Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கெத்து காட்டும் 'ஹேப்பி நியூ இயர்'!

பாலிவுட்டின் இந்த வருட தீபாவளி ஸ்பெஷல், 'ஹேப்பி நியூ இயர்'!  ஃபராகான் இயக்கும் படம், மினிமம் கியாரண்டியாக இருக்கும் என்பது படம் குறித்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், ஃபராகான் இயக்கத்தில் ஷாரூக் நடிக்கும் மூன்றாவது படம். ஷாரூக் தன் மனைவி கௌரிகான் பெயரில் தயாரிக்கிறார். பட்ஜெட் 130 கோடி என்றதும் இப்போது உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

பாலிவுட் படங்களுக்கே உரிய வழக்கமான சிம்பிள் கான்செப்ட் தான் கதைக்களம். உலக அளவில் மிகப்பெரிய டான்ஸ் போட்டி நடக்கிறது. இதில் டான்ஸ் ஆடவேண்டும் என்ற துடிப்புடன் ஷாரூக், அபிஷேக், சோனு சூட், பாமன் இரானி, விவான் ஷா ஆகிய ஐந்து பேர் அடங்கிய டைமண்ட் டீம் களம் இறங்குகிறது. ஆனால், பிரமாதமான டான்ஸ் ஆட வராமல், ஸ்டெப் போட முடியாமல் முழிக்கிறார்கள். டான்ஸ் கற்றுக்கொள்வதற்காக ஒரு டீச்சர் வேண்டும் என்று தேடுகிறார்கள்.

பார் டான்ஸராக இருக்கும் தீபிகா படுகோனை அணுகி டான்ஸ் சொல்லித் தரச் சொல்கிறார்கள். ஐந்து பேருக்கும் டான்ஸ் கற்றுக்கொடுக்க வரும் தீபிகாவுக்கு ஷாரூக் மேல் ரொமான்ஸ். ஒரு வழியாக டான்ஸ் பிராக்டீஸில் பின்னி எடுக்கும் இந்த டீம்  போட்டியில் கலந்துகொள்கிறது. அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறது. டான்ஸராக இருக்கும் ஷாரூக் ஏன் திருடன் ஆகிறார்? எதைக் கொள்ளையடிக்கிறார்? என்பதுதான் கதையாம். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படம்.

ஷாரூக் இதில் டான்ஸர், திருடன் என்று இரு கெட்டப்புகளில் நடிக்கிறார். 'ஓம் சாந்தி ஓம்' படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்து ஆச்சர்யப்படுத்தியவர். 'சிக்ஸ்பேக் தோற்றத்தை அடைவதுதான் மிகக்கஷ்டமானது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதனை மாற்றிக்கொள்ளுங்கள்' என்று ஹீரோக்களுக்கு சவால்விட்ட ஷாரூக், எய்ட் பேக் தோற்றத்துடன் கூடிய புதிய ஸ்டில்லை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு கெத்து காட்டினார். ஷாரூக்கின் இந்த புதிய அவதாரம் ஃபேஸ்புக், டுவிட்டர் தளங்களில் ஏகத்திற்கும் ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது.

ஆனால், எய்ட்பேக் உடலை வெளிப்படுத்த கூச்சமாக இருப்பதாகவும், கட்டுமஸ்தான உடம்பைப் பெற உடற்பயிற்சியாளர் பிரசாந்த் ஸ்வந்த் மற்றும் இதற்கு தூண்டுதலாக இருந்த அவரது மகன் ஆரியன் ஆகியோர்தான் காரணம் என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார் இந்த பாலிவுட் பாட்ஷா.

நல்ல ஃபெர்பார்மராகவும், டான்ஸில் பொளந்து கட்டுபவராகவும் இருப்பவர்தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும். அந்த வகையில், சோனாக்‌ஷி சின்ஹா, அசின், ஐஸ்வர்யா ராய், பரிணீத்தி சோப்ரா, கத்ரீனா கைஃப் ஆகிய ஹீரோயின்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டும், கடைசியில் செலக்ட் ஆனது தீபிகா படுகோன். இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடிக்க வேண்டும் என்பதற்காகவே ஓம் சாந்தி ஓம் மூலம் கெமிஸ்ட்ரி ஹிஸ்டரி ஜியாகிரபியை வரவழைத்த ஃபராகான், ஷாரூக் - தீபிகாவை மீண்டும் நடிக்க வைக்கிறார். 2013ல் 100 கோடிக்கும் மேல் கலெக்‌ஷன் கல்லா கட்டும் படங்களில் நடித்து, பாலிவுட் வசூல் ராணியாக பாக்ஸ் ஆபிஸில் இருந்த தீபிகா இப்படத்துக்கான முக்கிய ப்ளஸ் என்றும் சொல்லப்படுகிறது. கதைப்படி மராட்டியைச் சார்ந்த தீபிகா பார் டான்ஸராக நடிக்கிறார். அந்த கேரக்டருக்காகவே கொஞ்சம் கிளாமரில் தாராளம் காட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தை சொந்தமாக தயாரித்துவரும் ஷாரூக், படம் ரிலீஸ் ஆவதற்குள் 202 கோடியை சம்பாதித்துவிட்டார். யாஷ்ராஜ் ஃபிலிம்ஸூக்கு 125 கோடிக்கு ரிலீஸ் ரைட்ஸ் கொடுத்திருக்கிறார். 65 கோடிக்கு ஜீ சேனலுக்கு தொலைக்காட்சி உரிமையையும், ஆடியோ உரிமையை 12 கோடி ரூபாய்க்கும் விற்றிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல், சலாம் டூர் என்கிற பெயரில் ஷாரூக் தன் மார்க்கெட்டிங் திறமையைக் காட்டுகிறார். இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட சுமார் 30 நாடுகளில் ஹேப்பி நியூ இயர் படத்தை புரமோஷன் செய்கிறார். செப்டம்பர் 19ல் ஷாரூக், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், மலைலா அரோராகான் உள்ளிட்ட டீம் சலாம் டூருக்குக் கிளம்பியது. நியூ ஜெர்சி, டொரன்டோ, சிகாகோ, சான் ஜோஸ், வான்கோவர், லண்டன் ஆகிய இடங்களில் ஹேப்பி நியூ இயர் புரமோஷன்களில் அதகளம் செய்திருக்கிறார்கள்.

ஷாரூக் படங்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் ஹேப்பி நியூ இயர் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸ் செய்கின்றனர். இந்த புரமோஷன்களைப் பார்த்து மிரண்டு போன சூப்பர் நானி இந்திப் படம் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கிவிட்டது. அக்டோபர் 24ல் ரிலீஸ் ஆகவேண்டிய படம் சூப்பர் நானி. பெண்களை மையப்படுத்தி ஒரு வலுவான மெசேஜ் சொல்லப்படுவதாக இந்தப் படம் அமைந்துள்ளதாம். நடிகை ரேகா ரீ என்ட்ரி ஆகியிருக்கும் இப்படத்தை இந்திரகுமார் இயக்கி உள்ளார். ஷாரூக் படம், பட்ஜெட், எதிர்பார்ப்பு என்று கணக்குப் போட்டுப் பார்த்த சூப்பர் நானி டீம் படத்தை அக்டோபர் 31ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துவிட்டது.

ஹேப்பி நியூ இயர் படம் மட்டும் அக்டோபர் 24ல் ரிலீஸ் ஆகிறது. இந்த வருடத்தின் மிகப்பெரிய பாலிவுட் படம் ஹேப்பி நியூ இயர்தான். படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ் புக் பக்கத்தை 31 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். டிரெய்லரை 25 லட்சம் பேர் ரசித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- க.நாகப்பன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்