Published:Updated:

பிக் பாஸ் - 23 |அழுதாலும், அடக்கிவாசித்தாலும்... பிரியாங்காவை துரத்தத் துடிக்கிறார்களே ஏன்?

பிக் பாஸ் - 23

நாமினேஷன் முடிந்து இந்த வார எலிமினேஷன் பட்டியல் வெளியாகியது. சின்னப்பொண்ணு, அக்ஷரா, பாவனி, சுருதி, இசை, அபினய், இமான், வருண் மற்றும் பிரியங்கா என ஒன்பது பேர் இந்த வெளியேற்றப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள்.

பிக் பாஸ் - 23 |அழுதாலும், அடக்கிவாசித்தாலும்... பிரியாங்காவை துரத்தத் துடிக்கிறார்களே ஏன்?

நாமினேஷன் முடிந்து இந்த வார எலிமினேஷன் பட்டியல் வெளியாகியது. சின்னப்பொண்ணு, அக்ஷரா, பாவனி, சுருதி, இசை, அபினய், இமான், வருண் மற்றும் பிரியங்கா என ஒன்பது பேர் இந்த வெளியேற்றப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள்.

Published:Updated:
பிக் பாஸ் - 23

‘துள்ளுவதோ இளமை’ படத்திலிருந்து ‘’நெருப்பு கூத்தடிக்குது’’ பாடலை ஒலிக்க விட்டார் பிக்பாஸ். இத்தனை பழைய பாடலை பிக்பாஸ் போடுகிறார் என்றால் அதில் ஏதாவது உள்குத்து இருக்குமே என்று தோன்றியது. பிறகுதான் விடை கிடைத்தது. இந்த வாரம்… ‘நெருப்பு’ வாரமாம். நாணயம் வைத்திருப்பவர்களுக்கு பஞ்சபூதங்களின் ஆற்றலின் ஆளுமை ஒரு வாரத்திற்கு கிடைக்கும் என்று முன்னரே அறிவித்திருந்தார் பிக்பாஸ்.

நெருப்பு நாணயத்தை வைத்திருப்பவர் இசை. எனவே இந்த வாரம் கிச்சன் ஏரியா அவருடைய கன்ட்ரோலில்தான் இருக்க வேண்டும். ‘’ஸ்டார்ட்டிங்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா உன் கிட்ட ஃபினிஷிங் சரியில்லியேப்பா’’ என்பது போல் ‘’என்னைக் கேட்காம யாரும் கிச்சன் பொருட்களைத் தொடக்கூடாது. நான் கேள்வி கேட்பேன். இதனால எனக்கு கெட்ட பேரு வந்தாலும் பரவாயில்லை’’ என்று கெத்தாகத்தான் ஆரம்பித்தார் இசை. ஆனால், அவரை யாரும் மதிக்காமல், கல்யாண சத்திரத்தின் கிச்சன் போல ஆளாளுக்கு அங்கு புழங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிக் பாஸ் - 23
பிக் பாஸ் - 23

தாமரை அதிக எண்ணெய்யை ஊற்றி எதையோ செய்து வைத்திருந்தார். நிரூப் அவராக சென்று புளியைக் கரைத்து வைத்திருந்தார். இவற்றையெல்லாம் இசை பின்னர்தான் கவனித்து விசாரித்துக் கொண்டிருந்தார். எனில் இசையை இவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. முன்கூட்டியே அனுமதி பெறவில்லை. இசையும் மிக கறாராக இவர்களைக் கையாளவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

“ஏதாவது வெடுக்கு வெடுக்குன்னு பேசிடறா” என்கிற கெட்ட பெயர் இசைக்கு ஏற்கெனவே இருக்கிறது. இந்த நிலையில் ‘தலைவர்’ என்கிற கெத்தில் தான் ஏதாவது அதிகமாக பேசி விட்டால் பிரச்னையாகி விடுமோ என்கிற தயக்கம் இசைக்குள் இருக்கிறது. குறிப்பாக இவருக்கும் இமான் அண்ணாச்சிக்கும் இடையே ஏதோவொரு பனிப்போர் ஓடிக் கொண்டேயிருக்கிறது.

கிச்சன் பொறுப்பு இசைக்குத்தான் என்கிற தகவலை காலையில் அறிந்த அடுத்த நிமிடத்திலேயே “நான் கிச்சன்ல இருப்பேன். நீ பாட்டுக்கு ஏதாவது சட்டம் போட்டுக்கிட்டு இருக்காத” என்று தொடக்கத்திலேயே இசையிடம் ஆட்சேபித்தார் இமான். பிறகு இன்னொரு சமயத்தில் ‘போச்சா... சோனா முத்தா... எனக்கு சோறு கிடைச்ச மாதிரிதான்” என்று ராஜூவிடம் அங்கலாய்க்க ஆரம்பித்தார்.

பிக் பாஸ் - 23
பிக் பாஸ் - 23

‘’அண்ணாச்சி… அடுத்த வாரம் கிச்சனுக்குப் போறீங்களா?” என்று கடந்த வாரத்திலேயே கமல் கேட்டிருந்தார். வீட்டின் சமையல் மீது இமான் தொடர்ந்து விமர்சனங்கள் வைத்துக் கொண்டிருந்ததுதான் அதற்கு காரணம். அதன்படி இந்த வார கிச்சன் டீமில் இமான் சேர்க்கப்பட்டார். என்றாலும் அவர் சமையல் ஏரியா பக்கம் அதிகமாகப் போகவில்லை. இது தொடர்பான ஆட்சேபம் இசைக்கு இருந்தது. இதைப் பற்றி அவர் சுருதியிடம் புலம்ப “அவரைப் போகச் சொல்லி ஒரு தடவை சொல்லிட்டல... அத்தோட விட்ரு. திரும்பத் திரும்ப சொல்லாத. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். அண்ணாச்சி கிச்சனுக்கு போயிட்டாரு” என்று சுருதி ஆலோசனை சொன்னார். ஆனால் திரும்பிப் பார்த்தால் தோட்டத்தில் சொகுசாக சாய்ந்து அமர்ந்திருந்தார் அண்ணாச்சி. சமையல் ஏரியாவுக்குப் போகவில்லை.

“யாராவது ஏதாவது நெனச்சிப்பாங்களோன்னு ஒரு இதுவா இருக்கு. எனக்கு பொருள் வேஸ்ட் ஆகாம இருக்கணும்... அவ்வளவுதான்” என்று இது பற்றி இரவில் தாமரையிடம் இசை புலம்பும் அளவுக்கு ஆகிவிட்டது நிலைமை. “உன் கிட்ட பவர் இருக்கு. அதன்படி நீ செஞ்சுதான் ஆகணும்” என்று இசைக்கு ஊக்கமூட்டினார் பாவனி.

கிராமத்திலிருந்து வந்திருக்கும் தாமரை கூட இப்போது சற்று தைரியமாக பொறுப்புகளை கையாளும் போது நகரத்தைச் சேர்ந்த இசைக்கு இன்னமும் துணிச்சல் வரவில்லை. வயது ஒரு காரணமாக இருக்கலாம். ‘‘எதையாவது சொல்லிடறாரு’’ என்கிற புகார் இமான் அண்ணாச்சியின் மீதும் நீண்ட நாட்களாக இருக்கிறது. ஆனால் நாம் பார்த்தவரை அப்படி எதையும் அவர் பெரிதாக செய்தது போல் தெரியிவில்லை. யாரிடமாவது அண்ணாச்சி தன் ஆட்சேபத்தை எடுத்து வைப்பார். எதிராளி கேட்டுக் கொண்டால் சரி. மாறாக எதிர்ப்பு வந்தால் ‘‘சரிப்பா... தெரியாம சொல்லிட்டேன். மன்னிச்சுக்க’’ என்று ரிவர்ஸ் கியர் போடுவதுதான் இமானின் பாணி. ஆனால் அண்ணாச்சி அப்படி ‘எதையாவது சொல்லி விடும்’ உதாரணக்காட்சியை நேற்று பார்க்க முடிந்தது.

வீட்டிலுள்ள பெரியவர்கள் ‘நொய்... நொய்’ என்று இளையவர்களின் விஷயங்களில் தலையிட்டுக் கொண்டே இருப்பார்கள். தன்னுடைய அதிகாரம் வீட்டில் இன்னமும் இருக்க வேண்டும் என்கிற ஆசையின் வெளிப்பாடே அது. இதனால்தான் நடைமுறையில் தலைமுறை இடைவெளி சார்ந்து அதிக பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவர்களின் அங்கலாய்ப்பு தாங்காமல் இளையவர்கள் பெரியவர்களின் மீது வெறுப்பு கொள்கிறார்கள். இமானின் விஷயத்திலும் இது நேற்று நிகழ்ந்தது.

பிக் பாஸ் - 23
பிக் பாஸ் - 23

நாமினேஷன் சடங்கு முடிந்து ‘’யாராவது நாணயத்தை உபயோகிக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டார் பிக்பாஸ். வருண், பாவனி, இசை ஆகிய மூவருமே ‘உபயோகிக்க விரும்பவில்லை’ என்று சொல்லி விட்டார்கள். ஆனால் அனைவரையும் அமைதிப்படுத்திய இசை, மீண்டும் ஒரு முறை உரத்த குரலில் ‘நான் நாணயத்தை உபயோகிக்க விரும்பவில்லை’ என்று அறிவிக்க “அதான் ஏற்கெனவே சொல்லிட்டியம்மா’ என்று அதில் மூக்கை நுழைத்தார் இமான். தனக்குள் முனகலாக சொன்னதை ‘அதிகாரபூர்வ அறிவிப்பாக’ இசை பிறகு தெரிவிக்க விரும்பியிருக்கிறார். “என்ன அண்ணாச்சி... ஏதாவது சொல்லிட்டே இருக்கீங்க?” என்று இசை எரிச்சலுடன் சிணுங்க “ஓகேம்மா நன்றி வணக்கம்” என்று சட்டென்று எண்ட் கார்ட் போட்டார் இமான்.

இமான் சொன்னதும் பெரிய விஷயமில்லைதான். என்றாலும் தங்களின் சுதந்திரத்தில் பெரியவர்கள் அடிக்கடி தலையிடுவதை இளைய தலைமுறை விரும்புவதில்லை. இதுதான் யதார்த்தம். இதை மூத்த தலைமுறை புரிந்து கொண்டால் வீட்டில் அமைதி நிலவும். “அண்ணாச்சி கூட பேசறதையே நிறுத்திடலாமான்னு பார்க்கறேன். ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று பிறகு சின்னப்பொண்ணுவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் இசை.

வீட்டின் தலைவருக்காக முதல் கட்ட போட்டி நடந்தது. பார்ப்பதற்கு கோக்குமாக்காக தெரிந்தாலும் ஞாபகசக்தி மற்றும் டைமிங்கை சோதிக்கும் போட்டி இது. வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்திருக்க, முதலில் ஒருவர் இன்னொரு போட்டியாளரின் பெயரைச் சொல்ல வேண்டும். அவர் இன்னொருவரின் பெயரைச் சொல்ல வேண்டும். இப்படி வரிசையாக சொல்லும்போது ஒரே பெயரை இரண்டு முறை சொல்லக்கூடாது. தடுமாறக் கூடாது. இப்படிச் செய்தால் அவுட் என்பதுதான் இதன் விதிமுறை. இதில் பிரியங்காவும் மதுமிதாவும் இறுதி வரைக்கும் தாக்குப் பிடித்தார்கள்.

இவர்களுக்காக நிகழ்ந்த அடுத்தக் கட்ட போட்டி இது. இருவரும் கையில் வலையுடன் நிற்க வேண்டும். மற்ற அனைத்து உறுப்பினர்கள் சற்று தூரத்தில் நின்று கொண்டு பந்துகளை எறிய வேண்டும். யார் தலைவர் ஆக வேண்டும் என்று விரும்புகிறோமோ அவரை நோக்கி பந்துகளை எறியலாம். இந்த நோக்கில் பிரியங்காவின் பக்கம் நிறையப் பந்துகள் வந்து விழுந்தன. ஆனால் விதி வேறு மாதிரியாக விளையாடியது.

இறுதியில் எண்ணிப் பார்க்கும் போது பிரியங்காவின் கூடையில் 23 பந்துகளும் மதுமிதாவின் கூடையில் 22 பந்துகளும் இருந்தன. ஒரேயொரு பந்து வித்தியாசத்தில் ‘பிரியங்கா தலைவர் ஆகி விடுவாரோ’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது ‘’அப்ஜெக்ஷன் மை லார்ட்.. பந்துகள் எறியப்படும் போது இரண்டு பந்துகள் நேரடியாக பிரியங்காவின் கூடையில் விழுந்து விட்டன. அவை கணக்கில் வராது” என்று ஒருவர் ஆட்சேபிக்க, இது தொடர்பாக பிக்பாஸிடம் சந்தேகம் கேட்டார் சிபி.

பிக் பாஸ் - 23
பிக் பாஸ் - 23

கூடையில் தானாக விழுந்த பந்துகள் கணக்கில் வரக்கூடாது என்பது நமக்கே தெரிந்த எளிமையான விதிமுறைதான். என்றாலும் ‘‘எதுக்கு வம்பு?” என்று சிபி கேட்ட சந்தேகத்திற்கு ‘’வரக்கூடாது’’ என்று தெளிவாக்கினார் பிக்பாஸ். ஆக பிரியங்காவின் கூடையில் 2 பந்துகள் குறைந்து எண்ணிக்கை 21 ஆனது. எனவே 22 பந்துகளைப் பெற்ற மதுமிதா இந்த வாரத்தின் தலைவர் ஆனார்.

‘இந்தப் புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு யாருக்குத் தெரியும்?’ என்பது மாதிரி தலைவராகி விட்ட மதுமிதாவின் தேமதுரத் தமிழோசையை இந்த வாரம் முழுவதும் கேட்க வேண்டுமே என்று நினைத்த போது ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் திகிலாகவும் இருந்தது. “யாழாவது தூங்கினா அவங்கெ மேலே குதிப்பேன்” என்கிற அதிரடி அறிவிப்போடு என்ட்ரி ஆனார் புதிய தலைவர். “ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்” என்று இவர் சொன்ன ஆலோசனைக்கு மக்கள் உற்சாகமாக கைத்தட்டி மகிழந்தார்கள். “லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க்கை’ மறந்துடாத” என்று நினைவூட்டினார் பிரியங்கா. (சாப்பாடு முக்கியம் குமாரு!). பிறகு அணிகள் பிரிக்கப்பட்டன. ஒருவர் தலைவர் ஆனவுடனேயே மகிழ்ச்சியில் மெய்மறப்பது இயல்புதானே? ‘‘மதுமிதா... உங்க மைக்கை மாட்டுங்க” என்று பிக்பாஸ் நினைவுப்படுத்த வேண்டியிருந்தது.

இறால் மசாலா எக்ஸ்ட்ராவாக செய்து தின்று விட்டதால் அதன் களைப்பு போக மக்கள் WWF விளையாடிக் கொண்டிருந்தார்கள். தன் மீது ஒன்றரை டன் வெயிட்டுடன் வந்து விழுந்த நீரூப்பை ‘மாடு... தடிமாடு... கொல்லப் பார்க்கிறியா?” என்று உயிர்பயத்துடன் ராஜூ அலற, விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார் பிரியங்கா. என்ன பெரிய WWF... என்ன இருந்தாலும் நம்ம ஊர் சண்டை மாதிரி வருமா? நம்மூர் தமிழ் கலாசார பாணியில் ஐக்கியின் தலைமுடியைப் பற்றி தாமரை குழாயடி சண்டை போட்ட போது ‘அப்படிப் போடுக்கா…சூப்பரு” என்று பார்க்க நமக்கே அத்தனை உற்சாகமாக இருந்தது.

பிரியங்கா சரவெடி, பாவனி பாம்பு பட்டாசு என்றால் அக்ஷராவை பிஜிலி வெடி எனலாம். அவ்வப்போது கொளுத்தி விட்டு தூரமாக சென்று காதை மூடிக் கொள்கிறார். “நீங்க காயினை எப்ப வேணா எடுக்கலாம். இசையோடதை நான் எடுக்க மாட்டேன். பாவம்... நிரூப், பாவனியோடதை சான்ஸ் கிடைச்சா தூக்கிடுவேன்” என்று சின்னப்பொண்ணுவை உசுப்பிக் கொண்டிருந்தார் அக்ஷரா. ஆனால் சின்னப்பொண்ணுவோ ‘’இந்த வயசுல நான் போய் இப்படியெல்லாம் செஞ்சா நல்லாயிருக்குமா?” என்று தயங்கிச் சென்றார்.

பிக் பாஸ் - 23
பிக் பாஸ் - 23

திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் வைபவம் தொடங்கியது. ‘நெருப்பு வாரம்’ என்பதால் போகி கொளுத்தி விளையாடுவது போன்ற சூழலை ஏற்படுத்தி வைத்திருந்தார் பிக்பாஸ். (கான்செப்ட் பிடிக்கிறதுல பிக்பாஸை அடிச்சுக்க முடியாது!). என்னதான் இது விளையாட்டு என்றாலும், ஒருவரின் புகைப்படத்தை நெருப்பில் இட்டு நாமினேட் செய்வதைப் பார்க்க சங்கடமாகத்தான் இருக்கிறது.

தங்களுக்கு மண்டைச்சூட்டை ஏற்படுத்திய சக போட்டியாளர்களின் புகைப்படங்களை நெருப்புச்சூட்டில் இட்டு ஒவ்வொருவரும் வடிகாலைத் தேடிக் கொண்டார்கள். அவர்களின் மனதில் இருந்த அழுக்குகள், குறைகள், வன்மங்கள் போன்றவை நெருப்பில் வந்து விழுந்தன. பொருத்தமில்லாத காரணத்தை எவராவது கூறினால் முன்பெல்லாம் பிக்பாஸ் ஏற்க மாட்டார். ஆனால் இப்போது அவருக்கும் வயதாகி விட்டதோ, என்னமோ, ‘’எதையாவது செஞ்சி தொலைங்க” என்று விட்டு விடுகிறார்.

நாமினேஷன் முடிந்து இந்த வார எலிமினேஷன் பட்டியல் வெளியாகியது. சின்னப்பொண்ணு, அக்ஷரா, பாவனி, சுருதி, இசை, அபினய், இமான், வருண் மற்றும் பிரியங்கா என ஒன்பது பேர் இந்த வெளியேற்றப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள். என்னதான் அழுது, அடக்கி வாசித்தாலும் தன் பெயர் வந்துவிடுகிறதே என்கிற கவலையை பிரியங்காவின் முகத்தில் பார்க்க முடிகிறது. இதில் இசை, பாவனி, வருண் ஆகியோர் நாணயம் வைத்திருப்பதால் அவர்களைக் கூப்பிட்ட பிக்பாஸ் “உங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறீர்களா… வேறு யாரையாவது மாட்டி விடப் போகிறீர்களா?” என்று கேட்க, ஐஸ்கீரிமுக்காக அப்பா கொடுத்து வைத்திருக்கும் காசை செலவு செய்ய விரும்பாத பையன் மாதிரி “இப்ப உபயோகிக்கலை” என்று மூவரும் சொன்னார்கள். புத்திசாலித்தனமான முடிவுதான்.

பிக்பாஸ் டீமில் சவுண்ட் சர்வீஸ் டிபார்ட்மென்ட்டில் இருப்பவர் அவசரமாக இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும். ஒன்று, பிரியங்கா கத்த ஆரம்பிக்கும் போது அவரின் மைக் சத்தத்தை குறைக்க வேண்டும். இரண்டு, பாவனி ரகசியம் பேச ஆரம்பிக்கும் போது மைக் சத்தத்தை அதிகரிக்க வேண்டும். விஸ்கி ஊற்றிய ஹஸ்கி வாய்ஸில் பாவனி குசுகுசுவென்று கிசுகிசு பேசும் போதெல்லாம் ‘’என்னதான் சொல்கிறார்?” என்று நாம் விழிக்க வேண்டியிருக்கிறது. ஸ்பீக்கருக்குள் தலையை விட்டால் கூட பாதி வசனம்தான் புரிகிறது.

நிரூப்பை வம்படியாக அழைத்த பாவனி “நான் உன்னைத்தான் நாமினேட் பண்ணியிருக்கேன் தெரியுமா?” என்று ரகசியத்தை போட்டு உடைத்தார். இது பிக்பாஸ் விதிகளுக்கு எதிரானது. பாவனி இப்படிச் சொல்வதின் மூலம் நிரூப்பின் வாயைப் பிடுங்கி விஷயங்களை அறிவதுதான் போலிருக்கிறது.

பிக் பாஸ் - 23
பிக் பாஸ் - 23

“அடிப்பாவி... அப்படியா செஞ்சே?” என்று அதிர்ந்த நிரூப், ‘சரி... அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்’ என்று சமாதானம் ஆனார். தன்னை யாரெல்லாம் நாமினேட் செய்திருப்பார்கள் என்பதை அறிய விரும்பி மண்டையைப் பிய்த்துக் கொண்டார் பாவனி. இதற்காக ராஜூ, அபினய் ஆகியோரின் தலையை உருட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அபினய் இவரை நாமினேட் செய்யவில்லை. பாவனியை நாமினேட் செய்தவர்கள் ராஜூ, அக்ஷரா மற்றும் ஐக்கி ஆகியோர்தான்.

‘‘எங்க எப்படி இருக்க வேண்டிய பையன்... இங்க வந்து அண்டா கழுவிட்டிருக்கான்’’ என்று வருணை கிண்டலடித்துக் கொண்டிருந்தார் பிரியங்கா. அபிஷேக்கின் இடம் காலியானதால் தன் குரூப்பில் வருணை இழுத்துப் போடுதவற்காக பிரியங்கா முயல்கிறாரோ, என்னமோ... ஆனால் வருண் கழுவும் நீரில் நழுவும் ஆசாமி!

ஓகே... உங்களுக்கு ஜாலியான ஒரு க்விஸ். தலைவர் போட்டியின் முடிவு அறிவிக்கப்படும் போது “பிரியங்காவின் கூடையில் இரண்டு பந்துகள் நேரடியாக வந்து விழுந்தன” என்று போட்டுக் கொடுத்து முடிவில் மாற்றம் ஏற்பட்டு மதுமிதா தலைவர் ஆக காரணமாக இருந்த நபர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்!