Published:Updated:

``டியர் `பிகில்’ அட்லி... ஃபுட்பால் விளையாட விஜய் மட்டும் போதுமா... இதெல்லாம் வேண்டாமா?''- ஒரு கால்பந்து ரசிகனின் கடிதம்

பிகில்

சமுதாயத்தால் குறிவைக்கப்படும் மக்களின் விளையாட்டாகத் தொடங்கி, அதன்பின் ஆச்சாரம் பேசும் அக்ரஹாரத்துக்குள்ளும், ஆடம்பரமான பெசன்ட் நகருக்குள்ளும் புகுந்தது ஏன்? இங்கு கால்பந்து யாரால் ஆடப்படுகிறது என்று தெரிந்துதான், புரிந்துதான் காட்சிகள் அமைத்தார்களா?

``நார்த் மெட்ராஸ்னாலே ஒரு அடையாளம் இருக்கு... பந்தாடிடணும்... இல்லைன்னா அக்யூஸ்ட்னுடுவாங்க. அதுக்காகவாவது பந்தாடுற பசங்க நிறைய பேரு மேல வரணும்."
- விஜய் (சென்னை சிட்டி எஃப்.சி வீரர்)

கடந்த ஐ-லீக் சீஸனில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு சில நாள்கள் முன்பு, அந்த அணியின் தமிழக வீரர்களோடு உரையாடிக்கொண்டிருந்தேன். எல்லோரும் அவர்களின் அனுபவத்தையும் எதிர்காலத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க, கால்பந்து தன் ஏரியாவுக்கு எவ்வளவு பிரதானம் என்பதை மேலே சொன்ன வார்த்தைகளின் மூலம் உணர்த்தினார் அந்த வியாசர்பாடி இளைஞர்.

``இந்த விளையாட்டுதான்பா நம்ம அடையாளத்தை மாத்தும்” என்று 'பிகில்' டீசரில், வடசென்னை பேச்சு வழக்கில் விஜய் சொன்னபோது, பெருமகிழ்ச்சியாக இருந்தது. இன்று டியோ ஸ்கூட்டரும் ஸ்பைக்கும் வடசென்னையின் அடையாளமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அதன் வாழ்வியலோடு ஒன்றிப்போன, பலரின் வாழ்க்கையையும் அடையாளத்தையும் மாற்றிய அந்த விளையாட்டைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள் என்று சந்தோஷமாக இருந்தது.

மெகா திரையில், ஒரு மாஸ் நடிகர் இதைப் பற்றிப் பேசும்போது அது அந்த விளையாட்டை ஆடுபவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாய் இருக்கும் என்ற நம்பிக்கை தோன்றியது. ஆனால், கால்பந்தை காமெடியாக்கியிருக்கிறது 'பிகில்'.

Bigil (transl. Whistle) is a 2019 Indian Tamil language sports action film written and directed by Atlee and produced by Kalpathi S. Aghoram under the banner AGS Entertainment. இதை விக்கிபீடியாவில் படித்தபோது, கால்பந்து ரசிகனாக மனது அவ்வளவு கனமாக இருந்தது. ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படம். ஆக்‌ஷன் ஓகே, ஸ்போர்ட்ஸ்..?! கால்பந்தை இவ்வளவு மோசமாகக் காட்டும் இந்தப் படத்தை எந்த அளவில் ஸ்போர்ட்ஸ் திரைப்படம் என்று எடுத்துக்கொள்வது? பல கால்பந்து ரசிகர்களும் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க, `மெஸ்ஸியைக் கூப்பிடு, ரொனால்டோவைக் கூப்பிடு’ என்று சொல்வதைக் கேட்டு எப்படி ரியாக்ட் செய்வது என்று திகைத்து நிற்கிறார்கள் பலர். ஒவ்வொரு படத்திலும் ஹீரோயின்களைக் கொலைசெய்துகொண்டிருந்த அட்லீ, இம்முறை கால்பந்துக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்.

பிகில்
பிகில்

வடசென்னைக்கு கால்பந்து என்பது மிகவும் முக்கியமானது. அதன் வாழ்வியலோடு ஒன்றிப்போனது. 'மெட்ராஸ்' திரைப்படம் போகிற போக்கில் அதை ஓரளவு அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும். இங்கு அதுவே கதைக்களம். அதை எப்படியெல்லாம் காட்சிப்படுத்தியிருக்கலாம்?! அந்த டாபிக்கைத் தொட்டுவிட்டு, அப்படியே இரண்டாம் பாதியில் சிங்கப் பெண்களைப் பிடித்துக்கொண்டுவிட்டதே படம். முதல் பாதியில் வைக்கப்பட்ட அந்த வசனம் பின்பு எதற்காக?

ராயப்பன் இருக்கும்வரை அந்த ஊரின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட கோப்பை, அதன்பின் கதிர், மைக்கேல், வேம்பு, தென்றல் போன்ற தனி மனிதர்களின் கனவாகச் சித்தரிக்கப்பட்டது ஏன்? இரண்டாம் பாதியில் வடசென்னையின் அடையாளத்தை மாற்ற முற்படாதது ஏன்? மாதர்கள் அழுது கண்ணீர் சிந்தினால் போதும் என்பதால், நீங்களும் வடசென்னையை புறக்கணித்துவிட்டீர்களா?

புள்ளீங்கோ புள்ளீங்கோ என்று பேசியபோதெல்லாம் அடித்துக்கொண்டிருந்த நார்த் மெட்ராஸ் வாசம், இடைவேளைக்குப் பின் புள்ளைங்க வந்த பிறகு மறைந்தது ஏன்? வடசென்னைப் பெண்களுக்கு எம்பவர்மென்ட் தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டார்களோ! அவர்கள் காதலுக்காக ஆறு முறை கல்யாணத்தை நிறுத்தி, பிரியாணித் தூக்கைத் தூக்கிக்கொண்டு போனால் போதும் போல?!

இவையெல்லாம் கூடப் பரவாயில்லை. சமுதாயத்தால் குறிவைக்கப்படும் மக்களின் விளையாட்டாகத் தொடங்கி, அதன்பின் ஆச்சாரம் பேசும் அக்ரஹாரத்துக்குள்ளும், ஆடம்பரமான பெசன்ட் நகருக்குள்ளும் புகுந்தது ஏன்? இங்கு கால்பந்து யாரால் ஆடப்படுகிறது என்று தெரிந்துதான், புரிந்துதான் காட்சிகள் அமைத்தார்களா? ஒரு விளையாட்டு சங்கம் என்று காட்டினால், அதில் உயர்பதவியில் இருப்பவர் ஷர்மாவாக, உயர் சாதிக்காரராக இருக்கவேண்டும் என்று நன்றாகத் தெரிந்து கேரக்டர் அமைத்தவர்கள், அந்த விளையாட்டை விளையாடுபவர்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துவைத்திருக்கலாமே!

பிகில்
பிகில்

“இங்க ஃபுட்பால் ஒரு பிசினஸ். நேஷனல் டீமுக்கு ஒருமுறை செலக்ட் ஆகிட்டாலே ரயில்வேஸ், கஸ்டம்ஸ், ஏர்போர்ட்னு பெரிய கவர்மென்ட் வேலை கிடைக்கும். எம்.பி, மினிஸ்டர், பிசினஸ்மேனுக்கெல்லாம் அவங்க பசங்க நேஷனல் டீம்ல இருக்கிறது ஒரு பெருமை” என்று ஜாக்கி ஷெராஃப் பேசும் வசனம் அறியாமையின் உச்சம்.

திரும்பவும் அதையேதான் கேட்கிறேன். இது என்ன விளையாட்டு என்று நினைத்து திரைக்கதை எழுதினீர்கள்? இங்கு எந்த மந்திரியின், தொழிலதிபரின் மகன்கள் கால்பந்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்? இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், ஒரு முன்னாள் மந்திரி. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர், ஒரு மந்திரியின் மகன். இவர்களெல்லாம் அந்த விளையாட்டை நடத்தும் அமைப்பைச் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களா கால்பந்தை பெருமை என்று நினைத்து விளையாடப்போகிறார்கள்.

இது கிரிக்கெட் அல்ல. கால்பந்து. விளிம்பு நிலை மனிதர்களின் விளையாட்டு. கால்பந்தை தொழிலாகக் கையில் எடுத்த ஒவ்வொருவருமே அது அடையாளம் தரும் என்ற நம்பிக்கையில் எடுத்தவர்கள்தான். IIT பொறியாளனும், IAS பாஸ் செய்தவரும் இருக்கும் குடும்பத்துக்கு வாக்குப்பட்டுப் போனவர்கள் இல்லை அவர்கள்.

“இவளுக ஆறு பேரும் சுனாமில குடும்பத்தை இழந்தவளுக” என்று இந்துஜா சொல்வதுபோல் ஒரு வசனம் படத்தில் இருக்கும். கடந்த ஆண்டு தேசிய சாம்பியனான தமிழகப் பெண்கள் அணியின் ரெஃபரன்ஸ் அது. இதை ரெஃபரன்ஸ் எடுத்தவர்கள், அந்த அணியிடமாவது கொஞ்சம் பேசியிருக்கலாமே! அப்படியாவது கால்பந்தின் உண்மை நிலை, தமிழக கால்பந்தின் உண்மை நிலை, தமிழக பெண்கள் கால்பந்தின் உண்மை நிலை தெரிந்திருக்கும் அல்லவா. பெண்கள் படும் பொதுவான கஷ்டங்களைப் பேசியவர்கள், கால்பந்து விளையாடும் பெண்களின் அவலத்தை முன்வைத்திருக்கலாமே! அவர்களின் கால்பந்து வாழ்க்கையும் சரி, அவர்கள் ஆடும் களங்களும் சரி, அவ்வளவு பசுமையாக இருக்காது.

ஏதோ ஒரு நல்ல பயிற்சியாளர் கிடைத்து, கோப்பை வென்றுவிட்டால் எல்லாம் சரி என்பதுபோல் பேசியிருக்கிறீர்கள். உண்மை நிலை என்ன தெரியுமா? கடந்த ஆண்டு தேசிய பட்டம் வென்றுவந்த பிறகு, அந்தத் தமிழக சாம்பியன்கள் கேட்ட கேள்வி என்ன தெரியுமா, “கோப்பை கிடைச்சிருச்சு. வேலை கிடைக்குமா” என்பதுதான்.

தமிழக பெண்கள் கால்பந்து அணி
தமிழக பெண்கள் கால்பந்து அணி

அவர்களில் பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அது ஏன் தெரியுமா? தமிழகத்தில், பெண்கள் கால்பந்துக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இதுநாள்வரை வேலை இல்லை. கொடுப்பதற்கான அரசாணைகள் இப்போதுதான் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வெறும் கோப்பை அவர்களுக்கு இங்கு எதையும் மாற்றிவிடப்போவதில்லை. குறைந்தபட்சம் இதையெல்லாம் பதிவு செய்திருந்தாலும், இப்படத்தை ஏற்றுக்கொண்டிருக்கலாம். நீங்கள் நினைப்பதுபோல், ஒரு சிறுமி எம்பவர் ஆகி, நாளை கால்பந்தைக் கையில் எடுக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவள் சாம்பியன் ஆனாலும் வேலை இல்லாமல் நிற்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது அவளுக்கு யார் பதில் சொல்வது? சரி, ஒரு கால்பந்து சம்பந்தப்பட்ட படத்தில் நடித்தாவது செட்டிலாக முடியுமா? அதுவும் இல்லை. நீங்கள் அழகான, நடிகைகளைத்தானே கால்பந்து ஆடவைப்பீர்கள். ஒரேயொரு கருப்பு / குண்டு கதாப்பாத்திரம் மட்டும் உங்களின் பிரம்மாஸ்திரமான சென்டிமென்ட் காட்சிக்காக இடம்பிடிக்கும். பின்பு அந்தச் சிறுமி எம்பவர் ஆகி என்ன பிரயோஜனம் சாரே!

'சக் தே' படத்தில், பெண்கள் ஹாக்கியை, ஹாக்கி சங்க உறுப்பினர்களே எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்று பதிவு செய்திருப்பார்கள். ஒரு விளையாட்டைப் பற்றிப் பேசும்போது, அதன் உண்மை நிலையைப் பேசுவது அவசியம். ஏனெனில், இங்கு எல்லா விளையாட்டுகளும் ஒரே படிநிலையில் இல்லை. இங்கு பெண்கள் கால்பந்தின் நிலை பற்றி ஒரு இடத்தில்கூடப் பேசப்படவில்லையே. கடைசியில் வடசென்னைக்கும் அடையாளம் கொடுக்கவில்லை, பெண்கள் கால்பந்தையும் பற்றிப் பேசவில்லை. தன் வழக்கமான பாணி… 10 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சென்டிமென்ட் சீன். தியேட்டரில் இருப்பவர்களை அழவைக்கவேண்டும். அதற்கு, ஆசிட் வீச்சு, திருமணமான பெண்ணின் கனவுகள், ஆடை சுதந்திரம் போன்றவற்றைப் பேசினால் பொதும், கால்பந்து எதற்கு என்று இயக்குநர் நினைத்துவிட்டார்போல!

பிகில்
பிகில்

ஆனால், இயக்குநரே, அந்த தமிழக சீனியர் அணியிடம் பேசியிருந்தீர்கள் என்றால், உங்களுக்கு இன்னும் ஆழமான கண்ணீர்க் கதைகள் ஏராளமாகக் கிடைத்திருக்கும். பெற்றோர் இல்லாத பெண்களுக்கு இந்த விளையாட்டு எப்படி அடைக்கலம் கொடுத்தது, ஒரு செட் பூட் வாங்க அவர்கள் பட்ட கஷ்டங்கள், இந்நாட்டில் முக்கியத்துவம் பெறாத அந்த விளையாட்டோடு நடத்தும் போராட்டம், எதிர்காலம் குறித்த பயம் என இன்னும் 18 படங்களுக்கான கதை அவர்களிடம் உண்டு. அவர்களைப் பற்றி பேசாதது கூடப் பரவாயில்லை, குறைந்தபட்சம் அவர்களிடமாவது பேசியிருக்கலாம். எல்லாப் பெண்களுக்கும் படத்தை சமர்ப்பித்தவர், முதல் முறையாக தேசிய சாம்பியன் ஆன அந்தத் தமிழக வீராங்கனைகளின் படத்தை அந்த இடத்திலாவது போட்டு, அவர்களுக்கும் சமர்ப்பித்திருக்கலாம்.

விளையாட்டைச் சார்ந்த ஒரு படம் எடுக்கும்போது, ப்ரீ புரொடக்‌ஷனில் எவ்வளவு உழைப்பைக் கொட்டியிருக்கவேண்டும். எத்தனை ஆய்வுகள் செய்திருக்கவேண்டும். எவ்வளவு உண்மையாக அந்தப் படைப்பு இருந்திருக்கவேண்டும். எல்லோரும் கால்பந்துக் காட்சிகளின் VFX போன்றவற்றில் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ‘பிகிலில் அடிக்கப்பட்ட பைசைக்கிள் கிக் கோல்கள் அளவுக்கு, கடந்த ஆண்டு சர்வதேச கால்பந்து அரங்கிலேயே அடிக்கப்பட்டிருக்காது’ என்றும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். FIFA 20, PES 20 போன்ற கேம்கள்கூட இன்னும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்பது உண்மைதான். ஆனால், அந்த விளையாட்டின் அடிப்படையில்தான் எத்தனை எத்தனை குறைகள். சின்ன சின்ன விஷயத்தில்கூட அத்தனை குளறுபடிகள். எத்தனை எத்தனை லாஜிக் காமெடிகள்.

பிகில்
பிகில்

தனக்குத் தேவையான பெளலிங் கோச்சை அணிக்குள் கொண்டுவர ஆனானப்பட்ட ரவி சாஸ்திரியே தலைகீழாக நிறகவேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு தமிழக கால்பந்து கோச்சால்… ஒரு மாநில அணியன் கோச்சால் எவ்வளவு செய்ய முடிகிறது.! தன்னுடைய மொத்த டீமையும் தானே முடிவெடுக்கிறார். ஃபிசியோ யார், அசிஸ்டென்ட் கோச் யார் என்பதை அவரே தீர்மானிக்கிறார். அடியாள் ஆனந்த் ராஜுக்கும் ஐ.டி கார்டு கொடுத்து Dug out வரை அழைத்துச் செல்கிறார். சரி, இதையெல்லாம் ஹீரோயிஸத்துக்காகத் தேவை என எடுத்துக்கொள்வோம்.

கால்பந்தின் அடிப்படை விதிகளையாவது தெரிந்துகொண்டு காட்சிகளை வடிவமைத்திருக்கவேண்டாமா? இவர்கள் அதையும் செய்யவில்லை. ஒரு வீரர், ஜெர்ஸியின் கைப்பகுதி என்ன நிறமோ, அதே நிற அண்டர்ஷர்ட் (ஜெர்ஸிக்குள் அணியும் கைப்பகுதி வரை மறைக்கும் ஆடை) அணியவேண்டும் என்பதுதான் விதி. ஆனால், சிவப்பு நிற ஜெர்சி அணிந்திருக்கும் விஜய், கருப்பு நிற அண்டர்ஷர்ட் அணிந்திருக்கிறார். அவர் அணியில் பல வீரர்களும் அப்படித்தான் அணிந்திருக்கிறார்கள்.

கால்பந்தின் இன்னொரு முக்கியமான விதி, ரெகுலேஷன் டைம், எக்ஸ்ட்ரா டைம் போன்றவை முடியும்போது, களத்தில் எந்த வீரர்கள் நின்றார்களோ அவர்கள் மட்டுமே பெனால்ட்டி ஷூட் அவுட்டில் பங்கெடுக்க முடியும். பெஞ்சிலேயே அமர்ந்திருந்தவர்கள், களத்திலிருந்து வெளியேறியவர்கள் அதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால், விஜயின் அணிக்கு இதிலும் விதிவிலக்கு. காயத்ரி கர்ப்பமாக இருந்ததால், அவரை விஜய் களமிறக்கவேயில்லை. ஆனால், அவர் பெனால்ட்டி எடுக்கிறார். அப்பட்டமாக ஆஃப் சைட் பாஸ் ஒன்று கொடுத்து, அதனால் கார்னர் கிடைத்து, அதில் கோல் போடுகிறார் பிகில். ஆஃப் சைட் பற்றியும் படக்குழுவுக்குத் தெரியவில்லை போல!

பிகில்
பிகில்

பிகில், கதிரிடம் கால்பந்து கிளப் ஒன்றை உருவாக்கச் சொல்கிறார். அந்த வீராங்கனைகளை அவரே தேர்வும் செய்கிறார். எல்லாம் சரி, நமது கிளப் வீரர்களை நாமே தேர்வு செய்துகொள்ளலாம்தான். ஆனால், தேசிய சாம்பியன்ஷிப்பில் தமிழகம் எனும் மாநில அணிக்கு எப்படி ஒற்றை கிளப் பிரதிநிதியாக இருக்க முடியும்? சென்னை சூப்பர் கிங்ஸ், ரஞ்சி டிராபியில் ஆட முடியாதல்லவா! ஆக, தமிழக அணியின் தேர்வுக்குழுத் தலைவராகவும் பிகில்தான் சைலன்டாக செயல்பட்டிருக்கிறார்போல.

இவற்றையெல்லாம் விட உச்சக்கட்ட கொடுமை ஒன்றும் இருக்கிறது. ஒரு கால்பந்து அணிக்கு எத்தனை பேர் என்பதுகூடத் தெரியாமல் படம் எடுத்திருக்கிறார்கள். ‘நீங்க 11 பேரு ஆடுறீங்க. நீங்க 4 பேரும் சப்ஸ்டிடியூட்”. மீண்டும் மீண்டும் சொல்கிறேன், 15 பேர் கொண்ட அணியாக ஆட இது கிரிக்கெட் அல்ல யுவர் ஆனர். தேசிய போட்டிகளுக்குச் செல்லும் மாநில அணிகளில் 20 பேர் இருப்பார்கள். சரி, குறைவாக இருப்பதில் தவறேதும் இல்லையென்றாலும், சப்ஸ்டிடியூட் கோல்கீப்பர் இருக்க வேண்டும் என்பதுகூடவா தெரியாது.

இந்திய அணிக்கு பிகில் தேர்வு செய்யப்படவில்லை. அதைப் பற்றிப் பேச தமிழ்நாடு விளையாட்டு சங்கத்துக்குச் சென்று ஜாக்கி ஷெராஃபைப் பார்க்கிறார் ராயப்பன். இந்திய தேசிய அணியின் தேர்வுக் குழுத் தலைவருக்கு தமிழக விளையாட்டு சங்கத்தில் ஆபீஸ் இருப்பதெல்லாம் மாபெரும் அதிசயம்தான். குறைந்தபட்சம், அந்த சங்கத்துக்கு பெயர் வைப்பதற்காகவாவது யாரிடமாவது விசாரித்திருக்கலாம். ஒன்று தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன் என்று வைத்திருக்கவேண்டும். இல்லை தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கவுன்சில் என்று வைத்திருக்கவேண்டும். அது என்ன சாமி, தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன் கவுன்சில்! இப்படியொரு பெயரை எங்காவது பார்த்ததுண்டா?! இது போதாதென்று, தேசிய போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்தில் ரியல் மாட்ரிட் அணியின் லோகோ.

ஐ.எம்.விஜயன் எனும் இந்திய கால்பந்தின் ஜாம்பவானை ஒரு ரவுடியாக்கி, அவர் கையில் கத்தியைக் கொடுத்து விஜயின் முதுகில் குத்த விட்டதை, இனிமேல் பிறக்க போகும் கால்பந்து ரசிகனும் மன்னிக்க மாட்டான். ஃபிக்ஸிங் என்றாலும் கூட ரெஃப்ரி இவ்வளவு பட்டவர்த்தனமாக கார்டுகள் கொடுக்க மாட்டார். இந்த இடத்தில் ஒட்டுமொத்த கால்பந்து சிஸ்டத்தையும் ஜோக் ஆக்கி விட்டீர்கள் அட்லி.

I.M.Vijayan
I.M.Vijayan

ஸ்போர்ட்ஸ் படம் எடுப்பது என்ன அவ்வளவு விளையாட்டான காரியமா? ஒரு விளையாட்டின் உயிரை காட்சிப்படுத்தவேண்டாமா? வுமன் எம்பவர்மென்ட் என்ற போர்வையில் தேவையில்லாத காட்சிகளை வைத்து, கால்பந்தை அப்படியே தத்தளிக்கவிட்டுவிட்டார்கள். கால்பந்தின் ஒரு டெக்னிக் பற்றிப் பேசவில்லை. இதை 'சக் தே' படத்தின் காப்பி என்று ஆரம்பத்தில் கலாய்த்தார்கள். அதைப் பார்த்து எடுத்திருந்தால்கூட பல தவறுகளை சரி செய்திருக்கலாமே!

'சக் தே' படத்தில் பல சினிமாத்தனங்கள் இருந்தாலும், டெக்னிக்கல் விஷயங்கள் பல பேசப்பட்டிருக்கும். கோமல், பிரீத்தி இருவரும் சென்டர் ஃபார்வேர்டு பொசிஷனுக்கு அடித்துக்கொள்ள, கோமலை ரைட் இன் பொசிஷனுக்கு அனுப்புவார் ஷாருக். சீனியர் வீரர் என்பதால் பிந்தியாவை சென்டர் ஹாஃப் பொசிஷனில் ஆடச் செய்வார். நெதர்லாந்து அணி மேன் மார்க் செய்து ஆடும் என்பதால், அதுவரை வெளியில் அமரவைத்திருந்த பிந்தியாவைக் களமிறக்குவார். இப்படி சிலபல நுணுக்கங்கள் ஆங்காங்கே பேசப்படும்.

அப்படி ஒன்றுகூட இந்தப் படத்தில் இல்லை. அந்த அணியில் இருப்பவர்களின் பலம் பலவீனம் சொல்லவில்லை. அணியில் நடுகள வீரர், டிஃபண்டர் யார் என்றுகூட யாருக்கும் தெரியாது. ஃபார்வேர்டு, டிஃபன்ஸ் என்ற வார்த்தைகள் கூடப் பயன்படுத்தப்படவில்லை. ஒரு விளையாட்டுப் படத்தில் இதுகூடவா வைக்கமாட்டீர்கள்?

ஒரு பயிற்சியாளர் பற்றிய கதை. எந்தவொரு கதையுமே, அந்த பயிற்சியாளர் எப்படியான தாக்கம் ஏற்படுத்துகிறார், ஆட்ட நுணுக்கங்களில் என்ன மாற்றம் செய்கிறார் என்பது போன்ற காட்சிகள் இல்லாமல் இருக்காது. 'இறுதிச் சுற்று', 'தங்கல்', 'கனா' போன்ற அனைத்திலுமே அவை இடம்பெற்றிருக்கும். 'இறுதிச் சுற்று' படத்தை எடுத்துக்கொள்வோம். மாதவன் ஒலிம்பிக் மெடல் வென்றிருக்கவேண்டியவர் என்பதை வசனங்களால் இரண்டு முறை கடந்திருப்போம். ஆனால், அவர் எப்படிப்பட்ட பாக்ஸர் என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கமாட்டார்கள். ஆனால், கிளைமாக்ஸில் செங்கிஸ்கான் வியூகம் பற்றிச் சொல்லும் அந்த ஒற்றை இடத்தில், மாதவனின் பாக்ஸிங் திறன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அப்படியான ஒரு காட்சியமைப்பு இருக்கும்போது, ‘மாதவன் எப்படிப்பட்ட பாக்ஸர் தெரியுமா’ என்று காட்ட கால் மணி நேர பாக்ஸிங் காட்சி வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இங்கு ஒரு பயிற்சியாளர், மோட்டிவேஷனல் ஸ்பீக்கரின் வேலையை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார். பிகிலை பத்து பைசைக்கிள் கிக் அடிக்கவிடவேண்டும். படத்தின் நீளம் கூடும். அதனால், பெண்கள் கால்பந்தில் சென்ட்டிமென்ட் தவிர வேறு எதையும் வைக்க முடியாது. இந்தப் படத்தில் கால்பந்தா முக்கியம்?!

பிகில்
பிகில்

இது உங்களின் முந்தைய ஃபார்முலாவேதான். ஆனால், அதில் ஏன் விளையாட்டைக் கொண்டுவந்து, அதைப் பற்றிப் பேசாமல் எதையெதையோ பேசி, அதைக் கெடுக்கவேண்டும்? சரி, பேசிய வுமன் எம்பவர்மென்ட்டாவது சரியாகப் பேசினீர்களா? இறுதிப்போட்டியின்போது பேசிய Half-time talk… வாய்ப்பே இல்லை. மொரினியோ, கான்டே போன்ற கோபக்கார மேனேஜர்கள்கூட அப்படியொரு ஸ்பீச் கொடுத்திருக்கமாட்டார்கள். அப்படியொரு பேச்சு. இங்கு பலரும், தங்களோடு இருப்பவர்களின் கைதட்டல்களுக்காக தாங்கள் கெத்தென்று காட்டிக்கொள்ள பிறரைக் கேலி செய்வார்கள். நீங்களும் திரையரங்கில் இருப்பவர்களின் கைதட்டலுக்காகத்தானே அவ்வளவு கேவலமான ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். இது தவறு மட்டும் இல்லை... அவமானம்!

ஸ்போர்ட்ஸ் மூவிக்கான சரியான ரெஃபரன்ஸ்கள் எடுக்கவில்லை. எந்த ஆய்வுகளும் செய்யவில்லை. படத்தில் ராமன் விஜயன் (வர்ணனையாளர் பாத்திரம்), ஐ.எம்.விஜயன் என இரண்டு ஜாம்பவான்களை ஸ்கிரீனில் காட்டியவர்கள், படம் பற்றியும் அவர்களிடம் விசாரித்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை. ஆனால், ஸ்போர்ட்ஸ் மூவி வேண்டும். விளையாட்டை தயவுசெய்து இப்படி அணுகாதீர்கள். இவ்வளவு குறைந்த முன்வேலைகளோடு இனி ஸ்போர்ட்ஸ் படங்கள் எடுக்காதீர்கள். யாருமே இப்படியான ஸ்போர்ட்ஸ் படங்கள் எடுத்துவிடாதீர்கள்!