வெளியிடப்பட்ட நேரம்: 08:47 (13/12/2017)

கடைசி தொடர்பு:22:29 (13/12/2017)

“ ‘டைகர் ஜிந்தா ஹே’ படத்தை இயக்க, கமல் சாரின் விஸ்வரூபம் படம் உதவியாக இருந்துச்சு..!” - அலி அப்பாஸ் ஜாபர் #VikatanExclusive

சல்மான் கான், கத்ரினா கைஃப்  நடிப்பில் பிரபல இந்திப் படத் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த 'ஏக் தா டைகர்' படத்தின் இரண்டாம் பாகம்  'டைகர் ஜிந்தா ஹே'  திரைப்படம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தைப் பற்றி நம்மிடம் பேசிய இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர், 'கமல்ஹாசன் படத்தை இயக்க ஆசையாக இருக்கிறது' என்றும் கூறியுள்ளார்.   

இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் நடிக்க 2016-ம் ஆண்டு வெளியான சுல்தான் திரைப்படம் ரூபாய் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து பாலிவுட்டில் சாதனை புரிந்தது. இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்பாக வெளிவர இருக்கும் 'டைகர் ஜிந்தா ஹே' அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சல்மான் கான், கத்ரினா கைஃப்

இரண்டு நாள்களுக்கு முன் போனில் நம்முடன் உரையாட சம்மதம் தெரிவித்தார் அலி அப்பாஸ். சல்மானை இயக்கியவர் பயங்கர கெத்தாகப் பேசுவார் என எண்ணி என்னைத் தயார் செய்துகொண்டேன். மும்பையின் லேண்ட் லைன் நம்பர் ஒன்று என் மொபைல் டிஸ்ப்ளேவை பளிச்சிடச் செய்ய, வந்த காலை அட்டென் செய்து 'ஹலோ' என்ற வார்த்தையை முடிப்பதற்குள் ‘ஹலோ பிரதர் அலி அப்பாஸ் ஹியர்" என்று கூறியவர், "வணக்கம்'' எனத் தொடர்ந்தார். பொதுவாக பாலிவுட் இயக்குநர்கள் இவ்வளவு ஃப்ரெண்ட்லியா பேசுவது ஆச்சர்யம். இது ஓர் உற்சாகத்தை அளித்தது. அந்த உற்சாகத்திலேயே பேச ஆரம்பித்தோம்.

உங்களது சினிமா பயணம் எப்படித் தொடங்கியது?

“அடிப்படையில் நான் சினிமா பயிலவில்லை. டெல்லியில் பயோ கெமிஸ்ட்ரி பயின்று, பின் 'பிளேயர்ஸ்' என்ற நாடகக் குழுவில் சேர்ந்து எனது கலைப்பயணத்தைத் தொடங்கினேன். நான் டெல்லியில் இருக்கும்போது அதிகப்படியான சல்மான் படங்கள் பார்த்துள்ளேன். அப்போது என்னிடம் யாராவது "சல்மான் கானை டைரக்ட் செய்வாயா?" என்று கேட்டிருந்தால் நான் சிரித்திருப்பேன். ஆனால், இன்று அவருடன் மூன்றாவது படம் வேலை செய்துவருகிறேன். பின் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கி, படங்களை இயக்கவும் ஆரம்பித்தேன்.’’

நீங்கள் மேடை நாடகத்திலிருந்து வந்துள்ளீர்கள், உங்களது படங்கள் படு கமெர்ஷியலாக இருக்கு?  இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?   

“இதில் மாற்றம் ஒன்றும் இல்லை. நம் வாழ்வியலை பிரதிபலிப்பதுதான் சினிமா. அந்த சினிமா நம் எதிர்பார்ப்புகளை எதிரொலித்தால்  கமர்ஷியல் சினிமா. காட்சிகளில் நம்மைப்போல் ஒருவர் இருக்கிறார் என உணரவைக்கக் கூடிய ஒரு கதாநாயகனின் கதை சொன்னாலே போதும், அதுவே கமர்ஷியல் வெற்றிதான். 'ஏக் தா டைகர்' படத்தில் 'ரா ஏஜென்ட் டைகர்' கதாபாத்திரத்தை சல்மான் கான் நடித்ததால்தான் மக்களை சென்றடைந்தது.’’

அலி அப்பாஸ் ஜாபர்

சல்மான் கானுடன் இணையும் இரண்டாவது படம் ? எப்படி நிகழ்ந்தது?

“2014ல் இந்தக் கதையை நான் எழுதி முடித்துவிட்டேன். அதன் பிறகே ‘சுல்தான்’ திரைப்படத்தை ஆரம்பித்தோம். தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவுக்கு இந்தக் கதை தெரியும். அப்போது அதில் டைகர், ஜோயா இரு கதாபாத்திரங்களும் கிடையாது. சுல்தான் முடியும் தருவாயில் ஒரு நாள் சல்மான் பாய், “அடுத்து என்ன செய்யப் போகிறாய் கதை இருக்கா” என்று கேட்டார். நான், இருக்கு என்று டைகர் (சல்மான்) மற்றும் ஜோயா(கத்ரீனா) கதாபாத்திரங்களை வைத்துக் கூறினேன். அதுதான் இந்தக் கதை. கதையை முழுமையாகக் கேட்டு இதைப் படமாகப் பண்ணலாம் என்று கூறினார்.”

“இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை, 2014ல் ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 46 இந்திய செவிலியர் பெண்களை மீட்க இந்திய அரசு பெரும் நடவடிக்கைகளை எடுத்தது. அதை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து எழுதப்பட்டதுதான் 'டைகர் ஜிந்தா ஹே'. சர்வதேச உளவாளி டைகர் இவர்களைக் காப்பாற்றப் போராடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதுதான் கதை. இந்த மொத்த நிகழ்வில் நிறைய எமொஷனல் விஷயங்கள் இருந்தன. அதனாலேயே இச்சம்பவத்தை வைத்து எழுதத் தொடங்கினேன். மலையாளத்தில் வந்த 'டேக் ஆஃப்'  திரைப்படமும் இந்த நிகழ்வை ஒட்டி எடுக்கப்பட்டதுதான். ஒரு ஆக்‌ஷன் டிராமாவாக உருவாக்கியுள்ள களத்தில் சல்மான் டைகராக இறங்குவது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும்.’’

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாய் கொண்ட கதை என்று சொல்கிறீர்களே. இதற்கான பணிகள் எப்படி மேற்கொள்ளப்பட்டது? 

“போர் மிகுந்த ஈராக் நாட்டைப் பற்றி படமாக்குவதால் அதிக அக்கறையுடன் ஆய்வுகளை மேற்கொண்டோம். 3 முதல் 8 மாதங்கள் வரை இந்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஈராக்கின் பதற்றமான சூழ்நிலைகளில் எங்களால் படத்தை எடுக்க முடியாது என்பதால், ஒரு பெரிய அரங்கை உருவாக்கினோம். இதில் என்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து எடுத்துக்கொண்டோம். தொழில்நுட்ப ரீதியில் இப்படம் ஹாலிவுட் தரத்தைக்கொண்டு இருக்க வேண்டும் என தயாரிப்பாளர் முடிவுசெய்து, ஹாலிவுட் படங்களில் வேலை செய்த பலரை இப்படத்தில் இணைத்துக்கொண்டோம்.’’

படத்தின் சண்டைக்காட்சிகளில் ஹாலிவுட்டின் ஸ்டன்ட் கலைஞர்கள் வேலை செய்தார்களாமே?    

“ஆம், 'தி டார்க் நைட்' படத்தில் பணியாற்றிய டாம் ஸ்ட்ரூத்தர்ஸ் 'டைகர் ஜிந்தா ஹே’ படத்தின் ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்காக பல வாகனங்களை வெடிக்க வைத்து காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளது. அதில் 40 டன் ட்ரக் போன்ற வாகனத்தை வெடிக்கச் செய்தபோது பெரும் சப்தம் ஏற்பட்டது. அந்தக் காட்சியைப் படமாக்க எங்கள் குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர்.’’ 

சல்மான் கான்          

'சுல்தான்' படத்தின் கதாபாத்திரத்துக்கும் 'டைகர் ஜிந்தா ஹே' டைகர் கதாபாத்திரத்துக்கும் எவ்வளவு ஒற்றுமைகள் உள்ளன? 

“நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சுல்தானில் வரும் கதாநாயகன் ஒரு மூர்க்கமான, விளையாட்டுத்தனம் மிகுந்த கிராமத்து மல்யுத்த இளைஞன். முதல் பாகத்தில் பார்த்ததுபோல் 'டைகர்' கதாபாத்திரம் ஒரு சர்வதேச உளவாளி. தன்  தேசத்துக்காக தனது உயிரையும் பணையம் வைக்கத் துணிந்த ஒருவன். கூர்மையான பார்வை, எதிரிகளைக் கொள்ளும் உடல்வாகு கொண்டவன். இவை இரண்டிலும் மாறாத ஒரு கதாபாத்திரம் ரசிகர்களுக்காக தன்னை வருத்திக் கொள்ளும் சல்மான் மட்டும்தான்.’’ 

சுல்தானைவிட இப்படத்தில் சல்மான் ஃபிட்டாக இருக்கிறாரே, எத்தகைய உடற்பயிற்சியை சல்மான் மேற்கொண்டார்? 

“டைகர் கதாபாத்திரம் ஒரு ஸ்பை என்பதால் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டதற்கான பிட்னஸை கரெக்டாக மெயின்டைன் செய்ய  வேண்டியிருந்தது. ஷூட்டிங்கைத் தொடங்கும் முன்பே 3 மாதம் சல்மான் கான் ஜிம்மில் கடினப் பயிற்சி எடுத்தார். இதில் சவால் நிறைந்த விஷயம் என்னவென்றால் வெவ்வேறு நாட்டில் இந்தப் படத்தை எடுத்தது. இரண்டு மூன்று  நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது பிட்னஸ் டிரெய்னிங்கை சரியாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், சல்மான் கான் தினம் தினம் பல கடுமையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு பிட்னஸை மெயின்டைன் செய்தார்.’’

சல்மான் கான்

படத்தில் சல்மான் கான் - கத்ரினா ஐந்து வருடங்கள் கழித்து ஜோடி சேர்கிறார்களே அவர்களுடைய காம்பினேஷன் எப்படி நடந்தது?

“ 'ஏக் தா டைகர்' படத்துக்கும் இப்படத்துக்கும் கதையிலும், நிஜத்திலும் ஐந்து வருட இடைவெளி இருக்கிறது. முந்தைய பாகத்தில் இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதைத் தாண்டி, இப்படத்தில் ஒரு மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளாகவே தோன்றுகிறார்கள். கத்ரினா எனது முதல் படத்தின் நாயகி, எங்களுக்குள் அந்தப் பழக்கம் இருந்ததால் எனக்கு அவர்களிடம் ஈசியாக வேலை வாங்க முடிந்தது. பாலிவுட்டில் தனது கதாபாத்திரத்துக்குக் கடுமையாக உழைக்கக் கூடியவர்களில் கத்ரீனாவும் ஒருவர்.’’

சல்மான் கான், கத்ரினா கைஃப் சல்மான் கான், கத்ரினா கைஃப்அலி அப்பாஸ் ஜாபர்

உங்கள் படங்களில் பாடல்கள் மிக அருமையாக இருக்கும்... இந்தப் படத்தில் எத்தனை பாடல்கள் இருக்கின்றன?

“படத்தில் 5 பாடல்கள் உள்ளன. நீங்கள் எதிர்பார்க்கும் கத்ரினா - சல்மான் நடனமும் உள்ளது. எனது படங்களுக்கு நான்தான் முதல் ரசிகன். என் படங்களை ஒரு இயக்குநராக நான் எவ்வளவு ரசிக்கிறேனோ, அந்தளவு ரசிகர்களையும் ரசிக்க வைக்க முடியும். ஒரு கமர்ஷியல் படத்துக்கு என்னென்ன தேவையோ அவையனைத்தும் உள்ளது. விஷால் சேகரின் பாடல்கள் அல்லாமல் படத்தின் பின்னணி இசையிலும் பல யுக்திகளை ஜூலியஸும் நானும் மேற்கொண்டுள்ளோம்.’’

ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையாக நடக்கும் கதையில் கதாநாயகனுக்கான ஹீரோயிசம் எப்படி அமைக்கப்படுகிறது?

“இயக்குநரின் கையில்தான் அது உள்ளது. உதாரணத்துக்கு சல்மான் கானின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். அவரது ஹீரோயிசத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பர்கள். சல்மான் கான் இயல்பாக எப்படி இருப்பாரோ அதுதான் எனது கதாபாத்திரங்களில் இருக்கும். எனினும் அவர் கதாபாத்திரங்களை மக்களுடன் ஒன்றவைக்க அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஹீரோயிசத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டியிருந்தது. சுல்தானில் பணிபுரிந்ததால் சல்மானுக்கு எந்த அளவு மாஸ் தேவை எனச் சரியாக அறிந்து இருக்கிறேன். சுல்தானை தொடர்ந்து நான் இந்தப் படத்தை இயக்குவதால் எனக்கு இதை கமர்ஷியலாக வெற்றி பெற வைக்க வேண்டிய விஷயங்கள் அவசியம் தேவைப்பட்டது. 'டைகர் ஜிந்தா ஹே' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாய் அமையும் என்று நம்புகிறேன்.’’

அலி அப்பாஸ் ஜாபர்

தமிழ்ப் படங்களைப் பற்றிய உங்கள் கருத்து? தமிழ் கதாநாயகர்களில் யாரைப் பிடிக்கும்? 

“தமிழ்ப் படங்கள் மிக ஆழமான கருத்துடைய படங்களாக இருக்கிறது. தென்னிந்திய படங்களில் சில யதார்த்தம் நிறைந்தவையாக உள்ளது. சினிமாவை கலையின் தரத்தின் அடிப்படையில் அடுத்த படிக்குக் கொண்டு செல்கின்றன. எனக்கு ரஜினி சார், கமல் சார் நடித்த படங்கள் மிகவும் பிடிக்கும். நான்  இயக்குவதென்றால் அது கமல் சாரை  வைத்துதான் இயக்குவேன். அவரது விஸ்வரூபம் படம் எனக்கு இந்தப் படத்தை எடுப்பதிலும் மிகவும் உதவியாய் இருந்தது.’’

சல்மான் கானுடன் இணையும் மூன்றாவது படம் பற்றி தகவல்கள் உண்டா ?     

“ 'பாரத்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் படத்திலும் நிறைய வேலைகள் உள்ளன. இப்போதைக்கு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகவுள்ள 'டைகர் ஜிந்தா ஹே'  திரைப்படத்தில்தான் எங்கள் முழு கவனமும் உள்ளது’ எனக் கூறி விடைப் பெற்றார் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர்.


டிரெண்டிங் @ விகடன்