"இந்தியில் ஒரு 'பூவா தலையா'... ஜெயிக்கிறது யாரு?" - 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' படம் எப்படி?

காதலா - நட்பா என்ற போரில், 'நட்புதான் எங்கள் சொத்து' என்று கெத்தாகக் கைக்கோத்து நடக்கும் இரு பால்யகால நண்பர்களின் காமெடி- எமோஷனல் ஸ்டோரி 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி'. 

Sonu ke Titu ki Sweety

சோனுவும் (கார்த்திக் ஆர்யான்), டிட்டுவும் (சன்னி சிங்) சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். டிட்டுவுக்கு ஒவ்வொரு முறையும் பிரேக்அப் ஏற்படுவதற்கு சோனு காரணமாக இருப்பதோடு, டிட்டுவைக் கல்யாணம் செய்துகொள்வதிலிருந்து தடுக்கவும் செய்கிறான். இந்நிலையில், டிட்டுவுக்கு ஸ்வீட்டியுடன் (நுஷ்ராத் பருச்சா) நிச்சயதார்த்தம் நடக்கிறது. இவர்களின் காதல் துளிர்விடும் சமயத்தில் சோனுவிற்கு ஸ்வீட்டி வில்லியாக மாறுகிறாள். இறுதியில், நட்பா, காதலா என்ற பாசப் போரட்டத்தில் யார் வெல்கிறார்கள் என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறது 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி'.

காதலுக்கும், நட்புக்குமான மோதலைக் கூறும் சினிமாக்கள் பல இருந்தாலும், இப்படம் சற்று வித்தியாசப்பட்டு, காதலையே வில்லனாகக் காட்டியிருக்கிறது. 'காதல் வேறு, கல்யாணம் வேறு... கல்யாணத்தை நோக்கில் கொள்ளாமல் காதலிக்கலாம்' என்ற நியூ ஏஜ் கருத்தை எந்தவொரு நெருடலும் இல்லாமல், அழுத்தமாகக் கூறியிருக்கிறார், இயக்குநர் லுவ் ரஞ்சன். 

Sonu ke Titu ki Sweety

பார்க்கும் பெண்களைத் தன்வசம் ஈர்த்து, காதல் எனும் மாயைக்குள் சிக்காமல், வாழ்க்கையை ஜஸ்ட் லைக் தட்டாக எடுத்துக்கொள்ளும் சோனு. வாழ்க்கையில் என்ஜாய்மென்ட் அவசியம், அதேசமயம் காலாகாலத்தில் கல்யாணம் செய்து செட்டில் ஆவதும் அவசியம் என்று யோசிப்பதோடு மட்டுமல்லாமல், கல்யாணத்தில் ஈடுபாடு இல்லாத தனது நண்பனை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயலும் ஜெம் பெர்சனாக டிட்டு. எப்போதும் ஈகோ க்ளாஷோடு இருக்கும் பர்ஃபெக்ட் வில்லியாக ஸ்வீட்டி என இந்த மூன்று கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் படத்தில் சிறு தொய்வுகூட ஏற்படவிடாமல் அதகளப்படுத்தியிருக்கின்றனர். துணை கதாபாத்திரமாக நடித்திருக்கும் பிஹு (இஷிதா ராஜ் ஷர்மா) 'ப்யார் கா பன்ச்நாமா' படத்தின் ஸ்டைலையே இதிலும் பின்பற்றியிருக்கிறார். மாடர்ன் உடையில் வரும் கலாசாரப் பெண்ணாக வீட்டில் இருக்கும் அனைவரின் மனதைக் கவரும் வகையில் நடந்துகொள்ளும், இவரது குழந்தைத்தன நடிப்பை, வேறு யாராலும் செவ்வனே செய்திருக்க முடியாது என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். 

Sonu ke Titu ki Sweety

மிக நெருக்கமாக இருக்கும் நண்பர்களுக்கு இடையே வரும் ஸ்வீட்டி, ஆரம்பத்தில் நல்லவளாகக் காண்பிக்கப்படுவதும், இடைவேளையில் திடீரென்று வில்லியாக மாறுவதற்குமான பின்னணி காரணங்களை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருந்தால், அந்தக் காட்சி இடைவேளைக்காகவே வைக்கப்பட்ட டெம்ப்ளேட் காட்சிபோல இருந்திருக்காது. படத்தில் வரும் அடல்ட்ஸ் ஒன்லி  காமெடி வசனங்களை அநாயசமாக ஹேண்டில் செய்துள்ளார் வசனகர்த்தா ராகுல் மோடி. மேலும், பின்னணி  இசையும், ஸ்வீட்டி வசனம் பேசும்போது பின்னணியில் ஒலிக்கும் 'நாயக் நஹி கல்நாயக் ஹை து' பாடலின் டைமிங் நம்மை 'அட' போட வைக்கிறது. 

கதையில் காதல் ரொம்ப ஸ்ட்ராங்காக இருந்த போதிலும், இறுதியில் டிட்டு கல்யாணத்தைக் கால் ஆஃப் செய்வதற்கான காரணத்தையும், அக்காட்சியில் பேசப்பட்டிருக்கும் வசனத்தையும் கூடுதல் சிரத்தையுடன் செய்திருந்தால் க்ளைமாக்ஸ் இன்னும் வலிமையாக இருந்திருக்கும். தனது நண்பன் இரண்டு வார்த்தைகள் எமோஷனலாகப் பேசினான் என்பதற்காக மாலையைத் தூக்கி எறிந்துவிட்டு வரும் நட்பதிகாரக் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் பாஸ். 

இப்படத்திற்கு மொத்தம் ஆறு பேர் இசையமைத்துள்ளனர். எனினும், 'யோ யோ ஹனி சிங்'கின் தொனி சற்று ஓங்கியிருக்கிறது. படத்தில் கோவா மற்றும் ஆம்ஸ்டெர்டாமின் கலர்ஃபுல் காட்சிகள் பார்ப்பவர்களின் கண்களைத் திரையிலிருந்து அகற்றவிடாமல் ஒன்றியிருக்கச் செய்துள்ளது.  

சோனுவின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது சில காட்சிகளில் நமக்கே, 'இவன் ஒருவேளை சைக்கோவா இருப்பானோ' என்பது போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. இந்த அளவுக்குத் தன்மீது உரிமை எடுத்துக்கொள்ளும் ஒருவனை, டிட்டு ஏன் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இயக்குநர் கூறியிருக்கலாம். பாலிவுட்டின் வெல்கம் சம்மர் ட்ரீட்டுக்குச் சிறந்த படமாக 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' இன்னும் ஸ்வீட்டாக அமைந்திருக்கிறது. 

'டாம் அண்ட் ஜெர்ரி' சண்டைபோல் ஜாலியாக ஒரு படம் பார்க்க விரும்புபவர்களுக்கு 100 சதவிகித என்டர்டெயின்மென்ட் தரும்  'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி'. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!