பிரிந்தால் 400 கோடி!

பாலிவுட்டின் கனவு நாயகன் ஹ்ரித்திக் ரோஷன் தனது காதல் மனைவி சூஸனைப் பிரிந்ததும் சூஸன் அவரிடம் கேட்டதாகச் சொல்லப்படும் ஜீவனாம்சத் தொகையுமே தற்போது பாலிவுட் உலகின் பரபரச் செய்தி.

13 வருட திருமண பந்தத்தை அதுவும் 2000-த்தில் அவர்கள் 'டும்டும்டும்’ கொட்டுவதற்கு முன்பே ரிலேஷன்ஷிப்பில் இருந்த உறவை, சடக்கென முறித்துக்கொள்ள எப்படி இருவருக்கும் மனசு வந்தது? ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் தன் 'பேங் பேங்’ படத்தின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஹ்ரித்திக், தனது சொந்த வாழ்க்கையில் கடினமான கட்டத்தில் இருக்கிறார். சூஸன்-ஹ்ரித்திக் இருவரும் இந்த வருடம் ஏப்ரல் 30-ம் தேதி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு கொடுத்தனர்.

'13 வருட திருமண வாழ்வில் எனது காதல் எந்த நிலையிலும் சூஸன் மீது குறையவே இல்லை’ என உருக்கமாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ள ஹ்ரித்திக், 'நான் இல்லாமல் சூஸன் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நம்புகிறேன். அவருக்கும் இதில் சம்மதம்’ என்றும் தெரிவித்துள்ளார். அதே போல் சூஸனும் 'நாங்கள் இருவரும் சம்மதித்தே பிரிகிறோம். அவதூறுகளுக்கு இடம் இல்லை’ என தெரிவித்துள்ளார். சூஸன் தரப்பில் ஜீவனாம்சமாக 400 கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும் இதற்கு ஹ்ரித்திக் தரப்பு 380 கோடிக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். விவாகரத்து கேட்ட வழக்கைக் காட்டிலும் இந்த ஜீவனாம்ச விஷயம்தான் அதிர்ச்சியான செய்தி.

''நாங்கள் பிரிந்தாலும் மகன்கள் இருவரின் வாழ்க்கை கண்டிப்பாகப் பாதிக்கக் கூடாது. அந்த விஷயத்தில் இருவரும் தெளிவாக இருக்கிறோம். எங்கள் விவாகரத்து குறித்து பொது இடங்களில் எங்கள் மகன்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களை சங்கடத்திற்கு ஆளாக்க வேண்டாம்'' என மீடியாக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் சூஸன்.

''பிரிகிறோம் என்பது மட்டுமே உண்மை. இவ்வளவு பெரிய தொகை எல்லாம் ஜீவனாம்சம் கேட்கும் அளவுக்கு சூஸன் கொடூரமான பெண் இல்லை. இப்படி எல்லாம் எப்படி கதை கட்ட முடிகிறது மனிதர்களால்?'' என தான் போட்ட ட்வீட்டில் குமுறித் தள்ளியிருக்கிறார் ஹ்ரித்திக்.

யார் சொல்றது உண்மைனு தெரியலையே நியாயமாரே!

- ஷாலினி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!