Published:Updated:

ரம்யா ஆன் டாப்... வேடிக்கைப் பார்த்த ஆரி, பாய்ந்துவந்து பாயின்ட்டை விட்ட பாலாஜி! பிக்பாஸ் - நாள் 93

பிக்பாஸ் – நாள் 93

முந்திரிக்கொட்டை மாதிரி துள்ளி துள்ளிச் சென்று ஆட்டத்தைக் கெடுத்து ஜீரோ வாங்கிய பாலாஜி சோகமாக அமர்ந்திருக்க ‘நாளைக்குப் பார்த்துக்கலாம் குமாரு’ என்று ஷிவானியும் ரம்யாவும் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 93

Published:Updated:

ரம்யா ஆன் டாப்... வேடிக்கைப் பார்த்த ஆரி, பாய்ந்துவந்து பாயின்ட்டை விட்ட பாலாஜி! பிக்பாஸ் - நாள் 93

முந்திரிக்கொட்டை மாதிரி துள்ளி துள்ளிச் சென்று ஆட்டத்தைக் கெடுத்து ஜீரோ வாங்கிய பாலாஜி சோகமாக அமர்ந்திருக்க ‘நாளைக்குப் பார்த்துக்கலாம் குமாரு’ என்று ஷிவானியும் ரம்யாவும் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 93

பிக்பாஸ் – நாள் 93

இன்றைய நாள் கொஞ்சம் ஜாலியாகவும் நிறைய பிறாண்டல்களுடனும் கடந்தது. ‘வருது... வருது... விலகு... விலகு’ என்று எண்பதுகளில் வெளிவந்த தமிழ்த் திரைப்படத்திலிருந்து ஒரு பாடலைப் போட்டார்கள். (அவசரமாக கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு மற்றவர்களிடம் வழிகேட்க இந்தப் பாடலை நாங்கள் பாடுவதுதான் எங்களின் அப்போதைய பழக்கம்).

TICKET TO FINALE –வின் TASK -3 தொடங்கியது. இதன்படி போட்டியாளர்கள் அனைவரும் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜாக்கெட்டை அணிய வேண்டும். ஒவ்வொருவரின் முதுகிற்குப் பின்னாலும் ஒரு பிக்பாஸ் காயின் ஒட்டப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் மற்றவர்களின் காயின்களை எடுக்க முயல வேண்டும். யார் இறுதிவரைக்கும் காயினை பாதுகாப்பாக வைத்திருக்கிறாரோ அவரே வெற்றியாளர்; அதிக மதிப்பெண் பெறுபவரும் கூட.
பிக்பாஸ் – நாள் 93
பிக்பாஸ் – நாள் 93

இது உடல்பலம் சார்ந்த போட்டி என்பதால் பாலாஜிதான் இதில் ஆதிக்கம் செலுத்துவார் என்பது எதிர்பார்த்ததே. ஒரு நகைச்சுவைக் காட்சியில், குத்துச் சண்டை மேடையில் எதிரேயுள்ள பலமான வீரரை எதிர்கொள்ள முடியாமல் நடுவரின் பின்னால் சார்லி சாப்ளின் ஒளிந்து ஒளிந்து விளையாடுவார். அது போல் பாலாஜியைக் கண்டாலே நடுங்கி ஓடிக் கொண்டிருந்தார் ரியோ. நீச்சல் குளத்தின் அருகே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து சுவரோடு ஒட்டிக் கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டார் ஷிவானி. போலவே ரம்யாவும் மெயின் கேட்டின் அருகே பசை போல் ஒட்டிக் கொண்டு விட்டார்.

ஆரி களத்தில் இறங்காமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். புலி பதுங்கறது பாய்வதற்கு என்பார்கள். ஆனால் இந்தப் புலி கடைசி வரைக்கும் பாயவேயில்லை. உறுமி உறுமியே டயர்ட் ஆகி விட்டது. முதலில் ரியோவின் காயினை சாமர்த்தியமாக தட்டிப் பறித்துவிட்டார் பாலாஜி. ரியோவும் சிரித்துக் கொண்டே தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அமர்ந்து விட்டார். "அதிக மதிப்பெண் பெற்றவர் ரியோ. அதனால்தான் அவரை டார்க்கெட் செய்தேன். என் கேம் புரியுதா?” என்று இதற்கு காரணம் சொன்னார் பாலாஜி. நல்ல உத்திதான்.

அடுத்ததாக ஆரியிடம் சென்ற பாலாஜி, ‘வாங்க பாஸ்... விளையாடலாம்’ என்று கிட்னி திருடும் கும்பலைச் சேர்ந்த சிறுவன் மாதிரி அழைக்க, ஆரியோ ‘எங்க அம்மா திட்டுவாங்க.. கெட்ட பசங்க கூட சேர வேணாம்னு சொல்லியிருக்காங்க’ என்பது மாதிரி அசையாமல் அமர்ந்திருந்தார்.

ஷிவானியை பாலாஜி தொந்தரவு செய்யாமல் இருக்கும் பாலிடிக்ஸ் ஆரியை எரிச்சல் படுத்தியதுபோல. போலவே மதிப்பெண் பட்டியலில் நல்ல நிலைமையில் இருக்கும் ரம்யாவை விட்டு விட்டு ஏன் பாலாஜி தன்னிடம் வர வேண்டும் என்பதும் ஆரியின் கேள்வி. எனவே, “மொதல்ல அவங்களை முடிச்சிட்டு வா. நாம விளையாடுவோம்... அதுக்குத்தான் காத்திருக்கேன்” என்று பாலாஜியிடம் வாக்குவாதம் செய்தார். “அவங்கள்லாம் ஈஸி டார்கெட் அப்புறம் கூட முடிப்பேன்" என்ற பாலாஜியின் பதில் வாதத்தை ஆரி ஏற்கவில்லை. இந்த நோக்கில் ஆரியின் கருத்து நியாயமானது. ஷிவானியைக் காப்பாற்றும் நோக்கில் பாலாஜி செயல்பட்டது வெளிப்படையாகவே தெரிந்தது.

பிக்பாஸ் – நாள் 93
பிக்பாஸ் – நாள் 93

பஸ்ஸர் அடித்தது. பாலாஜி ஆரியை நோக்கி ஓட ‘அங்க அடிச்சா... இங்க வலிக்கும்’ என்கிற பாலிஸியை பின்பற்ற முடிவு செய்த ஆரி, நேராக ஷிவானியிடம் சென்று அவருடைய காயினைப் பிடுங்க மல்லுக் கட்டினார். ஆனால் இயலவில்லை. அதற்குள் பாலாஜி துரத்தி வந்துவிடவே பின்வாங்கி விட்டார். “இதுதான் உங்க உத்தியா... ஓடி ஓடி விளையாடறீங்க?” என்று காண்டான பாலாஜி, "இருங்க... இப்ப நான் என் வேலையைக் காட்டறேன்" என்று நீச்சல் குளத்தின் குறுகலான வழியின் அருகே தடைகளைக் கொண்டு வந்து போட்டார். ஆனால் இதற்கு ஆரி பலத்த ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.

பாலாஜிக்கும் ஆரிக்கும் நடுவே வாக்குவாதம் முற்றியது. எனவே இதனால் எரிச்சலான ஆரி தன் காயினை தியாகம் செய்யும் நோக்கில் ‘எடுத்துக்கோ’ என்பது மாதிரி முதுகைக் காட்டிக் கொண்டு நின்றார் ஆரி. ‘வெச்சுக்கோ’ என்று பாலாஜியும் அதை எடுத்துக் கொண்டுவிட்டார். பாலாஜியுடன் மல்லுக்கட்டினால் வன்முறை உக்கிரமாகும் என்று ஆரி நினைத்தாரோ, என்னவோ!

உண்மையில் பாலாஜி செய்தது அவருடைய உத்தி. அதில் தவறொன்றுமில்லை. அதில் சிக்கிக் கொள்ளாமல் ஓடிப்பிடிப்பதில் அல்லது அந்தத் தடைகளைத் தவிர்ப்பதில்தான் விளையாட்டின் சுவாரஸ்யம் இருக்கிறது. “யாராவது விழுந்துடுவாங்க" என்று ஆரி கவலைப்படுவது சரிதான். ஆனால் அதற்காக இன்னொருவரின் உத்தியை குறை சொல்ல முடியாது. எனில் ஒருவரையொருவர் – குறிப்பாக ஆண்களுடன் பெண்களை - மோதவிடும் பிக்பாஸைத்தான் முதலில் அவர் குறை சொல்ல வேண்டும்.

“நீ ஆம்பளைப் பையன்தானே... ஓடி வந்து பிடி" என்று வில்லங்கமான வார்த்தைகளை ஆரி பயன்படுத்தினார். இப்படி அவர் கேட்பது இரண்டாவது முறை. வழக்கம் போல் கமலின் ஆலோசனையை அவர் காற்றில் பறக்க விட்டுவிட்டார். “ஆம்பளையான்னு கேட்கலை. நீ ஆம்பளைப் பையன்தானே.. பொம்பளைப் பசங்களாலதான் ஓட முடியாது” என்று பிறகு விளக்கம் கொடுத்தார் ஆரி. என்றாலும் அதுவே ஆட்சேபகரமான வார்த்தைதான். பாலின நோக்கில் ஒருவரை உயர்த்தி, தாழ்த்தி சொல்வது அரசியல்சரித்தன்மை கிடையாது.

பிக்பாஸ் – நாள் 93
பிக்பாஸ் – நாள் 93

இதற்கிடையில் ரம்யாவின் காயினை சோம் பிடுங்க முயன்றார். ஆனால், அவரோ பூனையைப் போல இரு கைகளாலும் மாற்றி மாற்றித் தடுத்ததால் அடுத்து கேபியிடம் சென்ற சோம், அவரிடம் மல்லுக்கட்டி காயினைப் பிடுங்கி விட்டார். ரம்யாவை விடவும் கேபியிடம் உரிமையாக மல்லுக்கட்ட முடியும் என்பது சோமின் கணக்காக இருக்கும். ‘டேய் கண்லயே குத்திட்டே’ என்று ஜாலியாக எரிச்சலானார் கேபி.

கேபிக்கு அடிபட்டதைப் பற்றி பேசிக் கொண்டே வந்த சோம், தனது முதுகை பாதுகாத்துக் கொள்ளத் தவறிவிட்டார். இந்தச் சந்தர்ப்பத்தை அருமையாக பயன்படுத்திக் கொண்ட ரம்யா, சோமின் காயினைப் பறித்து விட்டார். இப்படி அஜாக்கிரதையாக இருந்ததற்காக சோம் உண்மையில் வெட்கமடைந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ “ஏண்டா... பேச்சுக் கொடுத்தீங்க?” என்று கேபியிடம் தன் எரிச்சலைக் காட்ட கேபியும் தன்னுடைய பிரத்யேகமான இழுவைப் பேச்சில் பதிலுக்கு தன் கோபத்தைக் காட்ட, ‘சோம்... கூல்’ என்று சமாதானப்படுத்தினார் ரியோ.

பிக்பாஸ் – நாள் 93
பிக்பாஸ் – நாள் 93
சோமிற்கு தேவையான நேரத்தில் கூட கோபம் வரவில்லை. ஆனால் தான் அலட்சியமாக இருந்து வெற்றியைப் பறிகொடுத்த பதற்றத்தில்தான் கோபம் வருகிறது. பிறகு ரம்யாவையும் ஷிவானியையும் துரத்திப் பிடித்த பாலாஜி, இருவரிடமிருந்தும் காயின்களை எளிதாக பறித்துக் கொண்டார். ஆக இந்த டாஸ்க்கில் முதல் மதிப்பெண்களைப் பெற்றவர் பாலாஜி.

“நான் இந்த கேமை நேர்மையாத்தான் விளையாண்டேன். நீங்கதான் வார்த்தைகளால் என்னை காயப்படுத்தினீர்கள்" என்று ஆரியிடம் வாதாடிய பாலாஜி, பின்பு வீட்டின் உள்ளே சென்று “நான் கோபப்பட்டாலும் பிரச்னை-ன்றீங்க. ஆரி என்னை ‘ஆம்பளைப் பையனா’ன்னு கேட்கறாரு. கமல் சார் சொல்லிட்டாரு. சரி அதனால நான் கோபப்படலை" என்று திருவிளையாடல் தருமி போல கேமரா முன் பேசி அனுதாப வாக்குகளுக்கு முயன்றுகொண்டிருந்தார்.

"குறுகலான இடத்தில் தடைகளைப் போட்டு, அங்கு யாரும் ஓட முடியாமல் செய்து தாராளமாக உள்ள இடத்தில் ஆரியிடம் போராடலாம் என்றுதான் தடைகளைப் போட்டேன்" என்பது பாலாஜியின் விளக்கம்.

பிக்பாஸ் – நாள் 93
பிக்பாஸ் – நாள் 93
“நானும் கேபியும் ஒண்ணாதான் மல்லுக்கட்டினோம். ரெண்டு பேருக்கும்தான் பிறாண்டல் ஏற்பட்டுச்சு... ஆனா அவ என்னமோ அவளுக்குத்தான் வலி அதிகம் இருக்கு–ன்ற மாதிரி சீன் போடறா” என்று ரம்யாவிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் ஷிவானி. ஆம்... இது உண்மைதான் போலிருக்கிறது. யாராவது மெலிதாக இடித்துவிட்டாலே, கேபி அதற்கு ஓவர் ரியாக்ட் செய்து ஊரைக் கூட்டுவது போல்தான் தெரிகிறது.

“ஷிவானிக்கு நிறைய பாயின்ட்ஸ் வரணும்னுதான் பாலாஜி லாஸ்ட்டா போய் அவங்களைத் தொடுறான். இதைக் கூடவா என்னால் யோசிக்க முடியாது?” என்று சோமிடம் அனத்திக் கொண்டிருந்தார் ஆரி.

“நான் விளையாடியது தப்பாவா இருந்தது?” என்று தன் மீதே சந்தேகம் வந்து ஷிவானியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் பாலாஜி. "அது உன் உத்தின்னா ஓகேதான்" என்றார் ஷிவானி. “வாங்க விளையாடலாம்ன்னு கூப்பிட்டுட்டே இருந்தேன். ஆரிதான் வரமாட்டேன்ட்டாரு" என்று புலம்பிக் கொண்டிருந்தார் பாலாஜி.

எந்தவொரு ஆட்டமும் இயல்பாக முடிந்துபோக ஆரியும் பாலாவும் அனுமதிக்கவே மாட்டார்கள் போலிருக்கிறது. எல்லாவற்றிலும் ஓர் ஏடாகூடம்.

அசந்து தூங்கிக் கொண்டிருந்த ரியோவிடம் பிக்பாஸ் செய்த குறும்பு சுவாரஸ்யமானது. தனது அதிகாரப்பூர்வ இயந்திரக் குரலை விட்டு விட்டு, ரகசியமான குரலில், "ரியோ... ரியோ ராஜ்" என்று பிக்பாஸ் அழைக்க அப்போதும் ரியோவின் தூக்கம் கலையவில்லை. (காயின் டாஸ்க்கில் முதலிலேயே தோற்ற டயர்ட் போலிருக்கிறது). எனவே தன் டெஸிபலை சற்று கூட்டி ரகசியமாக அழைத்தார். ‘இது வித்தியாசமான அழைப்பாக இருக்கிறதே’ என்று பதறி ரியோ எழுந்தவுடன் பிக்பாஸ் வீடே வெடித்து சிரித்தது. பெரியண்ணன் செய்த அநியாயமான குறும்பை எண்ணி அவர்கள் குதூகலித்து மகிழ்ந்தார்கள். (பிக்பாஸிற்குள்ளும் ஒரு குட்டிப்பையன் இருக்கான் போல!).
பிக்பாஸ் – நாள் 93
பிக்பாஸ் – நாள் 93

TASK 4 ஆரம்பித்தது. இதில் பல இடைவேளைகளில் திரைப்படப் பாடல்களின் இடையிசை மட்டும் ஒலிக்கும். அதை வைத்து பாடலின் பல்லவியைக் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் பஸ்ஸரை தொடுபவர்களுக்கே வாய்ப்பு. இதில் அவர் சரியாக கண்டுபிடித்து விட்டால் ஏழு மதிப்பெண்கள் தரப்படும். ‘பல்லவி’ன்னா என்னாது?” என்று சந்தேகம் கேட்டார் ‘ராப்’ பாடகர் சோம். ரம்யா இதில் ஆயிரம் சந்தேகங்களைக் கேட்க ‘மாற்றங்கள் இருந்தால் பின்பு தெரியப்படுத்தப்படும்’ என்று பிக்பாஸ் சொல்லியிருக்கிறாராம்.

இந்த டாஸ்க்கில் ஒரு சூட்சுமத்தை ஒளித்து வைத்திருந்தார் பிக்பாஸ். பின்னர்தான் என்னால் அதை அறிய முடிந்தது. அதாவது பஸ்ஸரை தொட்டு விட்டு பாடல் வரிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் அவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை என்று முதலில் அறிவிக்கப்பட்டது. "அப்படியா... அப்படின்னா நான் விடிய விடிய... தொட்டுத் தொட்டு விளையாடுவேன்" என்றார் பாலாஜி. “நீ எல்லாத்திலயும் ஒரு ஏடாகூடம் பண்ணுவேன்னு தெரியும்" என்று ஜாலியாக கலாய்த்தார் ரியோ.

ஆனால், தான் சொன்னது போலத்தான் செய்தார் பாலாஜி. இசை ஒலிப்பதற்கு முன்னாலேயே சம்பந்தப்பட்ட பாடல் தனக்குத் தெரியுமா தெரியாதா என்று யோசிக்காமலேயே பஸ்ஸர் மீது பல முறை பாய்ந்தார். பிறகு பாடல் வரிகள் தெரியாமல் விழித்தார். இதனால் மற்றவர்களின் வாய்ப்பு நிறைய முறை பறிபோனது. இதற்காக அவருக்குப் பின்னால் ஒரு ஆப்பு காத்திருந்தது.

பிக்பாஸ் – நாள் 93
பிக்பாஸ் – நாள் 93

நான் இளையராஜாவின் காலக்கட்டத்தைச் சார்ந்தவன். பின்னர் வந்த ரஹ்மானின் பாடல்களில் பரிச்சயம் உண்டு. எனவே எண்பது, தொன்னூறுகளைச் சேர்ந்த திரையிசைப்பாடல் என்றால் அதன் பல்லவியும் சில பாடல்களுக்கு சரணங்களும் கூட எனக்கு மனப்பாடமாகத் தெரியும். ஆனால் இடையிசையை மட்டும் ஒலிக்கவைத்தால் சற்று தடுமாறுவேன்.

ஆனால், இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்போதைய திரையிசைப் பாடல்களை மட்டுமல்லாமல் பிரைவேட் ஆல்பங்களின் வரிகளைக் கூட மனப்பாடமாக கூட சேர்ந்து பாடும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஓகே... ‘ஜெனரேஷன் கேப்’ என்று ஒதுங்கி விட வேண்டியதுதான்.

பாடல் வரிகளைக் கண்டுபிடிக்கும் இந்த டாஸ்க்கில் பாலாஜி பல சந்தர்ப்பங்களை வீணடித்தாலும் ஒன்றை மட்டும் கண்டுபிடித்து விட்டார். இதற்காக அவர் கேபியை கீழே தள்ளி விட்டு ‘மதுர... குலுங்க குலுங்க...’ என்று யோசித்து யோசித்து பாடும் போது "ஏண்டா... இங்க ஒரு பொண்ணு கீழ விழுந்து கெடக்கறான்னு கூட பார்க்காம அங்க பாடிட்டு இருக்க” என்று பாலாஜியை கலாய்த்தார் ரியோ. பிறகு கேபியிடம் மன்னிப்பு கோரினார் பாலாஜி.

பிக்பாஸ் – நாள் 93
பிக்பாஸ் – நாள் 93

இந்த முதல் ரவுண்டில் பாலாஜி (மதுர குலுங்க), ஷிவானி (டங்கா மாரி), ரியோ (வெற்றி வேலா), பாலாஜி (வாட் எ கருவாட்) ஆகிய பாடல்களைக் கண்டுபிடித்தார்கள். பல பாடல்களை சொதப்பி ‘என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா’ என்று மற்றவர்களின் கேலிக்கும் எரிச்சலுக்கும் ஆளானார் பாலாஜி. ரம்யா, ஆரி போன்றவர்கள் பஸ்ஸர் பக்கம் வராமலேயே இருந்தார்கள் அல்லது தாமதமாகத் தொட்டார்கள்.

"பிக்பாஸ் இந்த ரவுண்டில் சில மாற்றங்களைக் கொண்டு வர்றேன்னு சொல்லியிருந்தீங்களே... ஏதாவது செய்ங்களேன்" என்றார் ரியோ. எனவே மாற்றம் கொண்டுவரப்பட்டது. 'இன்னமும் பத்து பாடல்கள் ஒலிபரப்பாகும். அதற்குள் வரிசைப்படுத்துதலை செய்ய முடியவில்லையென்றால் முன்பு தவறாகத் தொட்ட, இனி தவறாக தொடப்போகும் முயற்சிகளுக்காக மைனஸ் மதிப்பெண்கள் அளிக்கப்படும்’ என்று ஆப்பு வைத்தார் பிக்பாஸ். "என்னது... முன்னாடி தொட்டதுக்குமா? அப்ப நான் ஜீரோல வந்துடுவேனே" என்று ஷாக்கானார் பாலாஜி.

பாடல் வரிசையில் இரண்டாவது ரவுண்ட் தொடங்கியது. ‘தவறாகத் தொட்டால் மைனஸ்’ என்பதால் பாலாஜி பம்மி உட்கார்ந்திருந்தார். "பிக்பாஸ்... லாரியை பார்க்கிங்ல போட்டதுக்கு நன்றி" என்று சொல்லி வெடித்து சிரித்தார் ரம்யா. ரம்யா சிரித்தவுடன் பின்குறிப்பாக ஆரியும் பலமாக சிரித்தார். (என்னவே நடக்குது இங்க?!). "பாட்டு தெரிஞ்சதுன்னா புல்லட் ட்ரெயின் மாதிரி பாய்ஞ்சு வருவேன்" என்று ரம்யாவின் கிண்டலை எதிர்கொண்டார் பாலாஜி.

முதலில் ஒலித்த பாடலை சரியாக கண்டுபிடித்து ‘கோழி... வெடக்கோழி... கொக்கொக்’ என்று ஷிவானி பாடிக் கொண்டே சென்றவுடன் “போதும்... பல்லவி மட்டும் கண்டுபிடிச்சா போதும்" என்றார் சோம். இந்தச் சுற்றில் சமீபத்தில் வெளிவந்த புதிய திரையிசைப்பாடலான ‘என்னை மட்டும் லவ்வு பண்ணு புஜ்ஜி’ என்கிற பாடலை அவர் கண்டுபிடித்ததால் அவருக்கு எல்லோரும் பாராட்டு தெரிவித்தார்கள். சோம் இரண்டு பாடல்களையும் ரியோ ஒரு பாடலையும் சரியாக கண்டுபிடித்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 93
பிக்பாஸ் – நாள் 93

இந்தச் சுற்றின் இறுதியில் சோம், ஆரி, ரம்யா ஆகியோர் பூஜ்யம் மதிப்பெண்களைப் பெற்றிருந்ததால் டைபிரேக்கர் நடத்தப்பட்டது. இதில் முதல் பாடலுக்கு பஸ்ஸரைத் தொட்டு கண்டுபிடிக்க முடியாமல் தோற்றுப் போனார் சோம். இரண்டாவது பாடலை (லெட் மி சிங் எ குட்டி ஸ்டோரி) சரியாக கண்டுபிடித்து கிளைமாக்ஸில் முந்தினார் ரம்யா. இவர் விஜய் ரசிகை என்பது மீண்டும் இன்று உறுதியானது. "கடைசில தளபதிதான் என்னைக் காப்பாத்தினாரு" என்று உற்சாகமானார் ரம்யா.

சோம் தேர்ந்தெடுத்து தோற்றுப்போன பாடல் கேபிக்கு நன்கு தெரியும் போலிருக்கிறது. "அய்யோ... எனக்குத் தெரியுமே" என்று பல்லைக் கடித்துக் கொண்டு உற்சாகமாகவும் ரகசியமாகவும் அவர் குதித்தது சுவாரஸ்யமான காட்சி.

இறுதியில் அவரவர்கள் பெற்ற மதிப்பெண்களை பிக்பாஸ் அறிவித்தார். இதில் முதல் இடத்தில் ஷிவானியும் கடைசி இடத்தில் பாலாவும் வந்தார்கள். (முந்திரிக்கொட்டைகளுக்கான நீதி!). ஆனால் மொத்த மதிப்பெண்கள் பட்டியலில் ரம்யா முதல் இடத்தில் வந்ததும் “இந்தப் பொண்ணு எதையும் செய்யாமலேயே அதுக்கு லக் அடிக்குது” என்று எல்லோரும் ஆச்சர்யமானார்கள். "உன் ராசி என்னதும்மா... முதல் வாரத்துல கூட பாலைத் தொடாமலேயே கேப்டன் ஆனே?” என்று ஜாலியாக கலாய்த்தார் ரியோ.
பிக்பாஸ் – நாள் 93
பிக்பாஸ் – நாள் 93

"என் நல்ல மனசுக்கு கிடைத்த பரிசு அது. என்னை அதிகமா புகழாதீங்க” என்று வெட்கப்பட்டார் ரம்யா. (அதென்னமோ உண்மைதான்) சாக்லேட் விளம்பர இளைஞன் மாதிரி சும்மா இருந்தால் கூட அதிர்ஷ்டம் ரம்யாவைத் துரத்தி வருகிறது.

ரம்யாவின் வெற்றியை தன்னுடைய வெற்றி போல நினைத்து ஆரி, அகம் மகிழ்ந்து ‘ஹைஃபை’ கொடுத்தார். ஆரி என்னும் பாறாங்கல்லில் பூக்கின்ற ஒரே பூ ரம்யாதான் போல.

பிக்பாஸ் – நாள் 93
பிக்பாஸ் – நாள் 93

முந்திரிக்கொட்டை மாதிரி துள்ளி துள்ளிச் சென்று ஆட்டத்தைக் கெடுத்து ஜீரோ வாங்கிய பாலாஜி சோகமாக அமர்ந்திருக்க ‘நாளைக்குப் பார்த்துக்கலாம் குமாரு’ என்று ஷிவானியும் ரம்யாவும் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள்.

பாடல் வரிகளைக் கண்டுபிடிக்கும் ரவுண்ட் என்பது உடல்பலத்தைக் கோராமல் நினைவுத் திறமையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் பெண் போட்டியாளர்களுக்கும் சம வாய்ப்பு கிடைத்தது. (ஆனால், அப்படியும் சொல்லி விட முடியாது. பாய்ந்து பாய்ந்து பஸ்ஸர் அடித்து தன் உடல் வலிமையைக் காட்டினார் பாலாஜி). இனி வரும் டாஸ்க்குகளையும் உடல் பலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைக்காமல் மூளைத்திறனையும் சார்ந்து வடிவமைத்தால் நன்றாக இருக்கும்.