Published:Updated:

அப்செட் சம்யுக்தா, `நோ' சொன்ன சுச்சி... சுரேஷ் சக்ரவர்த்தியின் பிக்பாஸ் பார்ட்டியில் நடந்தது என்ன?!

பிக்பாஸ் டீம்
பிக்பாஸ் டீம்

பிக்பாஸ் சீசன் 4 ஷோவிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்றாகச் சந்தித்து அளவளாவியிருக்கிறார்கள்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் நேற்று. கடந்த எந்த சீசனிலும் இல்லாத ஸ்பெஷலாக இந்த சீசனில் முதன்முதலாக இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடந்தது. நடந்து முடிந்த எவிக்‌ஷனில் ஜித்தன் ரமேஷும், அறந்தாங்கி நிஷாவும் வெளியேறினார்கள்.

இந்தச் சுழலில் ஷோவிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்றாகச் சந்தித்த சந்திப்பு நேற்று (13/12/20) மாலை நடந்துள்ளது.

இந்தச் சந்திப்பை ஒருங்கிணைத்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இந்தச் சந்திப்பு குறித்த விபரம் தெரிந்தவர்களிடம் பேசினோம்.

"சுரேஷ் வெளியில வந்ததுல இருந்தே இப்படியொரு சந்திப்பை நடத்தணும்னு ஆர்வமா இருந்தார். அந்த வீட்டுக்குள் எப்படி இருந்தோமே, அது பிரச்னை இல்லை. அது ஒரு ஷோ. அதன் மூலமா கிடைச்ச நண்பர்களுடன் தொடர்ந்து நட்பை வளர்த்தெடுக்கணும்னு விரும்பினார். அதுலயும் குறிப்பா அந்த வீட்டுக்குள் யார் யாருடனெல்லாம் முட்டல் மோதல் உருவாச்சோ அவங்களை நிச்சயம் சந்திச்சு மனசு விட்டுப் பேசணும்னு நினைச்சார்.

வேல்முருகன், சுரேஷ்
வேல்முருகன், சுரேஷ்

நூறு நாள் கடந்து எல்லாருமே வெளியில் வந்த பிறகு பண்ணலாம்னுதான் இருந்தார். ஆனா திடீர்னு என்ன நினைச்சாரோ முதல்ல இப்ப வந்திருக்கிறவங்க சந்திக்கலாம், பிறகு எல்லாரும் வந்தப் பிறகு சந்திப்போம்னு முடிவெடுத்து வேல்முருகன், ரேகா, சம்யுக்தா, சுச்சி எல்லாரையும் கூப்பிட்டார். கடைசியா வெளியில் வந்த ரமேஷையுமே கூப்பிட்டிருந்தார்" என்கிறார்கள்.

ரமேஷ், சுச்சி இருவரும் தவிர்க்க இயலாத காரணத்தால் வர இயலவில்லை என்றும் அடுத்த முறை வருவதாகவும் சொல்லி விட்டார்களாம்.

நேற்று மாலை சுரேஷின் வீட்டில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, வேல்முருகனிடம் மனம் விட்டுப் பேசிய சுரேஷ், ஷோவில் நடந்த அந்த வேஷ்டி விவகாரம் குறித்துக் குறிப்பிட்டு, "மன்னிச்சிடுங்க வேல்முருகன்... நாம எல்லாமே ஒரு ஷோவுல கலந்துகிட்டோம், அவ்வளவுதான்" என்றாராம். வேல்முருகனும் பதிலுக்கு, "அட விடுங்க தெய்வமே நான் அந்த வீட்டுக்குள் நடந்ததையெல்லாம் வெளியில வந்த மறுநாளே மறந்துட்டேன்" எனச் சொல்லியிருக்கிறார்.

சம்யுக்தா, சுரேஷ்
சம்யுக்தா, சுரேஷ்

நடந்து கொண்டிருக்கிற எவிக்‌ஷன் சர்ச்சைகள் குறித்தும் இவர்கள் விவாதித்திருக்கிறார்கள். அப்போது சம்யுக்தா, "கலீஜ் என்ற வார்த்தை சாதாரணமாகப் பயன்படுத்தக்கூடியதுதான் என நினைத்துப் பேசிவிட்டேன். அது இவ்வளவு பெரிய எதிர்வினைகளை ஏற்படுத்தும் எனத் தெரியாது. இப்போதெல்லாம் போட்டியாளர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிறார்கள். அதுபோல அப்போதும் கொடுத்திருந்தால் நாமும் உஷாராகியிருப்போம்" என்று சொல்லியிருக்கிறார்.

மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட இந்தச் சந்திப்பு முடிந்ததும் எல்லோருக்கும் சுரேஷ் வீட்டில் விருந்து அளிக்கப்பட அதை முடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பியிருக்கிறது பிக்பாஸில் இருந்து வெளியேறியோர் டீம். இந்த சந்திப்பு சுவாரஸ்யங்களை ஒரு வீடியோவாக எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு