Published:Updated:

பிக் பாஸ் எக்ஸ்க்ளூசிவ்: குடிசை வீடு; ரிப்பேரான டிவி; அக்கா ஜெயிக்கணும்னு ஆசை!- தாமரையின் குடும்பம்

பிக் பாஸ் தாமரை

'நான் பிறந்ததில் இருந்து அக்கா முகத்துல சந்தோசத்தை பார்த்ததேயில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள்ளே தான் அவங்க முகத்துல உண்மையான சிரிப்பை பார்த்தேன். அதுவரைக்கும் அவங்க சிரிச்சு நான் பார்த்ததேயில்லை!'

பிக் பாஸ் எக்ஸ்க்ளூசிவ்: குடிசை வீடு; ரிப்பேரான டிவி; அக்கா ஜெயிக்கணும்னு ஆசை!- தாமரையின் குடும்பம்

'நான் பிறந்ததில் இருந்து அக்கா முகத்துல சந்தோசத்தை பார்த்ததேயில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள்ளே தான் அவங்க முகத்துல உண்மையான சிரிப்பை பார்த்தேன். அதுவரைக்கும் அவங்க சிரிச்சு நான் பார்த்ததேயில்லை!'

Published:Updated:
பிக் பாஸ் தாமரை

மழை தொடர்ந்து பெய்தால் தாங்காத கூரை வீடு, அந்த வீட்டின் முற்றமே வீட்டின் ஹாலும் கூட! அங்கே மாட்டுக் கொட்டகையின் அருகே உள்ள விறகடுப்பில் சாதம் கொதித்துக் கொண்டிருந்தது. வீட்டினுள் ஒரு சேர ஆறு பேருக்கு மேல் இருப்பது கடினம். அப்படி எளிமையான வீட்டில் தான் தாமரை பிறந்து, வளர்ந்திருக்கிறார்.

தாமரைச் செல்வி வீடு
தாமரைச் செல்வி வீடு
Photo Credit : Bhuhari Junction

பிக்பாஸ் வீட்டில் இருந்து 99-வது நாளில் வெளியேறினார், தாமரைச் செல்வி. அவருடைய சொந்த ஊர் புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமம். ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர் இன்று அனைவரும் வியந்து பார்க்கும் மேடையில் எந்த மீடியா வெளிச்சமும் இல்லாதவர் இத்தனை நாட்கள் இருந்ததே மிகப்பெரிய வெற்றிதான்! தாமரையின் சகோதரி விஜயலட்சுமியிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்பா, அம்மாவுக்கு வயசாகிடுச்சுன்னு இப்ப வேலைக்கு போகிறதில்லை. அண்ணன் பெரமையா மட்டும்தான் வேலை பார்த்துட்டு இருக்காங்க. ஆரம்பத்தில் கூலி வேலை பார்த்து தினம் ரூ. 300, ரூ. 350 சம்பளம் வாங்கிட்டு வருவாங்க. அதை வெச்சு தான் குடும்பத்தோட பொழப்பு நடந்துச்சு. இப்ப கொத்து வேலைக்கு போக ஆரம்பிச்சியிருக்காங்க. இடையில் வீட்டுல ரொம்ப கஷ்டப்படுறப்போ நான் கூட அண்ணன்கிட்ட, துணிக்கடைக்கு வேலைக்கு போறேன்னு சொல்லியிருக்கேன்.. அண்ணன் தான் உனக்கு படிக்கணும்னுதானே ஆசை.. நீ படின்னு சொன்னாங்க. அரசு கல்வியியல் கல்லூரியில் பிஎட் படிச்சிட்டு இருக்கேன் என்றவரிடம் தாமரைச் செல்வி குறித்து கேட்டோம்.

தாமரைச் செல்வியின் அம்மா
தாமரைச் செல்வியின் அம்மா
Photo Credit : Bhuhari Junction

அக்காவுக்கும், எனக்கும் ஒன்பது வயது வித்தியாசம். அக்கா நாடகத்துக்கு போகிறதனால அடிக்கடி வீட்டிற்கு வர மாட்டாங்க. வரும்போதெல்லாம் நல்லா படிக்கணும் பாப்பான்னு சொல்லுவாங்க. எனக்கு மூணு அக்கா ஒரு அண்ணன். தாமரை அக்கா ரெண்டாவது! பிக்பாஸ் போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து சொல்லுச்சு. எங்க வீட்ல இருந்த டிவி கஜா புயலில் போயிருச்சு. அதுக்கப்புறம் நாங்க டிவியை சரி பண்ணவே இல்லை. அதுக்கு முன்னாடி வரைக்கும் பிக்பாஸ் நாங்க பார்த்ததேயில்லை. எங்க அக்கா பிக் பாஸ் வீட்டுக்குள்ளே போறாங்கன்னு அண்ணன் டிவியை சரி பண்ணிட்டு வந்தாங்க. அக்கா வீட்டுக்குள்ளே போனதில் இருந்து அவங்க வெளியே வந்த வரைக்கும் பிக்பாஸ் பார்த்தோம். அக்கா ஜெயிப்பாங்கன்னு நாங்க மட்டும் இல்லைக்கா ஊரே நம்பிட்டு இருந்துச்சு. அவங்க வெளியே வந்ததும் எங்களுக்கு கஷ்டமாகிடுச்சு.

ஏன்னா, பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போகும்போதே கண்டிப்பா ஜெயிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாங்க. நான் பிறந்ததில் இருந்து அக்கா முகத்துல சந்தோசத்தை பார்த்ததேயில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள்ளே தான் அவங்க முகத்துல உண்மையான சிரிப்பை பார்த்தேன். அதுவரைக்கும் அவங்க சிரிச்சு நான் பார்த்ததேயில்லை. எங்க வீட்ல நாங்க எல்லாருமே கஷ்டத்தை எப்பவும் வெளியே காட்டிக்க மாட்டோம் என்றவரிடம் அவரது வீடு குறித்து பேசினோம்.

தாமரைச் செல்வியின் சகோதர்கள்
தாமரைச் செல்வியின் சகோதர்கள்
Photo Credit : Bhuhari Junction

மழை தொடர்ந்து பெய்தால் கூரை ஊறிப் போயிடும். அந்த சமயத்தில், பக்கத்துல இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு போயிடுவோம். நாங்க இருக்கிற வீட்டுக்கு எப்போ பாம்பு வரும்னே தெரியாது.. என்னைக்குனாலும் வரும்.. வீட்டை சுற்றி எந்தத் தடுப்பும் இல்லாததனால நாம தான் பாதுகாப்பா இருந்துக்கணும். பாத்ரூம் போகணும்னா காட்டுக்கு தான் போவோம். விடியுறதுக்கு முன்னாடியே பாத்ரூம் போய், குளிச்சிட்டு வந்துடுவோம். அவசரத்துக்கு போகணும்னா எப்ப வேணும்னாலும் இடிஞ்சு விழும் என்கிற நிலையில் எங்க வீட்ல இருக்கிற பாத்ரூமை பயன்படுத்திப்போம். இப்படியே பிறந்ததில் இருந்து இருந்ததனால எங்களுக்கு பழகிடுச்சு என சிரித்துக் கொண்டே யதார்த்தமாய் அவருடைய வாழ்வியலை பகிர்ந்து கொண்டார்.

இத்தனை வருசம் இந்த ஊர்ல இருக்கோம்.. இதுவரை எப்படி இருக்கீங்க.. என்ன பண்றீங்கன்னு கூட அக்கம், பக்கத்துல உள்ளவங்க பேசினதில்லை. காலேஜ் இல்லாதப்போ நானும் கள வெட்டுறது, உரம் வைக்கிறதுன்னு எல்லா வேலைக்கும் போவேன். நான் பியூட்டிஷியன் கோர்ஸ் முடிச்சிருக்கேன், கூடை பின்னுவேன், காலேஜ் படிக்கும்போது ஹிந்தி படிச்சதனால ஹிந்தியும் எனக்கு தெரியும். ஊர்ல இருக்கிற சின்ன பசங்களுக்கெல்லாம் இலவசமா அதெல்லாம் சொல்லிக் கொடுப்பேன் என்றவரின் முகத்தில் அத்தனை யதார்த்தமும், பெருமையும்!

தாமரைச் செல்வியின் குடும்பத்தினர்கள்
தாமரைச் செல்வியின் குடும்பத்தினர்கள்
Photo Credit : Bhuhari Junction

பிக்பாஸ் வீட்டில் இருந்து அக்கா வந்ததும் ஃபோன் பண்ணாங்க. நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு அண்ணன்கிட்ட கவலைப்படாதே தம்பி, நான் வந்ததும் வீடு கட்டுற வேலையை ஆரம்பிச்சிடலாம்னு சொன்னாங்க. அக்காவுக்கு நிறைய கடன் இருக்கு.. ஆனாலும், நம்ம பொறந்த வீட்டுக்கு ஒரு வீடை கட்டிக் கொடுத்திடணும்னு நினைக்கிறாங்க பாருங்க.. அவங்க பண்றாங்க, பண்ணலைங்க அது வேற விஷயம். முதலில் அப்படி சொல்றதுக்கே ஒரு மனசு வேணும்! 'ஆறுதல்' என்கிற ஒரு விஷயத்தை தானே இந்த மனுச ஜென்மம் எதிர்பார்க்குது.. அக்கா அப்படி சொன்னதும் அம்மா, அப்பா, அண்ணன், அக்கான்னு எல்லாருக்கும் ரொம்பவே சந்தோஷம் ஆகிடுச்சு!' என்றவரிடம் உங்களோட ஆசை என்னன்னு கேட்கவும் சிரிக்கிறார்.

எனக்கு ஐஏஎஸ் ஆகணும்னு ஆசைக்கா.. இந்த ஊர்ல ஐஏஎஸ் ஆகி எல்லாரும் மதிக்கிற அளவுக்கு திறமை மூலமா முன்னுக்கு வரணும்னு எனக்கு ஆசைக்கா.. என்றவரின் கனவு மெய்ப்பட வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்!