டான்ஸ் திருவிழா!

மிகத் திறமையான குரு... அவருடைய மோசமான மாணவன்... சில உணர்ச்சித் திருப்பங்களுக்குப் பிறகு, குருவின் பெயரைக் காப்பாற்ற வெறிகொண்டு உழைத்து வெற்றியைத் தட்சணையாகக் கொடுக்கும் சிஷ்யன். 'சக்தே இந்தியா’ துவங்கி 'கராத்தே கிட்’ வரை அகில உலக அளவில் ஹிட் அடித்த ஃபார்முலாதான் 'ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்’ படத்தின் கதை. இதில் 3டி-யில் மிரட்டும் நடனங்கள்தான் ஸ்பெஷல்.

 ஆச்சர்யம்! பிரபுதேவா நடிக்கும், இயக்கும் படங்களில் டூயட் பாடல்கள் களைகட்டும். ஆனால், இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியே இல்லை. அட! டான்ஸ் மாஸ்டராக மாணவர்களுக்கு நடனம் சொல்லித் தர வேண்டுமே? அப்போதும்கூட மனிதர் ஆடவில்லை. 'பிரபுதேவா எப்போது ஆடுவார்’ என்று ஏகத்துக்கும் எதிர்பார்க்கவைத்து, ஒரு எதிர்பாராத தருணத்தில் 10 நிமிடங்களுக்கு பிரபுதேவா ஆடும் ஆட்டம்... பேயாட்டம்!  

அதுபோக படம் முழுக்கவே, 'அட! இப்படிலாம் டான்ஸ் பண்ணலாமா?’ என்று ஆச்சர்யப்படுத்து கிறார்கள். டான்ஸர்களை ரப்பர் பொம்மைகளைப் போலத் தூக்கி வீசுகிறார்கள். லேசர் ஒளிக்கற்றைகளால் உடல் பாகங்களைப் பிரித்து விளையாடுகிறார்கள். அத்தனை வேக நடனங்களை 3டி-யில் பார்ப்பது சுவாரஸ்ய பரவச அனுபவம்தான்!

இந்தியாவின் முதல் 3டி டான்ஸ் படம் என்பதால் கஞ்சா அடிப்பவர், கறிக்கடை பாய் வரை அத்தனை பேரும் ஆடித் தீர்க்கிறார்கள். காதல், குடும்பம், நட்பு என எந்த உறவிலும் பிரச்னையா? 'கட்டிப்பிடி வைத்தியம்’போல 'டான்ஸ் ஆடுங்கள்’ என்று தீர்வு சொல்கிறார்கள். ஆடிக் காட்டுகிறார்கள்.

ஆடியிருக்கலாமோ பாய்ஸ் கொஞ்சமா டான்ஸ்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!