Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்கள் யாருக்கு அடிமை?

'பூங்கா, கடற்கரைகளை மறந்துவிட்டு கணினி மூலம் மட்டுமே காதல், ஊடல், உரையாடல்... எனத் திளைத்துக்கொண்டிருந்தால், நம் எதிர்காலம் எப்படி இருக்கும்?’ என்ற கேள்விக்கு 'பகீர்’ பதில் சொல்கிறது 'ஹெர்’ ஆங்கிலத் திரைப்படம்!

'ஹெர்’ படத்தின் கதை நிகழ்வது, 2025-ம் வருடத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில். டெக் வளர்ச்சியில் சோம்பேறிகளான மக்களுக்கு 'பெர்சனல் டச்’சுடன் கையெழுத்துப் பிரதி போலவே கடிதங்கள் உருவாக்கித் தரும் தியோடர் ட்வம்ப்ளைக்கு நாற்பதை நெருங்கிய வயது. நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து பிறரின் உணர்வுக்கு ஏற்ப கடிதங்கள் உருவாக்குவதுதான் அவரது பணி.

தியோடர் வாழ்க்கையில் கணினி தவிர வேறு எதற்கும் இடம் இல்லை. இந்த நிலையில் சந்தையில் புதிதாக வந்த மென்பொருள் (ஆப்பரேட்டிங் சிஸ்டம் - ஓ.எஸ்.) ஒன்றைத் தன் கணினியில் பதிவிறக்கம் செய்கிறார் தியோடர். அது பெண் குரலில் பேசி அரட்டையடிக்கும் ஒரு சாட்டிங் சாஃப்ட்வேர். காதுக்கு ஒரு மைக், சட்டைப் பாக்கெட்டுக்குள் அடங்கும் சின்ன கேமரா பொருந்திய ஒரு பேட். தியோடரின் எல்லா நடவடிக்கைகளும் அந்த கேமரா வழியே பதிவாக, அந்த சாஃப்ட்வேர் குரல் தியோடருடன் எல்லாமும் பேசும். அந்தப் பேச்சு, நட்பு, கொஞ்சல், ஊடல் என வளர, தியோடருக்கும் சாஃப்ட்வேர் 'பெண்’ணான சமந்தாவுக்கும் இடையே காதல் கிளைக்கிறது. அதன் விளைவுகள்தான் படம்!

கடந்த ஆண்டு இறுதியில் நியூயார்க் திரைப்பட விழாவில் 'ஹெர்’ படத்தைப் பார்த்த அத்தனை பேர் முகத்திலும் எரிச்சல். 'இது ஒரு படமா? இந்த ஆண்டின் மிக சோகமான படம்’ என வெறுப்பில் கமென்ட் அடித்தார்கள். ஆனால், உலகத் திரையரங்குகளில் ரிசல்ட் தலைகீழ். ஒரு பக்கம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்க, 'பியூர் சினிமா’ என்ற சப் டைட்டிலோடு சென்னை தியேட்டர்கள் வரை பின்னி எடுக்கிறது படம்.

இரண்டு மணி நேரம் விரியும் திரைக்கதையில் படத்தில் வருவதே வெறும் ஆறேழு கேரக்டர்கள்தான். மென்பொருள் குரல் சமந்தாவுடன் தியோடர் ரொமான்ஸுகிறார்; ஈகோவில் சண்டை போடுகிறார்; சமந்தாவுக்கு 'குட் நைட்’ சொல்லாவிட்டால், தூங்க முடியாமல் தவிக்கிறார். இதனால் தியோடரைவிட சமந்தாவின் காதல் மீட்டர் ஏகத்துக்கும் எகிறுகிறது.

வார இறுதிகளில் அந்த பேட் கேமரா உதவியோடு சமந்தாவும் தியோடரும் மால், காபி ஷாப், பீச் என அவுட்டிங் செல்கிறார்கள். ஒருகட்டத்தில் சமந்தாவே, 'உனக்கு வாழ்க்கை முழுக்க என் குரல் மட்டுமே போதாது. பெண் சகவாசம் வேண்டும்’ என பாலியல் தொழிலாளி ஒருவரை ஏற்பாடு செய்கிறது. ஆரம்ப சில்மிஷங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணைத் தொட மறுக்கும் தியோடர், 'உன்னைத் தவிர வேறு ஒருத்திக்கு என மனத்தில் இடம் இல்லை’ என்ற ரேஞ்சுக்கு சமந்தாவிடம் அழுகிறார்.

ஒருநாள் வேலை முடித்து சமந்தாவை அழைக்கும் தியோடருக்கு, அந்த ஓ.எஸ். பேடில் இருந்து பதில் வரவில்லை. 'சிக்னல் இல்லை’ என திரை அமைதியாக... பதறித் துடித்து சிக்னல் தேடி தியோடர் அலையும் காட்சிகள் டெக்னாலஜிக்கு அடிமையான ஒருவனின் பக் பகீர் நிமிடங்கள். ஒருவழியாக சிக்னல் கிடைக்க, 'ஸாரி’ சொல்லும் சமந்தாவிடம் கோபம்கொள்கிறார் தியோடர். 'என்னிடம் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை. நான் உன்னைப் போலவே தினமும் 8,316 பேரிடம் டேட்டிங் போகிறேன். அதில் 641 பேரிடமும், உன்னிடம் எனக்கு இருப்பது போலவே உண்மையான காதல் இருக்கிறது’ என்று சமந்தா சொல்ல, அதிர்ச்சி ப்ளஸ் சோகத்தோடு நிமிரும் தியோடர் முன், நூற்றுக்கணக்கானவர்கள் கையில் ஓ.எஸ். பேடுடன் வைத்திருக்கும் காட்சிகள்... தியோடரை மட்டுமல்ல தியேட்டரில் இருப்போரையும் உறையவைக்கின்றன.

படம் முழுக்க விரியும் தியோடர் - சமந்தா காட்சிகள் அந்த இருவருக்குமானது என்பதைத் தாண்டி, 2025-ல் இது நமக்கும் நடக்கும் என்ற பயமே மனத்தில் எழுகிறது. அந்த வகையில் நம்மையும் கதையோடு இழுத்துப் பிடித்துப் பயணித்துப் பயப்பட வைத்ததில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் ஸ்பைக் ஜோன்ஸ்.

இதுவரை நான்கு படங்கள்தான் இயக்கியிருக்கிறார் ஸ்பைக் ஜோன்ஸ். அதிலும் கடந்த 11 ஆண்டுகளில் இரண்டு படங்கள் மட்டுமே. இந்த தியோடர் - சமந்தா ஒன்லைன், 10 வருடங்களுக்கு முன்பே தனக்குள் தோன்றிவிட்டது எனச் சொல்லும் ஸ்பைக், ''அதற்கு இன்ஸ்பிரேஷனே என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்கள்தான். தொழில்நுட்பச் சாதனங்கள் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது'' என்கிறார்.

தியோடர் - சமந்தாவைத் தாண்டி படத்தில் பெரிதும் ஈர்ப்பது 2025-ம் ஆண்டின் லாஸ் ஏஞ்சலஸ் நகரம். ஒளிகளில் செங்கல் செருகிக் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள், சீறிப் பறக்கும் மெட்ரோ - மோனோவின் வருங்கால வாரிசுகள், திரை முன் அமர்ந்து பேசினாலே அதை டைப்பிக்கொள்ளும் கணினிகள், நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் 3டி வீடியோ கேம்கள்... என 2025-க்குள் முழுக்கவே உலவவிட்டிருக்கிறார்கள்.

உலகம் முழுக்க ஆஸ்கர் உள்பட பல விருது விழாக்களில் திரைக்கதைக்கான விருதுகளைத் தட்டியதோடு, 'மனிதன் டெக்னாலஜிக்கு அடிமையாகிறானா..?’ என்ற முக்கிமான கேள்விக்கும் திரி கொளுத்திவிடுகிறது 'ஹெர்’!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்