"மீண்டும் 'ராணி' பட சர்ச்சை, ரித்திக் ரோஷன் 'சூப்பர் 30', டாம் க்ரூஸ் சாகசம், சித்தார்த்தின் மலையாளப் படம்!" #WoodBits

ரித்திக் ரோஷன் நடிக்கும் 'சுப்பர் 30'

ஹ்ரித்திக் ரோஷன்

நடனத்தில் நம்ம பிரபுதேவாவிற்கே 'மெர்சல்' காட்டக்கூடியவர், பாலிவுட் ஸ்டார் ரித்திக் ரோஷன். 'தூம்', 'க்ரிஷ்' பட சிரீஸ்களில் கலக்கிக்கொண்டிருக்கும்போதே 'ஜோதா அக்பர்', 'மொஹன்ஜதாரோ' போன்ற வரலாற்றுக் கதைகளிலும் நடித்து வந்தார். இப்போது, முற்றிலும் மாறுபட்டு ஒரு சாதனை மனிதனுடைய பயோபிக் படத்தில் நடிச்சுக்கிட்டிருக்கார். 'சூப்பர் 30'னு டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் என்பவருடைய கதை. இவர் பீகார் மாநிலத்தில் நன்கு படிக்கக்கூடிய, வருமானத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்த 30 மாணவர்களுக்கு ஜெஈஈ, ஐஐடி போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருபவர். இப்படத்தை விக்கி பாஹல் இயக்குகிறார். இப்படத்தில் இடம்பெறும் ரித்திக்கின் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. 

மீண்டும்  சர்ச்சையில் பாலிவுட் திரைப்படம்

மணிகர்னிக்கா

ஒரு படத்தை ஏன் எதிர்க்கிறோம் என்ற காரணம் இல்லாமலேயே இப்போதெல்லாம் எதிர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ராணாவத் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம், 'மணிகர்னிகா'. 'பாகுபலி', 'மெர்சல்' படங்களுக்குக் கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். தமிழில் 'வானம்' படத்தை இயக்கிய க்ரிஷ் இப்படத்தை இயக்குகிறார். ஏப்ரல் மாதம் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிராமண அமைப்புகள், பிராமண குலத்தைச் சேர்ந்த ஜான்சி ராணி வாழ்க்கையை இப்படம் தவறாகச் சித்திரிக்கக்கூடும் என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு, ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு 'பத்மாவத்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்களுக்கு இந்த பிராமண அமைப்பு ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.  

மலையாளத்தில் சித்தார்த், வயதான திலீப் 

திலீப்

பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கேரளத்தில் டாப் ஸ்டாராக இருந்து வருகிறவர் திலீப். இவரது நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம், 'கமார சம்பவம்'. இப்படத்தின் மூலம் முதல் முறையாக மலையாளத்தில் நடிக்கிறார் சித்தார்த். இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கும் இப்படத்தில் திலீப் நடிக்கும் கமரன் என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள்தான், இப்படத்தின் கதைக்களம் எனக் கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டரில் வயதான ஆளாகக் காட்சியளிக்கிறார், திலீப். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

சல்மான் கானின் 'கிக் 2'

சல்மன்கான்

தமிழில் பார்ட் டூ படங்கள் டிரெண்ட்ல இருக்கிறமாதிரி, இந்தி சினிமாவில் பார்ட்-3 டிரெண்டு!. நடன இயக்குநர் ரெமோ டிசோஸா இயக்கத்தில் 'ரேஸ்-3', பிரபுதேவா இயக்கத்தில் 'தபாங்-3' ஆகிய படங்களில் நடித்துவரும் சல்மான் கான், தற்போது 2014-ல் வெளிவந்த 'கிக்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். சஜித் நாடியத்வாலா இயக்கித் தயாரித்த இப்படத்தில், ஜாக்லீன் ஃபெர்னான்டஸ், ரந்தீப் ஹூடா, நவாஸுதீன் சித்திகி நடித்திருந்தனர். ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த 'கிக்' படத்தின் ரீமேக்தான் இப்படம்.

டாம் க்ரூஸ் 'சாகசம்'

 

டாம் க்ரூஸ் என்றாலே சாகசம், சாகசம்தான். 1996- ம் வருடம் முதல் இன்றுவரை ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாய் இருந்து வரும் படங்களில் 'மிஷன் இம்பாஸிபிள்' பட வரிசையும் ஒன்று. இந்த வெற்றிகளுக்கு அப்படங்களில், டாம் கரூஸ் மேற்கொள்ளும் ரியலிஸ்டிக் சண்டைக்காட்சிகளுக்கும் பெரும் பங்கு உண்டு. ஜூலை 27- ம் தேதி வெளியாகி 'மிஷன் இம்பாஸிபிள்' வரிசையில் இடம்பெறவிருக்கும் 'மிஷன் இம்பாஸிபிள்'-ஃபாலன் அவுட்' படத்தின் ஹெலிகாப்டர் ஸ்டண்ட் காட்சிகளின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது. வழக்கம்போல சண்டைக் காட்சிகள் 'வாவ்' ரகம்தான்!  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!