Published:Updated:

பிக்பாஸ் வீட்டுக்குள் பாலாவோடு சண்டைபோட, ஷிவானியோடு ஆட்டம் ஆட... புதுப்போட்டியாளர் யார் தெரியுமா?!

ஷிவானி - அஸீம்
ஷிவானி - அஸீம்

பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்கெனவே இருக்கும் பஞ்சாயத்து போதாதென இன்னொரு போட்டியாளரை உள்ளே இறக்குகிறது விஜய் டிவி.

2020 சீசனில், பிக்பாஸ் வீடு ஒரு நொடிகூட சண்டையில்லாமல் இருந்துவிடக்கூடாது என்கிற முனைப்போடு போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் விஜய் டிவி, இந்த முறை கைகலப்பு இல்லாமல் சீசனை முடிக்கக்கூடாது என முடிவெடுத்துவிட்டதுபோலத் தெரிகிறது. ஏற்கெனவே அர்ச்சனா, சுச்சியை இறக்கிவிட்டு வகைதொகையில்லாமல் கன்டென்ட் தேற்றுபவர்கள், இந்த முறை இன்னும் உக்கிரமாக இறங்கியிருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் - 4 வீட்டின் ஹீரோவாக கெத்துக்காட்டி, எந்நேரமும் ஆர்ம்ஸை முறுக்கியபடியே சுற்றிவரும் பாலாஜியை மிரட்ட வருகிறார் ஷிவானியின் ரீல் ஹீரோ. ஆமாம், ஷிவானியின் காதலராக சீரியல் ரசிகர்களால் கிசுகிசுக்கப்பட்ட அஸீம்தான் இன்னும் சில நாள்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையப்போகும் 19-வது போட்டியாளர்.

யார் இந்த அஸீம்?

அஸீம்
அஸீம்

மியூசிக் சேனலில் ஆங்கராக மீடியாவுக்குள் அறிமுகமானவர் அஸீம். சீரியல் நடிகராகப் பெயர் வாங்கியது, சன் டிவியில் ஒளிபரப்பான ‘பிரியமானவள்’ தொடர் மூலம்தான்.

பிறகு சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு வந்தவர், ப்ரைம் டைம் சீரியலான ‘தெய்வம் தந்த வீடு’ தொடரில் நடித்தார். அந்தத் தொடர் முடிவடைந்ததும், ‘பகல் நிலவு’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த சீரியலில்தான் அஸீமுக்கு ஜோடியாக வந்தார் ஷிவானி.

அஸீம் - ஷிவானி ஜோடிப் பொருத்தம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட, சேனலும் தன் பங்குக்கு, ’சிறந்த ரொமான்ட்டிக் ஜோடி’ என விருது தந்தது. விளைவு... ’ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆகிறதா’ என்கிற பேச்சுகள் சீரியல் ஏரியா முழுக்க எதிரொலித்தன.

இந்தக் கிசுகிசுகளுக்கெல்லாம் அஸீமோ, ஷிவானியோ நேரடியாகப் பதில் சொல்லவில்லை. அதேநேரம் ‘பகல் நிலவு’ தொடர் முடிந்ததும், ’ஜோடி சீசன் 10'-ல் இருவரும் ஜோடியாக ஆடுவதற்கும் மேடை ஏறினார்கள்.

‘பகல் நிலவு’, ’ஜோடி’ ஆகியவற்றில் இருவரையும் சேர்த்துப் பார்த்த ரசிகர்கள் ’இருவருக்கிடையிலும் காதலா’ என்கிற கேள்வியைத் தொடர்ந்து எழுப்பி வந்த நிலையில்தான், ஒருபடி மேலே போய், அடுத்து ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியலில் இருவரும் ஹீரோ-ஹீரோயினாகக் களம் இறங்கினார்கள்.

’அப்ப, காதலும் கல்யாணமும் கன்ஃபார்ம்’ என கிசுகிசுக்கள் மறுபடியும் கிறுகிறுக்க வைத்த சூழலில்தான், என்ன நடந்ததோ, சில எபிசோடுகளே ஒளிபரப்பான நிலையில், ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடரிலிருந்து ஷிவானி திடீரென வெளியேறியதுடன் வேறு சேனலுக்கும் சென்று விட்டார்.

பிக்பாஸ் பாலாஜி - ஷிவானி
பிக்பாஸ் பாலாஜி - ஷிவானி

"'க.கு.சி' தொடரில் அஸீமுக்குத் தந்த முக்கியத்துவம் தனக்குக் கிடைக்கவில்லை என்று கருதியதாலேயே வெளியேறினார்" என அப்போது பேசப்பட்டது. இப்போது ‘பிக்பாஸ்'ல் இருக்கிறார் ஷிவானி.

பிக்பாஸ் ஆரம்பித்த புதிதில் சக போட்டியாளர்களுடன் ஒன்றாமலேயே இருந்து வந்த ஷிவானிக்கு ‘அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட்’ என அர்ச்சனாவேகூட பட்டம் கொடுத்தது நினைவிருக்கலாம்.

இந்தப் பின்னணியில் அஸீம் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதால், அங்கிருக்கும் ஷிவானியின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்பதே பிக்பாஸ் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு.

"ரீலோ, ரியலோ ஒரு ஜோடியை ஷோவுக்குள் இறக்கி விடுறதுங்கிறது பிக்பாஸோட ப்ளான். மத்த மொழிகள்ல ஒளிபரப்பான பிக்பாஸ்கள்ல இருந்துமே கூட இதுக்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ஒண்ணு, வெளியில ஜோடியா இருக்கிறவங்களை அனுப்புவாங்க. இல்லையா, உள்ளே போனதும், அவங்களை ஜோடியா ஆக்கிடுவாங்க.

லாஸ்லியா, கவின்
லாஸ்லியா, கவின்

ஓவியா – ஆரவ், மகத் - யாஷிகா, கவின் - லாஸ்லியா, ’தாடி’ பாலாஜி - நித்யானு முந்தைய சீசன்கள்லயே பார்த்திருக்கோமே! அதே வரிசையிலதான் இப்ப அஸீம்-ஷிவானி. ஆரம்பத்துல சேர்ந்து நடிச்சாலும் ரெண்டு பேருக்கிடையிலும் ஈகோவோ என்னவோ பிரிஞ்சாங்க. இப்ப மறுபடி ஒரே வீட்டுக்குள் சந்திக்கப் போறாங்க. அப்ப நிச்சயம் கன்டென்ட் கிடைக்குமில்லையா... கூடவே இந்த காதலுக்கு வில்லன் பாலாஜியும் இருக்கிறார்" என்கிறார்கள் எல்லாம் அறிந்தவர்கள்.

அஸீம் - ஷிவானி அடிச்சிக்கிட்டாலும் கன்டென்ட்தான், இடையில் பாலாஜி புகுந்தால் அதுவும் கன்டென்ட்தான் எனப் பல கணக்குகள் போடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு