சிம்புவுக்கு ஜோடியான ஸ்ரீதேவியின் மகள்... தீபிகாவின் புது அவதாரம்..! #WoodBits | Jhanvi kapoor becomes simbu's pair... Deepika's next movie woodbits

வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (05/07/2018)

கடைசி தொடர்பு:20:35 (05/07/2018)

சிம்புவுக்கு ஜோடியான ஸ்ரீதேவியின் மகள்... தீபிகாவின் புது அவதாரம்..! #WoodBits

தீபிகா

'பத்மாவத்' படத்துக்குப் பிறகு தீபிகா படுகோன் ஷாருக்கானின் அடுத்த படமான 'ஜீரோ'வில் கேமியோ ரோல் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இதைத் தொடர்ந்து 'மசான்' என்ற இந்திப் படத்தை எடுத்த இயக்குநர் நீரஜ் கைவான் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் பெண்களை மையப்படுத்திய சினிமா என்று கூறப்படுகிறது. இது இயக்குநர் நீரஜ் கைவானின் இரண்டாவது திரைப்படம். இப்படத்துக்கு இந்த மாதம் இறுதிக்குள் பெயர் வைக்கப்படும் என்று இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இவர் பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப்பிடம் துணை இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சோனாலி

பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நியூயார்க்கில் வசித்து வரும் இவர், தனக்கு புற்றுநோய் இருப்பதை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இவர் மணிரத்னத்தின் 'பாம்பே' படத்தில் 'ஹம்மா ஹம்மா...' பாடலுக்கு நடனமாடியிருக்கிறார், 'காதலர் தினம்' படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "இந்த நேரத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இருப்பினும் குடும்பத்தார், நண்பர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். விரைவில் நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். சில நாள்களாக எனக்கு கிடைத்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார். 

ஜான்வி, சிம்பு

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜான்வி கபூர் தற்போது மராட்டியில் வெளிவந்த 'சாய்ராட்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான 'தடக்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அஜித் நடித்திருக்கும் 'பில்லா' படத்தை சிம்புவை வைத்து ரீமேக் செய்யப்போகிறார் என்பதற்கு மறுப்பு தெரிவித்து, இந்தப் படத்துக்கு புது ஸ்க்ரிப்ட் வைத்திருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருக்கிறார். 'பார்ட்டி' படம் ரிலீஸானதுக்குப் பிறகு, இப்படத்துக்கான வேலைகள் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

kalyani Priyadharshan

பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் ’ஹலோ’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகத்துக்கு அறிமுகமானவர். அப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்ததையடுத்து நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு குவிய ஆரம்பித்தன. சுதீர் வர்மா இயக்கத்தில் 'எங்கேயும் எப்போதும்' புகழ் சர்வானந்துடன் அடுத்த படத்தில் கமிட்டாகியிருக்கிறார் கல்யாணி. இப்படம் கேங்ஸ்டர் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அடுத்ததாக, இயக்குநர் கிஷோர் திருமலாவின் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் முதலாவதாகக் கல்யாணி கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் `இருமுகன்’ திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் இந்திப் படமான `க்ரிஷ்-3’யில் துணை புரொடக்ஷன் டிசைனராகவும் பணிபுரிந்தார். 

Manish Malhothra

பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளரான மணிஷ் மல்ஹோத்ரா சினிமாவுக்கு அறிமுகமாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இவர் இந்த வருடம் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அழைக்கப்பட்டிருக்கும் 20 சிறந்த இந்திய சினிமா பிரபலங்களுள் ஒருவராக இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "28 வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது. பாலிவுட்டின் நியூ ஜெனரேஷன் நடிகர்களுடன் வேலை செய்வதற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறேன். ஜான்வி கபூர், அலியா பட், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், வருண் தவான் ஆகியோர்களின் படங்களில் தற்போது வேலை பார்த்துவருகிறேன். இந்த வருடம் ஆஸ்கரில் பங்கேற்பதன் மூலம் ஹாலிவுட் படங்களுடனும் இந்திய சினிமா பேனல் அசோசியேட் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close