டேக் ஆர்ட்டிஸ்டுகளே பதறித்தான் போவார்கள். எனவே, ஒருவரை வெகுண்டு எழச் செய்யும் அசாதாரணமான உணர்ச்சிமிகு சூழலைச் செயற்கையாக உருவாக்கி அதில் ஒருவர் எந்தளவு கட்டுக்கோப்புடன் இருக்கிறார் என விளையாடிப் பார்ப்பதே பிக்பாஸின் வேலை.

பிக்பாஸ் தமிழ் சீஸன் 4
பிக்பாஸ் தமிழ் சீஸன் 4

சொல்லப்போனால் ஒரு வித உணர்ச்சிமிகு நிலையிலேயே போட்டியாளர்களை வைத்திருப்பதால் தெரிந்தோ தெரியாமலோ அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களின் கட்டுப்பாட்டில்தான் அவர்கள் இருக்க நேரிடுகிறது. இந்தச் சூழ்நிலையில் எப்படி நடக்கவேண்டும் என்ன முடிவு எடுக்கவேண்டும் என்ற சுதந்திரம் போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டாலும், இங்கே மறைமுகமாக நீளும் பொம்மலாட்ட கயிறு ஒன்றை நாம் கண்டுணர வேண்டும். 'இப்போது நீ இந்தக் கடினமானதொரு முடிவை எடுக்கவேண்டும்' என்று இக்கட்டானதொரு சூழ்நிலைக்குத் தள்ளுவதே 'பிக்பாஸ்' உருவாக்கிய சூழல்தான் எனும்போது போட்டியாளர்களை ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஆட்டுவிப்பதும் அவர்தான் என்பதும் அம்பலமாகிறது.

வெறும் பொழுதுபோக்கு மட்டுமா?! - சில சர்ச்சைகள்!

'பிக்பாஸ்' போன்ற நிகழ்ச்சிகளை ஒரு பொழுதுபோக்காக மட்டும் கடந்து சென்றுவிட முடியுமா? அது பார்வையாளர்களான நமக்கு ஏற்படுத்தும் தாக்கங்களைப் பிறகு அலசுவோம். முதலில், இந்த நிகழ்ச்சி அதன் போட்டியாளர்களுக்கே எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தின என்று சில உதாரணங்களைப் பார்ப்போம்.

முழுக்க முழுக்க பரிட்சயமான நட்சத்திரங்கள் கலந்துகொண்ட பிரிட்டிஷ் நிகழ்ச்சியான 'Celebrity Big Brother' சீஸன் 5 நிகழ்ச்சியில் நம்மூர் ஷில்பா ஷெட்டி கலந்துகொண்டார். 2007-ம் ஆண்டு நடைபெற்ற இதில் ஷில்பாதான் வெற்றியாளர். ஆனால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு சித்தாந்தகளைக் கொண்ட 14 போட்டியாளர்கள் குழுமிய இடம் இது என்பதால், ஷில்பா அங்கே 'நிறவெறி' பிரச்னையைச் சந்திக்க நேர்ந்தது. அவர் இந்தியர் என்பதால் சக போட்டியாளர்கள் நிறவெறி குறித்தான வசைகளை அவர் மீது வீசினர். இது பெரிய சர்ச்சையாக ஸ்பான்ஸர்கள் பின்வாங்க, நிகழ்ச்சியின் அடுத்த சீஸனே வெளிவராமல் போனது. பின்னர் அந்தப் போட்டியாளர்களில் ஒருவர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருக்கிறார். சர்ச்சையில் சிக்கிய இரண்டு போட்டியாளர்களுக்கு மனநல சிகிச்சையும் தேவைப்பட்டது. அப்போது பல சர்வதேச ஊடகங்கள் டிவியில் காட்டப்படும் இத்தகைய தவறான நிகழ்வுகள் பதின்வயது பார்வையாளர்களையும் அவர்களின் சித்தாந்தங்களையும் பெரியளவில் மாற்றியமைக்கும் என எச்சரிக்கை செய்தது.

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி

'பிக் பிரதர்' நிகழ்ச்சியின் வெற்றி அதன் சாரத்தை மையப்படுத்தியே 'The Circle', 'Love Island' போன்று பல நிகழ்ச்சிகளை வரவைத்தது. 'லவ் ஐலேண்ட்' நிகழ்ச்சியில் பங்கெடுத்த இருவர் தற்கொலை செய்துகொண்டனர். அதேபோல் அந்த ஷோவை முன்னெடுத்து நடத்திய முன்னாள் ஆங்கர் கரோலின் ஃப்ளேக்கும் (Caroline Flack) தற்கொலை செய்துகொண்டார். இப்படியான உதாரணங்கள் உலகளவில் இன்னமும் கொட்டிக் கிடக்கின்றன. சாதாரண சினிமா அல்லது சீரியல் பார்த்தே ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு உண்டான பலரை நமக்குத் தெரியும் என்றாலும், 'பிக் பிரதர்', 'பிக்பாஸ்' போன்ற நிகழ்ச்சிகள் அதைவிட வீரியமிக்க பிரச்னைகளைக் கிளப்ப வல்லது என்பதை மறுப்பதற்கில்லை.

சமூகத்தின் கண்ணாடியா 'பிக்பாஸ்'?

தமிழில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை வழங்கும் கமல் பலமுறை அடிக்கோடிட்டுக் காட்டிய விஷயம் இதுதான். நம் இயல்பான சமூகத்தின் பிரதிபலிப்பே இந்த 'பிக்பாஸ்' வீடு. நாம் தினமும் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறோம். சிலரை நமக்குப் பிடித்துப்போகிறது. சிலரைக் கண்டாளே வெறுப்பாகிறோம். இதேதான் பிக்பாஸ் வீட்டிலும் நடக்கிறது. ஆனால், இங்கே மாறுபடும் விஷயம் என்னவென்றால் 'சுதந்திரம்'. வெளியுலகில் நமக்கு ஒவ்வாதவர் வந்தால் ஒரு காத தூரம் ஓடிவிடுவதற்கான சுதந்திரம் நமக்கு உண்டு. ஆனால், 'பிக்பாஸ்' வீட்டில் அதற்குச் சாத்தியமில்லை. சொல்லப்போனால், இரண்டு போட்டியாளர்களுக்கு ஆகவில்லை என்றால் அவருடனே வாலன்ட்டியராக டாஸ்குக்குக் கோத்துவிட்டு கன்டென்ட் தேற்றுவதுதான் பிக்பாஸ் ஸ்டைல்!

இருந்தும் இங்கே 'பிக்பாஸ்' போன்றதொரு நிகழ்ச்சி குடும்பத்தைக் கெடுக்கும் ஒன்றா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய விமர்சனத்தை 'பிக்பாஸ்'க்கு மட்டுமல்ல, பல்வேறு பொழுதுபோக்கு சமாசாரங்களுக்கும் இங்கே தாராளமாக பொருத்திப் பார்க்கலாம். 'சக்திமான்' காப்பாற்றுவார் என உயரத்திலிருந்து குதித்த குழந்தைகள் தொடங்கி, கிரிக்கெட்டில் இந்தியா தோற்றுவிட்டது என மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டவர்கள், ஒரு தேர்வில் தோற்பது அவமானகரமான விஷயம் என்ற கருத்தை ஆழமாகக் குழந்தைகளின் மனதில் விதைக்கும் காட்சி ஊடகங்கள், அதில் வரும் விளம்பரங்கள், காதல் தோல்வி என்றால் இன்னொரு காதல் கூடாது, உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று இல்லாத புனிதத்தைக் கற்பிக்கும் திரைப்படங்கள்... என இங்கே கைகாட்டுவதற்கு எண்ணற்ற விஷயங்கள் உள்ளன.

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

ஆனால் இங்கே ஒன்றைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் தாண்டி ஒரு சமூகம் நெறிப்படுகிறது; இதிலுள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அறம் எது என்பதைக் கற்றுணர்ந்து அதன் பின்னால் நிற்பதற்கான முதிர்ச்சியைப் பலர் அடைகிறார்கள் என்றால் அதற்குக் காரணமும் இதே காட்சி ஊடகங்களும் திரைப்படங்களும்தான். 'இவரே குண்டு வைப்பாராம், இவரே எடுப்பாராம்' என்பதுபோல, தவறான கற்பிதங்களை முன்னிறுத்தும் இவைதான் சரியான புரிதல்களையும் பலருக்குக் கொடுக்கின்றன. 'சினிமா' என்ற ஒன்றைப் பயன்படுத்தி நம் மாநிலத்தின் தலையெழுத்தையே மாற்றியவர்கள் பலர் என்பது நினைவிருக்கலாம்.

இந்த லாஜிக்கையே நிச்சயம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கும் பொருத்திப் பார்ப்பது அவசியமாகிறது.

"சனம் ஏன் இப்படி சண்டை போடுகிறார்?"

"அவரை பாலாஜி டிரிக்கர் செய்திருக்கிறார்".

"அனிதா ஏன் இவ்வளவு பேசுகிறார்?"

"அவரின் இயல்பு அது. அவரை அழவைத்து உணர்ச்சிவசப்பட வைப்பதுதான் 'அன்பு' கேங்க் அர்ச்சனாவின் லட்சியம்."

"ஆரம்பத்தில் இயல்பாக விளையாடிய நிஷா ஏன் அமைதியான அடிமைபோல் இருந்து பின்னர் வெளியேறினார்?"

"அவர் ஆட்டத்தை மறந்து பாசப்பிணைப்புகளுக்கு மயங்கிப்போனதால்..."

"ஆரி மட்டும் எப்படி இத்தனை ரசிகர்களைப் பெற்றார்?"

"தன் இயல்பிலிருந்து மாறாமல், 'நேர்மை'யைப் பிரதானப்படுத்தி, அதைப் பின்பற்றாதவர்களிடம் தைரியமாகக் கேள்வி கேட்பதால்..."

"ஏன் ரம்யாவின் மீது மட்டும் எந்தச் சர்ச்சையும் இன்னமும் வரவில்லை?"

"அவர் எல்லாவற்றையும் மிகவும் கூலாக தன் புன்னகையுடன் கடந்துவிடுவதால்..."

பிக்பாஸ்
பிக்பாஸ்

இப்படி இன்னமும் உதாரணங்களை அடுக்கலாம். ஒரு பிரச்னை நடக்கிறது என்றால், அதன் பல கோணங்கள் அதன் முன்னரோ பின்னரோ நமக்குக் காட்டப்பட்டுவிடுகின்றன. ஒரு பிரச்னை என்று வரும்போது போட்டியாளர்களுக்குத் தெரியாத புரியாத விஷயங்கள்கூட நமக்குப் புரிகின்றன. நம்மால் அதைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிகிறது. இந்த லாஜிக்கை நம் இயல்பான வாழ்விலும் பொருத்திப் பார்த்தால் பல சண்டைகளும் சர்ச்சைகளும் குறைந்துவிடும். 'அவர் ஏன் இப்படி ஒரு செயலை செய்தார்? அவரை இதற்கு நிர்ப்பந்தித்தது எது?' என்று நாம் யோசிக்கத் தொடங்கினால் பிரச்னைகள் குறைந்து அதற்கான தீர்வுகளை நோக்கி பயணம் செய்யத் தொடங்குவோம். ஆனால், இது மூன்றாம் நபர்களின் வாழ்வில் நிகழும்போது வேண்டுமானால் நாம் நின்று நிதானமாக யோசிக்கலாம். நமக்கான பிரச்னை எனும்போது நாம் அஞ்சுவதும் உணர்ச்சிவசப்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றே!

அதே சமயம், மக்களின் வாக்குகள் படிதான் நிகழ்ச்சியின் முடிவுகள் அமைகின்றனவா? ஒரு போட்டியாளருடன் நாம் ஒன்றிவிடுகிறோம். அதன் பின்னர் அவர் தவறே செய்தாலும் அவர் பின்னால் மட்டுமே நிற்கும் மனப்பாங்கும் இயல்பாகாவே நம்மை அறியாமல் வந்துவிடுகிறதா? - இவையெல்லாம் வாதங்களுக்கு உட்பட்டதே!

'பிக்பாஸ்' ஒரு சமூக பரிசோதனையா?

'பிக்பாஸ்' பார்ப்பவர்களைச் சீண்டும் மீம்களுடன், அதைப் பார்ப்பதே என்னவோ அறிவற்றவர்களின் செயல் என்கிற ரீதியில் பலர் போஸ்ட் போடுகிறார்கள். தேர்ந்த தமிழ் இலக்கியவாதிகளே 'பிக்பாஸ்' பற்றியெல்லாம் என்னிடம் விமர்சனம் கேட்கிறார்கள் எனக் கோபம் கொள்கிறார்கள். ஏன் 'பிக்பாஸ்' பார்ப்பது என்பது கேவலமானதொரு விஷயமா? இலக்கியவாதிகள் என்றால் பொழுதுபோக்கு இருக்கக்கூடாதா? இல்லை 'பிக்பாஸ்' என்பது மலிவானதொரு பொழுதுபோக்கா? 'பிக்பாஸ்' பார்க்கும் வகையறாக்கள் முட்டாள்கள், நேரத்தை விரயம் செய்பவர்கள் என்ற விமர்சனத்தை வைப்பதன் மூலம் தெரிந்தோ தெரியாமலோ தங்களை எலைட்டாகவும், தங்களை அறிவாளி என்றும் காட்டிக்கொள்ள முற்படுகிறது இந்தக் கூட்டம். மக்களுக்கானது தான் கலை. எந்தவொரு படைப்புமே மக்களைச் சென்றடையவே படைக்கப்படுகின்றன. 'பிக்பாஸ்' என்ற படைப்பை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்றால் அது அவர்களின் விருப்பம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 'பிக்பாஸ்' என்றில்லை... மசாலா படங்களைப் பார்ப்பவர்களின் மீதும் இத்தகைய விமர்சனங்களைக் காண நேரிடுகிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே என்று அணுகுபவர்கள் அவர்கள்... அதனால் என்ன தவறு?

பிக்பாஸ்
பிக்பாஸ்

'பிக்பாஸ்' என்பது ஒரு சமூக பரிசோதனை என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. கமல் சொன்னதுபோல அது சமூகத்தின் பிரதிபலிப்பு எனும்போது அப்படியான சந்தர்ப்பங்களில் நம்மைப் பொருத்திப்பார்த்து யோசிப்பது, அல்லது அப்படி நம் வாழ்வில் முன்னரே நிகழ்ந்துவிட்ட சம்பவங்களை நினைவுகூர்ந்து அதில் நாம் எங்கே தவறு செய்தோம் என சுயப்பரீசிலனை செய்வது ஒருவித தெளிவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. 'பிக்பாஸ்' இந்த சமூகத்துக்கு அவசியமானது என்ற கூற்றுக்கெல்லாம் போகத் தேவையில்லை. ஆனால், அதனால் தீமைகள் மட்டுமே, அது சமூகத்தைக் கெடுக்கவே செய்கிறது, அதுவொரு மலிவான பொழுதுபோக்கு போன்ற வாதங்கள்தான் தவறானது.

'நாட்டில் இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது இதெல்லாம் அவசியமா?' என பிக்பாஸ் தொடர்பான ஒவ்வொரு கட்டுரைகளுக்குக் கீழும் கமென்ட்களைப் பார்க்க நேரிடுகிறது. ஆம், பொழுதுபோக்கு எல்லாக் காலகட்டத்திலும் மிகவும் அவசியமானது. அது ஏதோவொரு வடிவில் மக்களை நிச்சயம் சென்றடைய வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு