அர்னால்ட் மகனும் மிலி சைரஸும்... அதிர்ந்துபோன அர்னால்ட்!

ஏழு முறை உலக ஆணழகன் பட்டம் வென்ற அர்னால்ட் இப்போது கலங்கிப்போய்க் கிடக்கிறார். காரணம், அவரின் செல்ல மகன் பாட்ரிக், பாடகி மிலி சைரஸுடன் சுற்றத்தொடங்கியிருக்கிறார். இது இன்றைக்கு உலகமெங்கும் சகஜம்தானே என்று சொன்னால் உங்களுக்கு மிலி சைரஸைப் பற்றித் தெரியவில்லை என்று அர்த்தம்.

ஹன்னா மொன்டானா என்கிற டிஸ்னி சானல் நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மிலி சைரஸ். அதில் பாப் பாடகி வேடம் என்பதால் குரல்வளம்கொண்ட பெண்ணைத் தேடிவந்தனர், மிலி சைரஸுக்கு பிரபல பாப் பாடகியான டாலி பார்ட்டன்தான் ஞானத்தாய். பாதி நேரம் அவர் வீட்டிலேயே வளர்ந்ததால், இசையும் நன்கு பரிச்சயம். வாய்ப்பும் உடனே கிடைத்தது. அதன் பின் மளமளவென வளர்ச்சிதான்.

எல்லாம் மிலிக்கு கடந்த ஆண்டு 21 வயது ஆகும் வரைதான் (அதற்கு மேல்தான் சில விஷயங்களுக்கு அமெரிக்காவில் அனுமதி ) .அதன்பின் வெளியான ’ரேக்கிங் பால்’ ஆல்பத்தில் பிறந்தமேனியாகப்  பாடி பாப் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆடைகள் மீது என்ன வெறுப்போ, சின்னக்குழந்தைகள் போடும் ட்ரெஸ்ஸுடனே திரிகிறார், தனது பாப் நிகழ்ச்சிகளில் மிக மோசமான அங்க அசைவுகளுடன் பாடுகிறார் என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்.
 
 
இந்த பக்கம் பாட்ரிக் அர்னால்டோ அப்பாவி பையன், 18 வயதிலேயே மிலி சைரஸின் மேல் ஒரு கிரஷ் இருப்பதாக அம்மாஞ்சியாக சொன்னார். அப்பாவுக்குத் தொந்தரவு கொடுக்காமல் ஒரு பீட்சா கம்பெனியை நண்பருடன் பார்ட்னராகத் துவங்கி நடத்தி வருகிறார். சமயங்களில் டெலிவரிக்கு ஆள் இல்லையென்றால் இமேஜ் பார்க்காமல் தானே பைக் எடுத்து போய்விடும் அளவுக்கு சமத்தாம். இப்படிப்பட்ட சமத்துப் பையன் மிலி சைரஸின் வலையில் விழுந்துவிட்டது, அர்னால்டை அதிரவைத்திருக்கிறது. சமீபத்தில் ஒரு ஃபுட்பால் மேட்சுக்கு ஜோடியாக வந்த பாட்ரிக்கும் மிலியும் லவ்பேர்ட்ஸுகளைப்போல கொஞ்சியபடியே இருந்துள்ளனர். ஒரு பயலும் மேட்சை பார்க்கலையாம். அது எப்படிப் பார்ப்பாய்ங்க?

- செந்தில்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!