கான்ஸ் விழாவில் பங்கேற்ற அக்லி !

பாலிவுட்டே எதிர்பார்க்கும் படம் ஒன்று டிசம்பர் 26ல் ரிலீஸ் ஆகிறது. படா இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ரிலீஸாகும் அந்தப்படத்தின் பெயர் ‘அக்லி!’

எதிர்பார்ப்பிற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏற்கனவே அனுராக்கின் ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் பாகம் 1 மற்றும் பாகம் 2’ படங்கள் கான்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்ற பின் இந்தியாவில் ரிலீஸ் ஆகி பட்டையைக் கிளப்பியது. அதேபோல போன வருடம் கான்ஸ் திரைப்பட விழாவில் அக்லி திரைப்படம் ‘டைரக்டர்ஸ் ஃபோர்ட்நைட்’ பிரிவில் திரையிடப்பட்டதோடு நியூயார்க் திரைப்பட விழாவிலும் புதுமையான இயக்கத்தினால் பல திரை விமர்சகர்களின் பலத்த கவனத்தைப் பெற்றது.

மராத்தி நடிகர் கிரீஷ் குல்கர்னி, ரோனித் ராய், ராகுல் பட், தேஜஸ்வினி கோலாப்புரே, அனுராக்கின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான வினீத் குமார் சிங், சுர்வீன் சாவ்லா மற்றும் விபின் சர்மா அகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் கதையமைப்பே வித்தியாசமானது.

 

குழந்தையோடு தனியாக இருக்கும் தேஜஸ்வினி இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர். தேஜஸ்வினியை மறுமணம் செய்து கொண்ட கணவரான போலீஸ் அதிகாரி ரோனித் சித்ரவதை செய்கிறார். தற்கொலைக்கு முயற்சி செய்யும் தேஜஸ்வினியை மகள் அனிஷிகா தடுக்கிறாள். முதல் அப்பாவை அழைக்கச் சொல்கிறாள். இந்த சூழலில் ஒப்பந்தப்படி தன்னுடன் இருக்கும் மகளை முதல் கணவரான ராகுல் எதேச்சையாக தொலைத்து விடுகிறார்.

லோக்கல் போலீஸுடன் நண்பர் ஒருவருடன் மகளைத் தேடி அலைகிறார் ராகுல். போலீஸ் கணவருக்கு இந்த விஷயம் தெரியவர ராகுலையும் அவர் நண்பரையும் டார்ச்சர் செய்கிறார். வளர்ப்புத் தந்தை, பெற்ற தந்தை, கூடவே மன உளைச்சலில் தவிக்கும் தாய் இவர்களுடன் போலீஸ் படை வலைவீசி அந்தச் சிறுமியைத் தேடுகிறது. அந்தக்குழந்தை என்ன ஆனாள் என்பதே க்ளைமாக்ஸ்.

இந்த த்ரில்லர் ஆடுபுலி ஆட்டம் பரபரவென்ற திரைக்கதையால் நகர்கிறது. மும்பையின் வித்தியாச லொக்கேஷன்கள், கூர்மையான எடிட்டிங், புதுப்பாணி கதை சொல்லலில் படம் எல்லாத் திரைப்பட விழாக்களிலும் அப்ளாஸ் அள்ளியது. படத்தின் பின்னணி இசையை பிரையான் மெகோம்பர்ர் அமைக்க, பாடல்களுக்கு நம் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.


‘படம் ஏன் ஒரு வருடம் தாமதமாக இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது?’ என அனுராக் காஷ்யப்பிடம் கேட்டபோது,
‘‘போன வருடம் மத்தியில் ரிலீஸ் ஆக்க முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். சென்சார் போர்டுக்கு அப்ளை பண்ணிக் காத்திருந்தோம். படத்தில் ஏகப்பட்ட இடங்களில் புகைப்பிடிக்கும் காட்சி வருகிறது. ‘சிகரெட் இஸ் இன்ஜூரியஸ் டூ ஹெல்த்’ என்ற வாசகத்தை அடிக்கடி திரையில் சேர்ந்த்திருந்தார்கள். அவ்வாறு காட்டினால் ஆடியன்ஸ் படத்தோடு ஒன்றிப் பார்ப்பதற்குச் சிரமமாக இருக்கும் என சென்சார் போர்டிடம் வாதிட்டேன். இந்த விதியை தளர்த்தியே ஆகவேண்டும் என நான் குரல் கொடுத்தேன். ஆரம்பத்தில் ஒத்துக் கொண்டவர்கள் பிறகு ஏனோ அவ்வாறு செய்வதற்கு இயலாது என கைவிரித்து விட்டார்கள்.

என் போராட்டம் தொடரும் அதே சமயத்தில் என் ரசிகர்களை இனிமேலும் காக்க வைக்கக்கூடாது என்ற காரணத்தால் அந்த வாசகத்தோடு படத்தை ரிலீஸ் செய்ய சம்மதித்துள்ளேன். படம் பார்க்கும்போது நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்பது உங்களுக்கே விளங்கும்!’’ என்கிறார் சற்று காட்டமாக.


பத்துக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு கலக்கி எடுத்த ‘அக்லி’ மும்பையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுவதோடு குடும்பத்தோடு பார்க்கும் வகையிலான த்ரில்லராகவும் டிசம்பர் 26ல் திரையில் விரியக் காத்திருக்கிறது.

- சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!