வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (28/11/2018)

கடைசி தொடர்பு:13:10 (28/11/2018)

``இம்தியாஸூக்கு `வலிகளைப் படமாக்குபவன்' பட்டம் கொடுக்கலாம்!" - `தமாஷா' ரீவைண்டு #3YearsOfTamasha

இம்தியாஸ் அலி இயக்கிய `தமாஷா' திரைப்படம் வெளியாகி நேற்றோடு மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. `தமாஷா' குறித்த ஒரு ரீவைண்டு!

``இம்தியாஸூக்கு `வலிகளைப் படமாக்குபவன்' பட்டம் கொடுக்கலாம்!

வாழ்வின் காலவரையறை மூன்று. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம். இறந்தகாலத்தில் பிறந்து, நிகழ்காலத்தில் வாழ்ந்து, எதிர்காலத்தில் மடிவோம். இவ்வளவுதான் வாழ்க்கை! ஆனால், அதை எப்படி வாழ்ந்தோம், வாழ்கிறோம், வாழப்போகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் நிறைந்திருக்கிறது. நிகழ்காலத்தில் இருக்கும்போது மற்ற இரண்டு காலத்தையும் ஏக்கத்தோடு நினைத்துப் பார்ப்பதிலேயே நாள்கள் கழிந்துவிடும். காரணம், நிகழ்கால வாழ்க்கையை நூறு சதவிகிதம் ஏற்றுக்கொள்வதற்கு மனம் எப்போதுமே மறுக்கும். மனிதனின் ஆழ்மனதில் இப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டுமென்று ஒரு கற்பனையை வடிவமாக்கி வைத்திருப்போம்; அல்லது கனநேரம் அந்த வாழ்வை ருசித்துவிட்டு, காலத்தின் உந்துதலால் அதிலிருந்து நகர்ந்து வந்திருப்போம். மீண்டும் அப்படியான ஒரு வாழ்க்கைக்குச் செல்ல எத்தனை பேருக்குத்தான் ஆசையிருக்கும்?! `நாம சந்தோஷமா இருக்கும்போது டைம் வேகமாப் போகுதா, இல்லை குறிப்பிட்ட டைம்தான் நாம சந்தோஷமா இருக்கோமா?!', இதுதான் மனிதனுக்கு இருக்கும் மாபெரும் சந்தேகம். உண்மையிலேயே மகிழ்ச்சியின் கால வரையறை மிகக் குறைவுதான். என்ன செய்வது... வாரத்தில் ஐந்து நாள் வேலை பார்த்தால்தானே இரண்டு நாள் விடுமுறை கிடைக்கும்.  

மேலே நான் சொன்ன விஷயங்களெல்லாம், `தமாஷா' படம் பார்க்கும்போது ஏற்பட்ட கேள்வியும், ஆதங்கமும்தான். இம்தியாஸ் இயக்கிய இத்திரைப்படம் வெளியாகி நேற்றோடு மூன்று வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இப்படம் குறித்த ஒரு ரீவைண்டு இதோ! 

தமாஷா

சிறு வயதில் ஒழுங்கமைக்கப்பட்ட குடும்பத்தில் இருக்கும் வேத், ஒரு கதைப் பிரியன். தான் சேமித்து வைத்திருக்கும் பணத்தை, தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் முதியவரிடம் கொடுத்து, கதை சொல்லக் கேட்டு நாள்களை நகர்த்துகிறான். தான் வாழ நினைக்கும் வாழ்க்கையை, கதையாகக் கேட்கும்போது, வேத் மனம் இனம் புரியா இளைப்பாறலைப் பெறுகிறது. மெள்ள மெள்ளத் தன் கனவுலகத்தில் ஒரு வாழ்க்கையைக் கட்டமைக்கிறான். இருந்தாலும் வழக்கமான படிப்பு, வழக்கமான வாழ்வு முறை, வழக்கமான குடும்பம், வழக்கமான அப்பா, வழக்கமான வேலையென இயந்திர வாழ்க்கை இவனை விட்டு வைக்கவில்லை. கார்ப்பரேட் கம்பெனியில் சேர்ந்து படிப்படியாக வளர்ந்து, மேனேஜர் ஆகிறான். ஒரு கட்டத்தில் இயந்திர வாழ்க்கையின் இறுக்கத்தை வேதால் சமாளிக்க முடியவில்லை. அங்கிருந்து தப்பிக்கும் வேத், கார்சிக்காவுக்குச் செல்கிறார். காமிக்ஸ் கதை, பயணம், இயற்கை... இவற்றை மறுபிரதியாகக் கொண்டிருக்கும் தாராவும், கார்சிக்கா வருகிறார். இக்கட்டான சூழலில் இருவரும் சந்திக்கிறார்கள். அதற்குப் பின் குறுகிய காலத்தில் விசாலமாகும் இரு மனங்களின் கதைதான், `தமாஷா'. 

இம்தியாஸ் அலியின் மற்றொரு ஆத்மார்த்தமான படைப்பு. `எதை நீ தேடுகிறாயோ, அது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது' என்ற ரூமியின் வரிகள் பலருக்கும் பிடிக்கும். தமாஷாவின் கதை இதுதான். தங்களுடைய வழக்கமான வாழ்க்கையிலிருந்து தற்காலிக விடுமுறையெடுக்கும் இரு இதயங்களும், கார்சிக்காவில் சந்திக்கிறது. அவன் தன்னை `டான்' என்றும், அவள் தன்னை `மோனா டார்லிங்' என்றும் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். ஒரே அலைவரிசையில் துடிக்கும் அந்த இரு இதயங்களும், ஒரு இதயமாகிறது. வார்த்தை மொழிகள் இவர்களின் காதலை வெளிப்படுத்தவில்லையென்றாலும், உணர்வு மொழிகள் இருவருக்குமிடையேயான காதலை அப்பட்டமாக்குகிறது. உலகத்தின் கடைசி நாளாக நினைத்து, ஒவ்வொரு மணித்துளியையும் வாழ்கிறார்கள். பாவம், அவர்களுடைய அந்த சந்தோஷமான மணித்துளிகள் அனைத்தும் பின்னாளில் கண்ணீர்த் துளிகளாகப்போகிறது என்பது தெரியவில்லை. காலம் கொடுக்கப்போகும் இறுக்கத்தை அறிந்த இருவரும் பிரிகிறார்கள். 

தமாஷா

கார்சிக்காவில் டான் - மோனாவாக தங்களை அறிமுகம் செய்துகொண்டு, பழகிப் பிரியும் இருவரும் வேத் - தாராவாக இந்தியாவில் தனித்தினி ஊரில் தங்களுடைய வழக்கமான வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். அதைப் பார்க்கும்போது, நமக்குப் புதிதாக இருந்தாலும், அதுதான் எல்லோருடைய வாழ்க்கையாகவும் இருக்கக்கூடும். சந்தோஷத்தின் காலவரையறை உண்மையிலேயே குறைவுதான் என்பதை நினைவுபடுத்தும் நிகழ்வுகள்தாம் நம் வாழ்வில் எத்தனை எத்தனை... காலத்தின் கணக்கில் யார்தான் தப்பித்துவிட முடியும். வேத் - தாரா, காலத்தின் உந்துதலால் மீண்டும் சந்திக்கிறார்கள். கார்சிக்காவில் தான் பார்த்த டானை எதிர்பார்க்கும் மோனாவுக்கு, மிஞ்சியது என்னவோ ஏமாற்றம்தான். மனிதனுக்கு எது தற்காலிகம், எது நிரந்தரம் எனப் பகுத்தறிவதில்கூட சந்தேகம்தான் ஏற்படும். எல்லாவற்றுக்கும் காரணம், காலத்தின் உந்துதலே! கார்சிக்காவில் டானாகப் பார்த்த தாராவால், டெல்லியில் வேதாகப் பார்த்தவுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தயங்குகிறாள். பின் தயக்கம் உடைத்து அருகே செல்கிறாள், அவன் தயங்கி தள்ளிச் செல்கிறான். இதை உணர்த்தும் பாடல்தான், `தும் சாத்து ஹோ' பாடல். அதற்குப் பின் `டான்' எடுக்கும் முடிவு, ஊரில் இருக்கும் பல வேத்களின் கனவாகவே இருக்கிறது. 

எத்தனை எத்தனை வலிகளை, அவ்வளவு எளிதாகக் கடத்திச் செல்லும் இவர்களின் நடிப்பையும், இம்தியாஸின் இயக்கத்தையும் என்னவென்று சொல்வது?! இம்தியாஸிற்குப் பட்டம் கொடுக்க வேண்டுமென்றால், `வலிகளைப் படமாக்குபவன்' என அழைக்கலாம். `தமாஷா' மட்டுமல்ல இம்தியாஸின் எல்லாப் படங்களுமே ஒரு பயணம்தான்!


டிரெண்டிங் @ விகடன்