போலீஸ் ராணி! | போலீஸ் ராணி, மர்தாணி, ராணி முகர்ஜி, police rani, raani mukarji, mardaani

வெளியிடப்பட்ட நேரம்: 11:48 (02/09/2014)

கடைசி தொடர்பு:11:48 (02/09/2014)

போலீஸ் ராணி!

ஷாக்கிங் நியூஸ். குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொழிலில் தள்ளிவிடும் விஷயத்தில் உலகின் தலைமைப்பீடமாக இருக்கும் நாடு புனிதங்களைக் கட்டிக்காக்கும் நம் இந்தியாவேதான். வருடத்திற்கு 40,000 குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இந்தியாவில் காணாமல்போகிறதாம். நம்பவே கடினமான இந்தப் புள்ளிவிபரங்களை மையமாக வைத்துதான் சமீபத்தில் பாலிவுட் படமான 'மர்தானி’ ரிலீஸ் ஆகி இருக்கிறது. 'அய்யா’, 'தலாஷ்’, 'பாம்பே டாக்கீஸ்’ என கிட்டத்தட்ட தன் கேரியரின் 'ஃபேட் அவுட்’ சீஸனில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து 'ராணி இஸ் பேக்’ என சொல்லவைத்திருக்கிறார் ராணி முகர்ஜி!

மும்பையில் கிரைம் பிராஞ்ச் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிவானி சிவாஜி ராய். காணாமல்போன தன் வளர்ப்பு மகளின் தோழியைத் தேடுகிறார். இவரின் தேடல் வேட்டையின் துவக்கத்திலேயே செல்போனில் விலை பேசுகி றான் கடத்தல் கும்பல் தலைவன். '30 நாட்களில் உன்னைப் பிடிப்பேன்’ என சவால்விடும் ஷிவானி என்ன மாதிரியான ஆக்‌ஷனில் இறங்குகிறார், அவரால் நினைத்ததை சாதிக்க முடிந்ததா என்ற 'கேட் அண்ட் மௌஸ்’ விளையாட்டே கதை. வித்யாபாலன் நடிப்பில் தேசிய விருதினைப் பெற்ற 'பரினீதா’ படத்தை இயக்கிய பிரதீப் சர்க்கார், மர்தானியை இயக்கி இருக்கிறார். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார் ராணி. சில மாதங்களுக்கு முன் ரிலீஸான பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்குனூரின் 'லக்ஷ்மி’ படம் இதே குழந்தை பாலியல் தொழிலை 'கல்ட்டாக’ பேசி இருக்கும். ஓரளவு உண்மைத் தன்மைக்குப் பக்கத்தில் அது இருக்கும். ஆனால், 'மர்தானி’ அதே விஷயத்தை ஆக்‌ஷன் பேக்ட்ராப்பில் கமர்ஷியல் சினிமாவாக மாற்றிவிட்டதால், படத்தின் நம்பகத் தன்மை குறைந்துவிடுகிறது. ஆனாலும் விறுவிறு ஸ்க்ரீன் ப்ளேயாலும் ராணி முகர்ஜியின் தேர்ந்த நடிப்பாலும் படம் அசத்தவே செய்கிறது.

படத்தின் கிளைமாக்ஸில் ராணி முகர்ஜியின் கோபத்தைவிட ஆபத்திலி ருந்து மீட்கப்படும் ஒவ்வொரு சிறுமிகளின் கோபத்தையும் ஆக்ரோஷமாகப் பதிவுசெய்திருப்பது தியேட்டரில் கைதட்டல். ஆனாலும், நிதர்சனமான ஓர் உண்மை, இந்தக் கட்டுரை டைப் செய்யப்படும் நிமிடங்களிலும்கூட ஒரு குழந்தை துன்புறுத்தப்படலாம்.

''இந்தப் படத்தில் நடித்திருப்பதை வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன். நிஜ வாழ்க்கையில் போலீஸ் ஆபீஸராக முடியவில்லை என்ற வருத்தம் இப்போதும் எனக்கு இருக்கிறது'' என்கிறார் ராணி முகர்ஜி.

ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close