உலகத் திரைப்பட விழாக்களில் நந்திதா தாஸின் 'மன்ட்டோ '... என்ன ஸ்பெஷல்? #Manto

உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்படுக்கொண்டிருக்கிறது, நடிகை நந்திதா தாஸ் இயக்கியிருக்கும் 'மண்டோ' திரைப்படம். படத்தில் என்ன ஸ்பெஷல்?

உலகத் திரைப்பட விழாக்களில் நந்திதா தாஸின் 'மன்ட்டோ '... என்ன ஸ்பெஷல்? #Manto

வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த நடிகை நந்திதா தாஸ், 2008-ல் வெளியான 'ஃபிராக்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகம் ஆனார். தற்போது, சதக் ஹாசன் மன்ட்டோ என்ற பாகிஸ்தான் எழுத்தாளரின் வாழ்க்கையை 'மன்ட்டோ ' என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே, இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பலராலும் பாராட்டு பெற்றதால் உற்சாகத்தில் இருந்த இயக்குநர் நந்திதா தாஸுக்கு, மேலும் ஓர் உற்சாகம் தரும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

'மண்டோ' படக்குழு

இவர் இயக்கியிருக்கும் 'மன்ட்டோ ' திரைப்படம் சிட்னியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிட்னி திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடலுக்குத் தேர்வாகியுள்ளதுதான் அவருடைய உற்சாகத்துக்குக் காரணம்.

சிட்னியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நடைபெறும் சிட்னித் திரைப்பட திருவிழா இந்த ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், மொத்தம் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்நிகழ்வில் திரையிடப்படும் படங்கள் பெரும்பாலும் புதிய படைப்பாளிகளின் திரைப்படங்களாகவும், உண்மைச் சம்பவங்கள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளை மையப்படுத்திய படங்களாகவும் இருக்கும். இந்த 200 படங்களிலிருந்து திரைக்கதை, அந்தத் திரைக்கதையைத் தைரியமாகத் திரையாக்கிய விதம், ரசிகர்கள் அந்தப் படத்தை ரசித்த விதம் எனப் பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு 12 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஒவ்வொன்றிற்கும் 60,000 டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

இந்தத் திரைப்பட விழாவில்தான் நந்திதா தாஸ் இயக்கியிருக்கும் 'மன்ட்டோ ' திரையிடப்படவிருக்கிறது. இப்படத்தில் சதக் ஹாசன் மன்ட்டோவாக  பாலிவுட்டின் வித்தியாசமான பல கதாபாத்திரங்களுக்குச் சொந்தக்காரரான நவாசுதின் சித்திக் நடித்துள்ளார். மண்டோ தனது சிறுகதைகள் மற்றும் நாவல்களை இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததனால் மக்கள் அடைந்த துயரங்களை மையப்படுத்தியே எழுதியிருந்தார். இதனால், மன்ட்டோவின்படைப்புகளை வெளியிட அன்றைய காலனிய அரசு பல்வேறு தடைகளை விதித்திருந்தது. அந்தத் தடைகளை எதிர்த்துப் போராடி, எழுதுவதற்குத் தனக்கிருக்கும் உரிமையைப் பெற்றுப் பல்வேறு கதைகள் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது இறுதி நாள்கள் குடியால் கழிந்தன. அதனால் தன்னுடைய உடலுறுப்புகள் செயலிழந்து 1955-ல் தனது 42-வது வயதில் இறந்தார். 'மன்ட்டோ ' இது அத்தனையையும் பேசவிருக்கிறது.

நந்திதா தாஸ்

சிட்னி திரைப்பட விழாவில் தன்னுடைய திரைப்படம் வெளியாகவுள்ளதைப் பற்றி நந்திதா தாஸ்,  “இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். அதற்குமுன் உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் மக்கள் இப்படத்தை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். சினிமாவின் சக்தியே நாடுகளையும் கலாச்சாரத்தையும் எளிதில் கடந்துவிடுவதுதான். இந்தக் கதை இந்தியாவைச் சேர்ந்தது என்றாலும், உலகின் பிற பகுதியிலிருக்கும் மக்களும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் இருக்கும். ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பிறமொழி மக்களால் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்!" எனக் கூறியிருக்கிறார். 

மண்டோ படப்பிடிப்பில் நந்திதா தாஸ்

தவிர, "என் மகன் படப்பிடிப்பில் உள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் அவர் என்னுடன் சேர்ந்து சிட்னித் திரைப்பட விழாவில் கலந்துகொள்வார். என்னுடைய குழந்தையுடன் இதில் கலந்துகொள்வது ஒரு புது அனுபவமாக இருக்கிறது!” எனத் தன்னுடைய மகன் விகான் மஸ்காராவுடன் இந்தத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவிருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார், நந்திதா தாஸ்.  

'மன்ட்டோ' சிறப்புத் திரையிடல் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சிட்னியில் உள்ள தேசியத் திரையங்கம் மற்றும் டெண்டி ஒபெரா சினிமா திரையரங்கம் ஆகியவற்றிம் திரையிடப்படவுள்ளது. இதுதவிர, இந்தத் திரைப்பட விழாவில் இந்தியாவிலிருந்து கபிர் சௌத்ரி இயக்கிய 'மெஹ்சம்புர்' (Mehsampur) என்ற திரைப்படமும்  திரையிடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!