மும்பையில் ஓர் ஏழை!

ஜினியில் ஆரம்பித்து விஜய் சேதுபதிவரை ஆரம்பக் காலப் படங்களில் இவர்  ஒரு ஸ்டாராய் பரிமளிப்பார் என்று முன்பே ஊகிக்க முடிந்திருக்காது. அப்படித் தான் பாலிவுட்டின் ராஜ்குமார் ராவும்.

'லவ், செக்ஸ் அவுர் தோகா’ படத்தில் மிகச் சிறிய  கேரக்டரில் அறிமுக மானவர்தான் ராஜ்குமார். அடுத்தடுத்து 'ராஹிணி எம்.எம்.எஸ்’, 'சைத்தான்’, 'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்-2’, 'சிட்ட காங்’,' தலாஷ்’, 'கய் போ சே’ போன்ற படங்களில் வந்து போனவர். 'யார் இவர்?’ என சிறந்த நடிகர்களே கேட்கும் அளவுக்கு அந்த ரோல்களில் பிரகாசிப்பார். சின்னச் சின்ன ரோல்களில் வந்துபோனவருக்கு சென்ற வருடத்திலிருந்து நடிப்பில் ஜொலிக்கும் கேரக்டர்கள் வந்து சேர்ந்தன. 'ஷாகித்’ என்ற படத்துக்காக சிறந்த நடிகராக தேசிய விருதினைப் பெற்றார். அந்தப் படத்தில் தீவிரவாத முத்திரை குத்தப்பட்ட இஸ்லாமியராக நடிப்பில் அசத்தினார்.

இப்போது ஷாஹித் படத்தை இயக்கிய ஹன்சல் மேத்தாவின் 'சிட்டி லைட்ஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். பிரிட்டிஷ்-பிலிப்பைன்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவான 'மெட்ரோ மணிலா’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிப் படமாக்கி இருக்கிறார் ஹன்சல் மேத்தா.

படத்தின் ஒன்லைன் ரொம்பவே சிம்பிள். பிழைப்புக்காக மும்பை போன்ற பெருநகரத்துக்கு இடம்பெயர்ந்த ஓர் அப்பாவி ஏழையின் குடும்பம் என்னவாகிறது என்பதே கதை. ராஜ்குமார் ராவின் பிரமாதமான நடிப்பு படத்தை ஆழ்ந்து கவனிக்கச் செய்கிறது. படம் கதையாக இல்லாமல் ஒரு அனுபவமாக, வாழ்க்கையாக நம் முன் கடந்து செல்கிறது.

கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட ராஜ்குமார் தன் மனைவி பத்ரலேகா, ஆறு வயது மகளுடன் பிழைப்பு தேடி மும்பைக்கு வருகிறார். வந்த முதல் நாளே தெரிந்துவிடுகிறது, மும்பை தன் குடும்பம் வாழ லாயக்கில்லாத ஊர் என்று. நேர்மையாகவும் எளிமையாகவும் உழைத்து வாழ நினைக்கும் ராஜ்குமாருக்கும் அவர் குடும்பத்துக்கும் என்ன நேர்ந்தது என்பதே படத்தின் கதை. படத்தில் ராஜ்குமார்- பத்ரலேகா ஜோடியின் நடிப்பு சில இடங்களில் சினிமா என்பதையும் மறந்து படத்தோடு ஒன்றச் செய்கிறது. தேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள் என்பதை இருவரும் நிரூபித்திருக்கிறார்கள். வந்த முதல் நாளே தன் மொத்த சேமிப்பையும் பறிகொடுத்து விட்டு உயரமான கட்டுமானப் பணி நடக்கும் கட்டடத்தின் கட்டி முடிக்கப்படாத ஃப்ளாட்டில் தன் குடும்பத்தோடு தங்கும் இடத்தில் நெகிழவைக்கிறார். உழைப்பு எப்படி எல்லாம் நம் கண் முன் உறிஞ்சப்படுகிறது என்பதை அவர் செக்யூரிட்டி வேலை பார்க்கும் இடத்தில் உணரலாம். அவருக்கும் மனைவியாக நடித்திருக்கும் பத்ரலேகாவுக்கும் கெமிஸ்ட்ரி அத்தனை பொருந்திப்போகிறது. கணவருக்காக அவர் எடுக்கும் முடிவு கலங்கவைக்கிறது. தேவ் அகர்வாலின் ஒளிப்பதிவும் ஜீத் கங்குலியின் பாடல்களும் படத்துக்குப் பெரிய ப்ளஸ். பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன் அரிஜித் சிங்கின் குரலில் ஒலிக்கும் 'முஸ்குரானே...’ பாடல் தமிழ் கலந்து யூடியூபில் ரீமிக்ஸ் ஆவதில் தெரிகிறது எத்தனை ஹிட் என்று.        

நல்ல சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்!

- ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!