குரூப்பா கிளம்பிட்டாங்க ! | இந்தி, அனுராக் காஷ்யப், கங்கணா ரணாவத், அலியா பட், ஹை வே, குயின், தி லஞ்ச் பாக்ஸ், hindi, anurag kashyap, kangana ranaut, alia bhatt, haigu way, queen, the lunch box,

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (23/05/2014)

கடைசி தொடர்பு:09:25 (23/05/2014)

குரூப்பா கிளம்பிட்டாங்க !

41 வயதான பாலிவுட்டின் நம்பர் ஒன் இயக்குநர் அனுராக்கை ஹாலிவுட்டின் மார்ட்டின் ஸ்கார்சிஸி மற்றும் குவான்டின் டொரன்டினோவின் சரிவிகிதக் கலவை என கொண்டாடுகிறது வடக்கத்திய மீடியா. அவரோ, 'தமிழ் சினிமா எனக்கு மிகப் பெரிய ஆதர்சம். ரத்தமும் சதையுமாய் மண்சார்ந்த பதிவுகளை எப்படி எடுக்க வேண்டுமென பாலா, அமீர், சசிகுமார் படங்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்’ என ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார். 'ஆங்கிலத்தால் மட்டுமே தயங்கி நின்றுவிடாதீர்கள். தைரியமாக பாலிவுட்டுக்கு வாருங்கள். உங்கள் படங்கள் எங்கள் சினிமாவைவிட உன்னதமானவை’ எனத் தமிழ் சினிமாவுக்கு 'பாம்பே வெல்வெட்’ விரிக்கிறார் அனுராக். டைட்டில் கிரெடிட்டில் ஆரம்பித்து 'பரதேசி’ படத்தை அஸ்ஸாம் மொழியிலும் இந்தியிலும் டப் செய்து தன் செலவில் வெளியிடுகிறார்.

 

வணிகரீதியாகவும் சினிமாக்களை வெற்றியடையவைக்க தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு முன்மாதிரியாகத் திகழ்கிறார். ஒரு ஸ்கிரிப்ட் ரைட்ட்டராய் வாழ்க்கையைத் தொடங்கிய அனுராக் காஷ்யப், 2009-ல் ஏ.கே.எஃப்.பி லிமிடெட் என்ற (அனுராக் காஷ்யப் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் ) நிறுவனத்தைத் துவங்கி ஒரு தயாரிப்பாளராகவும் களத்தில் இறங்கினார். 'உடான்’, 'ட்ரிஷ்னா’, 'சைத்தான்’, 'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’, 'அய்யா’, 'சிட்டகாங்’, 'லவ் ஷ§வ் தே சிக்கன் குரானா’, 'ஷாகித்’, 'பெட்லர்ஸ்,’ 'தி லன்ச் பாக்ஸ்’, 'மான்சூன் ஷூட்அவுட்’, 'அக்லி’, 'லூட்டெரா’, 'ஹஸே தோ பஸே’, 'குயின்’ என நிறைய ஹிட் படங்களைத் தயாரித்தார். இதில் சில படங்கள் மட்டுமே அவர் இயக்கியது.

இது மட்டும் அல்லாமல் ரிலீஸாகும் கதையம்சம் உள்ள பாலிவுட் படங்களின் தயாரிப்பில் அவரும் இணைத் தயாரிப்பாளராகப் பங்கெடுத்துவருகிறார்.  அமிதாப்பச்சனே சூடுபோட்டுக்கொண்ட பாலிவுட்டின் தயாரிப்புத் தொழிலில் தைரியமாய் புது ரூட்டைப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

'ஒரு இயக்குநருக்கு தயாரிப்பாளர் ரோல் என்பது பெரும் சுமை’ என்ற பழமைவாதக் கோட்பாட்டை முதன்முதலில் பாலிவுட்டில் தகர்த்தவர் அனுராக் காஷ்யப்தான். அவர் தயாரிப்பில் வந்த பல படங்கள் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டதோடு மட்டும் அல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தவை. தற்போது ரிலீஸாகும் நான்கில் இரண்டு படங்களின் டைட்டிலிலும் இவர் பெயர் இருக்கிறது. தயாரிப்பாளராகவோ இணைத் தயாரிப்பாளராகவோ அல்லது ஸ்க்ரிப்ட் டைரக்டராகவோ... ஏன் நடிகராகவும்தான். தவிர்க்க முடியாத ஆளுமையாகத் தன்னை நிறுவிக்கொண்டுள்ளார்.

இப்போது முத்தாய்ப்பாய் 'இந்தியாவின் முதல் 'டைரக்டர்களின் கம்பெனி’ என்ற கேப்ஷனோடு 'ஃபேன்டம் ஃபிலிம்ஸ்’ (Phantom films)  என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். பாலிவுட்டில் தற்போது தனித்து அடையாளப்படுத்திக்கொண்ட இயக்குநர்களான விகாஸ் பால், விக்ரமாதித்யா மோத்வானே மற்றும் மது மன்டேனா போன்றோர்களோடு இணைந்து ஆரம்பித்திருக்கிறார் அனுராக்.

''இது எங்களின் பல வருடப் பெருங்கனவு. பரிசோதனை முயற்சிகளுக்காகவும் இந்திய சினிமா தொடாத பல பக்கங்களை ஒரு டீமாக இணைந்து எட்டவும் இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறோம். இந்த நிறுவனத்தின் மூலம் நிறையப் படங்களைத் தந்து பெர்சனலாக நாங்கள் சினிமாவைத் தீவிரமாகப் படிக்கப்போகிறோம். எங்களுக்கான குழந்தைமையைத் தொலைக்காமல் புதிது புதிதாய் சினிமாக்களைத் தந்து சினிமாவின் மீதான எங்கள் பெருங்காதலை இன்னும் வளர்த்துக்கொள்ளப் போகிறோம்'' என்கிறார் அனுராக் காஷ்யப்.

ஹாட்ஸ் ஆஃப் அனுராக் ஜி!

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close