“பத்மாவதி”யாக தீபிகா படுகோன்...! வரலாற்றில் வாள் சுழற்றிய பத்மாவதி யார்? #Padmavati

 தீபிகா

பாலிவுட்டின் லேட்டஸ் வைரல், நடிகை தீபிகா படுகோன் நடித்து வெளியாக இருக்கும் ’பத்மாவதி’ திரைப்படம். 

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கும் இந்தத் திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ நவராத்திரியின் தொடக்க நாளில் வெளியானது. ஆரம்பம் முதலே இந்தப் படம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கிறது. ராணி பத்மாவதியின் சரித்திரத்தைத் திரித்து தவறாக எடுப்பதாக படப்பிடிப்பு தளத்தை ஒரு குழுவினர் முற்றுகை இட்டனர். ராணி பத்மாவதி வாழ்க்கையில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்று வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினோம். 

ராணி பத்மாவதி பற்றிய குறிப்பு, கி.பி. 1540-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கவிதையில் முதன்முறையாகப் பதிவாகியிருக்கிறது. சூஃபி கவிஞரான முகமது ஜயசி (Muhammed Jayasi) என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கவிதை, 'அவதி' என்ற மொழியில் இருந்தது. அதன்படி... 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ராணி பத்மாவதி. அப்போதைய சிங்கள அரசாங்கத்தின் (இலங்கை) இளவரசி அவர். பேரழகும் பெரும் வீரமும் அவரிடம் இருந்தது. அன்றைய ராஜ்புட் பேரரசரான ரத்தன் சிங், சுயம்வரம் முறையில் பத்மாவதியை மணந்துகொண்டார். அதன்பிறகு, அவர் ரத்தன் சிங்கின் இரண்டாவது மனைவியாக, சித்தூர் அரசவைக்கு மகாராணியாகத் திகழ்ந்தார். பத்மாவதி ஒரு பேசும் கிளியை வளர்ந்தார். அந்தக் கிளியின்மூலம், பத்மாவதியின் பேரழகை கேள்விப்பட்டு அவரைக் காணும் பேராவல் கொண்டார், டெல்லி பேரரசர்களின் ஒருவரான அலாவுதீன் கில்ஜி (Alauddin Khilji).

சித்தூருக்கு படையெடுத்த கில்ஜி, மகாராணி பத்மாவதியை சந்தித்தாலே போதும் என்று அரசன் ரத்தன் சிங்கிடம் தெரிவிக்கிறார். பத்மாவதியைப் பார்த்த நொடியில் அவரை அடையும் முனைப்பில், ரத்தன் சிங்கை கைதுசெய்து டெல்லிக்கு அடிமையாக அழைத்துச் சென்றார். ராணி பத்மாவதி கணவனை மீட்கும் வைராக்கியத்துடன், டெல்லிக்குப் படையெடுத்தார். அலாவுதீன் கில்ஜியுடன் போரிட்டு கணவனை மீட்டார். 

'ஒரு பெண் தன்னைத் தோற்கடித்துவிட்டாளே' என்ற கோபத்தில் சித்தூரை அழிக்கும் நோக்கத்துடன் மீண்டும் பெரும் படையுடன் கிளம்புகிறார் அலாவுதீன் கில்ஜி. அத்தகைய பெரும் படையுடன் தன்னால் போரிடமுடியாது என்று புரிந்துகொண்டார் ராணி பத்மாவதி. தனது ஊரிலுள்ள பெண்களைத் திரட்டிக்கொண்டு ஒட்டுமொத்தமாக தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஏனென்றால், அந்தப் போரில் தோற்றால், சித்தூர் பெண்களுடன் தானும் அடிமையாக சிறையில் அடைக்கப்படுவோம் என நினைத்தார். எனவே, இப்படி ஒரு துணிச்சலான முடிவு எடுத்தாராம். படையுடன் அலாவுதீன் கில்ஜி சித்தூருக்கு வந்து பார்த்தபோது, அங்கே ஒரு பெண்ணும் இல்லை என்கிறது வரலாறு. 

இவ்வாறு இக்கட்டான நேரத்தில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட ராணி பத்மாவதியை ராஜஸ்தானில் ஒரு தரப்பினர் தெய்வமாக வணங்குகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாறே, முகமது ஜயசி எழுதிய கற்பனை கவிதை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ராணி பத்மாவதி என்பவர் நிஜமா கற்பனை கதாபாத்திரமா என்பது இன்றும் கேள்விக்குறியே. இருப்பினும், இந்தக் கதையைத்  திரைவடிவில் பார்க்க  ரசிகர்கள் மிகுந்த ஆவலாக இருக்கின்றனர். 

மேலும், அவரின் வரலாற்றுக் கதையில் நடிக்கும் தீபிகா படுகோனைவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!