பாலிவுட் இளவரசிகள்! | பாலிவுட் இளவரசிகள்!, அலியா பட், சோனம் கபூர், நர்கிஸ் ஃபக்ரி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், பரிணீதி சோப்ரா,

வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (14/10/2014)

கடைசி தொடர்பு:16:49 (14/10/2014)

பாலிவுட் இளவரசிகள்!

பாலிவுட்டில் இளமை மழை! கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைஃப், தீபிகா படுகோன்... போன்ற சீனியர்களை ஓரங்கட்ட வந்திருக்கிற இவர்கள்தான்,  இப்போது டிரெண்டிங் பட்டாசுகள். துள்ளும் இளமை, நடிப்பில் புதுமை என 'லைக்ஸ்’ குவிக்கும் சினி ஹனிக்களின் கலர்ஃபுல் புரொஃபைல் இங்கே...  

இவ வேற மாதிரி!

அலியா பட்

நம் ஊர் கணக்கில், லட்சுமி மேனனுக்கு கொஞ்சம் முன்பு பிறந்த குழந்தை நட்சத்திரம். இந்தி இயக்குநர் மகேஷ் பட்டின் மகள். ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்’ படம் மூலம் 'ஹீரோயின்’ விசிட்டிங் கார்டு பெற்றார். முதல் படத்திலேயே ஸ்விம் சூட், லிப் லாக் என 'பால்வாடி’ இமேஜை அடித்து உடைத்து ஆச்சர்யம் அளிக்க, இன்று பாலிவுட்டில் கல்லூரி மாணவி கேரக்டருக்கு முதல் சாய்ஸ் அலியா. இந்த வருடம் அலியா நடிப்பில் வெளியான 'ஹைவே’, '2 ஸ்டேட்ஸ்’ இரண்டுமே பாக்ஸ் ஆபீஸில் பட்டாசு, விமர்சகர்களிடம் மத்தாப்பூ கொளுத்த, 21 வயதிலேயே 'ஹிட் ஹீரோயின்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'ஹைவே’ படத்தில் ஒரு பாடலையும் பாடி, 'இவ வேற மாதிரி’ என்று திரும்பிப் பார்க்க வைத்தார். புகழ் வந்தால் சர்ச்சையும் களை கட்டும்தானே..! அலியாவுடன் நடித்த ஹீரோக்களோடு இணைத்து சுடச்சுடச் செய்தி சுடுகின்றன வட இந்திய மீடியா. 'தம்மாத்துண்டு இருந்துட்டு...’ என்று வயிற்று எரிச்சலோ என்னவோ, சர்தார்ஜி ஜோக்குகளுக்கு இணையாக அலியாவைக் கிண்டலடித்து வரும் ஜோக்ஸ் அதிகம். ஆனால், அழகிக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை. 'முத்தக் காட்சி இருந்தால் படம் நிச்சயம் ஹிட்’ சென்ட்டிமென்ட் காரணம் சொல்லி கல்லா கட்டுகிறார்கள் நல்லா!  

சூடு கவ்வும்!

நர்கிஸ் ஃபக்ரி

கத்ரீனா கைஃப், ஏமி ஜாக்சன் போல 'ஃபாரீன் டவுண்லோடு’ ஹீரோயின் நர்கிஸ். அமெரிக்க மாடலான நர்கிஸ், கிங்ஃபிஷர் காலண்டருக்குக் கொடுத்த ஸ்விம் 'சூடு’ போஸ், பாலிவுட் டோக்கன் கொடுத்தது. ரன்பீர் கபூருடன் 'ராக் ஸ்டார்’ படத்தில் அறிமுகம் ஆனார். கடந்த வருடம் நர்கிஸ் நடித்த 'மெட்ராஸ் கஃபே’ நஷ்ட கலக்ஷன்தான் என்றாலும், நர்கிஸின் நடிப்பு செம வைரல்.

'நமக்கு கிளாமர்தான் கிராமர்’ என்று முடிவுசெய்தவர், பாரபட்சம் பார்க்காமல் பாஸ்பரஸ் கொளுத்த, நம்பிக்கை நாயகி ஆனார். இந்த வருடம் 'மெயின் டேரா ஹீரோ’ படத்தில் கிளாமர் கோழி இலியானாவையே பீட் அடித்து, ரசிகர்களிடம் ஸ்கோர் செய்தார். இதனாலேயே மாஸ் ஹீரோக்களின் படங்களில் குறைந்தபட்சம் ஒரு பாடலுக்காவது ஆடுவதற்கு கமிட் ஆகியிருக்கிறார் நர்கிஸ். இத்தனைக்கும் நர்கிஸுக்கு வயது 35. ஆனால், வளைவு நெளிவுகளில் அதற்கான சுவடே தெரியாது. பாலிவுட் நடிகர் உதய் சோப்ராவுடன் திருமணம் எனச் சர்ச்சைகள் அலையடித்தாலும், அந்த விஷயத்தில் மட்டும் இழுத்துப் போத்திக்கொண்டு அமைதியாகிவிடுகிறார் நர்கிஸ்!  

நடுவுல கொஞ்சம் வெட்கத்தைக் காணோம்!

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

இலங்கை மிக்ஸ்டு பஹ்ரைன் பறவை ஜாக்குலினுக்கு, இப்போ வயசு 28. மாஸ்காம் படிப்பு முடித்துவிட்டு பத்திரிகை நிருபராக பஹ்ரைனில் டியூட்டி பார்த்துக்கொண்டிருந்தது பியூட்டி. ஆனால், எழுத்துத் திறமையை அவரது அழகு ஓரங்கட்ட, மாடலிங் வாய்ப்புகள் குவிந்தன. 'மிஸ் ஸ்ரீலங்கா யுனிவர்ஸ்’ கிரீடமும் அலங்கரிக்க, பாலிவுட்டுக்கு ஃபிளைட் ஏறிவிட்டார்.

முதல் சில படங்களில் உருகி மருகி நடித்துப் பார்த்தார். ஆனால், அது கவனம் கலைக்கவில்லை. உடனே தனது காஸ்ட்யூம்களைத் தாறுமாறாகக் கலைக்க, களைகட்டியது வரவேற்பு. 'ஹவுஸ்ஃபுல்’ படத்தின் ஒரு டான்ஸ், 'மர்டர் 2’ படத்தின் 'ஜில் ஜிலீர் காட்சிகள்’ ஜாக்குலின் மார்க்கெட்டை ரோலர்கோஸ்டரில் ஏற்ற, 'ரேஸ் 2’ படத்தின் வெற்றியால், ஹிட் ராசியும் ஒட்டிக்கொண்டது. அழகி இப்போது சல்மான் கானுக்கு ஜோடியாக 'கிக்’ படத்தில் நடித்திருக்கிறார். இனி அப்படியே அமீர், ஷாரூக் என்று ஒரு ரவுண்டு அடித்துவிடுவார்.  ஜாக்குலின் நம்ம த்ரிஷா போல, விலங்குகள் நலனில் அக்கறை கொண்டவர். ஈர மனசு!

பாலிவுட்டின் மைனா!

பரிணீதி சோப்ரா

வணிகம், நிதி, பொருளாதாரம்... மூன்றையும் படித்துவிட்டு 'நிதி முதலீட்டு ஆலோசகர்’ என்ற லட்சியத்தோடு இருந்த பரிணீதி, இப்போது பாலிவுட்டில் பிராஞ்ச் ஓப்பன் செய்திருக்கிறார். பிரியங்கா சோப்ராவின் சொந்தக்காரப் பெண்ணான இவர், இப்போ பிஸிபிஸி. பரிணீதி நடித்த ரொமான்டிக் படங்களான 'இஷாக்ஸாதே’, 'சுத் தேசி ரொமான்ஸ்’ பரபர பப்ளிகுட்டி அள்ள, நடிப்பு, நடனம் இரண்டிலும், தான் ஒரு கோப்ரா என நிரூபித்தார் ஜூனியர் சோப்ரா!

'தி கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ அழகில் அசரடிக்கும் பெண், இப்போதே பல நிறுவனங்களின் விளம்பரத் தூதுவர்.பரிணீதி நடித்த 'சுத் தேசி ரொமான்ஸ்’ 50 கோடி வசூல் அள்ள, மிடில் பட்ஜெட் பட இயக்குநர்களின் முதல் சாய்ஸ் இவர்தான்!

துள்ளுவதோ இளமை!

சோனம் கபூர்

இந்தியில் கொடிகட்டிப் பறந்தாலும், தனுஷ் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஒல்லிபெல்லி சோனம் கபூர். நடிகர் அனில் கபூரின் மகள் என்ற அறிமுகத்துடன் உதவி இயக்குநராகத்தான் சினிமாவுக்குள் வந்தார் சோனம். ஆனால், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'சாவாரியா’ படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். படம் ஹிட் இல்லையென்றாலும், சோனம் வீசிய முதல் விசிட்டிங் கார்டு அது. ஒரு பளிச் ஹிட் இல்லாமல் தள்ளாடிய சோனத்தை, 'ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ்’ ஒரு தூக்குத் தூக்க, அதன் பின் ஏறுமுகத்திலேயே இருந்தது கிராஃப். 'ராஞ்சனா’, 'பாக் மில்கா பாக்’ படங்கள் சோனம் கபூரின் 'மார்க்கெட் வேல்யூவை ஜிவ்வென உயர்த்திவிட்டது. தீபிகா படுகோனுக்கு நிகரான உயரம் மற்றும் உடம்பு... செம ப்ளஸ். அதோடு சின்சியராக நடிப்பும் இருப்பதால், இந்தி இளைஞர்களைக் கச்சிதமாக பாக்கெட் செய்துகொண்டார். விளம்பரங்களிலும் விடாமல் கவனம் செலுத்துகிறார்.

சென்சார் போர்டு பற்றி கேட்டபோது, நடுவிரலை உயர்த்திக் காட்டியது, ஷேவிங் செய்வது போன்ற படங்கள் வெளிவந்தது என மறக்காமல், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதால், இந்த 'இந்தி ஆண்ட்ரியா’வின் புகழ், கொடிகட்டிப் பறக்கிறது!

- ஞா.சுதாகர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close