ஆஸ்கர் 86 | ஆஸ்கர் 86. ascar 86

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (07/03/2014)

கடைசி தொடர்பு:14:30 (07/03/2014)

ஆஸ்கர் 86

86-வது ஆஸ்கர் விருதுகள் ஞாயிறு இரவில் உலக சினிமா ரசிகர்கள் கண்விழித்து உட்கார்ந்து பார்த்த பொழுதில் (நமக்கு அதிகாலை) வழங்கப்பட்டுவிட்டன. பலத்த ஆவலோடும் எதிர்பார்ப்போடும் இந்த முறையாவது லியானர்டோ டி காப்ரியோ வாங்குவார் என்ற கனவும் பொய்த்துவிட்டது. ராசியில்லாத நடிகர் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்லிவிட்டது ஆஸ்கர். மார்ட்டின் ஸ்கார்சிஸியின் இயக்கத்தில் அவர் நடித்த 'வோல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’ படத்தில்,  நடிப்புக்காக விருது கிடைக்கும் என உலகின் முன்னணி மீடியாக்கள் எல்லாம் எழுதித் தள்ளின. (ஹிஹி... டைம்பாஸ் உட்பட!) லியோ ரசிகர்களும் இந்த முறை வாங்குவார் எனக் கண்கொத்திப் பாம்பாகக் காத்துக்கிடந்தார்கள். படம் நாமினேட் செய்யப்பட்டு இருந்தாலும் இந்த முறை அவார்டு ஏதும் வாங்காமல் 'வோல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’ கொஞ்சம் ஒதுங்கி மார்ட்டின் ஸ்கார்சிஸியின் ரசிகர்களையும் சேர்த்துக் கடுப்பாக்கிவிட்டது.

ஆனால் சிறந்த படமாக '12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ படம் தேர்ந்தெடுக்கப்பட்டது சின்ன ஆறுதல். அமெரிக்காவின் கடந்த கால கருப்பின அடிமைத்தனத்தின் வரலாற்றுப் பக்கங்களைப்  பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட கேரக்டரும் நிஜப் பின்னணியும் படத்தை முக்கிய ஆவண அந்தஸ்துக்கு உருவாக்கியதுதான் விருதுக்குக் காரணம்.

எதிர்பார்த்ததுபோல் ஏழு அகாடமி விருதுகளை அள்ளியது 'கிராவிட்டி’ படம். சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் விஷ§வல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளில் விருதுகளை அள்ளிய விதத்தில் 'கிராவிட்டி’ டீமுக்குதான் கொண்டாட்டக் குதூகலம். விண்வெளியில் நிகழும் சம்பவத்தைத் திரைக்கதையாக்கி தத்ரூபமாக 3-டியில் காட்டுவது என்றால் சும்மாவா? இந்தப் படம் விருதுக்குத் தகுதியானதுதான் என்பது எல்லோரின் கருத்தும்.

சிறந்த நடிகராக லியோவைப் பின்னுக்குத் தள்ளி விருதினை அள்ளியவர்  மேத்யூ மெக்கானகே. 'டல்லாஸ் பையர்ஸ் க்ளப்’ படத்தில் ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் உள்ள நபராக 30 நாட்களில் மரணத்தை எதிர்கொள்ளும் மனிதராக நடிப்பில் ஜொலித்தவர்.  

சிறந்த நடிகைக்கான விருது 'கிராவிட்டி’ படத்தில் விண்வெளியில் மாட்டிக்கொண்டு பூமிக்குத் திரும்பும் சான்ட்ரா புல்லக்கிற்குக் கிடைக்கும் என எல்லோரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால், லியோவைப்போல் இவரும் மண்ணைக் கவ்வ, விருது 'ப்ளூ ஜாஸ்மின்’ படத்தில் நடித்த கேட் ப்ளான்கெட்டுக்குப் போனது. 'ப்ளூ ஜாஸ்மின்’ படத்தின் இயக்குநர் க்ளாஸிக் படங்களுக்குப் பேர்போன உடி ஆலன்தான். படம் சுமார்தான் என்றாலும் கேட்டின் நடிப்பு அபாரம்.

விருது வாங்கிய லிஸ்ட்டில் அதிகம் வசீகரித்த படம் 'ஹெர்’ என்று தாராளமாகச் சொல்லலாம். 'சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரீன்ப்ளே’க்கான விருதினைப் பெற்றிருக்கும் இந்தப் படம் ரொமான்டிக் சயின்ஸ் ஃபிக்ஷன் வகையைச் சேர்ந்தது. ஆனால், புதுமையான ஒன்லைனால் எல்லோரையும் வசீகரித்து எழுதி, இயக்கி, தயாரித்து இருப்பது ஸ்பைக் ஜோன்ஸ் என்ற இயக்குநர். தனிமையில் தவிக்கும் ஒருவனுக்கும் பெண் குரலில் இருக்கும் புதுமையான கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கும் இடையே உருவாகும் காதல்தான் கதை. பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோகன்ஸன் அந்த 'ஓ.எஸ்’ஸிற்குப் பெண் குரல் கொடுத்திருக்கிறார்.  

'தி கிரேட் பியூட்டி’ என்ற இத்தாலிப் படம் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதினை அள்ளிச் சென்றதன் நியாயத்தை அதன் விஷ§வல்களைப் பார்த்தாலே புரிகிறது. இந்தப் படத்திற்கு டென்மார்க்கிலிருந்து வந்திருந்த 'தி ஹண்ட்’ மற்றும் பாலஸ்தீனியத்திலிருந்து வந்த 'ஒமர்’ படங்களும் செம டஃப் கொடுத்தன. ஆனால் '' 'தி கிரேட் பியூட்டி’ 65 வயது எழுத்தாளரின் வாழ்க்கைக் குறித்த பார்வைகள் மாறும் தத்துவார்த்தமான விஷயங்களைப் பல புதுமையான உத்தி களால் திரைமொழி யாக்கி இருந்தது'' என நடுவர்களால் பாராட்டப்பட்டது!

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close