102 வயது அப்பா, 75 வயது மகன்.. மூன்று ஆண்களின் உலகம்! - `102 Not Out' படம் எப்படி? #102Notout | How is Amitabh and Rishi Kapoor starrer 102 Not Out?

வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (07/05/2018)

கடைசி தொடர்பு:18:14 (07/05/2018)

102 வயது அப்பா, 75 வயது மகன்.. மூன்று ஆண்களின் உலகம்! - `102 Not Out' படம் எப்படி? #102Notout

பாலிவுட்டின் இரண்டு மூத்த நடிகர்கள் கதாநாயகர்கள். படத்தில் ஒருவர் 102 வயது தந்தை என்றால், மற்றொருவர் 75 வயது மகன். சண்டைக் காட்சிகள், கிளாமர் பாடல்கள், அசரடிக்கும் பிரமாண்டம் என பாலிவுட்டின் கிளிஷேக்கள் எதுவும் கிடையாது. `102 NotOut' படம் எப்படி?

102 வயது அப்பா, 75 வயது மகன்.. மூன்று ஆண்களின் உலகம்! - `102 Not Out' படம் எப்படி? #102Notout

பாலிவுட்டின் இரண்டு மூத்த நடிகர்கள் கதாநாயகர்கள். படத்தில் ஒருவர் 102 வயது தந்தை, மற்றொருவர் 75 வயது மகன். சண்டைக் காட்சிகள், கிளாமர் பாடல்கள், அசரடிக்கும் பிரமாண்டம் என பாலிவுட்டின் கிளிஷேக்கள் எதுவும் கிடையாது. கதாநாயகி... கிடையாது! ஏன், நடிகைகளே கிடையாது. மூன்றே மூன்று முக்கிய ஆண் கதாபாத்திரங்கள், இரண்டு மணி நேரத்திற்குள் அடங்கியிருக்கும் திரைக்கதை. ஆனாலும், நம்மை நெகிழச் செய்து, திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு நல்ல சினிமா பார்த்த உணர்வைக் கடத்தத் தவறவில்லை, `102 Not Out' திரைப்படம்.

102 Not Out

102 வயதாகிவிட்ட தத்தாத்ரேயா வக்காரியா (அமிதாப் பச்சன்), தன் 75 வயது மகனான பாபுலால் வக்காரியாவுடன் (ரிஷி கபூர்) வசிக்கிறார். பேரன் வழக்கம்போல அமெரிக்காவில் செட்டில்! மகன் ரிஷி கபூர் ரூல்ஸ் ராமானுஜம் என்றால், அப்பா அமிதாப் அடாவடி ஆள். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷி கபூர் டிராவிட் என்றால், அமிதாப்தான் சேவாக். அமிதாப்பிற்கு 118 வயது வரை உயிர் வாழ்ந்து உலக சாதனை படைத்த சீனாக்காரர் ஒருவரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்கு ஒரே இடைஞ்சல் எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் போட்டு கட்டுக்கோப்பாக வாழும் தன் மகன். அவனை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டால், தான் நிம்மதியாக இஷ்டம்போல வாழலாம் என்று திட்டம் தீட்டுகிறார். அப்படி தந்தையால் முதியோர் இல்லத்துக்கு அனுப்பப்படாமல் இருக்க, ரிஷி கபூர் தந்தை சொல்லும் சில டாஸ்குகளை முடிக்க வேண்டும். அதை அவர் செய்தாரா, அமிதாப்பின் உண்மையான திட்டம்தான் என்ன, அமெரிக்கா பேரன் திரும்ப வந்தானா? போன்ற சில கேள்விகளுக்கான விடையே படம்.

102 Not Out

இரண்டு முதுபெரும் நடிகர்களை எல்லாக் காட்சிகளிலும் நிரப்பியிருக்கிறார்கள். நடிப்புக்கா பஞ்சம்? அமிதாப்பும், ரிஷி கபூரும் போட்டி போட்டுக்கொண்டு பின்னி எடுக்கின்றனர். ஒரு காட்சியில் ரிஷி கபூர் அசத்தினால், மற்றொரு காட்சியில் அமிதாப் அதை ஈடு செய்கிறார். சீரியஸான மனிதராக தன் தந்தை செய்யும் லூட்டிகளுக்கெல்லாம் டென்ஷன் ஆகி, `எனக்கு வயசாயிடுச்சு. என் முதுமையை நான் ஏத்துக்கிட்டேன்! நீ ஏன் மறுக்கிற?' என்று அமிதாப்பை கேள்வி கேட்கும் ரிஷி கபூர், நம் பரிதாபத்தை சம்பாதிக்கத் தவறவில்லை. குறிப்பாக, அமிதாப் நிஜமாகவே முதியோர் இல்லத்துக்குப் போன் செய்யும்போது, நிற்காமல் பயத்தில் ஆடும் குழந்தைபோல அந்த உடல் மொழியில் ரிஷி கபூர் எனும் மாபெரும் நடிகர் வெளிப்படுகிறார். 

தன் தந்தை இடும் கட்டளைகளை வேறுவழியின்றி கேட்டு நடந்து, அதன்மூலம் தன் இறந்த காலத்தை நினைவு கூர்ந்து, கண்களில் நீருடன் அவர் நிற்கும் காட்சிகள், நமக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. பிற்பாதியில், அமெரிக்க மகனுக்காக மாத்திரைகள் வாங்குவது, பழைய அறையைத் திறந்து மகனின் பொருள்களை ரசிப்பது... என நிஜமாகவே வாழ்வின் விளிம்பில் இருக்கும் ஒரு தந்தையை நம் கண்முன் நிறுத்துகிறார், ரிஷி. இது ஒரு பரிணாமம் என்றால், தெளிவு பெற்றவுடன் இவர் ஏர்போர்ட்டில் செய்யும் அதகளம் வேறு பரிணாமம். 

102 Not Out

வில்லாதி வில்லனாக, இயல்பான குறும்பு மனிதராக இனிக்கிறார், அமிதாப். `விக்'தான் என்றாலும் அந்த வெள்ளைத் தலை முடியையும், தாடியையும் சிலுப்பிக்கொண்டு அவர் செய்யும் ரவுடித்தனங்கள் அட்டகாசம். சீனா மனிதன் கட்அவுட்டுடன் நடுரோட்டில் செல்லும் ஆட்டோவை நிறுத்தி ஏறும் அந்த முதல் காட்சியிலேயே நம்மை அவரது ரசிகனாக்கிவிடுகிறார். முதல்பாதி முழுக்க மகனை டார்ச்சர் செய்து அழ விடும் அமிதாப், பிற்பாதியில் தெளிவாகப் பேசி, அதே மகனுக்கு உண்மையைப் புரியவைக்கிறார். கண்களில் எட்டிப்பார்க்கும் கண்ணீருடன் சேர்ந்து கோபமும் மிதக்க, இறந்த காலத்தை நினைவூட்டி, எதிர்காலத்திற்குத் தன் மகனைத் தயார்படுத்தும் பொறுப்புள்ள தந்தையாக அவர் தோன்றும் காட்சிகள்... வழக்கம்போல அமிதாப் என்னும் சீரியஸ் நடிகர் ஸ்கோர் செய்யும் இடம்! அவருக்குத் துணையாக அந்த மருந்துக்கடை `திரு' கதாபாத்திரமும் சரியான தேர்வு.

புகழ்பெற்ற மேடை நாடகம் ஒன்றை `Oh My God' என்ற பெயரில் படமாக எடுத்துப் புகழின் உச்சியை அடைந்த இயக்குநர் உமேஷ் சுக்லா, இம்முறையும் வேறொரு மேடை நாடகக் கதையை கையில் எடுத்திருக்கிறார். நாடகத்தை எழுதிய சௌமியா ஜோஷியே கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதிவிட, இருபெரும் நடிப்பு ஆளுமைகளைக் கையாளும் பெரும் பொறுப்பை உமேஷ் சுக்லா ஏற்றிருக்கிறார். சுக்லா செய்திருக்கும் ஒரே தவறு, அந்த நாடகத்தை, திரைப்பட மொழிக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யாதது மட்டுமே!

பொதுவாக மேடை நாடகங்களில் வசனங்கள் அதிகமாக இருக்கும். அங்கே காட்சிகளால் விவரிக்க முடியாததைப் பேசியே விளக்கி விடுவார்கள். ஆனால், திரைப்படத்தில் காட்சிகளுக்கு அல்லவா முக்கியத்துவம் இருக்க வேண்டும்? இங்கேயும் வளவளவென நாடக பாணியில் பேசிக்கொண்டிருந்தால் எப்படி பாஸ்? அதுவும், ஃபிளாஷ்பேக் கதை சொல்லும்போதும் வெறும் வசனங்கள்தானா? அங்கேயாவது காட்சிகளாக விரித்திருக்கலாமே?

102 Not Out

நடிப்புக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், திரைக்கதை அந்த நடிப்பை மேலும் கவுரவப்படுத்தும் விதமாக இருக்க வேண்டாமா? அதிகச் செலவில்லாமல் ஒரு நல்ல படத்தை எடுத்திருப்பது, பாராட்டப்பட வேண்டியதுதான். அதற்காக ஒரு நாடகத்தைப் போலவே, சினிமாவையும் அணுகவேண்டுமா? சில ஓவியங்கள் வெறும் கோடுகளாக இருக்கும்போது அதி அற்புதமாக இருக்கும். ஆனால், ஏனோ வண்ணங்கள் கொடுத்து உயிர்ப்பிக்க முயற்சிக்கும்போது, அதிலிருந்த அழகில் பாதியை இழந்துவிடும். இந்தப் படம் அதற்கு நல்ல உதாரணம். ஒரு ஸ்கிரிப்ட்டாக அற்புதமான ஒன்லைனுடன் இருக்கும் கதை, காட்சிகளாக விரியும்போது தன் அழகை சற்றே இழக்கிறது. அந்தக் காயங்களுக்கு அமிதாப் மற்றும் ரிஷி கபூரின் நடிப்பை பிளாஸ்திரியாகப் பயன்படுத்தி ஒட்டியிருக்கிறார், இயக்குநர்.

மொத்தத்தில்... `102 NotOut' டக் அவுட் ஆகவில்லை. இரண்டு அற்புதமான பேட்ஸ்மேன்களின் சிக்ஸர்களுக்காக, அமிதாப்போல நாமும் ஒரு விசில் அடிக்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close