"மீண்டும் ராஜாவாக ராணா, 'பத்மாவத்' இயக்குநருக்கு நடிகையின் கடிதம், ஏமாற்றிய 'பார்பி', சர்ச்சையில் சிக்கிய இயக்குநர்..." #WoodBits

ராஜாவாக மலையாளத்தில் நடிக்கும் ராணா

ராணா

சென்ற வருடம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை புரிந்த திரைப்படம் 'பாகுபலி'. இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகியது. இதில் இடம்பெற்ற பல்வாள்தேவன் கதாபாத்திரத்தில்  நம் அனைவரைது மனதையும் கவர்ந்தவர், ராணா டகுபதி. அவருக்குத் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வாய்ப்புகள் மடைதிறந்து, 'ஹாத்தி மேரி சாத்தி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது, மலையாளத்தில் 'அனிழம் திருநாள் : மார்த்தாண்ட வர்மன்' என்ற வரலாற்றுப் படத்தில் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளார். கே.மது இப்படத்தை  இயக்குகிறார்.

'பத்மாவத்'  இயக்குநரை வெளுத்து வாங்கிய இந்தி நடிகை

ஸ்வரா பாஸ்கர்

சர்ச்சைக்குமேல் சர்ச்சை, படத்திற்குப் பெயர் மாற்றம் என பல அல்லல்களுக்குப் பிறகு சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கிய 'பத்மாவத்' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் பிரம்மாண்டமும், படக்குழுவின் உழைப்பும் பேசப்பட்டு வரும்நிலையில், படத்தில் கூறப்பட்டுள்ள பின்னோக்கு பார்வைகொண்ட  கருத்துகளும் இயக்குநரின் புரிதல்களும் ஆங்காங்கே  விவாத்ததிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அதில் 'தனு வெட்ஸ் மனு', 'அனார்கலி ஆஃப் ஆரா' படங்களில் நடித்த இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர்  ஒரு படி மேலேபோய், படத்தின் இயக்குநர் பன்சாலிக்கு ஒப்பன் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளர். அதில், 'பெண்களை வெறும் ஆண்களின் கைப்பாவையாகக் காட்டியிருக்கிறீர்கள்' என்று காட்டமான வரிகளும் இடம்பெற்றுள்ளன. பிரபல ஆங்கில இணையதளப் பத்திரிக்கையில் வெளிவந்த இக்கடிதம், தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

தள்ளி போகும்  'பார்பி'

பார்பி

கிறிஸ்டொஃபர் நோலன் இயக்கத்தில் 'தி டார்க் நைட் ரைசஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்து  அனைவரின் கவனத்தையும் பெற்றவர், அன்னா ஹாத்வே. 'தி இன்டெர்ன்', 'இன்டெர்ஸ்டெல்லார்' படங்களில் நடித்திருக்கும் அன்னா, தற்போது பிரபல கார்ட்டூன் கேரக்டரான 'பார்பி' கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த வருடம் ஆகஸ்டு மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2020-ஆம் ஆண்டு வெளியாகும் என்ற தகவலை அண்மையில் சோனி நிறுவனம் வெளியிட்டது. இந்தச் செய்தி படத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பல ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. 

பென் கிங்ஸ்லீ - மோனிக்கா பெல்லூசி ஜோடியாக நடிக்கும் புது திரைப்படம்

பென் கிங்ஸ்லீ

1982-ஆம் ஆண்டு வெளியான ஆங்கிலத் திரைப்படமான 'காந்தி' மூலம் உச்சம் தொட்டவர் ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லீ. அப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது உட்பட பல சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளார். 74 வயது நிரம்பிய பென் கிங்ஸ்லீ, 'ஸ்பைடர் இன் தி வெப்' என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக 53 வயதான மோனிக்கா பெல்லுஸி நடிக்கிறார். 'லெமன் ட்ரீ' என்ற படத்தை இயக்கிய இஸ்ரேலியப் பெண் இயக்குநர் ஏரான் ரிக்லிஸ் இயக்கும் இப்படம், ஒரு த்ரில்லர் கதையாக உருவாகவிருக்கிறது. 

மீண்டும் சர்ச்சையில் ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா

பிரபல இந்தி மற்றும் தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா அவ்வப்போது சர்ச்சையைக் கிளப்புவதில் பெயர்போனவர். கடந்த காலங்களில் ரஜினி உள்பட பலரைக் கலாய்த்து ட்வீட்டு போட்டு, பலரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட கதைகளும் உண்டு. பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும், சர்ச்சைகளே இவருக்கு இப்போதைய அடையாளம். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க நடிகை மியா மல்கோவா நடித்த 'காட், செக்ஸ் அண்ட் ட்ரூத்' (god , Sex and Truth) என்ற திரைப்படம் ஒன்றை இவர் சமூக வளைத்தளத்தில் வெளியிட்டார். இது, இவரை மீண்டும் சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது. இப்படத்தை எதிர்த்தும் அதைப் பகிர்ந்ததை எதிர்த்தும் இவர் மீது ஆபாச படங்களைப் பதிவிட்ட குற்றத்திற்காக ஐ.டி சட்டம் 67-ஏ பிரிவின்கீழ் ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தன்னார்வலரான தேவி என்பவர், இப்புகாரைக் கொடுத்திருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!