இந்தியில் ஷேக்ஸ்பியர்!

விஷால் பரத்வாஜ். பாலிவுட்டின் வித்தியாசமான பர்சனாலிட்டி. நம் ஊர் விஜய் ஆன்டனி, ஜி.வி.பிரகாஷ் நடிக்க வந்ததுபோல் பாலிவுட்டில் இசையமைப்பாளராக கேரியரை ஆரம்பித்து அப்படியே திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டியதோடு, சகல துறைகளிலும் ஹிட்ஸ்களை கொடுத்தவர்.

2003ல் இர்ஃபான் கான், தபு நடிப்பில் 'மக்பூல்’ என்ற படத்தை இயக்கினார். அது ஷேக்ஸ்பியரின் 'மேக்பத்’ நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். 2006ல் அஜய்தேவ்கன், கரீனாகபூர் நடிப்பில் வெளியான 'ஓம்காரா’ படத்தை எழுதி இயக்கி இசையமைத்து ஹிட் கணக்கை ஆரம்பித்தார். ஷேக்ஸ்பியரின் 'ஒத்தெல்லோ’ நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட அந்தப் படம் ஷேக்ஸ்பியரை படிக்காதவர்களுக்கும் எளிமையாகப் புரியவைக்கும். உலகப்பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வாரிக்குவித்தது. அதன் பிறகு 'தி ப்ளூ அம்ரல்லா’, '7 கூன் மாஃப்’ போன்ற கவன ஈர்ப்புப் படங்களும்கூட உலகப்புகழ் எழுத்தாளரான ரஸ்கின் பாண்டின் கதைகளைத் தழுவி எடுக்கப்பட்டதுதான்.

சமீபத்தில் ரிலீஸாகி இருக்கும் 'ஹைதர்’ படம் இவர் தயாரித்து இயக்கி இசையமைத்தது. ஷாஹித் கபூர், ஷ்ரக்தா கபூர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்தப் படம் ஷேக்ஸ்பியரின் 'ஹாம்லெட்’ நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 19வது தென்கொரியாவின் பூஷன் சர்வதேச திரைப்படவிழாவில் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முழுக்க முழுக்க காஷ்மீர் பின்னணியில் கலர்ஃபுல்லாக கதை சொல்லப்பட்டிருக்கிறது.

யாருக்கும் கெடுதல் நினைக்காத தன் டாக்டர் அப்பாவை இந்திய ராணுவம் விசாரணைக்கு அழைத்துப் போக, காணாமல் போகிறார் தந்தை. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் கவிதையைப் பாடமாகப் படிக்கும், ஹைதர் (ஷாஹித்) அப்பாவைத் தேடி காஷ்மீர் வருகிறான். காஷ்மீரிகளின் மீது இந்திய ராணுவம் காட்டும் ஒடுக்குமுறைக்கு முன் இவனுடைய தேடுதல் வெற்றியடையவில்லை. யாருமே எதிர்பார்க்காத தன் தந்தையின் மரணம் குறித்த ரகசியத்தை அவன் கண்டுபிடிக்கும் தருணத்தில் நொறுங்கிப் போகிறான் ஹைதர். அதன்பிறகு அவன் எடுக்கும் பழிவாங்கலே மீதிக்கதை. அம்மாவாக தபு. மனப்பிறழ்வுகொண்ட இளை ஞனாக பின்பாதியில் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார் ஷாஹித்.

'ஷேக்ஸ்பியரின் அழகியலோடு கூடிய வன்மத்தை தன் கேன் வாஸில் அழகாகத் தீட்டி இருக் கிறார் விஷால் பரத்வாஜ்’ என ஊடகங்கள் கொண்டாடும் மனதை பாதிக்கும் படைப்பு. காமெடி காக்டெய்ல் வேண்டி என்டர்டெய்ன்மென்ட்டுக்காக வரும் ரசிகர்களுக்கானது அல்ல!

ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!