`குள்ள மனிதராக எட்டிப்பார்க்கும் ஷாருக் கான்..!’ - `ஜீரோ' அப்டேட்ஸ்

இந்தி திரையுலகின் பாக்ஸ் ஆஃபீஸ் மன்னனாகத் திகழ்பவர், ஷாருக் கான். இவர், தற்போது 'ஜீரோ' என்ற படத்தில் நடித்துவருகிறார். மாதவனின் 'தனு வெட்ஸ் மனு', தனுஷின் 'அம்பிகாபதி' படங்களை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார். சமீபத்தில், தன் சமூக வலைதளப் பக்கங்களில் ஷாருக் கான் வெளியிட்ட 'ஜீரோ' படத்தின் டீசர் வீடியோ, வைரலாகப் பரவியது. ஆம். முன் எப்போதும் பார்த்திராத 'வெர்டிக்கலி சேலஞ்சுடு' (vertically challenged) எனக் கூறப்படும் குள்ள மனிதன் தோற்றத்தில் ஷாருக் கான் தோன்றினார். 

ஷாருக் கான்

'ஜப் தக் ஹை ஜான்' கூட்டணி:

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 2013-ம் ஆண்டு வெளிவந்த 'ஜப் தக் ஹை ஜான்' படத்தில் நடித்த ஷாருக் கான், அனுஷ்கா ஷர்மா, கத்ரினா கைஃப் கூட்டணி,  'ஜீரோ' படத்தின்மூலம் 5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள். 'ஜீரோ' படமும் முழுக்கமுழுக்க ஒரு ரொமான்டிக் ஸ்டோரியாக உருவாகும் எனப் படத்தின் இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் தெரிவித்துள்ளார். படத்தில், பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டிருக்கிறது. 
 
திருமணத்துக்குப் பிறகு அனுஷ்கா ஷர்மா நடிக்கும் படம்:

இதுவரை பாலிவுட்டில் பெரிதும் காக்கப்பட்ட ரகசியங்களில் ஒன்று, அனுஷ்கா - விராட் கோலி  திருமணம். 'ஜீரோ' படக்குழுவினருக்கு மட்டும் இதை அனுஷ்கா தெரிவித்திருந்தார். புதுமண ஜோடிக்காக ஷூட்டிங்கை சிறிது நாள்கள் நிறுத்தியும் வைத்திருந்தார் ஷாருக். சமீபத்தில் இந்திய-தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் விராட் கோலி பங்கேற்க அனுஷ்கா, 'ஜீரோ' படத்தின் ஷூட்டிங்கிற்குத் திரும்பினார். படப்பிடிப்புக்கு வந்த அனுஷ்கா ஷர்மாவை மலர்கள் தூவி வரவேற்றுள்ளனர் படக்குழுவினர்.

கேமியோ ரோலில் சல்மான் கான், கஜோல் மற்றும் பலர்:

ஷாருக் கான் | சல்மான் கான்

படத்தின் முக்கியமான கேமியோ ரோலில் சல்மான் கான் நடிக்கவிருக்கிறார். சென்ற வருடம் சல்மான் கான்  நடித்த  'டியூப் லைட்' படத்தில், ஷாருக் கான் மேஜிக் கலைஞனாக ஒரு காட்சியில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து இருவரும் ஒன்றாக இப்படத்தின்மூலம் திரையில் தோன்றினர். இந்த வருடம், இருவரும் இப்படத்தில் நடிப்பதைப் பார்க்க, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தி  ருக்கின்றனர்.

ஆலியா பட் | கரீனா | கரிஷ்மா கபூர்கஜோல் | ராணி முகர்ஜி | ஶ்ரீதேவி கத்ரீனா | தீபிகா

சல்மான் மட்டுமல்லாமல், படத்தில் மற்றொரு கேமியோ ரோலில் நடிக்கும் கஜோலின் பகுதிகளும் படமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபிகா படுகோன், ஆலியா பட், ஶ்ரீதேவி, கரீஷ்மா கபூர், ராணி முக்கர்ஜி ஆகியோர் நடிக்க உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. 

வி.எஃப்.எக்ஸ் மூலம் மூன்றடி குள்ள மனிதனாகிய ஷாருக்:

வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பத்தில் பெரிதும் ஆர்வம்கொண்டவர் ஷாருக் கான். 'ரா ஒன்', 'ஃபேன்' படங்களில் வி.எஃப்.எக்ஸைப் பயன்படுத்தி தன் உருவத்தை மாற்றிக்கொண்டார் ஷாருக். 'ஜீரோ' படத்தில் ஷாருக்கை மூன்றடி குள்ள மனிதனாக மாற்ற அதிநவீன தொழில்நுட்பத்தை படக்குழு பயன்படுத்திவருகிறது. படத்தின் டீசரில், ஒரு பட்டாபட்டி டவுசர், பனியனுடன் ஷாருக் கான் ஆட்டம் போடுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 'ஜீரோ', 2018 டிசம்பர் மாதம் 21-ம் தேதி கிறிஸ்மஸ் விடுமுறை வெளியீடாக வர உள்ளது. முன்னதாக, இப்படத்துக்கு 'கத்ரீனா மேரீ ஜான்' எனப் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!