Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நரம்பியல் குறைபாடு... நல்லாசிரியர்... ‘நச்’ நடிப்பு! - ராணி முகர்ஜியின் சூப்பர் ‘கம்பேக்’ #Hichki

ராணி முகர்ஜி

ந்திய திரையுலகின் பெரிய நடிகைகள், சொந்தக் காரணங்களுக்காகச் சில வருடங்கள் திரையுலகிலிருந்து விலகி, ‘கம்பேக்’ செய்வது இப்போதைய டிரண்ட். அப்படி கம்பேக் கொடுக்கும்போது, பெண் சார்ந்த அல்லது நல்ல கதைக்களம் உள்ள திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். நடிகை ஸ்ரீதேவியின் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’, மலையாள நடிகை மஞ்சு வாரியரின் ’ஹவ் ஒல்டு ஆர் யூ’, ஜோதிகாவின் ‘36 வயதிலேயே’ என இதற்கான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில், ‘ஹிச்கி’ (Hichki) என்ற சூப்பர் கம்பேக் திரைப்படம் மூலம் தன் ரசிகர்கள் மத்தியில் அழுத்தமாக கம்பேக் கொடுத்திருக்கிறார், ராணி முகர்ஜி

1990-ம் ஆண்டின் இறுதியில், இந்தி திரையுலகில் கால் பதித்தவர் ராணி முகர்ஜி. வழக்கமான காதல் செய்து, கிளாமர் காட்டும் நாயகியாக ஆரம்பக் காலத்தில் நடித்தவர். விரைவிலே நடிப்புத் திறமைக்குத் தீனி போடும் கதாபாத்திரங்களை வசப்படுத்தினார். ‘பிளாக்’ படத்தில் பார்வையற்றவராக, 'நோ ஒன் கில்டு ஜெஸ்ஸிகா’ (No one killed Jessica) என்ற படத்தில் மீரா கெய்ட்டி (Meera gaity) கதாபத்திரத்தில் புகைபிடிக்கும், மது அருத்தும் துணிச்சல் பெண்ணாக, ‘ஹம் தும்’ (Hum Tum) படத்தில் ஜாலி கேலி பெண்ணாக என ராணியின் திரைப்படங்கள் முத்திரை பதித்தன. அந்த வரிசையில், ’ஹிச்கி’ திரைப்படமும் இணைந்திருக்கிறது. 

ராணி முகர்ஜி

சிறு வயதிலேயே, டோரட் சிண்ட்ரோம் (Tourette syndrome) என்கிற நரம்பியல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர், நைனா. இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி ஒருவித குரல் எழுப்புவார்கள். சிறு வயதில் பல்வேறு கேலி, கிண்டல்களை எதிர்கொண்டிருந்தாலும், தன் ஆசிரியரின் தூண்டுதலால் பள்ளியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறுகிறார் நைனா. தன் ஆசிரியரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தானும் ஆசிரியராக விரும்புகிறார். இதில், பல்வேறு நிராகரிப்புகளைச் சந்திக்கும்போதும், நம்பிக்கையோடு ஒவ்வொரு பள்ளியாக வேலை தேடி அலைகிறார். இறுதியில், அவர் படித்த பள்ளியிலேயே வாய்ப்புக் கிடைக்க, மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்று ஆர்ப்பரிக்கிறார். 

முதல் நாள் வகுப்பறைக்குள் நுழைந்த பிறகுதான் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள மாணவர்கள், அனைத்து ஆசிரியர்களாலும் ஒதுக்கப்பட்டவர்கள் என்பது தெரிகிறது. அவருடன் ஆசிரியராக வேலை பார்க்கும் பலரும், இந்த மாணவர்களைப் புறக்கணிக்கக் காரணம், அனைவரும் ஏழ்மையான குடும்ப பின்னணியிலிருந்து வந்து, ’கல்வி பெறும் உரிமை’ (Right to education) திட்டத்தின் கீழ் படிப்பவர்கள். இத்தனை ஆண்டுகளாக ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட அவர்கள், புது ஆசிரியரான நைனாவுக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து தங்கள் வெறுப்பைக் காண்பிக்கிறார்கள். அனைத்தையும் சிரிப்புடன் எதிர்கொள்கிறார் நைனா. 

ஒரு நாள் மாணவர்கள் தவறு செய்து, பிரின்சிபல் எதிரில் தலைகுனிந்து நிற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது, தன் மீது பழியைச் சுமத்திக்கொண்டு மன்னிப்பு கேட்கிறார் நைனா. தாங்கள் இவ்வளவு காயப்படுத்தியும், விட்டுக்கொடுக்காத ஆசிரியர் மீது மதிப்பு உண்டாகி, தங்களின் தவற்றை திருத்திக்கொள்ள நினைக்கிறார்கள் மாணவர்கள். நைனாவின் அன்பினாலும் அறிவினாலும் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். 

ராணி முகர்ஜி

இந்நிலையில், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக்கு பள்ளியில் ஏற்பாடு செய்யப்படுகிறது. நைனாவின் மாணவர்கள் மட்டும் பெற்றோரை அழைத்து வராததால், அவர்களைத் தேடி செல்கிறார். அப்போதுதான் அவர்கள் எவ்வளவு ஏழ்மையான நிலையிலிருந்து படிக்கவருகிறார்கள் என்பது தெரிகிறது. ஒவ்வொருவரின் குடும்ப சூழ்நிலையையும் நேரடியாகப் பார்க்கிறார் நைனா. மறு நாள் வகுப்பில், மாணவர்களின் கவலைகளை பேப்பரில் எழுதச் சொல்லி, பறக்கவிடச் சொல்கிறார். 

படிக்காத, ஒன்றுக்கும் உதவாத மாணவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட மாணவர்களுக்குப் படிப்பை எளிமையாகக் கற்றுக்கொடுக்க முடிவுசெய்கிறார் நைனா. முட்டையையும் கூடைப்பந்தையும் வைத்து, கணிதம் மற்றும் அறிவியலை கற்றுக்கொடுக்கிறார். கேலிகளை எதிர்கொண்ட மாணவர்களை தன் அன்பால் ஈர்க்கிறார். அந்த அன்புக்காக, கடுமையாகப் படித்து முதல் மதிப்பெண் பெறும் நேரத்தில், அவர்கள் எதிர்கொள்ளும் சவாலும், அதிலிருந்து எப்படி மீண்டுவருகிறார்கள் என்பதே திரைப்படத்தின் முடிவு. 

ராணி முகர்ஜி

ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும், மாணவர் - ஆசிரியர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது ஹிச்கி. எளிமையான உடை, ஆரவாரமற்ற நடிப்பு, நரம்பியல் குறைபாட்டுடன் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் என, நைனா மாதுர் காதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார், ராணி முகர்ஜி. சமீபத்தில், தன் 40-வது பிறந்தநாளுக்கு, தனக்குத் தானே ஒரு கடிதம் எழுதியிருந்தார் ராணி முகர்ஜி. அதில், 'திரையுலகில் நுழைந்த புதிதில், என் உயரத்தை, என் குரலை, என் நடிப்பைக் காரணம் காட்டி, பலரும் நிராகரித்தார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தத் திரைப்படத்தில் இவை மூன்றுமே மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. 

ராணி முகர்ஜியின் சூப்பர் ’கம்பேக்’ படத்துக்கு ஒரு சூப்பர் சல்யூட்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்